மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வெல்லும் சொற்கள்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 24, 2022

siragu narpanbugal1
சொற்கள் கனமாவனவை. சொற்கள் நிறைவேற்றும் வல்லமை கொண்டவை. சொற்கள் மனதைச் சொன்னபடி நடக்கச்செய்பவை. சொல்லுதல் யாருக்கும் எளிதாம். சொல்லிய வண்ணம் செய்த என்பது அரிதாகும். ஒருவருக்கு வாக்கு தந்துவிட்டால் அந்த வாக்கின்படி நடந்தாக வேண்டும். இல்லையென்றால் வாக்கினைத் தரக் கூடாது. நாம் சொல்லும் வாக்கிற்கும் வலிமை அதிகம். நாம் செலுத்தும் வாக்கிற்கும் மதிப்பு அதிகம்.

    வாக்கு தருவதில் மனிதர்கள் மூன்று வகைப்படுகிறார்கள்.
சொல்லாமலே பெரியர். சொல்லிச் சிறியவர் செய்வர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாட்டில்
பலா, மாவை, பாதிரியைப் பார்
என்பது ஒரு தனிப்பாடல்.

இதில் மூன்று வகை மனிதர்கள் இடம்பெறுகிறார்கள். மூன்றுவகை மரங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வகை மனிதரும் ஒவ்வொரு மரத்திற்கு ஈடாகிறார்கள்.

சொல்லாமல் ஒன்றைப் பற்றி உணர்ந்து கொள்பவர்கள் பெரியர். சொல்லாமல் ஒரு செயலைச் செய்து முடிப்பவர்கள் பெரியவர்கள். ஒரு காரியத்தைப் பிறர் சொல்லாமலே அதனை நிறைவேற்றுபவர்கள் பெரியவர்கள். செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்ய வேண்டிய காலத்தில செய்ய வேண்டிய முறைமையில் செய்து முடிப்பவர்கள் பெரியவர்கள் ஆவர்.

சொல்லாமலே பெரியர் என்பதற்கு இவ்வகைகளில விளக்கம் கொள்ள இயலும். பூவாமல் காய்க்கின்ற காய் பலாக்காய். பலா மரத்தில் பெரும் பெரும் காய்கள், பழங்கள் விளைகின்றன. ஆனால் ஒரு பூவைக் கூட காண இயலாது. பூக்காமலே காய்க்கும் காய்களை உடைய பூக்காமலே காய்த்துப் பழுக்கும் பழங்களை உடைய பலா மரங்கள் பெரியோர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

சொல்லிச் சிறியர் செய்வர். மற்றவர்கள் பலமுறை சொல்லிச் சொல்லிச் செய்பவர்கள் சிறியர் ஆவர். ஒன்றை இது அவசியத் தேவை என்று பிறர் உணர்த்திய பிறகு செய்பவர்கள் சிறியர் ஆவர். தனக்காகவே தோன்றாமல் மற்றவர்கள் சொல்லி அதன் வழிச் செய்யும் தன்மை பெற்றர்கள் சிறியர் ஆவர்.

இவர்களுக்கு மா மரம் எடுத்துக்காட்டாகும். மாமரத்தில் பூக்கள் பூக்கும். ஒரு காலத்தில் மரம் முழுவதும் பூவாமல் நிரம்பி இருக்கும். பச்சை நிறங்களில் மஞ்சள் சார்ந்த நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும். சிலகாலம் கழித்து அப்பூக்கள் பிஞ்சுகளாகிக் காய்களாகி, பழங்களாகிப் பழுக்கும். இவற்றில் பூவில் உதிர்வனவும் உண்டு. பிஞ்சில் சரிவனவும் உண்டு. காய் நிலையில் வெம்பிப் போகின்றனவும் உண்டு. மரத்திலேயே பழுக்கின்ற பழங்களும் உண்டு. பறித்து வைத்து பழுக்கின்ற பழங்களும் உண்டு. மாமரத்தில் காய்கள் தோன்றப்போகின்றன என்பதைப் பூக்கள் அறிவிக்கின்றன. இவ்வாறு பூத்துப் பின் காய்க்கும் நிலையைப் பெற்றவர்கள் சொல்லிச் செய்யும் சிறியவர்கள். மேலும் ஒரு செயலை செய்து முடித்தபின் நான் செய்தேன் நான் செய்தேன் என்று பலமுறை சொல்லித் திரிபவர்கள் சிறியவர்கள்.

சொல்லாமல் செய்பவர்கள் பெரியவர்கள். செய்து முடித்தபின்னும், செய்யும் முன்னரும் தன் பெயர் சொல்ல நிலையினர் பெரியவர்கள். உண்மையில் அவர்கள் செயலில் பெரியவர்கள்.

சொல்லாமல் செய்பவர்கள் பெரியவர்கள் என்பது தலையாய மனிதர்களின் வகை. சொல்லிச் செய்பவர்கள் என்பது இடைநிலை. அது சிறியவர்கள் நிலை. மூன்றாம் நிலை ஒன்று இருக்கிறது. சொல்லியும் செய்யாதவர்கள் அவர்கள்.

மற்றவர்கள் சொல்லியும் இவர்கள் செயல்களைச் செய்யமாட்டார்கள். தானாக ஒன்று செய்வதாகச் சொல்லிவிட்டு அதனைச் செய்யாமல் நிற்பவர்கள் மூன்றாம் நிலைப்பட்டவர்கள். சொன்னதை மறப்பவர்கள் மறைப்பவர்கள் இவர்கள்.

இவர்களுக்குப் பாதிரி மரம் உவமையாகின்றது. பாதிரி மரம் செழிப்பாக வளரும். அது மஞ்சள் நிறப் பூக்களைக் கொத்து கொத்தாகப் பூக்கச் செய்யும் ஆனால் காய்கள் அம்மரத்தில் உருவாகாது. பூத்தும் காய்க்காத மரம் பாதிரி. சொல்லியும் செய்யாத மனிதர்களுக்கு இப்பூக்கள் உவமையாகின்றன. இதனை மஞ்சள் அரளி என்று வழக்கத்தில் நாம் அழைப்போம்.

தனிப்பாடல் பாடிய கவிஞன் பூக்களை இயற்கையை என்ன அழகாகக்  கவனித்து இருக்கிறான். பூவாமல் காய்க்கின் மரம் பலாமரம். பூத்தும் காய்க்கும் மரம் மாமரம். பூத்தும் காய்க்காத மரம் பாதிரி மரம்.

பூக்களைக் கொண்டு மனிதர்களை வகைமை செய்ய முடிகின்றது. செயல் செய்வது அரிதான செயல். வள்ளுவர்
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்
என்கிறார். ஒரு செயலைத் திறம்பட செய்யவேண்டுமானால் அச்செயலுக்கான பொருள்களை முதலில் சேகரிக்க வேண்டும். அதன்பிறகு அச்செயல் செய்வதற்கு உரிய கருவிகளைத் தேட வேண்டும். உரிய காலத்தில் செயலைச் செய்யத் தொடங்கவேண்டும். செயலையும் உரிய காலத்தில் முடித்துத் தர வேண்டும். இவை அனைத்தும் இருந்தாலும் செயல் செய்வதற்கு உரிய கலைஞர்கள் கிடைத்தாக வேண்டும். உரிய இடம் வேண்டும் என்ற நிலையில் ஐந்தும் உரிய நிலையில் இருந்தால் மட்டுமே செயல் வெற்றி பெறும்.

பெரியோர் இவ்வைந்தையும் உணர்ந்து பெற்றபின்பே செயலைத் தொடங்குவர். சிறியர் என்போர் இவ்வைந்தில் ஏதேனும் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டுச் செயலைத் தொடங்கிவிடுவர். எதையும் தேடாமல் செயலும் செய்யாமல் இருப்பவர்கள் எதற்கும் ஆக மாட்டார்கள்.

இவ்வாறு செயல்களே, செயல்களைச் செய்ய வைக்கும் சொற்களே மனிதர்களைச் செம்மையுடையவர்களாக ஆக்குகின்றது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெல்லும் சொற்கள்”

அதிகம் படித்தது