மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாமல்லபுரத்துச் சமணச் சிற்பம்

தேமொழி

Apr 2, 2022

 

சமண சமயம் செழித்திருந்த பண்டைய தமிழகத்தில் சமணர்களின் பங்களிப்பினால் தமிழில் கலைகளும் இலக்கிய ஆக்கங்களும் வளம் பெற்றிருந்தன. இது இன்றைய தமிழகத்தில் பெரும்பாலோர் அறிந்திராத ஒரு செய்தி. காலப்போக்கில் பிற சமயங்களின் தாக்கத்தினால் பெருமை மங்கிய இச்சமயத்தின் தமிழ்ப் பங்களிப்புகள் இயல்பாக மறக்கப்பட்டும், சூழ்ச்சியாக மறைக்கப்பட்டும் வந்ததால் தமிழர் பலர்தாங்கள் காணும் பல சிற்பங்களையும் படைப்புகளையும் வைதீக சமயத்தின் கண்ணாடி வழியே பார்த்து தவறாகப் பொருள் கற்பிக்கத் துவங்கினர். இரு பெண்கள் இருபக்கமும் உள்ள கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பத்தை முருகன் வள்ளி தெய்வானையுடன் இருப்பதாகத் தவறாகக் கருதி சிலையின் உருவங்களைச் சைவ சமய வழியில் அலங்கரித்து “மொட்டையாண்டவர் கோயில்” என்னும் பெயரில் முருகன் – வள்ளி – தெய்வானை என்று வழிபட்டு வருகின்றனர். தீர்த்தங்கரர் தலை மீது காட்டப்பட்டுள்ள முக்குடை சமண அறிகுறியையோ அதன் பொருளையோ அறியாதவர்களாக இன்றைய தமிழ்மக்கள் இருப்பதற்கு இது ஒரு சான்று.

siragu magabalipura sirpam1

சென்ற நூற்றாண்டுகளிலும் இவ்வாறான பிழையாகப் பொருள் கொள்ளும் முறை இருந்ததற்கு மற்றொரு சான்று மாமல்லபுரத்து புடைப்புச் சிற்பம். இச்சிற்பம் ‘அர்ச்சுனன் தபசு’ என்று ஒரு சிலராலும், ‘பகீரதன் தபசு’ என்று வேறு சிலராலும் விளக்கப்படுகிறது. இக்கதைகளுக்கும் சிற்பத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதைக் கண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் ஆழ்ந்து ஆராய்ந்து அச்சிற்பம் குறிப்பிடுவது சமண இலக்கியமான ‘அஜிதநாதர் புராண’த்தில் கூறப்படுகிற சகர சாகரர்களின் கதையை விவரிக்கிறது என்பதைக் கண்டறிந்து ‘மகாபலிபுரத்து ஜைன சிற்பம்’ என்ற ஒரு நூலாக எழுதினார். ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்று பாராட்டப்பட்டுள்ள மயிலை சீனி.வேங்கடசாமி பன்முகத் திறமை கொண்ட ஆய்வறிஞர். தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களால் அவரது நடுநிலை வழுவாத ஆய்வு நெறியும், சமயச் சார்பு காட்டாத ஆழ்ந்த ஆய்வுத் திறமையும் பாராட்டப்பட்டுள்ளதைத் தமிழுலகம் அறியும். இந்த நூலை அவர் எழுதிய பின்னர் மேலும் சில ஆண்டுகள் கழித்தே 1950 ஆம் ஆண்டு அச்சேறியது. இருப்பினும் மாமல்லபுரத்துச் சிற்பம் சமணக் கதையைக் கூறும் ஒரு சிற்பம் என்பது மக்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

புகழ்பெற்ற இப்பெரிய படைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மீட்டர் நீளமும் 13 மீட்டர் உயரமும் உள்ள செங்குத்தான பாறையில் சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்னர் 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் இது. முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது. அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற கதை ஒன்று மகாபாரதத்தின் வனபர்வத்தில் கூறப்பட்டுள்ளது, அக்கதையின் அடிப்படையில் அர்ச்சுனன் தபசு என்று இச்சிலை அடையாளம் கூறப்படுகிறது.

‘விக்டர் கோலோபிவ்’ என்ற பிரெஞ்சு கலை வரலாற்றாசிரியர் (French and Russian Art historian and archaeologist, Victor Goloubew – 1878-1945) இச்சிற்பத்தை நேரில் கண்டு ஆய்வு செய்து இச்சிற்பம் விளக்குவது அர்ச்சுனன் தபசு அல்ல, மாறாக இது இராமாயணம் பால காண்டத்தில் கூறப்படுகிற பகீரதன் தபசு என்னும் கதையை விவரிக்கிறது என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதன் பிறகு இது பகீரதன் தபசு என்றும் அழைக்கப்படத் துவங்கியது என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினான் என்றும், ஆனால் கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும், சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பதுதான்பகீரதன் தபசு என்ற புராணக்கதை.

மயிலை சீனி.வேங்கடசாமி வைக்கும் மறுப்புகள்:

siragu magabalipura sirpam8அர்ச்சுனன் தபசு—

  • ஒற்றைக் காலில் நின்று கைகளை உயர்த்திக் கும்பிட்ட வண்ணம் தவம் செய்யும் உருவம் அர்ச்சுனன் மற்றும் எதிரே நின்று அருள் வழங்குவது சிவன் என்றால், மற்ற சிற்பங்களில் இருப்பவர் யார் என்ற கேள்விக்கு இக்கதையில் விடையில்லை என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
  • இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற நாககுமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள், கங்கை ஆறு, கோயில், தலையற்ற மூன்று உருவங்கள், மற்றும் பல மனித உருவங்கள் இவை எல்லாம் ஏன் இந்தச் சிற்பத்தில் இடம் பெறுகின்றன என்ற விளக்கமும் இல்லை.
  • அத்துடன் வரம் தரச் சென்றசிவன் வேடனாகவும், உமைவேடுவச்சியாகவும் சென்றதாக புராணம் கூறும், ஆனால் சிற்பம் அவ்வாறு அமையவில்லை, உமை காட்சியில் காட்டப்படவில்லை, சிவனும் வேடன் உருவில் இல்லை.
  • இந்தியச் சிற்பக்கலைஅமைப்பு கதையில் விவரிக்கும் முக்கிய பாத்திரங்களைப் பெரிதாகவும் மற்றவர்களைச் சிறிய வடிவத்திலும் காட்டும் முறையில் இருக்கும். இச்சிற்பம் அவ்வாறு அமையவில்லை.

 பகீரதன் தபசு—

  • சிற்பத்தை மேலிருந்து கீழாகப் பிரிக்கும் இடைவெளி கங்கை ஆறு வழிந்து ஓடுவதைக் காட்டுகிறது என்றால் அதில் நாக அரசனும் அரசியும் காட்டப்படுவதன் காரணம் என்ன?
  • தபசு செய்வது பகீரதன் என்றால் எதிரில் நிற்கும் உருவம் கங்காதரர் சிற்ப அமைதியுடன் ஏன் அமையவில்லை? சிவனாகக் கூறப்படுபவரின் தலையில் கிரீட மகுடமும் கையில் கதையும் இருக்கிறது. சிவனின் ஜடா மகுடமும் அவருக்குரிய சூலம் மற்றும் மழு ஆயுதங்களும் சிற்பத்தில் காட்டப்படவில்லை. அதனால் அது சிவனின் உருவம் அல்ல.
  • ஆகாயத்திலிருந்து மண்ணுக்குப் பாயும் கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்த சிவன் அதைத் தன் ஜடையில்தாங்கிக் கொள்வதாகப் புராணம் கூறும். ஆனால் சிலையில் உள்ளவர் தலையில் கங்கை பாய்வதாகக் காட்டப்படவில்லை. இது பல்லவர் காலத்துக் கங்காதரர் சிலைகளில் காட்டப்படும் கங்காதரர் உருவ அமைதியிலும் இல்லை.
  • கதைக்குப் புறம்பான யானை, நாகர்கள், தேவர்கள், தலையற்ற உடல்கள், தலைவணங்கி உட்கார்ந்திருக்கும் முனிவரின் உருவம், கோயில் இவை சிற்பத்தில்இடம் பெறும் காரணம் என்ன? ஆகவே இது பகீரதன் தபசு கதையைக்  குறிக்கவில்லை.

என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. அப்படியானால் இந்தச் சிற்பக்காட்சி எந்தக் கதையைக் குறிக்கிறது? என்ற கேள்விகளுக்கு விடை தேடிய மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்குச் சமண நூல்களில் இதற்கான கதை கிடைத்தது.

மயிலை சீனி.வேங்கடசாமி சிற்பக் காட்சி காட்டும் சகர சாகரர் கதை தமிழில் ‘ஸ்ரீ புராண’த்திலும், ‘ஜீவசம்போதனை’ என்னும் நூலிலும் சுருக்கமாகக் காணப்படுகிறது என்கிறார். ‘திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்’ என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருப்பதாகவும், இந்த நூலை ‘ஹெலன் எம். ஜான்சன்’ (Helen M. Johnson) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் கூறுகிறார் (இணையத்தில் இக்கதையைப்படிக்க விரும்புவோருக்காகச் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

siragu magabalipura sirpam7சமணம் கூறும் சகர, சாகரர் கதைச் சுருக்கம்:

இனி’திரிசஷ்டி சலாகா புருஷர் சரித்திரம்’ என்னும் சமணநூலில் அஜிதநாத சுவாமி சரித்திரத்திலே கூறப்படுகிற சகர சாகரர்களின் கதைச் சுருக்கம்—

பரத கண்டத்தை அரசாண்ட ஜீத-சத்துரு என்னும் அரசனின் இரு மகன்களில் மூத்தவரான ‘அஜிதன்’ என்பவர் அஜீதநாதர் என்னும் தீர்த்தங்கரராக மாறி சமணசமயத்தைப் பரப்புவதை மேற்கொண்டு வீடு பேற்றை அடைகிறார். இளையவர் ‘சகரன்’ தந்தைக்குப் பிறகு அரச பொறுப்பேற்கிறார். இவர் கண்டப்பிரபாத மலைக்குத் தன்பரிவாரங்களுடன் சென்று நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வத்தைக் குறித்து நோன்பு மேற்கொள்கிறார். நாட்யமாலகன் அவர் முன் தோன்றி சகரனுக்கு வேண்டிய உதவிகளை வேண்டும் பொழுது செய்வதாக வரம் அளித்து பெருஞ்செல்வத்தையும் வழங்கினார். வரத்தை ஏற்றுக் கொண்ட சகரன் அவரைச் சிறப்பித்துவிட்டு, தனது பரிவாரங்களுடன் கங்கையை அடைந்து அங்கு நவநிதி என்னும் ஒன்பது விதமான செல்வங்களைப் பெறுவதற்காக மீண்டும் கடுமையான நோன்பு இருந்தார். மூன்று நாள் நோன்பிற்குப் பிறகு ஒன்பது வகையான (1. நைசர்ப்பம், 2. பாண்டுகம், 3. பிங்கலம், 4. மகாபத்மம், 5. காலம், 6. மகாகாளம், 7. மானவம், 8. சங்கம், 9. சர்வரத்னம், என்ற) நவநிதிகள் அவருக்குக் கிடைத்தன. அவற்றுடன் ஒன்பது நிதிகளுக்கும் தலைவராக இருந்த ஒன்பது தேவகுமாரர்களும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய 1000 கணங்களும் சகரனிடம் அவரது கட்டளைப்படி ஏவல் செய்ய தாங்கள் காத்திருப்பதாக உறுதியும் அளித்தனர்.

வரங்களையும் நவநிதிச் செல்வங்களையும் பெற்ற சகரன் மகிழ்ச்சியுடன் செங்கோல் பிறழாத ஆட்சி செய்து வந்தார். அவருக்கு 60,000 பிள்ளைகள் பிறந்தனர். சகரனின் அப்பிள்ளைகள் சாகரர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் மூத்தவர் பெயர் ‘ஜானு.’ வளர்ந்த பிறகு சாகர குமாரர்கள் நாடுகளைச் சுற்றிப் பார்க்க விரும்பினர். சகரனும் அவர்களுக்கு ஜீவரத்தினங்களைக் கொடுத்து வழியனுப்பினார். பல இடங்களைச் சுற்றிப் பார்த்து இறுதியில் அஷ்டாபத மலை என்னும் கயிலாய மலையை அடைகிறார்கள் சாகரர்கள். கயிலை அவர்களது முன்னோரான ரிஷப தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடம். ரிஷப தீர்த்தங்கரரின் மகனான பரத சக்கரவர்த்தி தன் தந்தைக்கு விலைமதிப்பற்ற திருக்கோயிலை கயிலையில் அமைத்திருந்தார். அக்கோயிலுக்கு முன்னர் ரிஷபதீர்த்தங்கரரின் உபதேசங்களைச் செவிசாய்த்துக்கேட்பது போன்று பரதச் சக்கரவர்த்தி தன்னுடைய உருவத்தையும் அங்கு அமைத்திருந்தார். இக்கோயிலுக்கு வந்து வணங்கிய சாகர குமாரர்கள் அக்கோயிலின் செல்வங்கள் எதிர்காலத்தில் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க அதற்கு ஓர் அகழி வெட்டி நீர் நிரப்பிப் பாதுகாக்கத் திட்டமிட்டனர். தங்களிடம் உள்ள ஆற்றல் மிக்கதண்ட ரத்தினம் கொண்டு நிலத்தை அகழ்ந்த பொழுது அதுஆழமாக நாகலோகம் வரையில் அகழ்ந்து விட்டது. இதனால் பாதாளத்தில் வாழ்ந்த நாகர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசன் அவ்வகழியின் வழியாக மேலே வந்து அவர்களைக் கடிந்து கொண்டான். ஜானு இது எதிர்பாராத தவறு என்றும், இனி தாங்கள் கவனமாக இருப்போம் என்று சமாதானம் கூற, நாகராசன் மீண்டும் ஒருமுறை எச்சரித்து விட்டு நாகலோகம் சென்றுவிடுகிறான்.

siragu magabalipura sirpam5

பிறகு சாகர குமாரர்கள் தம்மிடமிருந்த தண்டரத்தினத்தின் உதவியினால் கங்கையின் நீரைத் திருப்பி விட்டு அகழியில் நீர் பாய்ச்சினார்கள். கங்கை நீர் பாதாளம் வரை பாய்ந்து நாகலோகத்தை வெள்ளக் காடாக்கியது. வெகுண்டெழுந்து மேலே வந்த நாகராசன் அவர்களை விழித்துப் பார்க்க, அப்பார்வையினால் சாகர குமாரர்கள் அறுபதினாயிரம் பேரும் அப்படியே எரிந்து சாம்பலாயினர். பிள்ளைகள் இறந்த செய்தி அறிந்து துயருற்ற நிலையில் இருந்த அரசன் சகரனிடம், கங்கை பெருகி வெள்ளம் எல்லாவற்றையும் அழிப்பதாகக் கூறி, காப்பாற்றச் சொல்லி குடிமக்கள் கூக்குரலிட்டனர். அரசர் தனது பேரனான பகீரதனிடம் தண்டரத்தினம் உதவியுடன் கங்கையைக் கடலுக்குத் திருப்பி விடும்படி கட்டளையிட்டார். பகீரதனும் அவ்வாறே கங்கையைக் கடலுக்குத் திசை திருப்பி விட்டான்.

சிற்பக் காட்சியின் விளக்கம்:

siragu magabalipura sirpam2

இக்கதையைத்தான் மாமல்லபுரத்து புடைப்புச் சிற்பம் விவரிப்பதாக மயிலை சீனி. வேங்கடசாமி தனது மகாபலிபுரத்து ஜைன சிற்பம் நூலில் கதையுடன் சிற்பத்தை ஒப்பிட்டு விளக்கமளிக்கிறர்.

  • ஒடுங்கிய வயிறும் வளர்ந்த தாடியும் கொண்டசகர சக்கரவர்த்தி தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி ஒற்றைக்காலில் நின்று கண்டப்பிரபாத மலையில் தபசு செய்வதைச் சிற்பம் குறிக்கிறது. அவருக்கு எதிரில் நான்கு கைகளோடு இந்திரனுக்குரிய தண்டாயுதம் கையில் ஏந்தியநாட்யமாலகன் (இந்திரன்) உடைய உருவம் காணப்படுகிறது. வைதீக சமயம் காட்டும் இந்திரன் போலன்றி, சமண சிற்ப சாஸ்திரப்படி, சமணம் கூறும் இந்திரனுக்கு நான்கு கைகள் காட்டப்படுவது வழக்கம். அவர்களைச் சுற்றி அருகில் நிற்பதாகக் காட்டப்படும் 8 குள்ள உருவங்கள் யாவும் பூத உருவங்கள். ஆகவே கதைப்படி இது பொருந்துகிறது.
  • காலை மடக்கிக் கொண்டு கிரீட மகுடம் அணிந்த ஆண்-பெண் இணையராகக் காட்டப்படும் உருவங்கள்மனிதர்கள் அல்லர், அவர்கள் வானில் பறக்கும் தேவர்கள் என்று காட்ட காலை மடக்கிய நிலையில் பறப்பதாகக் காட்டப்பட்டுள்ளனர்.8 தேவர்கள் தங்கள் துணையுடனும், 8 கணங்களுடன் காட்டப்படுவதுசகர சக்கரவர்த்திக்கு அளிக்கப்பட்ட நவநிதிகளில் எட்டு பேரைக் குறிக்கிறது. எட்டு நிதிக்கும் எட்டுத் தலைவராகஎட்டு தேவர்களும் (நைசர்ப்பன், பாண்டுகன், பிங்கலன், மகாபத்மன், காலன், மகாகாலன், மானவன், சங்கன்), அவர்களுக்குக்காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப்பகுதி குறிக்கிறது. அதாவது, எட்டாயிரம் பூதங்களுக்குப் பதில் 8 நிதிக்கு 8 பூதங்களை மட்டும் குறியீடாகச் சிற்பத்தில் சுருக்கமாகக் காட்டியிருக்கிறார்கள். சகர சக்கரவர்த்தியின் அருகில் மண்ணில் நிற்பது போலக் காட்டப்படுபவர்கள், மனிதர்கள். அவர்கள் அரசருடன் கண்டப்பிரபாத மலைக்குச் சென்ற அவரது பரிவாரங்கள். சூழ்ந்துள்ள சிங்கம், புலி, மான், குரங்கு போன்ற விலங்குகள் மலையின் காடுகளில் வாழும் விலங்குகள்.
  • ஒன்பதாவது இரத்தினமாகிய சர்வ ரத்தினம் என்னும் நிதியைக் குறிக்கிறது சிற்பத்தின் மற்றொரு மேல் பகுதி. இந்த சர்வ ரத்தினம் என்னும் நிதியானது ஜீவரத்தினம் ஏழையும் அஜீவரத்தினம் ஏழையும் அளிக்கவல்லது. ஏழு ஜீவரத்தினங்கள், ஏழு அஜீவரத்தினங்கள் எவனாகப் பதினான்கு இரத்தினங்களையும் இப்பகுதி பற்பல உருவங்களாக விளக்கிக் காட்டுகிறது. இது இசை முதலியவற்றையும் கின்னர உருவங்கள் முதலியவற்றால் விளக்கப்பட்டுள்ளது.
  • நடுவில் காட்டப்படுவது கங்கையாறு என்று தவறாகக் கூறப்படுகிறது. அது ஆறு அல்ல, சகர குமாரர்கள், ரிஷபர் கோயிலைச்சுற்றிலும் தோண்டிய அகழியின் ஒரு பகுதியை இச்சிற்பம் காட்டுகிறது. இந்த அகழியில் காட்டப்படுவது நாகராசனும் அவனுடன் வந்த அவன் மனைவியும், மந்திரி முதலியவர்களும் ஆவர். அகழி தோண்டியதால் நாகலோகம் பாதிக்கப்பட்ட பொழுது நாகராசன் மேலே வந்து எச்சரித்த காட்சியை இப்பகுதி விளக்குகிறது.
  • இச்சிற்பத்தில் கீழ்ப் பகுதியில் காணப்படும் யானைகள், பாதாளம் வெள்ளக் காடாகிய பொழுது மீண்டும் சினத்துடன் மேலே வந்து சாகர குமாரர்களை அழித்த நாகராசன் ஜுவலனப் பிரபனையும் அவனுடன் வந்த நாகப் பரிவாரங்களையும் குறிப்பதாகும். சினந்து நோக்குவது போல காட்டப்படும் பெரிய யானைதான் ஜுவலனப்பிரபன். நாகலோகத்தில் நீர் நிரம்பியபொழுது “அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டது போல “கடுஞ்சினம் கொண்டு சாகரரைச் சினந்து நோக்கினான் என்று இக்கதை எழுதிய காவியப்புலவர் கற்பனை செய்து சிலேடையாக எழுதியதை இலக்கியநூல் விவரிக்கிறது. நாகம் என்னும் சொல்லுக்கு யானை என்றும், பாம்பு என்று இருபொருள் உண்டு. ஆகவே அகழியில் பாம்பு உருவத்தில் வந்து எச்சரித்த ஜுவலனப்பிரபனில் இருந்து இது வேறுபடுத்திக் காட்டுகிறது. இது இலக்கியச் சிலேடையை அவ்வாறே சிற்பத்தில் சித்தரிக்கும் பகுதி.
  • கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தலையற்ற மூன்று மனித உருவங்களும் நாகராசனின் கோபப் பார்வையினால் இறந்துபோன சகர குமாரர்களைக் குறிக்கிறது. அறுபதினாயிரம்சகர குமாரர்களின் குறியீடாக மூன்று தலையற்ற உருவங்கள் காட்டப்பட்டுள்ளனர். தலையற்ற நிலை அவர்கள் மரணத்தைக் காட்டுகிறது. வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்ற இலக்கணம் முறையே ஒன்று, இரண்டு பல என்பதைக் குறிக்கும். ஆகவே வடமொழி முறையைப் பின்பற்றி, சகர குமாரர்கள் பலர் என்பதைக்குறிக்க மூன்று உருவங்கள் காட்டப்பட்டுள்ளன.
  • இந்திரனுக்கு வலப்புறம் நிற்கும் மனிதர்களில் ஒருவர் இடது தோளில் குடம் போல ஒன்றை வைத்துக் கொண்டு வலது கையால் ஆற்றில் எதையோ வீசுவது போல் காட்டப்படுவது திருமஞ்சனம் செய்வதற்காகக் குடத்தில் நீர் எடுத்துச் செல்பவராக தவறாகக் கூறப்படுகிறது. அவர் போடுவது இறந்தவரின் எலும்புகளைக் குறிக்கிறது. இது பகீரதன் கங்கையைக் கடலுக்குத் திருப்பிவிட்ட பின்னர் இறந்த சாகர குமாரர்களின் எலும்புகள் கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதைக் குறிக்கிறது. அதுமுதல் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிற வழக்கம் ஏற்பட்டதென்றும் அஜிதநாகதீர்த்தங்கரர் புராணம் கூறுகிறது. ஆகவே, இந்தச் சிற்பம், இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிறதைக் காட்டும் பகுதி. அவர் அருகில் நிற்பவர் வைத்திருப்பது, அகழி தோண்டப் பயன்பட்ட தண்ட ரத்தினம்.
  • கோயில் ஒன்றும், அதன் முன் ஒருவர் அமர்ந்து செவி சாய்த்துக் கேட்பது போன்று அமைந்த சிற்பங்கள் கயிலாய மலையில் பரதச் சக்கரவர்த்தி அமைத்த ரிஷபதேவர் கோயிலையும், அக்கோயிலுக்கு எதிரில் பரதச் சக்கரவர்த்தி தமது உருவத்தை, ரிஷபர் செய்யும் உபதேசத்தைச் செவிசாய்த்துக் கேட்பது போல அமைத்திருந்த பரதச் சக்கர வர்த்தியின் உருவத்தையும் குறிக்கின்றன. கோயிலுக்கு முன் அமர்ந்திருப்பவர் எல்லோரும் நினைப்பது போல ரிஷி அல்ல, அவர்பரதச் சக்கரவர்த்தி. கோயிலுக்குள் இருக்கும்ரிஷப தீர்த்தங்கரர் திருமால் உருவமாகக் காணப்படுகிறது. ஜைன தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரின் உருவம் இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் உருவம் இருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.

முதல் காரணம்: ரிஷப தீர்த்தங்கரரும் விஷ்ணுவும் ஒருவரே என்றும், விஷ்ணு ரிஷப தீர்த்தங்கரராக அவதாரம் செய்து ஜைன மதத்தைப் பரவச் செய்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. அது சிற்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

இரண்டாவது காரணம்: 17-ஆவது நூற்றாண்டுவிஜயநகர அரசு ஆட்சிக் காலத்தில் மாமல்லையில் வைணவர் ஆதிக்கம் பலமாக இருந்த பொழுது, அக்காலத்தில் மாமல்லபுரத்துச் சிற்பங்களில் சில மாற்றப்பட்டன என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. அப்பொழுது ரிஷப தீர்த்தங்கரர் உருவம்விஷ்ணு உருவமாக மாற்றப்பட்டிருக்கக்கூடும். இதுவரை காட்டப்பட்ட சிற்பங்கள் தவிர்த்து பூனை தபசு, குரங்குகள், புலி போன்ற ஏனைய சிலசிற்பங்கள் சிற்பக் கலை அழக்கிற்காகச் செதுக்கப் பட்டிருக்கலாம் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.

காலமாற்றம்:

Mamallapuram, Arjuna's Penanceவிண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள்எனப் பல வகையானவற்றையும் விவரிக்கும் இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது எந்தப் புராணம் குறிப்பிடும், எந்த நிகழ்வைக் குறிக்கின்றது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவு. அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதைக்கும், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற உருவங்களுக்கும் பெரிதும் பொருத்தம் காட்டும் மயிலை சீனி. வேங்கடசாமி, சிற்பம் செதுக்கப்பட்ட 7ஆம் நூற்றாண்டில், சமண சமயம் செல்வாக்குடன் இருந்த காலத்தில், இது யாவருக்கும் தெரிந்த கதையாக இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

எத்தகைய செல்வம் பெற்றிருந்தாலும், கடவுளிடம் என்ன வரங்கள் பெற்றிருந்தாலும், நவநிதிகளுமே பெற்றிருந்தாலும், அரசராகவே இருந்தாலும், பேராற்றலும் வலிமையும் கொண்டவராக இருந்தாலும் ஊழ்வினைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்பதை உணர்த்துவதே இச் சிற்பம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் துணிபு.திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்’ விவரிக்கும் கதைக்கும் இச்சிற்பத்திற்கும் வேறுபாடு இல்லை. தமிழில் உள்ள ஸ்ரீபுராணம் மற்றும்ஜீவசம்போதனை என்னும் நூல்கள், சில மாறுதல்களோடு இக்கதையைக் கூறுகின்றன என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.

siragu magabalipura sirpam4

ஆகவே, சமணக் கதையை அறியாதவர் இதனை ‘அர்ச்சுனன் தபசு’ என்றும், ‘பகீரதன் தபசு’ என்றுமே சொல்லுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு அரசின் தொல்லியல் துறை சரியான விளக்கப் பலகைகளை மாமல்லபுரச் சிற்பத்தின் அருகே நிறுவி உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனெனில், தென் இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சி சங்கத்தில் (Archaeological Socety) 1947-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதிதொல்லியல் துறையினர் முன்னர் தன் ஆய்வை உரையாக வழங்கியதாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறியுள்ளார். சிற்பம் காட்டுவது அஜிதநாதசுவாமி என்னும் இரண்டாவது ஜைன தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதை என்றும் (அதாவது, இது இராமாயணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதையல்ல என்றும்) இந்தச் சிற்பக் காட்சி குறித்து நூல் சான்று காட்டி விளக்கமும் கொடுத்துள்ளார். அவர்களும் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வை ஏற்றுக் கொண்டதாக நூலின் வழி அறிய முடிகிறது.

‘திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்’ குறித்து:

மாமல்லையின் சிற்பம் தவிர்த்து ‘திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்’ கவனத்தைக் கவரும் வேறு செய்தியையும் கொண்டுள்ளது. ‘திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்’ என்ற நூல் குஜராத்தில் வாழ்ந்த ‘ஆச்சாரியா ஹேமச்சந்திரா’ (Acharya Hemachandra; 1088 – 1173) என்பவரால் எழுதப்பட்டது. மாமல்லை சிற்பத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டு, அதாவது இதற்கும் முற்பட்ட காலம் என்பதால் இது சமண சமயத்தில் தொன்று தொட்டுப் பல காலமாக வழங்கிய கதையாக இருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்’ என்ற நூல் 63 சமணப் பெரியார்களின் வாழ்வை விவரிக்கும் நூல்.

siragu magabalipura sirpam3

ஆச்சாரியா ஹேமச்சந்திரா மன்னர், குமார பாலாவின் நண்பர். அவருடைய சொல்லுக்கு அரசரிடம் நல்ல செல்வாக்கும் இருந்தது. ஜைன சமயம் இவர் காலத்தில் குஜராத்தின் அரச சமயமாகப் பரவலாக்கப்பட்டது. உணவிற்காகவும் சமயத்திற்காகவும் விலங்குகளைக் கொல்வதும் இவர் காலத்தில் ஒழிக்கப்பட்டது. அக்கலாம்முதல் கடந்த 900 ஆண்டுகளாக குஜராத் மக்களில் பெரும்பாலோர் சைவ உணவு உண்போராகவே வாழ்ந்து வருகின்றனர். சல்லேகனம் (உண்ணா நோன்புடன் வடக்கிருத்தல்) செய்து இறந்தவர் ஆச்சாரியா ஹேமச்சந்திரா.

ஆச்சாரியா ஹேமச்சந்திரா 63 சமணப்பெரியார்களின் வாழ்வை சமஸ்கிருதத்தில் விவரித்து எழுதிய அதே 12 ஆம் நூற்றாண்டில்தான், தமிழகத்தில் இரண்டாம் குலோத்துங்கன் (பொ. ஆ.:1133–1150 ) ஆட்சிக் காலத்தில் சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது. பெரியபுராணத்தில் இடம்பெறும் நாயன்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் 63 சைவ அடியார்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் எழுதிய திருத்தொண்டத் தொகைநூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். திருத்தொண்டத் தொகைநூலில் சுந்தரமூர்த்தியார் குறிப்பிட்ட அறுபது சிவனடியார்களுடன் திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்து 63 சைவப் பெரியார்கள் என்ற எண்ணிக்கையில் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரியபுராணம் அமைந்தது. இத்தகைய செயல் சமண சமயத்திற்குப் போட்டியாக சைவ சமயம் மேற்கொண்டஒரு முயற்சி என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

சிற்பவிளக்கம்:

மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.மயிலை சீனி.வேங்கடசாமி, 1950.

https://ta.wikisource.org/s/a1a5

படம் உதவி – விக்கிபீடியா:

https://ja.wikipedia.org/wiki/ファイル:Mamallapuram,_Arjuna%27s_Penance_(9902390324).jpg

Further Reading:

[1] Trishashti Shalaka Purusha Caritra, Helen M. Johnson, 1931. Jainism. A Sanskrit epic poem written by Acharya Hemachandra in the twelfth century. The work relates the history and legends of important figures in the Jain faith. These 63 persons include: the twenty four tirthankaras , the twelve chakravartin, the nine balabhadras, the nine narayanas and the nine pratinarayanas. This is the English translation of the Jain Ramayana of Hemacandra, composed between 1160 and 1172 in the Calukya court in Gujarat.

https://archive.org/details/in.ernet.dli.2015.189073/mode/2up

https://www.wisdomlib.org/jainism/book/trishashti-shalaka-purusha-caritra

[2] Salakapurusa — According to the Jain cosmology, the śalākapurua — “illustrious or worthy persons” are 63 illustrious beings who appear during each half-time cycle.

https://en.wikipedia.org/wiki/Salakapurusa

[3] King Sagara: Hindu tradition & Jain Tradition – https://en.wikipedia.org/wiki/King_Sagara


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாமல்லபுரத்துச் சமணச் சிற்பம்”

அதிகம் படித்தது