மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வள்ளல் அழகப்பரும் மலை நாடும்

காசி விசுவநாதன்

Jan 1, 2012

” வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் ”

” நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்

நல்கா தாகி விடின்

முதற் குறளை விட்டு அடுத்த குறளுக்கு வந்தால், அதனை நாம் தவறாமல் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தக்குறள் தான் இன்று நம் மனித சமூகத்திற்கு முற்றிலும் பொருள் உணர்ந்து, அந்தவகை மனிதர்களை நினைவிற்கொள்ள ஒரு நியதியை ( Basic ethics )வரையறை செய்து நமக்கு அறிவுறுத்துகிறது. ஆம் அளவில் பெரிதாகி நிற்கும் கடல் நீரை ஆவியாக்கி பின் கார் முகிலாய் சூள் கொண்டு மீண்டும் பொழியவைப்பது போல், இந்த மானிட சமுதாயத்தில் இருந்து கொண்டு அதனால் வாழ்ந்து உயர்ந்தவர்கள் எல்லாம், மீண்டும் தம் கடமையை இந்த சமுதாயத்திற்கே செய்யாவிடில், எப்படி அந்த சமுதாயம் வாழும் ? இது தான் வள்ளுவப் பெருந்தகை மனித குலத்திற்கு, தன் தாய்மொழியில் கேட்ட கேள்வி. இதன் பொருளை உணர ஏழு கடல் ஏழு மலை தாண்டி அங்கு உள்ள மேதைகளிடம் கேட்டு வாங்கிவந்து கருத்தியல் பரப்பி ஒரு மேதையை, அறிவாளியை உருவாக்கவேண்டிய அவசியம் தேவை இல்லை. வள்ளுவரின் வினாவுக்கு தக்க பதிலாய் வாழ்ந்த- தனது மனித வாழ்வின் கடமையை உணர்ந்த ஒருவர்தான் வள்ளல் அழகப்பர்.

வள்ளல் அழகப்பர், பெயரால் மட்டுமல்ல, செயலாலும் அழகுடைய செம்மல். அவர் தன் வாழ் நாள் இறுதி மூச்சு வரை தான் தேடிய செல்வங்கள் அனைத்தும் கல்விக்கே என்று சிந்தையிலும் செயலிலும் உறுதி செய்து கொண்ட தமிழ் வள்ளல். பாரியும் அதியமானும் கொண்டிருந்த நேர்மைத்திறம் கொண்ட மாமனிதர். அவர் கண்ட கல்விக்கழகங்கள் எல்லாம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக்கடற்கரை வரை மட்டுமல்ல தென் கோடியிலிருந்து இந்த நாட்டின் தலை நகர் வரை பலனளித்து, அவர் பெயர் சொல்கின்றன.. கல்லூரி நாட்களில் இருந்து ஓயாது உலகம் சுற்றிய இந்த வாலிபர், தான் சென்ற இடங்களில் தமிழனாய் தன் தகைமையை நிலை நிறுத்தி, தமிழ் நிலம் சாராத தொலை நாடுகளிலும் மக்களுக்கு அறப்பணியும், கல்விக்கண்ணும் திறந்த செம்மல்.

பிறந்தவர் எல்லாம், தன் எதிர் கால சந்ததிக்கு ஏழேழு தலைமுறைக்கு சொத்தும், வளமும் மூட்டை கட்டி வாழ்ந்திருந்தபோது, தான் பிறந்த நாள் முதலாய் “வந்தது வரவு, வாழ்ந்தது செலவு – இதில் செய்தது நிறைவு ” என்று வாழ்ந்தவர். அவர் இந்த மண்ணில் வாழ்ந்த காலங்கள் வெறும் 48 ஆண்டுகளே. பிறப்பு :- 1909 ஏப்ரல் மாதம் 6ம் நாள். இறப்பு :- 1957 ஏப்ரல் மாதம் 5ம் நாள். ஆம் இயற்கையும் கூட இவரது நினைவு நாளைத்தான் பிறந்த நாளுக்கு முன் நினைவு படுத்துகிறது. அதற்கு காரணம் மேற் சொன்ன வள்ளுவரின் இரண்டாவது குறளுக்கு முழுமையான அர்த்தமாய்  வாழ்ந்த மனிதர். மனித நேயர்.

வள்ளல் அழகப்பர் தனது தொழில் முனைவின் அடுத்தகட்டமாக கொச்சின் என்ற மேற்கு கடற்கரை நகரில் ” திருவிதாங்கூர் நூற்பாலை” என்ற உற்பத்திக்கூடத்தை தொடங்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். அப்போது முதல் மலை நாட்டுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். (மலைநாடு என்பது தமிழர் வழக்கில் சேர நாடு அல்லது தற்போதைய கேரளம், செந்தமிழ் திரிந்து மலையக மக்கள் வழக்கில் இருந்த பகுதிகள் மலை நாடு என்றனர்). அங்கு உள்ள மக்கள் நலப்பணிகளில் தன்னை நீக்கமறப் பிணைத்துக்கொண்டார். அன்று அவர் காலங்களில், அவர் செய்த இயல்பான பணிகள் சில நம் நினைவில் உண்டு. அவை இங்கு தெரிந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1. கொச்சின் நகரம் புயலால் தாக்கப்பட்டபோது “கொச்சின் புயல் நிவாரண நிதி”.

2. அதனைத்தொடர்ந்து “புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்” அமைக்க

அப்போதைய திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு நிதி அளித்தார்.

3. கொச்சின் மகப்பேறு மருத்துவமனை நிர்மானிக்க நிதி உதவி.

4. கொச்சின் நகரில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நிதி உதவி.

5. எர்ணாகுளம் “உள் நாட்டு மருத்துவ ஆய்வு மையம்” அமைக்க நிதி உதவி (எர்ணாகுளம் மாகாராஜா கல்லூரியில் அமைக்க உதவியது ).

6. கொச்சின் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்க நிதி உதவி.

7. கொச்சின் நகரில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலையில் ” உனவு அளிக்க பெரும் பொருள் உதவி”.

8. கொச்சின் நகரில் “தென் இந்திய வர்த்தக சம்மேளனம் “உருவாக்கியவர் வள்ளல் அழகப்பரே.

இவை அவர் வாழ்வில் ஒரு பகுதியில் செய்த, தெரிந்த அறப்பணிகளே.

பொதுவாக ஐயா அவர்கள் தாம் கொடுப்பதை நினைவில் வைத்துக்கொள்வதும் இல்லை, அடுத்து  என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்திக்கும இயல்புடையவர் அழகப்பையா அவர்கள். இவையெல்லாம் சிற் சில ஆவணங்களால் தெரிய வந்தவைதான். அழகப்பையாவின் அந்திமக்கால உதவியாளராக இருந்தவர், ஐயாவைப் பற்றி நினைவு கூறும் போது, “அவரது தொழில்கள் நலிவடையும் போது, பல சொத்துக்களை விற்கத்தொடங்கினார். அந்தச் சூழ்நிலையிலும் கூட அவர் தன் அலுவல் பணிகளை முடித்து மறு நாளுக்கான திட்டத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, உறங்கச்சென்றார்.

அவருக்கு உறக்கம் சலனமின்றி வரும். முக மலர்ச்சியுடன் மறுநாள் அவரது அலுவல்களை கவனிப்பார். கொஞ்சமும் வேதனையும், கவலையும் கொண்டதேயில்லை. இடையிடையே உதவி நாடி வருபவர்களுக்கு அவர்கள் கேட்பதெல்லம் தந்துவிடுவார்.” என்கிறார். ஒரு பாரியையும், அதியமானையும் அருகிருந்து பார்த்த அனுபவம் அவருக்கு.

ஆம் இந்த வாழ்வுதான், மேலே உள்ள இரண்டாவது குறளின் பொருள்.  பாரியும், அதியமானும் வள்ளுவருக்கு முன்னோடியாக வாழ்ந்து அவர் எழுதுவதற்குப் பொருள் உணர்த்திச்சென்றுள்ளனர். அதை வாழையடி வாழையாக உள்ளுணர்ந்து வாழ்ந்து காட்டியவர் நம் அழகப்பையா.

வள்ளல் என்பது  தமிழ்த் தாய் தானே அவருக்கு உவந்தளித்த பெயர். தமிழர் தொல்குடியில் பெயர் நிலைத்தல் என்பது ஒப்புயர்வற்ற பேறு. அது வலிந்து தேடினாலும் கிட்டாது.

1953ம் ஆண்டு ஐயா அழகப்பர் தான் பிறந்த சிற்றூரில் பெரும் முயற்சியில் “நடுவண் மின்வேதியல் ஆய்வு மற்றும் கல்வி நிலையம்” அமைத்தார். அதற்கு அவர் அரும் பாடு பட்டு அந்த நிலையத்தை அங்கு கொண்டு வந்தார். முதலில் பின் தங்கிய பகுதி என்று புறக்கணித்தனர்.  நீர் வளம் வேண்டும் என்ற நிபந்தனை விதித்தனர். ஐயா அவர்கள் அப்போது சொன்னாராம்- அந்த சிற்றூரில் இருந்துதான் இன்று வெளி உலகுடன் நான் பணி செய்கின்றேன் என்று. அந்த சிற்றூரில்  உள்ள மக்களுக்கும் கல்வி பெற வேண்டும் என்பதேஅவரும் ஆவல் . அவர் தன் பொறுப்பில் உள்ள  நிலங்கள் போதாமல், தன் ஊரின் அருகில் உள்ள ஊர் மக்களிடமும் நிலங்களைப் பெற்று பெரும் பொருட்செலவில் அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தும் செய்து கொடுத்தார். அதனால்தான்  நன்றி மறவா பாமர மக்கள் இன்றளவும், எங்கள் ஐயா அமைத்த கல்விக்கூடங்கள என்று தலைமுறை  தலைமுறையாக நன்றி செலுத்துகின்றனர்.

அந்தக் கல்வி  நிறுவனத்தின் RTI என்பதில், பட்னாகர் என்பவருடன் திரு. அழகப்பர் என்பாரும் இணைந்து செயல்படுத்தினார் – என்று மட்டுமே  அறிவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழ்மகனின் அறக்கொடையை சொல்லக் கூசும் என்பதால், பின் இணைப்பாக பெருந்தன்மையுடன் அவர் பெயரை, பெயர் அளவில் அறிவிக்கின்றனர். ஆனால் பாமரரோ, மண்ணின் மக்களோ, “எங்கள் அழகப்பையா பண்டிதர் வந்திறங்க விமானதளம் கட்டினார், கல்வியாளர் பார்வைக்கு குளம் தொட்டு வளம் பெருக்கினார் ” என்று கொண்டாடுகின்றனர். இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன ?

1.பண்டிதர் = பண்டிட் ஜவகர்லால் நேரு.

2.கல்வியாளர் = CECRI அமைய கல்விக்குழு இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள வந்தது.

3.குளம் தொட்டு வளம் பெருக்கினார் = இது நீர் வளம் இருக்க வேண்டும் என்று பார்வையாளர் வரும் முன் குளங்களை உருவாக்கி ஊருணியில் இருந்து நீர் கொண்டு வந்து, வளம் பெருக்கிக்காட்டினார், என்பதே. இது தான் அந்த வள்ளல், தன் நலம் கருதாமல் செய்த பணிக்குக்கிடைத்த பரிசு. அது பாமர மக்களின் இயல்பு. அந்த கல்வி நிறுவனத்திலோ அல்லது அங்கு படிக்கும் மாணவர்களோ அவர் யார் என்றே தெரியாமல் கூட நாட்டார் வழக்காற்றில் அவரது ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது.

பிறர் வாழ, கொடு  என அவர் கொடுத்ததை எதையும் எழுதிவைக்கவில்லை. ஆனால் தன் தொழில் நலிந்தபோது, பிறர் எவரிடமும் கொள்ளேன் என்று, நெறியுடன் தன் வாழ்வை ஈடு செய்தவர், வள்ளுவர் தேடிய வள்ளல் அழகப்பரே.

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் வள்ளல் அழகப்பர் என்பதை விட” எங்கள் அழகப்பையா ” என்று தான் மக்கள் வழங்கி வருகின்றனர். அதற்கு காரணம் வள்ளல் என்று முன்னொட்டில் அழகப்பர் என்றே முடியும் அது அவரது பெயரை மரியாதைகுறைவாக சொல்வது போல் உள்ளது. ஆகவே ” எங்கள் அழகப்பையா ” என்றால் எங்கள் உறவிலும் உணர்விலும் இடைவெளி இல்லை என்கின்றனர். இந்த உறவு பாமர மக்களிடமே இருக்கும். அவர் வாழ்ந்த காலங்கள் என்னவோ 48 ஆண்டுகள் தான். ஐயாவின் நினைவைப்போற்றும் வாய்ப்பு, நம் வாழ் நாளில் ஒரு பெருமிதம்.


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வள்ளல் அழகப்பரும் மலை நாடும்”
  1. ராசா says:

    இப்படியும் ஒரு வள்ளளா என வியக்கின்ரென்.

  2. T.Swaminathan says:

    அருமையான தொகுப்பு.

    பிறப்பு, இறப்பு பற்றிய ஆசிரியரின் தொகுப்பு மிக சிறப்பு.

    உண்மையான வள்ளல்கள்
    இப்படி மக்களுக்கு தெரியாமலிருக்க!
    இங்கு கல்வியின் பெயரைசொல்லி காசு பார்க்கும் கயவர்கள், தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்டு அலைகிறார்கள் பாரிவேந்தர்,கல்வித்தந்தை என்று…

    தொடருங்கள்…

அதிகம் படித்தது