மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறநெறி முதற்றே

முனைவர் மு.பழனியப்பன்

Jun 20, 2020

siragu uyiriyal5
உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழி பழமைச் செறிவையும், இலக்கிய வளமையையும், நடுவுநிலைமையையும், தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு விளங்கும் காரணத்தால் உலகச் செம்மொழிகளில் வரிசையில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய வளமை என்பது தமிழ் மொழியில் எழுந்துள்ள நூல்களைப், படைப்பாளர்களை, அவர்களின் காலத்தை, இலக்கியத் தரத்தை அடிப்படையாக வைத்துக் காணுகையில் மிகப் பெரும் பரப்பினை உடையதாக விளங்குகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் தமிழ் மொழி இலக்கண, இலக்கிய வளமை உடையதாக நிலைத்துச் சிறந்துவருகின்றது. சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரை நூல்கள், தத்துவங்கள், உரைநடைகள், புதிய கவிதைகள் என்று காலந்தோறும் தமிழ் இலக்கியப் பரப்பு பல்வகைப் படைப்புகளுடன் சிறந்துவிளங்கி வந்திருக்கின்றது. இன்னும் புதுமைக்கும் புதுமையாய் தமிழ்மொழி பல இலக்கியச் செழுமைகளுக்கு வழி கொடுத்தும் நிற்கிறது. உலகு தழுவிய செம்மொழிகளில் உயிர்ப்புடன், உணர்வுடன், உன்னதத்துடன் திகழும் மொழி தமிழ்மொழி என்றால் அது மிகையில்லை.

நாற்பொருள் இயல்பு

தமிழ்மொழி இலக்கியங்கள் நாற்பொருள் பயப்பனவாக விளங்குகின்றன. அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் நான்கையுமோ, அல்லது நான்களில் மூன்றையோ, இரண்டையோ ஒன்றையோ கொண்டு தமிழில் இலக்கியங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தமிழ் நூல் மரபாக உள்ளது. பொருள், இன்பம், வீடு ஆகியவை இல்லாத தமிழ்ப்படைப்புகள் இருக்கலாம். ஆனால் அறமின்றி எவ்விலக்கியமும் தமிழ்ப்பரப்பில் இல்லை எனும் அளவிற்கு அறத்துடன் தமிழ் இலக்கியங்கள் நெருக்கமான தொடர்பினைப் பெற்றிருக்கின்றன.
எனவே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் அறத்தின் பாற்பட்டவை என்பதில் ஐயமில்லை.

சங்க கால அறக்கோட்பாடு

சங்க காலத்தில் மன்னராட்சி முறைமை இருந்தது. மன்னன் வழித்தே மலர்தலை உலகமும் சென்றது. எனவே மன்னன் தான் செய்ய நினைத்த செயல்களை எல்லாம் செய்திடலாம் என்ற தன்னிச்சையும் இருந்தது. இந்நிலையில் அரசன் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் நடுவுநிலைமையோடு இருக்கவேண்டும் என்றால் அவனுக்கு மேலே ஒருவர், அல்லது ஒரு கருத்து அமையவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலைக்கு அறம் கொண்டுவரப்பெற்று அறம் அரசனை வழிப்படுத்தியது. மன்னன் அறத்தின் பக்கம் நிற்கவேண்டும் என்ற விழைவு புலவர்களிடத்தில் இருந்தது. மதுரை மருதன் இளநாகனார் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் குறித்துப் பாடும்போது,

‘‘கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற”
நீநீடு வாழிய நெடுந்தகை”

என்று பாடுகின்றார். அரசின் கொற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைவது அறநெறி என்பதே இப்பாடல் தரும் கருத்து. இதுவே சங்க இலக்கியம் காட்டும் அறக் கோட்பாடு என்று கொள்ளலாம்.

மன்னன் பல்வேறு படைகளைப் பெற்றதனால் வலிமை உடையவனாக உள்ளான். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்று பல படைகளை மன்னன் வைத்து அரசியல் நடத்துகிறான். அவ்வாறு அரசியல் நடத்தும் நிலையில் அறநெறியே முதன்மையாக இருக்கவேண்டும். இவர் தனக்கு இனியவர், தன்னால் அறியப்பட்டவர் என்ற நிலையில் அவருக்காக நீதியில் இருந்து, நடுவுநிலையில் இருந்து நழுவக் கூடாது. அவர் தனக்குத் தொடர்பில்லாதவர், அயலவர் என்பதால் அவரின் நற்பண்புகளை ஒதுக்கித் தள்ளக் கூடாது.

ஞாயிறு போன்று வெம்மையும், திங்கள் போன்று மென்மையும், மழை போன்று வள்ளல் தன்மையும் உடையவனாக அரசன் வாழ வேண்டும் என்று இப்புலவர் வாழ்த்துகிறார். ஞாயிறு, திங்கள், மாமழை போற்றும் மரபு சங்ககால மரபு என்பது இப்பாடலின் வழி தெரியவருகிறது.

இதன்வழி அரசியல் தூய்மைக்கு அறமே அடிப்படை என்ற அடிக்கருத்தினைப் பெறமுடிகிறது.

நீதி நூல் கால அறக்கோட்பாடு

சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து எழுந்த நீதிநூல்கள் அறத்தைப் பெரிதும் வலியுறுத்தின. அறம் என்பதை நூல் பகுப்பாகவும், அறத்தை வலியுறுத்துதல் என்பதை உள்பகுப்பாகவும் கொண்டு இவை எழுதப்பெற்றுள்ளன.

வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை
குறிப்படரல் தீக்சொற்க ளோடு – மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்(து)உயக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம்

என்று சிறுபஞ்சமூலம் அறம் பற்றிக் குறிப்பிடுகிறது.

தீச்சொற்களைச் சொல்லாமல் இருத்தல், வழிப்பறி கொள்ளையில் ஈடுபடாமல் இருத்தல், பிறர் பொருளைக் களவு செய்யாமல் இருத்தல், மெய்ம்மை தவறாமல் இருத்தல், அறிவுரைகளைக் கேட்டு அவற்றைக் கடக்காமல் இருத்தல் ஆகிய ஐந்து பண்புகளை ஆராய்ந்து விட்டுவிடுதலே அறம் என்கிறார் காரியாசான்.

மேற்காட்டிய ஐந்து செயல்பாடுகளும் அரசன் முதல் சாதாரண மனிதன் வரை கடைபிடிக்கவேண்டிய நல்லறங்கள் என்பதில் ஐமில்லை. இருப்பினும் ஆய்ந்து விட வேண்டியவற்றை விட்டுவிடுதல் என்பதே அறத்திற்கான கோட்பாடு என்பதாகக் கொள்ளமுடிகின்றது.

திருக்குறள் அறத்தினை வரையறை செய்து அதன் இயல்புகளை அறன் வலியுறுத்துதல் என்ற அதிகாரத்தில் காட்டுகின்றது. இவ்வியல் பாயிரப்பகுதியில் அமைவதால் திருக்குறளின் அடிநாதமே அறம் என்பது தெளிவாகிவிடுகின்றது.

”மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பது அறத்தின் மையம் என்கிறது வள்ளுவம். அறத்தினால் இன்பமும், ஆக்கமும், செல்வமும் தரத்தக்கது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அறவாழ்வினை இல்லறம், துறவறம் என்று இருவகையாகப் பகுத்துணர முடிகின்றது. இல்வாழ்வான் மற்றவர்களுக்குத் தர்மம் செய்பவனாகவும், துறவறத்தான் இல்லறத்தானால் காக்கப்படுபவனாகவும் விளங்குகிறான்.

இவற்றின்வழி அறம் என்பது அரசர்கள், சாதாரண மக்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான நடுநிலைமையான வாழ்க்கை முறை என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

சான்றாதாரங்கள்

1. மதுரை இளநாகனார், புறநானூறு, பாடல் எண் 55, 7-17

2. காரியாசான், சிறுபஞ்சமூலம், பாடல் எண்.97

3. திருவள்ளுவர், திருக்குறள், அறன்வலியுறுத்தல், 34


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறநெறி முதற்றே”

அதிகம் படித்தது