மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை

தேமொழி

Aug 24, 2019

siragu innaa naarpadhu1

சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னா நாற்பது’ என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை 40 வெண்பாக்களில் வடித்துக் கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும். இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு. அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது. இப்பாடல் தவிர்த்து இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப்படவில்லை. கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து, அறம் வலியுறுத்தும் நோக்கம் கொண்ட மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 40 என்ற தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும் கருத்துகளைக் கொண்டவை. இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை துன்பம் தருவன என்பவற்றை ‘இன்னாதவை’ எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை’ எனவோ அல்லது ‘தகுதியற்றவை’ எனவோ அல்லது ‘பயனற்றவை’ எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின் ‘இனியவை’ எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது. இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே உரிய ‘அகம்’ ‘புறம்’ என்ற திணைகளைக் கருப்பொருளாகக் கொண்டவை.

இந்த நூலை யாத்த புலவர் கபிலர் சங்க காலத்து மன்னனான பறம்பு மலையின் அரசன் பாரி வள்ளலின் தோழராக அறியப்படும் கபிலர் அல்லர். இவர் அவருக்கும் பிற்காலத்தவர். ஆனால், இந்நூலுக்கு உரை எழுதிய ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று பாராட்டப்பட்ட சங்கப் புலவர் கபிலர் என்றே தனது உரைநூலின் முகவுரையில் எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவை என்ற பெயர்கொண்ட புலவர் பலர் வாழ்ந்தது போல, கபிலர் என்ற பெயரிலும் புலவர் பலர் இருந்தனர். இன்னா நாற்பது எழுதிய புலவர் கபிலர் சங்கம் மருவிய காலற்றவர் ஆவார்.

ஒவ்வொரு இன்னா நாற்பது பாடலும் நான்கு துன்பம் தரும் தவிர்க்கப்படவேண்டிய கருத்துகளை இன்னா என்று உரைக்கிறது. ஆகவே, 164 (41 X 4) துன்பம் தருவனவற்றைப் பட்டியலிடுகிறார் நூலின் ஆசிரியர் கபிலர். கடவுள் வாழ்த்து தவிர்த்து, இன்னா நாற்பது கூறும் 160 அறநெறிகளைத் தனிமனிதருக்குரியவை எனவும், அரசைக் குறித்துச் சொல்வன எனவும், பொதுவானவை எனவும் பகுத்தும் காணலாம். அன்புடைமை, அறமுடைமை, அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, பொருளுடைமை, நட்பு, கடப்பாடு, ஒப்புரவு குறித்த அறநெறி அறிவுரைகளின் தொகுப்பு இந்த வெண்பாக்கள். ‘இன்னா’ எனக் காட்டப்படும் ஒவ்வொரு கருத்தும் தவிர்க்கப்பட வேண்டியவையாக, 41 பாடல்களின் ஒவ்வொரு வரிகளின் இறுதியிலும் இடம் பெறுவதால் நூலுக்கு இன்னா நாற்பது என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.

ஒரு சில கருத்துகள், குறிப்பாக யானைப்படையின் தேவை போன்ற கருத்துகள் இக்காலத்திற்குப் பொருந்தாமல் போகலாம். அவை அக்கால வரலாற்று நிலையையும் வாழ்வியல் முறையையும் அறியத் தருகின்றன. எக்காலத்திற்கும் பொருந்துவதாகும் அறநெறிகள் கூறப்பட்டுள்ளன. தனிமனித ஒழுக்க நெறியை வலியுறுத்தி சமூகத்தின் வாழ்வியலை மேம்படுத்த உதவும் கருத்துகள் இன்னா நாற்பது நூலில் பலவுண்டு.

அதற்கு எடுத்துக்காட்டாக, கீழ்க் காணும் இரு பாடல்களைக் குறிப்பிடலாம். இப்பாடல்கள் பள்ளி மாணவர்களுக்குரிய மனனம் செய்யும் பாடல்களாகத் தேர்வு செய்ய வேண்டியவை எனலாம்.

     பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா

     அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா

     பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா

     பெரியார்க்கு தீய செயல் [பாடல்: 26]

[பொருள்: பெரியவர்களுடன் கொண்ட உறவைத் துண்டித்துக் கொள்வது, செய்தற்கரிய காரியங்களைச் செய்து உதவுவதாக வாக்களிப்பது, பரிவு காட்டாதவரிடம் சென்று தனது துயர் சொல்லிப் புலம்புவது, பெரியவர்களுக்குத் தீங்கு செய்வது ஆகியன துன்பம் தருவனவாம்.]

     தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா

     முன்னை உரையார் புறமொழி கூற்று இன்னா

     நன்மை இலாளர் தொடர்பு இன்னா ஆங்கு இன்னா

     தொன்மை உடையார் கெடல் [பாடல்: 32]

[பொருள்: தனது வாழ்வையும் நலத்தையும் பேணாது வாழ்வது, நேரடியாகக் கூறாமல் புறம் பேசுவது, பண்பற்றவருடன் நட்பு கொள்வது, வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நிலை தாழ்வது ஆகியன துன்பம் தருவனவாம்.]

ஒரு சில பாடல்கள் பொது அறிவு எனத் தெரிந்திருக்க வேண்டியவை என்பதிலும் அடங்கும். குறிப்பாகக் கீழ்க்காணும் பாடல்,

     நெடுமரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா

     கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா

     ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா இன்னா

     கடும் புலி வாழும் அதர் [பாடல்: 30]

[பொருள்: நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியில் உள்ள நுனிக் கொம்பில் ஏறி கீழே குதிப்பது, மதம் கொண்ட யானையின் முன் செல்வது, பாம்புப் புற்றில் கை நுழைப்பது, கொடிய புலி வாழும் காட்டிற்குச் செல்வது ஆகியன துன்பம் தருவனவாம்.]

உரை எழுதிய ந. மு. வேங்கடசாமி நாட்டார் இக்கருத்துகளுக்குப் பொருள் கூறுமிடத்து, “நெடுமர நீள் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணிபற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக்கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னாவாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க” (பக்கம்: 28) என்று இத்தகைய தன்மை கொண்ட மனிதர்களைத் தவிர்க்க வேண்டும் என்றோ தனது வலி அறிந்து செயல்பட வேண்டுமென்றோ பொருள் காணலாம் என்று கூறுகிறார்.

பொதுவாக நூலின் கருத்துகள்;

வித்தை கல்லாதவர்/தொழிற் பயிற்சி இல்லாதவர் ஒரு செயலை செய்ய முற்படுதல் (திறன் இலான் செய்யும் வினை இன்னா – பாடல்: 38);

திட்டமிடாமல் செயலில் இறங்குதல், (தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா – பாடல்: 29)

வெற்று வாக்குறுதிகள் வழங்குதல், (வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா – பாடல்: 28)

     கடமை தவறுதல், (ஈன்றாளை ஓம்பா விடல் இன்னா – பாடல்: 17)

     தேவையான நேரத்தில் கிடைக்காத உதவிகள், (எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா – பாடல்: 4)

போன்ற கருத்துகளை பல்வேறு கோணங்களில், பல்வேறு தொழில் செய்வோர் வழியாகவும், பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துக்காட்டுகளுடன் காட்டுகின்றது என்றாலும் அடிப்படைக் கருத்தை இவ்வாறு தொகுக்கலாம்.

சில கருத்துகள் கூறியது கூறல் முறையில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன, இது ஆசிரியர் அக்கருத்தை வலியுறுத்துகிறார் எனவும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக இரண்டினைக் காட்டலாம்:

வறுமை நிலையில் உள்ளவர் ஈகைக் குணத்துடன் இருப்பது துன்பம் தரும் என்பதை,

     இடும்பை உடையார் கொடை இன்னா [பாடல்: 6]

     பொருள் இல்லார் வண்மை புரிவு இன்னா [பாடல்: 10]

     மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா [பாடல்: 17]

     கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா [பாடல்: 39]

மேலுள்ள வரிகள் வெவ்வேறு முறையில் அதே கருத்தை உரைக்கின்றன.

அவ்வாறே, அழகிய மலர் நறுமணத்துடன் இல்லாதிருப்பது பயனற்றது என்பதையும் காட்டலாம்.

     நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா [பாடல்: 7]

     நறிய மலர் பெரிது நாறாமை இன்னா [பாடல்: 37]

மேலுள்ள வரிகள் வெவ்வேறு முறையில் அதே கருத்தை உரைக்கின்றன.

மலருக்கு அழகிருந்தும் மணம் இல்லாததால் பயனில்லை என்பதற்கு மாறாக மனிதர்களிடம் அழகு மட்டுமிருந்து தேவையான நல்ல பண்புகள் இல்லையென்றால் பயனில்லை என்ற கருத்துகளும் காணப்படுகின்றன.

     பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா [பாடல்: 1]

     வண்மை இலாளர் வனப்பு இன்னா [பாடல்: 9]

     கண் இல் ஒருவன் வனப்பு இன்னா [பாடல்: 16]

     வளமை இலாளர் வனப்பு இன்னா [பாடல்: 27]

     அழகுடையான் பேதை எனல் இன்னா [பாடல்: 35]

அன்பு இல்லாதோர், உதவும் மனப்பான்மை இல்லாதோர், கருணை இல்லாதோர், செல்வம் இல்லாதோர், அறிவு இல்லாதோர் ஆகியோர் கொண்டிருக்கும் அழகால் பயனில்லை என்று நூல் கூறுகிறது.

நூல் ஆணின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. இல்வாழ்வு குறித்த கருத்துகள் இடம் பெறுகையில் மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்றோ அல்லது பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு கணவனின் பண்பு நலன்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துகளைக் காணமுடியவில்லை.

     பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா [பாடல்: 1]

   ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா [பாடல்: 2]

     உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா [பாடல்: 11]

     முலை இல்லாள் பெண்மை விழைவு இன்னா [பாடல்: 12]

     பிணி அன்னார் வாழும் மனை இன்னா [பாடல்: 13]

     வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா [பாடல்: 14]

இக்குறிப்பிட்ட வரிகள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன.

நாலடியார் பழமொழி நானூறு போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் கருத்துகள் தென்படுவது போல இன்னா நாற்பது நூலிலும் குறள் சொல்லும் கருத்துகளைக் காணமுடிகிறது. அவற்றைச் சற்று விரிவாகவே காண்பதும் பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் முதன்மைப்படுத்திய அறங்களின் முக்கியத்துவத்தை அறிய உதவும்.

உதவிய நூல்கள்:

கபிலர் இயற்றிய ‘இன்னா நாற்பது’— நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

உரை, 1925, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

தமிழ் இணையக் கல்விக்கழகம் – பதிப்பு:

http://www.tamilvu.org/library/l2400/html/l2400bod.htm

இன்னா நாற்பது

http://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012141.htm


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை”

அதிகம் படித்தது