நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மனுஸ்மிருதி குறித்து விளக்கும் அறப்போர்

தேமொழி

Nov 5, 2022

siragu Manusmriti

ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட புரட்சிச் சிந்தனையாளர்களான அம்பேத்கர், பெரியார் ஆகிய இருவருக்கும் கொள்கைகள் பலவற்றில், மக்கள் நலத்தில் கொண்ட அக்கறை ஆகியனவற்றில் ஒற்றுமை இருந்தது என்றாலும், மிகவும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை மனுஸ்மிர்த்தியை இருவருமே எரித்ததுதான். அடிப்படை மனித உரிமையையும் சமத்துவத்தையும் மதிக்காத, மக்களிடம் பேதம் கூறும் நூலின் கருத்துகள் இந்திய மக்களின் வாழ்க்கையை நெடுங்காலமாகச் சீர்குலைத்து வந்துள்ளதை இவர்கள் இருவரும் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள்.

சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன்னர், 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கும் முன்னராகவே தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவுடன் ஆதிதிராவிடர் மாநாட்டில் எம். சி. ராஜா அவர்களால் 1927 அக்டோபரிலும், தொடர்ந்து குடியாத்தத்தில் நடந்த வடஆர்க்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் 1927 டிசம்பர் முதல் வாரத்திலும் மனுஸ்மிருதி இருமுறை எரிக்கப்பட்டு விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாடு மனுஸ்மிருதியை எரிப்பதில் முதலில் களத்தில் இறங்கியுள்ளதும் தெரிகிறது. ராஜகோபாலாச்சாரியார் 21.3.1928 ல் ஆங்கில ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டுமென்பது தற்கொலைக்கு ஒப்பாகுமென்று என்று கூறிய கருத்தை ஒட்டி, குடி அரசு – 25.03.1928 பதிப்பில் “மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும். ஏன்?” என்ற கட்டுரையை எழுதிய பெரியார், அக்கட்டுரையில் மனுஸ்மிருதியில் இருந்து பல மேற்கோள்களைக் கொடுத்து, ஏன் மனுசாஸ்திரத்தை எரிக்கக் கூடாது என்று ஒரு எதிர்க்கேள்வி எழுப்பியிருப்பார்(பார்க்க: http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/66.pdf).

வைதீக சமயத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகிய வர்ண பேதக் கருத்துகள், மக்களிடம் உயர்வு தாழ்வு கூறுதல், பெண்களுக்குக் கல்வி, செல்வம், சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்களை அடிமையாக்கி வைத்திருத்தல், உழைப்பாளர்களைச் சுரண்டுதல் என மனித உரிமை மீறல்களின் தொகுப்பாக இருந்த மனுஸ்மிர்த்தியை அறவழியில் நடக்கும் சித்தர்கள் போன்ற சான்றோர் சிலர் மதிப்பது தவறு என்று நினைத்திருந்தாலும், எதிர்க்க முடியாத அளவிற்கு அது வைதீக சமயத்தின் பிரதிநிதியாக இருந்து வந்திருக்கிறது. சமயத்தை எதிர்க்க மனமில்லாதவர்களும், துணிவற்றவர்களும் இருந்த நிலையினால் மனுஸ்மிர்தியின் ஆதிக்கம் இந்திய வரலாற்றில் தொடர்ந்தது. ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவிலும், விடுதலைப் பெற்ற இந்தியாவிலும் கூட மனிதவுரிமையை மதிக்காத மனுஸ்மிர்த்தியின் அடிப்படையில், இந்து சமய வழக்கம் என்று குறிப்பிட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது செரிக்க முடியாத உண்மை.

இந்து தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) குழுவினரின் கொள்கை செயலாக்கப் பிரிவினரான பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு வெளிப்படையாகவே பிற சமயத்தவரை, பெண்களை, அச்சுறுத்தும் ஒடுக்கும் செயல்பாடுகள் அதிகரித்து வந்துள்ளன. எதிர்த்துக் குரல் கொடுக்கும் பகுத்தறிவுவாதிகளை, ஊடகத் துறையினரைக் கொலை செய்வது, போதிய சான்றுகள் இன்றி சிறையில் தள்ளுவது போன்றவை நடந்து வருகின்றன.

இவர்களின் அரசியல் தலையீடுகள் தமிழ்நாட்டிலும் நாளும் வளர்ந்து வருவது தமிழகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது. ஆர்எஸ்எஸ் ஒரு பண்பாட்டு இயக்கமோ புரட்சி இயக்கமோ அல்ல. அது ஒரு பாசிச பயங்கரவாத இயக்கம். மனு ஸ்மிருதி தான் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை, அதை நடைமுறைப்படுத்துவது தான் பாஜகவின் செயல்திட்டம். மனு ஸ்மிருதியை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவு பாஜக என்றும், தற்போது தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களைக் குறி வைத்து பாஜக செயல்படும் நிலை கண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான முனைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆகவே, நவம்பர் 6, 2022 மனு ஸ்மிருதி குறித்து விளக்கும் மாபெரும் அமைதி அறப்போர் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். மனு ஸ்மிருதி குறித்து பொதுமக்கள்‌ அறிந்து கொள்ளும் வகையில், விளக்கக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது என்றும் அறிவித்தார்.

மேலும், திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ‘நவம்பர் 6ம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய இருக்கிறோம்’ என்ற குறுஞ்செய்தி ஒன்றும் பதிவிட்டுள்ளார். “ஆர்எஸ்எஸின் கொள்கை அறிக்கையே மனுஸ்மிருதி” என்ற முன்னுரையுடன் “சூத்திரர்கள் மற்றும் பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை மட்டும் தொகுத்து ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை அச்சிட்டிருக்கிறோம். இன்று விசிக பொறுப்பாளர்களுக்கு வழங்கினேன். நவம்பர் 6ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மக்களுக்கு விலையில்லாமல் விநியோகிக்கப்படும்” என்றும் தொல்.திருமாவளவன் தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்து சமய நூல் ஒன்றின் கருத்துக்களை இவ்வாறு அச்சிட்டு விலையின்றி வழங்கி பரப்புரை செய்வது இந்து சமயத்தவருக்கே ஏற்புடையதாக இல்லை என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.

“நாடாளுமன்ற உறுப்பினர் மட்டத்தில் உள்ள ஒருவர் தவறான தகவல் மற்றும் போலி செய்திகளைப் பரப்புவது மட்டுமில்லாமல் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் வளர்க்க முயல்வதும், மதம், ஜாதி அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே மோதல்களைத் தூண்டும் நோக்கிலும் உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டிவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளுக்கு எதிராக திருமாவளவன் பதிவு செய்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜ மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இதன் மூலம், இவ்வாறு இந்து சமய நூலை அச்சடித்து விலையின்றி பரப்புரை செய்வதை இந்து சமய மக்களே எதிர்த்து காவல்துறையிடம் குற்றப்பத்திரிக்கை படிக்கும் அளவிற்கு இருக்கிறது மனு ஸ்மிருதி என்ற நூலில் உள்ள கருத்துகள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

எதிர்ப்பின் அடையாளமாக மனுஸ்மிருதி நூலை எரித்தாலும் இந்து சமயத்தாருக்கு மனது புண்படுகிறது, அச்சடித்து விலையின்றி மக்களிடம் கொண்டுசென்றாலும் அவர்களின் மனது புண்படுகிறது என்றால்… என்னதான் செய்வது?!!

‘மனுஸ்மிருதி, பெண்கள் – சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது ?’ என்ற இந்த விளக்கக் கையேடு நூலின் உள்ளடக்கம்: தொல்.திருமாவளவன் இந்த நூலின் தேவை குறித்து எழுதியுள்ள முன்னுரைக்குப் பிறகு, மனுஸ்மிருதி நூலின் அத்தியாயங்கள் 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 11, 12 ஆகியவற்றிலிருந்து சற்றொப்ப 150 மனுஸ்மிருதி கருத்துகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ‘distorted version’ என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஒரு நூலிலிருந்து விவாதத்திற்குரிய தேவையான கருத்துக்கள் சில தெரிவு செய்யப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டுக் கொடுக்கப்படுமானால் அது ஏன் ‘திரிபு’ கொண்டதாகக் கருதப்பட வேண்டும் என்பது தனியே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.

அதற்கு அடுத்து, “வேதங்கள், மனுஸ்மிருதி உள்ளிட்ட பல இந்து நூல்கள் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் குறித்து கூறியது பற்றி” டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறிப்பிடுவன என 22 குறிப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இப்பகுதி அம்பேத்கரின் “சூத்திரர் யார்? அவர்கள் எவ்வாறு நான்காம் வர்ணத்தவராயினர்” என்ற நூலிலிருந்து தொகுக்கப் பட்டுள்ளது.

இறுதிப் பகுதியாக “ஸ்த்ரீகளுக்குரிய பத்ததி” என்ற தலைப்பில் 1957 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து வேதங்கள் உள்ளிட்ட பிற இந்துமத புனித நூல்கள் கூறுவதை ஸ்ரீ த்ர்யம்பகரமகி அவர்களால் தொகுக்கப்பட்டு எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து சில தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக, 32 பக்கங்களே கொண்ட ஒரு சிறிய நூல், சான்றுகளின் அடிப்படையில் இந்தியாவின் கடந்த கால சமூகத்திலிருந்த சமத்துவமற்ற நிலைப்பாட்டைக் கண்முன் விரிக்கும் கருத்துக்களால் நிரம்பியுள்ளது.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றார் பாரதி. இது போன்று விழிப்புணர்வு நோக்கில், அறியாமை நீக்கும் நோக்கில் விலையின்றி கொடுக்கப்படும் செய்திகளும் அத்தகைய கல்விக் கொடையே.

பெண்ணிய ஆர்வலர்கள், சமத்துவ, பொதுவுடைமை ஆர்வலர்களுக்கு தங்கள் உரையிலும் எழுத்திலும் மேற்கோள் கொடுக்க உதவும் ஒரு சிறந்த கையேடாக இந்த நூல் அமையும். இளைய தலைமுறையினருக்கும் இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சி குறித்த நல்லதொரு வரலாற்றுப் பார்வையைத் தரும் என்ற வகையில் விழிப்புணர்வு தரும் இந்த நூல் அனைவரையும் சென்றடைய வேண்டிய நூல்தான். நூலின் தொகுப்பாளர் தோழர் திரு. கௌதம சன்னா அவர்களும், முன்னெடுத்த தோழர் தொல்.திருமாவளவன் அவர்களும் முற்போக்குவாதிகளின் பாராட்டிற்கு உரியவர்கள்.

நூல் : மனுஸ்மிருதி
பெண்கள் – சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது ? (தொகுப்பு)
தொகுப்பு : கௌதம சன்னா
பதிப்பு : நவம்பர் 2022 – முதல் பதிப்பு
வெளியீடு : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பக்கங்கள் – 32
அச்சகம் : விடுதலை அச்சகம், வேப்பேரி, சென்னை – 3
விலை : மக்கள் விழிப்புணர்விற்காக விலையில்லாமல் வெளியிடப்படுகிறது

நூலை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்:

https://archive.org/details/manusmriti-vck-release-2022/mode/2up

——————


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனுஸ்மிருதி குறித்து விளக்கும் அறப்போர்”

அதிகம் படித்தது