மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு கோப்பை நஞ்சு !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 7, 2020

siragu oru koppai nanju1
சாக்ரடீஸ் உலக தத்துவ ஞானிகளின் தந்தை. ஏதென்ஸ் நகரின் ஏற்றமிகு தலைவர். வாலிபர்களை, இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டினார் என்ற குற்றத்திற்காக ஒரு கோப்பை நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டவர். அந்தத் தந்தை, தன்னை தப்பித்துப் போகும்படி தன் தோழர்கள் கட்டாயப்படுத்தியபோதும், அதற்கான வழிகள் இருந்த போதும் அதை விரும்பாது, அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு தன் மரணத்தின் வாயிலாக இந்த மக்கள் உணர்வு பெற்று சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று எண்ணி அந்த நஞ்சு கோப்பையை விரும்பி குடித்து தன் உயிரை மக்களின் அறிவுத் தூண்டலுக்காக மகிழ்ச்சியாக உரமாக்கியவர்.

வரலாறு ஏதென்ஸ் நகரத்திற்கு ஒரு அறிவுத்தந்தையை ஈன்றது போல தமிழ்நாட்டிற்கும் காலம் ஈன்ற அறிவுத் தந்தை தான் பெரியார். ஏதென்ஸ் நகர நீதிமன்றம் சாக்ரடீஸ்க்கு நஞ்சு குடிக்க வேண்டும் என்று தண்டனை வழங்காமலிருந்திருந்தால் கிரேக்கம் பழம் பெருமைகளில் இன்புற்று அழிந்து போயிருக்காது. ஒரு அறிவியக்கம் கண்டிருக்கலாம். அந்தக் குறையை வரலாறு தமிழ் நாட்டின் மண்ணில் தீர்த்துக் கொண்டது தான் காலத்தின் திருப்புமுனை. பெரியார் தோன்றினார். பழம் பெருமைகளைப் பேசவில்லை, புராண – இதிகாசங்களின் பெருமை பேசவில்லை – கடவுள் பெருமை பேசவில்லை – அவர் சமத்துவம் பேசினார். சக மனிதனை மதிக்கத் தடையாக இருக்கும் சாதி – மதம் – கடவுள் ஒழிந்து போக வேண்டும் என்று பேசினார். அந்த பேச்சைப் போகிற போக்கில் பேசிவிட்டுப் போகாமல் இயக்கமாகக் கட்டமைத்துப் பேசினார். இந்த தந்தை தனக்கு வளமான வாழ்வு இருந்தபோதும் தன் மண்ணின் மக்கள் அடிமையாக இருக்கக் கூடாது என்பதற்காக இறக்கும் வரை ஊர் ஊரக சுற்றி பரப்புரைச் செய்தார். உலக அறிஞர்களின் சிந்தனைகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சாக்ரடீசை அறிந்ததும் தமிழ்நாட்டின் அறிவியக்க தந்தையின் வாயிலாகத் தானே!!

அவர் கண்ட அறிவியக்கம் சமூகத்தில் ஏற்படுத்திய மனமாற்றம் காரணமாக அரசியலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

சாக்ரடீஸ்சின் சீடர்கள் Xenophon மற்றும் Plato சாக்ரடீஸ்சின் முழு மொழியையும் பேசவில்லை, அவர்கள் சிந்தனையின் வீச்சை சாக்ரடீஸ் வாயிலாக ஏற்றிச் சொன்னார்கள் என்பார்கள் வரலாற்று அறிஞர்கள். அந்த சீடர்களைப் போல அல்லாமல் தந்தை பெரியார் கட்டமைத்த இயக்கத்திற்கும் சரி, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஆட்சியிலும் சரி பெரியாரின் சிந்தனை வீச்சை யாரும் நெருங்கமுடியவில்லை என்றாலும் தனிப்பட்ட கருத்துக்களைப் பெரியாரின் கருத்துக்களாகச் சீடர்கள் ஏற்றிக் கூறவில்லை. அந்த வகையில் கிரேக்கத் தந்தைக்கு இல்லாத பெருமை ஈரோட்டுத் தந்தைக்கு உண்டு.

அந்த அறிவியக்கம் கண்ட வெற்றிக்குச் சான்று தான் 100 ஆண்டுகள் தமிழ்நாடு உரிமைப்போராட்டத்தில் மற்ற மாநிலங்களை விட வெற்றி பெற்று நிற்பதற்கு அடித்தளம் அமைத்தது. வெளி நாடுகளில் வேலை செய்யும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்ற மாநிலங்களைப் பார்க்கும் போது ஒரு விடயத்தைக் கவனிக்க இயலும், அது, மற்ற மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே படிக்கக் கூடிய வாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு வந்திருப்பார்கள் சமூகத்தில் அந்த உயர் சாதியினருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் வந்திருப்பார்கள். ஆனால் தமிழ் நாட்டிலிருந்து அந்தக் கணக்கைப் பார்த்தால், அனைத்துச் சமூக மக்களும், கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளும் கல்வி என்ற ஒற்றை அடிப்படையில் வெளிநாடு வந்து ஒரு தலைமுறையை நிமிர வைத்திருப்பார்கள். இது மாயாஜால வித்தை போன்று ஒரே நாளில் நடந்த மாறுதல் அன்று. ஒரு நீண்ட நெடிய போராட்டமும் ஒரு தலைவரின் இடைவிடாத உழைப்பும் இதில் அடங்கி இருக்கிறது.

siragu oru koppai nanju2

எல்லாவற்றையும் கேள்வி கேள் என்ற கிரேக்கத் தந்தையை ஏதென்ஸ் நகரின் நீதிமன்றம் கொன்றுவிட தண்டனை நிறைவேற்றியது. அதே முதிர்ந்த வயதில் எல்லாவற்றையும் கேள்வி கேள் என்ற தந்தை பெரியார் நீதி மன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டபோது, அவர் நீதி மன்றத்தின் நீதிபதிகளின் மனசாட்சியைப் பற்றி கேள்வி எழுப்பினார். சாதியும் அது தரும் அனுகூலமும் ஒரு நாளும் பார்ப்பனர்களை நீதிபதியாக நேர்மையாகச் செயல்படவிடாது என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னார். பார்ப்பனர் நீதிபதியாக இருக்கும் நாடு கடும் புலிகள் வாழும் காடு என்று இடித்துரைத்தார். இன்றைக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும் யாருக்கும் அது விளங்காமல் இருக்காது. அறிவின் வெற்றியே உலகை ஆளும் என்பதை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஒரு கோப்பை நஞ்சு, பருகி தன்னையே பலியிட்டுக்கொண்டார் சாக்ரடீஸ். அதே அறிவின் வெற்றியை நிரூபிக்கத் தான் வாழும் காலமெல்லாம் மலத்தையும், அழுகிய முட்டையையும் மக்கள் வீசியபோதும் துவளாமல் மக்களின் மனதில் சுயமரியாதை ஊற்றெடுக்கத் தன்னையே உருக்கிக் கொண்டு பரப்புரை செய்தார் தந்தை பெரியார்.

அந்த இயக்கமும், தலைவரும் என்ன செய்து கிழித்தது என்ற குரல் தான் இன்று தமிழ் நாட்டின் அமைதியைக் குலைக்கும் மிகப் பெரிய குரலாக வலது சாரிகளுக்குச் சாமரம் வீசிக்கொண்டு இருக்கின்றது. கிரேக்கம் அதன் அறிவுத் தந்தையை ஒரே நாளில் நஞ்சு கொடுத்துக் கொன்றது. தமிழ்நாடு பலன்களைப் பெற்றுக் கொண்டு, தினம் தினம் அறிவியக்கம் கண்ட தலைவரின் வேர்களில் நஞ்சு ஊற்றிக்கொண்டிருக்கின்றது. அந்த நஞ்சு சமூக நீதி, சமத்துவம், அறிவியல். என்ற கிளைகளைக் காய வைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கோப்பை நஞ்சு தமிழ்நாட்டின் சமத்துவ வேர்களில் கொட்டுவதை நிறுத்துங்கள் இல்லை என்றால் அதே ஒரு கோப்பை நஞ்சு இன எதிரிகள் நமக்கு தருவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் காலம் எச்சரிக்கை செய்கிறது.!!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு கோப்பை நஞ்சு !!”

அதிகம் படித்தது