மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அடுத்தது என்ன? (சிறுகதை)

ஸ்ரீதரன்

Oct 20, 2018

Siragu aduththadhu enna1

காலை மணி ஐந்து. வெளியில் எங்கும் அந்தகாரமாயிருந்தது. சம்பந்தம் நடைப்பயிற்சி யோகா செய்ய வீட்டை விட்டு கிளம்பி விட்டார். மழையாக இருந்தாலும், புயலாய் இருந்தாலும், மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றாலும் அவருக்கே உடம்பு சரியில்லையென்றாலும் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

சம்பந்தம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. டில்லி, மும்பாய், பூனே, போபால் நாட்டின் பல பாகங்களில் பணி செய்தாலும் பணி இறுதியில் மூன்று வருடங்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணி செய்து ஒய்வு பெற்றார். மிகவும் ஜாக்கிரதையானவர். அஞ்சல் பெட்டியில் கடிதத்தைப் போட்டுவிட்டு அதன் பின் பக்கம் போய் பத்திரமாய் உள்ளே போய்விட்டதா அல்லது பின் பக்கம் ஏதாவது ஓட்டை வழியாக விழுந்தது விட்டதா? என்று பார்த்துவிட்டுத்தான் வருவார். எப்போதும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல் பேசி அசத்துவார்.

மனைவி மோகனா இல்லத்தரசி. நாற்பது வருட தாம்பத்தியம். கணவன் மனம் கோணாமல் நடந்து கொள்வாள், கடவுள் பக்தி அதிகம். “நீ வேரோடு இறைவனை பிடுங்குகிறாய் என்று சம்பந்தம் கேலி பண்ணுவார்.

சம்பந்தம் ஓய்வு பெற்ற பிறகு சென்னை அடையாரில் தன் மகன் மருமகளுடன் வசிக்கிறார். அவருடன் அவருடைய மகன் சுந்தர் சிஏ படிப்பை முடித்து விட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் பணி செய்கிறான். மருமகள் பார்வனா கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். வணிகத்துறையில் முதுகலைப் பட்டம் வாங்கியவர். மாமியார் மெச்சும் மருமகளாய் இல்லத்தரசியாய் இருக்கிறார். பேரன் அரவிந் முதல் வகுப்பு படிக்கிறான். சம்பந்தம், மனைவி மோகனா, சுந்தர், பார்வனா, அரவிந் என்னும் ஐவரோடு அந்த குடும்பம் ஆனந்தமாய் அமைதியாய் போய் கொண்டிருந்தது.

சம்பந்தம் காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். பல் துலக்கி வந்தவுடன் அவர் மனைவி கொண்டு வந்து கொடுத்த காபியைப் பருகுவார். பிறகு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்குப் போய் நடைப்பயிற்சி செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது ஏழரை மணி. அரை மணி நேரம் செய்தித்தாளைப் பார்த்துவிட்டு குளிக்கப்போவார். சிவராமன் எப்போதும் பட்டா போட்டிப் போட்ட கால்சராயை உள்ளாடையாய் அணிந்து அதன் மேல் வேட்டி அணிந்திருப்பார். குளிக்கப் போகும்போதே உள்ளாடை, துவட்டிக் கொள்ள துண்டு எல்லாம் எடுத்துப் போவார். குளித்துவிட்டு நன்றாகத் துண்டால் துடைத்துக் கொண்டு கால்சராயை அணிந்து கொண்டு தன் அறைக்குச் சென்று வெள்ளை வெளேரென்று இருக்கும் வேட்டியை உடுத்திக்கொண்டு இறைவனை வணங்குவது பழக்கம்.

சம்பந்தம் தனது பால்ய நண்பன் சிவராமனுடன் பேசி விட்டுப் போவார். சிவராமன் டெல்லியில் அரசாங்கத்துறையில் சட்ட நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

“வா, சிவராமா, நேற்று ஏன் வரவில்லை?” என்று வீட்டுக்குள் நுழைந்து தோழனைப் பார்த்து அன்புடன் வினவினார் சம்பந்தம்.

நேற்று நான் ஊரில் இல்லை. காஞ்சிபுரம் போயிருந்தேன். வரும்போது பத்து மணி ஆகிவிட்டது. என் மாப்பிளை வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். நான் போய் எனக்குத் தெரிந்த சில பெரிய மனுசர்களைப் பத்திச் சொல்லி அவங்களைப் போய் பார்க்கச் சொன்னேன்.

”துன்பம் என்பது சிலர் அவர் செய்யும் செயலால் வருகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. சில சமயம் நம்மை பிடிக்காதவர் அல்லது வேறு யாராவது செய்யும் செயல் நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறது. சில சமயம் நாம் எதுவுமே செய்யாமல் இயற்கையாகவே நாம் இன்னல் பட வேண்டியிருக்கிறது. திடீரென்று காற்று புயல் அடித்து நம்மைத் துன்புறுத்துகிறது. நாம் முன்பிறவியில் செய்த வினைப் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்கிறோம். அதனால்தான் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன” என்றார் சம்பந்தம். சிறிது நேரம் பேசி விட்டுப் பிறகு புறப்பட்டுச் சென்றார்.

அன்று சம்பந்தம் எப்போதும்போல் குளித்துவிட்டு பட்டா பட்டி நிக்கரை அணிந்து கொண்டுக் குளியறைக்கு வெளியே வந்து முழித்துக்கொண்டு நின்றார். அவருக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை.

அப்போது குளிப்பதற்காக வந்த பார்வனா, மாமனார் நிற்பதைப் பார்த்து, மாமா என்ன வேண்டும்? வழியை மறித்து ஏன் நிக்கறீங்க? என்று கேட்டாள்.

அடுத்தது என்ன? என்றார் சம்பந்தம்.

மாமா நீங்க என்ன சொல்றீங்க?

அடுத்தது என்ன?

பார்வனாவுக்கு பயம் வந்துவிட்டது. அவள் உடனே மாமியார் இருந்த அறைக்கு ஓடிச் சென்று, எனக்குப் பயமாய் இருக்கு. மாமா குளியலறைக்கு வெளியே நின்னு பேந்த பேந்த முழிக்கிறார். ”அடுத்தது என்ன?” என்று கேட்கிறார். நீங்க போய் பாருங்களேன்” என்றாள்.

அதிர்ந்து போன மோகனா வெகுவேகமாக கணவர் நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு வந்து, என்ன வேணுங்க? இங்கே நின்று என்ன பண்ணறீங்க?

”அடுத்தது என்ன?”

என்னைத் தெரியலையா உங்களுக்கு?

தெரியலையே.

அவ்வளவுதான் அதிர்ச்சி தாங்க முடியாமல் மயங்கி வீழ்ந்தாள் மோகனா.

அம்மா என்று ஓடி வந்த சுந்தர் அவள் முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிவித்தான்.

மோகனா கண்களில் கண்ணீர் மல்க, சுந்தர், அப்பாவுக்கு என்னமோ ஆயிடிச்சுபா. என்னையே ஞாபகம் இல்லை. நாற்பது வருட தாம்பத்யதை ஒரு நிமிஷத்திலே மறந்துட்டார்.” என்றாள் புண்பட்ட மனசுடன்.

அப்பா என்னப்பா ஆச்சு உனக்கு? என்றான் சுந்தர் பதட்டத்துடன்.

அடுத்தது என்ன? என்றார் சம்பந்தம்.

என்னப்பா இது பச்சை குழந்தை மாதிரி. பார்வனா அப்பா வேஷ்டியை எடுத்து வா. அவள் எடுத்து வந்து அவரிடம் கொடுக்க அவர் வேஷ்டியைக் கட்டிக் கொண்ட பிறகு, ”அடுத்தது என்ன?” என்றார்.

அப்பா என் பேர் என்ன சொல்லுங்க? என்றான் சுந்தர்.

”அடுத்தது என்ன?”

”விளையாடதீங்க அப்பா. உங்களுக்கு நிஜமாகவே ஒண்ணும் ஞாபகம் இல்லையா?”

அவர் எதுவும் புரியாமல் மலங்க மலங்க முழித்தார்.

இப்போ பூசை செய்யணும் என்றாள் மோகனா.

அடுத்தது என்ன?

”அம்மா, அப்பாவுக்கு ஞாபக மறதி நோய் வந்துவிட்டிருக்குப் போலத் தெரியுது. மருத்துவமனைக்கு உடனே அழைத்துப் போகவேண்டும் என்றவாறு காரை எடுக்க சுந்தர் நகர்ந்தான்.

வேலைக்காரி செல்லம்மா வீட்டை விட்டு வெளியே வந்ததும் செல்லம்மா எதிர் வீட்டில் சென்று, கலெக்டருக்கு எல்லாம் மறந்து போச்சு என்று விசயத்தைப் பரப்பினாள்.

அவ்வளவுதான் அடுத்த ஐந்து நிமிடத்தில் பத்து பேர் சம்பந்தம் வீட்டில் இருந்தார்கள். அப்போது உள்ளே நுழைந்து சிவராமன் நிறைய பேர் கூட்டமாய் நிற்பதைப் பார்த்து,”என்ன விசயம். சம்பந்தத்துக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் அப்படி நிற்கிறார்” என்று கேட்டார்.

”அதை ஏன் கேட்கறீங்க. அவர் என்னையே மறந்து விட்டார். உங்களையாவது ஞாபகம் வைத்திருக்கிறாரா? கேட்டுப் பாருங்கள்” என்றாள் மோகனா.

சம்பந்தம் என்ன இது? உன் மனைவி சொல்வது நிஜமா? என்னை மறந்தா கூட பரவாயில்லை. அவளை நீ மறக்கலாமா? என்றார் சிவராமன்.

”அடுத்தது என்ன?”

”அடப்பாவி என்னையே மறந்துட்டியா? நான் உன்னுடன் பள்ளிக்கூடத்தில் ஓண்ணா படிச்சவன்” திகைத்துச் சொன்னார் சிவராமன்.

நீங்களும் வாங்க, நாம் மருத்துவமனைக்குப் போகலாம் என்று சுந்தர் கூப்பிட, சம்பந்தம், சிவராமன், மோகனா, பார்வனா, அர்விந்த் எல்லோரும் காரில் ஏற சுந்தர் காரை ஓட்டினான். மாம்பலத்திலிருக்கும் மருத்துவமனையை நோக்கி கார் விரைந்தது.

மருத்துவமனையில் டாக்டர் மாதவன் அப்போது வந்துவிட்டிருந்தார். அவர் சிறந்த நீயூராலஜிஸ்ட். மூளை சம்பந்தமான நோயில் நிபுணர். சம்பத்துக்கும் சிவராமனுக்கும் மிகவும் பரிச்சியமானவர். அவருக்கு இலக்கியத்திலும் ஆர்வம் உடையவர். நோயாளிக்கு மருந்து மட்டும் கொடுக்க மாட்டார். இலக்கிய விருந்தும் கொடுப்பார். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் பிரபல பத்திரிகையில் வந்திருக்கின்றன. வந்து கொண்டே இருக்கின்றன.

”டாக்டர், அப்பா எல்லாத்தையும் மறந்துட்டார். நீங்க அவரைச் சோதித்து விட்டு சொல்லுங்க” என்றான் சுந்தர்.

சம்பந்தம் டாக்டரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் கேட்ட கேள்விக்கு நேரிடையான பதிலைச் சொல்லவில்லை.

”முழு உடல் ஸ்கேன் பண்ணிண்டு வாங்க. அவர் எல்லாவற்றையும் மறந்து விட்டிருக்கார். டெம்னிஷியா என்னும் மறதி நோய் சாதாரணமாய் வயசானவங்களுக்கு வருகிற வியாதிதான். சம்பத்ததுக்கு நினைவு மறதி வராமல் இருந்திருக்கலாம். எதுவும் நம் கையில் இல்லையே என்ன செய்வது” என்றார் டாக்டர்.

”நீங்க சொன்ன மாதிரி ….” என்று சுந்தர் எழுந்தான்.

சிவராமன் டாக்டரிடம் உங்க கதை சமீபத்தில் எந்த பத்திரிகையில் வந்தது என்றான்.

என்னுடைய இரண்டு நாவல்களை சிவராமனிடம் கொடுத்து நீங்க படிச்சிட்டு சம்பந்தம் கிட்டே கொடுங்க. இரண்டுமே அருமையான நாவல் என்றார்.

”அடுத்தது என்ன?” என்று சிவராமனைப் பார்த்து சம்பந்தம் கேட்டார்.

”உடம்பை முழுஸ்கேன் செய்ய தி நகருக்குப் போக வேண்டும்” என்றார் சிவராமன்.

எல்லாரும் காரில் ஏறினர். சிவராமன் முன் சீட்டில் சுந்தருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். பின் சீட்டில் சம்பந்தம், மோகனா, பார்வனா அரவிந் எல்லாரும் உட்கார்ந்திருந்தனர். சுந்தர் காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.

பார்வனா மாமியாரிடம், ’நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. எல்லாம் சீக்கிரத்தில் சரியாயிடும். கவலைப்பாடாதீங்க’ என்று ஆறுதல் சொன்னாள்.

“இது முதுமை மறதிதான், மருத்துவ சிகிட்சை மூலம் அவரைக் குணப்படுத்திவிடலாம்” என்று தேற்றினார் சிவராமன்.

”நான் கடவுளை தினமும் வணங்குகிறேன். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்தக் கொடுமையை செய்தாய் இறைவனே” என்று புலம்பினாள் மோகனா.

அப்போது முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு ஆட்டோ சடரென்று பிரேக் போட சுந்தரும் காரில் பிரேக் போட்டான். திடீரென்று பிரேக் போட்டதால் காரில் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களின் நெற்றி சடாரென்று தன் முன்பக்கம் உள்ள சீட்டின் முன் பலமாக மோதியது.

அம்மா என்று எல்லோரும் தன் நெற்றியைத் தடவிக் கொண்டனர். “எல்லாம் முன்னாலே போன ஆட்டோவாலே வந்தது. பார்த்து ஓட்ட மாட்டானோ ஒருத்தன்” என்று முணுமுணுத்தான் சுந்தர்.

சுந்தர் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கோம். சிவராமா நீயும் காரில் இருக்கியா? என்ற சம்பந்தனின் குரம் எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

“என்..ன.ங்க. என்..னங்க என்றாள் மோகனா கண்களில் கண்ணீர் மல்க. அழுதுகொண்டே. எங்களை ரொம்ப படுத்திட்டீங்க. நான் கதி கலங்கிப் போயிட்டேன்“

என்ன சொல்றே? நான் எதுவுமே செய்யலையே.

மகிழ்ச்சியுடன் சுந்தர் காரை தெருவின் ஓரமாய் நிப்பாட்டினான். அப்பாவின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்து, ”அப்பா உனக்கு இன்னைக்கு காலையிலே எல்லாம் மறந்து போச்சு. நீ யாரு? நாங்க யாருன்னு எதுவும் தெரியாமே இருந்தே. அடுத்தது என்ன? இதுதான் நீ அடிக்கடி சொன்னது. நாங்க பதறி போயிட்டோம். டாக்டர் கிட்டே கேட்டதுக்கு அவர் உடம்பு முழுக்க ஸ்கேன் எடுக்கச் சொன்னார். அதுக்காகத்தான் இப்போ தி நகர் போய்க்கிட்டிருக்கோம்” என்றான்.

”சம்பந்தம் உனக்கு நினைவு வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கு. உன் மனைவி மோகனா ஆடி போயிட்டா நம் முயற்சி எதுவும் செய்யாமல் தானாகவே சரியா போயிடுத்து”. என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவராமன்

”தானாகவே சரியாகல. எல்லாம் அவன் அருளாலே’’’. என்ற சம்பந்தம் ”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார் என்பது உனக்குத் தெரியாதா சிவராமன். இன்னல் வருவதும் இன்பம் தருவதும் எல்லாம் அவன் செயல்.” என்றார்.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியிடம், ”இப்போதான் சரியாயிட்டேனே எதுக்கு அழற” என்று அன்புடன் அவள் கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தார்.

பார்வனா சுந்தரைப் பார்த்து மாமாதான் இப்போ சரியாகிவிட்டாரே. அடுத்தது என்ன? என்று வினவினாள்.

அதைக் கேட்டு காரில் இருந்தவர்கள் எழுப்பிய சிரிப்பலையால் கார் அதிர்ந்தது.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுத்தது என்ன? (சிறுகதை)”

அதிகம் படித்தது