மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள்

தேமொழி

Apr 25, 2020

siragu mullaippaatu2

பத்துப்பாட்டு வரிசையில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள முல்லைப்பாட்டு நூல் 103 அடிகளைக் கொண்ட பாடல். நூலின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர். சோழநாட்டைச் சேர்ந்த வணிகராக இவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. நேரிசை ஆசிரியப்பாவில் இந்நூலை எழுதியுள்ளார் நப்பூதனார். பாடலில் பாடப்பட்டவர் பெயர் இன்னதென்றுக் குறிப்பு இல்லாவிட்டாலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது. நப்பூதனார் நெடுஞ்செழியனின் அவைப்புலவர் என்றும் கருதப்படுகிறது. போருக்குச் சென்ற தலைவன் தான் மீண்டும் கார்காலத் துவக்கத்தில் திரும்புவதாக அறிவித்துச் செல்ல, அவன் வரவை எதிர்நோக்கித் தலைவியும், தலைவியின் நினைவாகப் போர்முனையிலிருந்த தலைவனும் வருத்தமுற்று, பின் மீண்டும் இணைவதைச் சொல்கிறது முல்லைப்பாட்டு நூலின் கருத்து. பாடலில் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வடமொழிச் சொற்கள் இருப்பதாகவும் பாடலில் காலம் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு என்பதும் மறைமலையடிகளின் கருத்து.

கார்காலத்தின் இயற்கை, தலைவியின் தனிமை உணர்வு, போர்க்களத்தின் சூழல் ஆகியன செம்மையாக விவரிக்கப்படுவதாகத் தமிழறிஞர்களின் பாராட்டைப் பெரும் இலக்கியம் முல்லைப்பாட்டு. முல்லை சார்ந்த ஒழுக்கங்களாகப் பாடலில் இடம்பெறுவது; பகை வெல்லும் பொருட்டு, வேற்றோர் அரசனின் நாடு கைப்பற்றும் நோக்கத்துடன் தலைவன் தானே போருக்குச் செல்லுதலான வஞ்சித்திணை புறவொழுக்கமும்,அதனால் பிரிந்த தலைவியும் தலைவனும் தனது காதல் துணையை எண்ணிக் காத்து இருத்தலும் இருத்தல் நிமித்தமுமான அகவொழுக்கமும் பாடலில் காணப்படுகிறது. இச்சூழல் உணர்த்தும் நிகழ்வை இக்காலத்தில் இயக்குநர் மணிரத்தினம் தளபதி படத்தில்,”சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி” என்ற பாடலில் மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியதையும் [https://youtu.be/6PPpbSB0iME] இங்கு நினைவு கூரலாம்.

முல்லைப் பாட்டு உரை நூல்கள் –

தமிழ் நூல்கள் பெருவாரியாக அச்சேறத்துவங்கிய காலமான சென்ற நூற்றாண்டின் துவக்கம் முதற்கொண்டு, பெரும் தமிழறிஞர்களாக நாமறியும் உ. வே. சா., மறைமலை அடிகள், பொ. வே. சோமசுந்தரனார், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி, கோவை பண்டிதர் திருச்சிற்றம்பலம் உரை, கோவிந்தராஜ முதலியார் ஆராய்ச்சி உரை முதற்கொண்டு, சென்ற சில பத்தாண்டு முன்னர் எழுதப்பெற்ற புலவர் கா. கோவிந்தன் அவர்களின் உரைகள் வரை பற்பல உரைகள் முல்லைப்பாட்டிற்கு எழுதப் பட்டிருந்தாலும், எல்லாவற்றுக்கும் காலத்தால் முற்பட்டதாக நமக்குக் கிடைப்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவர்களது உரையே. இவ்வுரை நூல்கள் பாடலுக்குப் பொருள் கூறுவதும் வெவ்வேறு அணுகுமுறையில் அமைந்துள்ளது. பாடலின் வரிக்கு வரிக்கு வரி பொருள் உரைக்கும் பொதுவான வழக்கில் உள்ள ஒரு முறையையும் கடந்து, ஆராய்ச்சியுரைகள் என்ற அளவில் இலக்கியநயம் பாராட்டி இலக்கிய ஆய்வுமுறைக் கட்டுரைகளாக வழங்கும் உரைகளும் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக நமக்குக் கிடைப்பவை மறைமலை அடிகள் மற்றும் கோவிந்தராஜ முதலியார் ஆகியோர் எழுதிய முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரைகளாகும். இந்த ஆராய்ச்சியுரைகள் முன்வைக்கும் குறிப்பிடத்தக்கக் கருத்துக்களை அடுத்து நாம் காணலாம்.

siragu mullaippaatu1

உ. வே. சா., மறைமலை அடிகள் ஆகியோரின் உரைநூல்கள் 1903 ஆண்டு போல எழுதப்பட்டதற்கு ஒரு பொதுவான காரணம், முல்லைப்பாட்டு பாடநூலாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அக்கலாக்கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதும், தங்கள் கல்விக்காக மாணவர்கள் இத்தமிழறிஞர்களிடம் உரைநூல் வழங்குமாறு வைத்த கோரிக்கைகளுமே காரணம் என்பதை நூல்களின் முகவுரை தரும் கருத்துகள் மூலம் அறிய முடிகிறது.

உ. வே. சா. உரை –

நச்சினார்க்கினியர் உரை உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம் பதிப்பாக வெளியாகியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் 1903 ஆம் ஆண்டின் இளங்கலை பாடத்திட்டத்தில் முல்லைப்பாட்டையும் தேர்வுக்குரிய பாடமாகத் தேர்வு செய்திருந்தனர். முல்லைப்பாட்டையும், முல்லைப்பாட்டுக்கு நச்சினார்க்கினியர் வழங்கிய உரையையும் மாணவர்களுக்காக எளிமைப்படுத்தி வழங்கும் நோக்கில், உ. வே. சா. அவர்கள் பதிப்பித்த நூலில் அவரது எளிய நடையிலான உரையையும் விளக்கக் குறிப்புக்களையும் இணைத்துப் பதிப்பித்தார்.

மறைமலை அடிகள் –

அவ்வாறே, சென்னைப் பல்கலைக்கழக பாடநூல் தேவைக்கென, தனது மாணாக்கர்களுக்காகச் சென்னை கிறித்துவக் கல்லூரி பேராசிரியர் மறைமலை அடிகள் அவர்களும் முல்லைப்பாட்டு விளக்க உரை நூலை அதே காலத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புழக்கத்தில் இருக்கும் விளக்கவுரை நூல்கள் சொல்லுக்குச் சொல் பாடலை விளக்க முற்படுவதாலும், அவற்றுக்கான இலக்கணக் குறிப்புகளை விரிவாக விளக்க முற்படுவதாலும் முல்லைப்பாட்டு பாடலின் அழகு மங்குவதாகவும், பாடலின் இனிமையை உய்த்து உணர்வதில் தடை ஏற்படுவதாகவும் அவரது நூலின் முதல் பதிப்பின்(1903) ஆங்கில முகவுரையில் சுட்டியுள்ளார் மறைமலை அடிகள். ஆகையால், தமது நூலில் நச்சினார்க்கினியர் உரையை அடியொட்டி உரை எழுவதைத் தவிர்த்து, புலவர் நப்பூதனார் பாடலின் வரிகளில் நேரடிப் பொருள் கொள்ள விரும்பியுள்ளார் இவர். பாடல் அமையப்பெற்ற வரிகளின் ஒழுங்கின்றி, நச்சினார்க்கினியர் பல வரிகளின் சொற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டி உரை வழங்குவதை ஏற்க மறுத்து அவரது உரையை “இணங்காவுரை” என்று அறிவிக்கிறார். வடமொழி செய்யுட்களில் பொருள் கொள்ளும் முறையின் தாக்கத்தில் அவர் அவ்வாறு செய்வதாகக் கூறி, அது ஏற்கத் தக்க முறையல்ல என்று வாதிடுகிறார் (‘கண்டாந்வயம்’ என்பது சொற்களை வரிசை மாற்றி வெவ்வேறு இடத்தில் பொருத்திக் கொண்டு கூட்டிப் பொருள் சொல்லும் முறை, சொற்களுக்குப் பாடலின் போக்கில் அதே வரிசையில் படித்து பொருள் உரைக்கும் முறை ‘தண்டாந்வயம்’ எனவும் வடமொழியில் குறிக்கப்படும்).

கும்பகோணம் ஆசிரியர் உ. வே. சா. அவர்களது பதிப்பை விடக் கோவை பண்டிதர் திருச்சிற்றம்பலம் அவர்களின் விளக்க உரையை தமது மாணவர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புவதாகவும் நூலின் முகவுரையில் மறைமலை அடிகள் கூறியுள்ளார். பண்டிதர் திருச்சிற்றம்பலம் அவர்களின் விளக்கவுரை மாணவர்களுக்கு நல்ல அறிமுகம் தருவதாகவும் மறைமலை அடிகள் கருதுகிறார். இவரது முதல் பதிப்பில் இவருக்கு 2000 ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதால், தேவையிருந்தும், நூலுக்கு நல்ல வரவேற்பிருந்தும் இவர் தமது நூலின் மறுபதிப்பை வெளியிட ஆர்வமின்றி இருந்தார். ஆனால் இவரது மாணவர்கள் இவரை வற்புறுத்தி, தம் கைப்பொருளையும் வழங்கி கேட்டுக் கொண்டதன் பேரில் 1910 இல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நூலில் ஆசிரியர் பெயர் பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளை (1911ஆம் ஆண்டின்- ராமநிலைய விவேகானந்தா அச்சியந்திரசாலை பதிப்பு) என்று காணப்படுகிறது. மறைமலை அடிகளின் மறைவுக்குப் பிறகு 1958, 1962 ஆண்டுகளில் கழக வெளியீடாக வந்த பதிப்புகளில் அவரது பெயர் மறைதிரு. சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்றியது என்று ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படுகிறது, இந்த பதிப்புகளை இணையத்தில் பெறும் சுட்டிகளைக் கட்டுரையின் இறுதியில் காணலாம். முல்லைப்பாட்டு படிக்க விழைவோருக்கு மறைமலையடிகள் நூல் ஒரு சிறந்த வழிகாட்டி எனலாம்.

கா.ர. கோவிந்தராஜ முதலியார் –

பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் கா.ர. கோவிந்தராஜ முதலியார். இவர் பாடல்வரிகளுக்கு ‘அநுவயம்’ (‘அந்வயம்’ அல்லது ‘அ-ம்.’ என்று சுருக்கமாகவும் இது கூறப்படும், பாடலின் பொருளைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் அதன் சொற்களைப் பிரித்து வழங்கும் முறை, இது பாடலின் அடிநேர் வகையிலோ, அல்லது கொண்டு கூட்டி பொருள் கொள்ளும் வகையிலோ பாடலின் வரிகளுக்குப் பிறகு கொடுக்கப்படும் பகுதி, இது ஒரு வடமொழிச் சொல். இது முன்னர் கூறியவாறு ‘தண்டாந்வயம்’, ‘கண்டாந்வயம்’ என்ற முறையில் அமையும் என அறிக), அநுவயத்தை தொடர்ந்து பதவுரை (சொற்பொருளுரை), பொழிப்புரை இவற்றுக்குப் பிறகு, ‘விசேடவுரை’ (சிறப்புரை) என்ற வரிசையில் பாடலுக்கு உரை வழங்குகிறார். விசேடவுரை பகுதியில் இலக்கியநயம் பாராட்டும் வகையில் பாடலின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது. மறைமலை அடிகள் நச்சினார்க்கினியர் அடிதொட்டு பொருள் கொள்ளும் முறையை ஏற்காவிட்டாலும், கோவிந்தராஜ முதலியார் நச்சினார்க்கினியர் உரைதான் சிறப்பு என்று கருதி அவரைப் பின்பற்ற முடிவெடுத்ததாக தமது முகவுரையில் கூறுகிறார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உரைகள் அரைநூற்றாண்டுக்கும், ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டவை. அண்மையில் எழுதப்பட்ட புலவர் கா. கோவிந்தன் போன்றோர் உரை இவற்றினும் எளிதாக எளிய தமிழில் படிக்க உதவும். இணையம் உருவான பின்னர் பிறந்து, முல்லைப்பாட்டு படிக்க விரும்பும் இக்காலத்து இளைய தலைமுறையினருக்கு,

இணையத்தில் .. .. ..

முனைவர் ப. பாண்டியராஜா (http://sangacholai.in/10-5.html)

முனைவர். செங்கை பொதுவன் (http://vaiyan.blogspot.com/)

முனைவர். பிரபாகரன் (https://mullaippaattu.blogspot.com/)

வைதேகி ஹெர்பர்ட் (https://sangamtranslationsbyvaidehi.com/)

போன்ற தமிழறிஞர்கள் உருவாக்கியுள்ள தளங்கள் எளிய தமிழ் நடையிலும் ஆங்கிலத்திலும் உரைகள் தந்து உதவுகின்றன.

__________________

உதவிய நூல்களும் இணைய தளங்களும்:

1. முல்லைப்பாட்டு – உ.வே.சா.,

1903 – பதிப்பு -

https://ia600109.us.archive.org/8/items/mullai_pattu/1903%20உ.வே.சா._k2opt.pdf

1910 – பதிப்பு -

https://ia600109.us.archive.org/8/items/mullai_pattu/1910%20உ.வே.சா._k2opt.pdf

2. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, மறைமலை அடிகள்., (முதற் பதிப்பு 1903, தொடர்ந்து வெளியான பதிப்புகள் 1910, 1919, 1931, 1958 மற்றும் 1962)

முல்லைப்பாட்டு – நாகை வேதாசலம் பிள்ளை., 1910 – இரண்டாம் பதிப்பு

https://ia600109.us.archive.org/8/items/mullai_pattu/1911%20வேதாச்சலம்._k2opt.pdf

1958 – பதிப்பு – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

https://ia600109.us.archive.org/8/items/mullai_pattu/1958_முல்லைப்பாட்டு_ஆராய்ச்சியுரை_k2opt.pdf

1962 – பதிப்பு – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

https://ia600109.us.archive.org/8/items/mullai_pattu/1962-முல்லைப்பாட்டு_ஆராய்ச்சியுரை%20(1)_k2opt.pdf

3. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, கா.ர. கோவிந்தராஜ முதலியார், 1952

https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002655_முல்லை_பாட்டு.pdf

5. முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்) – புலவர் கா. கோவிந்தன்.,

திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1990

https://upload.wikimedia.org/wikipedia/commons/4/42/முல்லை_%28முல்லைப்பாட்டு_விளக்கம்%29.pdf


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள்”

அதிகம் படித்தது