மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலைக்காக ஒரு கதை

தேமொழி

Apr 27, 2019

siragu-ravichantrika-book--cover1

நூலும் நூலாசிரியரும்:

படைப்பாளரும் பத்திரிக்கையாளருமான மீ. ப. சோமசுந்தரம் (மீ. ப. சோமு, 1921 – 1999) அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். “அக்கரைச் சீமையிலே” என்ற பயண நூலுக்குச் சாகித்திய அகாதெமி பரிசுடன், படைப்பிலக்கியத்திற்காக மேலும் பல பரிசுகளும் பெற்ற இலக்கியவாதி. கல்கி இதழின் ஆசிரியராக இரு ஆண்டுகள் (1954-1956) பொறுப்பேற்றதுடன், நண்பன் என்ற இதழையும் தொடங்கி நடத்தினார். கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, பயணக்கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம், கவிதை, சித்தர் இலக்கியம் (ஆய்வு நூல்) என இலக்கியத்தின் பல துறைகளிலும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தியதுடன் சொற்பொழிவாளராகவும் இருந்துள்ளார். இவரது புகழ்பெற்ற புதினம் ரவிசந்திரிகா.

‘சர்ப்ப கந்தி’ என்ற மூலிகை பாம்பின் நச்சு முறிவுக்கான மருந்து, அது மனநோய்க்கும் ஒரு மருந்து, அதற்கு ‘சந்திரிகா’ என்ற பெயருமுண்டு என்ற தகவலுடன் நூல் துவங்குகிறது. கதையின் நாயகி சந்திரிகா அவளது நாட்டிய ஆசிரியரான புல்லாங்குழல் கலைஞர் ரவீந்திரனுக்கு மன ஆறுதல் தந்து, அவனது வாழ்வுக்கு நிலவாக ஒளி கொடுத்தாள் என்று கதை குறித்த அறிமுகம் கொடுக்கப்படுகிறது. கதை மலைக்கோட்டையில் அவளது நாட்டிய அரங்கேற்றத்துடன் தொடங்குகிறது. அவளுக்கு விழாவில் பரிசளிக்கத் தனது புல்லாங்குழலை அடைமானம் வைத்து பரிசு வாங்குகிறார் அவளது ஆசிரியர் ரவீந்திரன். கதையின் நோக்கம் கலைக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்புவது என்பது தெளிவு. ரவிசந்திரிகா என்ற ராகமும் ஒன்று உண்டு. வானதி பதிப்பகம் வெளியிட்ட (நான்காம் பதிப்பு -1989) இந்த நூலின் முதல் அத்தியாயம் ‘மலைக்கோட்டை’ என்று துவங்கி, 45 ஆவது அத்தியாயமாக  ‘மங்களம்’ என்ற தலைப்புடன் மங்களம் பாடி முடிக்கப்படும் இந்த நூலின் பக்கங்கள் 500க்கும் மேல் விரிகிறது. முதல் பதிப்பு எப்பொழுது என்ற குறிப்பில்லை. இக்கதை அக்காலத்தில் கல்கியில் தொடராக வந்ததாக அறிய முடிகிறது. மேலும், இது மிகவும் வரவேற்கப்பட்ட கதை என்பதால் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

கதை பெரும்பான்மையும் திருச்சியில் நிகழ்கிறது. ஆகவே மலைக்கோட்டையில் தொடங்கி, சின்னக்கடைவீதி, ஆண்டார் தெரு, தாயுமானவர் தெரு, தூய வளனார் கல்லூரி, பாலக்கரை, தேவர் மன்றம், காஜாமலை, பொன்மலை, கண்டோன்மென்ட், அரசு மருத்துவமனை, திருச்சி ஜங்க்ஷன் எனத் திருச்சியின் பகுதிகள் கதைக்களமாக இருப்பது திருச்சியை அறிந்தோருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும். கதையின் காலம் பிரிட்டிஷ் இந்தியாவாக இருக்கலாம் என்று சில குறிப்புகள் மூலம் கணிக்க முடிகிறது. ராஜாஜி இந்நூலின் ஆசிரியருக்கு அளிக்கும் வாழ்த்துரையில், ஒன்றை ஒன்று ஈர்க்கும் இயற்கை நியதியே காதலின் தத்துவம் என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார். தான் நூலைப்படிக்கவில்லை என்றும் தொடர்கதைகளைப் படிக்க தனக்கு இப்பொழுது நேரமிருப்பதில்லை என்று குறிப்பிட்டு “நான் ரவிசந்திரிகையைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்; எழுதிய ஆசிரியரைப் படித்துவிட்டேன். அவருக்கும் நூலுக்கும் என் ஆசிகள்” என்றும் முன்னுரை அளித்துள்ளார். ராஜாஜி மீ. ப. சோமுவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர்.

கதைச்சுருக்கம்:

ரவீந்திரன் இலஞ்சி என்ற ஊருக்குக் கச்சேரிக்குச் செல்லும்பொழுது தொடர்வண்டியில் கிழவி ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமி ஒருத்தி பாட்டுப்பாடி பிச்சை எடுப்பதைக் காண்கிறான். அவளது இசையின் திறமையையும் கண்டு வியக்கிறான். அவள் கிழவிக்கு உறவல்ல எனச் சந்தேகித்து, அவளை மீட்டு தன்னுடன் அழைத்துவந்து, இசையும் நாட்டியமும் கற்றுக்கொடுத்து, அவளை ஒரு கலைச்செல்வியாக உருவாக்கி நாட்டிய அரங்கேற்றமும் நடத்துகிறான். காலப்போக்கில் ஆசிரியருக்கும் வளர்ப்பு மாணவிக்கும் இடையே பொதுவான நட்பையும் அன்பையும் மீறிய ஈர்ப்பும் ஏற்படுகிறது. திருமணமான ரவீந்திரனும் சந்திரிகாவும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டு வரைமுறை மீறாது இருந்தாலும், இருவருக்குமே உணர்ச்சிகள் தடங்கலாக இருப்பதை உணர்ந்து சிக்கலில் தவிக்கிறார்கள். தனக்குச் சிறுமியாக அறிமுகமான சந்திரிகாவுக்கு ஆதரவளித்த ரவீந்திரனின் மனைவி கல்யாணி காலப்போக்கில் அவளைத் தனது எதிரியாகப் பார்க்கும் நிலை உருவாகிறது.

இதனிடையில் தனது தங்கையின் திருமணத்திற்கு ஊர் சென்று திரும்பும் கல்யாணி  கார்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சுரேஷ் குடும்ப மருத்துவராகவும் அவர்கள் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட ஒரு குடும்ப நண்பராகவும் மாறிவிடுகிறார். இந்நேரத்தில் கல்யாணியின் தம்பி நாகரத்தினம் அக்காவின் வாழ்விலிருந்து சந்திரிகாவை வெளியேற்றத் தனது நண்பனான ஒரு முரடரின் துணையோடு இரவில் தனியாக இருக்கும் சந்திரிகாவைக் கடத்த முற்படுகிறான். எதிர்வீட்டில் இருக்கும் மற்றொரு குடும்ப நண்பரும் பத்திரிக்கை நிருபருமான ராமநாதன் இடையிட்டுத் தாக்குதல் திட்டத்தை முறியடிப்பதால் சந்திரிகா காப்பாற்றப்படுகிறாள்.

நலம்பெற்று வீடு திரும்பும் கல்யாணிக்கும் ரவீந்திரனுக்கும் இடையே சந்திரிகா குறித்து மோதல் அதிகரிக்கிறது. தன்னால் அவர்கள் குடும்பத்தில் நிம்மதி குலைவது கண்டு வருந்தும் சந்திரிகா வீட்டை விட்டு இரவோடு இரவாகச் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறுகிறாள். முதலில் காவிரியில் விழுந்து தற்கொலை செய்யும் முடிவுடன் இருந்தவள் பின்னர் தனது ஆசிரியர் கற்றுக் கொடுத்த கலையை அழிக்கக்கூடாது என்ற நோக்குடன் மனம் மாறுகிறாள். பத்திரிக்கையாளர் ராமநாதன் முன்னர் தனது பம்பாய் சகோதரி பற்றிக் குறிப்பிட்டதும் அவரது முகவரியும் நினைவில் வர பம்பாய் சென்று விடுகிறாள். கலைச்சேவையும் பொதுச்சேவையும் செய்யும் ராமநாதனின் சகோதரியும் சந்திரிகாவிற்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவளிக்கிறார். திருச்சியிலோ சந்திரிகாவைக் காணாது ரவீந்திரனுக்குப் மனம் பேதலித்துவிடுகிறது. மருத்துவர் சுரேஷ் ரவீந்திரனைப் பொதிகை மலை அருகே மலைவாழ் ‘பளிஞர்’ பழங்குடியினர் குடியிருப்பில் வசிக்கும் இலஞ்சிச் சாமியாரின் மேற்பார்வையில், மனதுக்கு அமைதி தரும் சூழலில், சாமியாரின் சர்ப்ப கந்தி மூலிகை சிகிச்சையில் விட்டு வைக்கிறார். சந்திரிகாவை மீண்டும் ரவீந்திரன் பார்த்தால் அவன் தேறுவான் என்ற எண்ணத்தில் அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

பத்திரிக்கையாளர் ராமநாதன் தனது பம்பாய் சகோதரியின் ஆதரவில் சந்திரிகா இருப்பதை அவருக்குத் தெரிவிக்கிறார். சந்திரிகாவிடம் ரவீந்திரனின் நிலையை எடுத்துக் கூறி அவளை வரவழைக்கிறார்கள். இடையில் மருத்துவர் சுரேஷ் இலஞ்சிச் சாமியார் தனக்குத் தூரத்து உறவு என்பதை அறிகிறார். மருத்துவரின் திருமணத்திற்குத் தனது தாயற்ற சிறுமியுடன் வந்த காவல்துறை அதிகாரியே இலஞ்சிச் சாமியார் என்பதையும், நகை நாட்டுடன் வந்த சிறுமி நகைகளுக்காகக் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்படுகிறாள், அவளைத்தான் ரவீந்திரன் மீட்டு வளர்த்துள்ளார் என்பதையும் ஊகித்துவிடுகிறார். மகளை இழந்து தேடித் தவித்துத் திரிந்த அவளது தந்தை வாழ்க்கை வெறுத்து சாமியாராகிவிட்டிருக்கிறார். சந்திரிகா பளிஞர் குடியிருப்புக்கு வந்து சேர்கிறாள். அங்குப் பழங்குடியினர் தலைவனின் மகள் திருமணம் நடக்கிறது. விழா நிகழ்ச்சியில் அவள் நாட்டியமாடுகிறாள். சந்திரிகாவை மீண்டும் கண்டதில் ரவீந்திரனும் மனநலம் பெறுகிறான், அவனும் கலைநிகழ்ச்சியில் பங்கு கொள்கிறான். சந்திரிகாவைக் காப்பாற்றிய ராமநாதனுக்கே அவளை மணமுடித்து வைக்கிறான் என்று கதை முடிகிறது.

கதைமாந்தர்கள்:

சந்திரிகா, ரவீந்திரன், கல்யாணி குடும்பத்தின் வாழ்வில் பற்பலர் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களாகப் பல கதாபாத்திரங்கள் கதையில் வருகின்றனர். அவர்கள் மேலே கதைச் சுருக்கத்தில் காட்டப்பெற்ற ஒருசிலரைத் தவிர எண்ணற்றவர். அவர்களிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவர்கள், பாலக்கரை சிலம்பு ஆசிரியர் பயில்வான் மீரான் உஸ்தாத், உஸ்தாத்தின் மகள் ஆமீனா, கண்டோன்மென்ட் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்யும் மிஸ் லிலி ஓட் அவுஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண், தனது அத்தை மகன் கந்தப்பனை மணக்கும் பொதிகை பளிஞர் கூட்டத்தின் தலைவனின் மகள் சொக்கி போன்றோர். இருப்பினும் இவர்கள் இல்லாமலே கதையையும் நகர்த்த முடியும். மருத்துவர் சுரேஷ் முதலில் முக்கியத்துவம் இன்றி பெயருமின்றி துவங்கி பின்னர் மைய பாத்திரமாக, துப்பறியும் வல்லுநர் பாணியில் காட்டப்படுகிறார். எனினும் கதையைப் படித்து முடித்த பின்னர் மனதில் நீங்காமல் இருப்பவர்கள் சொக்கியும் உஸ்தாதும் மட்டுமே.

சிலம்பு ஆசிரியர் பயில்வான் மீரான் உஸ்தாத் மிகச் சிறப்பாகக் காட்டப்படுகிறார். திறமைகளும் பண்புகளும் நிறைந்த ஒரு குணக்குன்று. கதையின் ஆசிரியர் பாத்திரங்களை அமைத்த நோக்கில் எம்மதமும் சம்மதம் என்பதைக் காட்டும் முயற்சியை அறிய முடிகிறது. கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து, பழங்குடியினர் என அவர்கள் குடும்ப நிகழ்வுகளை விவரிக்கையில் மிகப் பொருத்தமாக இடத்திற்கு ஏற்ற உரையாடல், மேற்கோள் போன்றவற்றைக் கைக்கொள்கிறார். இந்நூல் சுமார் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் நிலையை, அன்றைய மக்களின் வாழ்வு முறையை அறிய உதவும். ஆனால், கதையில் அனைவரும் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள். அதிலும் பெண்களின் பாத்திரம் மிகவும் மோசம். கணவர் வீடு வந்து சேர நேரமானாலும் கதறிக் கண்ணீர் விடுவது சிரிப்பை வரவழைக்கிறது. குறைந்தது பத்து பக்கத்திற்கு ஒருமுறை எவரேனும் அழுகின்றனர்.

இந்த நூலின் குறிப்பிடத்தக்கச் சிறப்பு, ஆசிரியர் நூல் முழுவதும் இடத்திற்கும் நிகழ்வுக்கும் பொருந்தும் வகையில் பற்பல பாடல்களைப் பயன்படுத்தியுள்ள முறை. சிலபாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் என மக்கள் அறிந்தவை. ஒரு சில பாரதியார், இராமலிங்க அடிகளார் போன்ற தற்கால கவிஞர்களின் பாடல்கள். பளிஞர் பழங்குடியின் திருமணம் குறித்தும், திருமண நிகழ்ச்சி பாடல்களாகக் கொடுக்கப்படும் பாடல்களும் தமிழின் கருவூலம்.

கதையின் பெண்கள்:

பெண்களை எவ்வாறு ஆசிரியர் சித்தரித்துள்ளார் என்பதில் சென்ற நூற்றாண்டில் பெண்களின் வாழ்வியலை அறிய முடியும். கதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி வரும் பெண்கள்,  கதையில் அக்காலத்திலேயே தானே காரை ஓட்டிச் செல்லும் பெண்ணாகவும் பொதுச் சேவையிலும் கலைச்சேவையிலும் ஈடுபடும் மாதர் சங்கத் தலைவியாக மும்பையில் வசிக்கும் சாவித்திரி என்ற பெண் காட்டப்படுகிறார். இசைக்கலைஞர் ஒருவரின் மனைவியாக தனக்குக் கணவர் துரோகம் செய்கிறார் என்று ஐயம் கொண்டு எதிர்த்து வாக்குவாதம் செய்யும் கல்யாணி, இவர்களைத் தவிர்த்து திருமண வயதில் உள்ள பெண்களாக நால்வர் காட்டப்படுகின்றனர்.  நாட்டியமணி சந்திரிகா, உஸ்தாத்தின் மகள் ஆமீனா, ஆங்கிலோ இந்தியப் பெண் மிஸ் லிலி ஓட் அவுஸ், பளிஞர் பழங்குடி தலைவனின் மகளும் எதிர்கால தலைவியுமான சொக்கி. அவர்களில் மூவர் திருமணம் கதையில் இடம்பெறுகிறது.

கதையின் நாயகி சந்திரிகா உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். நாயகன் ரவீந்திரனை விட அவள் பாத்திரம் சிறப்பாக உள்ளது. அடுத்தவர் குடும்ப நலத்தினை விரும்பி வீட்டை விட்டு வெளியேறிவிடுவது, தற்கொலை போன்ற முடிவை எடுக்காமல் கலைக்காக வாழ எண்ணுவது, அனாதையான தனது பின்புலம் குறித்து தன்னிரக்கம் கொண்டு துவண்டு போகாதது என அனைத்துமே சிறப்பு.

தாயற்ற மகள் ஆமீனாவை அன்புடனும் ஆசையுடனும் வளர்த்து, தன்னைப்போலப் பயில்வான் ஒருவனுக்கு மணமுடிக்காமல் பேராசிரியர் ஒருவருக்கும் மணமுடிக்கக் கனவு காணுகிறார் உஸ்தாத். அப்பாவின் ஆசைகளையும் கனவுகளைச் சிதைப்பது மட்டுமல்லாமல், அவருக்கும் தெரியாமல் அவரிடம் சிலம்பம் பயிலும் மஜீத்தை விரும்புகிறாள் ஆமீனா. எல்லாவற்றுக்கும் உச்சமாக அவர் அறியாமல் திருமணம் செய்யும் அளவிற்கும் துணிகிறாள். அவளது செயல் கண்டு வெகுண்டாலும் இறுதியில் பாசத்திற்குக் கட்டுப்பட்டு வேறுவழியின்றி அவள் முடிவை ஏற்றுக் கொள்கிறார் உஸ்தாத். அந்த வகையில் தான் நினைத்ததைச் சாதிக்கிறாள் ஆமீனா.

பணிபுரியும் பெண்ணான மிஸ் லிலி ஓட் அவுஸ் அனைவரிடம் இயல்பாகப் பழகுபவளாகவும், தனக்கு வலைவீசும் கயமை குணம் கொண்டோர் வலையில் விழாமல் அவர்களைப் புறக்கணிக்கும் திடமான சிந்தனை கொண்டவளாகவும் காட்டப்படுகிறாள். இறந்துவிட்ட தனது தாய்க்குப் பின் தனது சகோதரர்களின் வாழ்வின் பொறுப்பேற்று திருமணம் செய்யாமல் வாழ முடிவெடுக்கிறாள் லிலி ஓட் அவுஸ்.

மற்றொருத்தி, பளிஞர் பழங்குடி தலைவனின் மகளும் துணிச்சல் நிரம்பிய பெண்ணுமான சொக்கி. இவள் செல்லப்பிராணியாக வைத்திருப்பது ஒரு யானை. அது அவளது சொல் கேட்டு நடக்கும் அளவு இருவருக்கும் நட்பு (ஒவ்வொரு எழுத்துக்கும் முன்னர் ‘க’ சேர்த்துப் பேசும் சிறுவர் விளையாட்டு பேச்சு வழக்கில் தனது யானையுடன் பேசுகிறாள் சொக்கி. அதாவது கசொ-கக்-ககி என்பது சொக்கி என்பது போல). ஆற்றைக் கடக்கும் பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் மானைத் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறாள். பின்னர் அவளுக்கே அந்த செயலிலிருந்த உயிரிழக்கும் ஆபத்தை எண்ணி பின்னர் கலக்கம் ஏற்படுகிறது. பொன்னியின் செல்வனில் வரும் படகோட்டி பூங்குழலியின் சாயல் கொண்ட பாத்திரப்படைப்பு சொக்கியில் தெரிகிறது என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. கதை மாந்தர்களாகக் காட்டப்பெறும் பெண்கள் யாவரும் சுயசிந்தனையும் அதற்கேற்ற வகையில் வாழ்வை அமைத்துக் கொள்பவர்களாகவே காட்டப்படுவது சிறப்பு.

நேரமிருந்தால் நூலை ஒருமுறை படிக்கலாம். இல்லாவிடில் நூலுக்கு அணிந்துரை வழங்கிய இராஜாஜி போலவே, ஏன் படிக்க வேண்டும் இந்த கட்டுரையைப் படித்துவிட்டேனே அது போதும் என்ற மனநிறைவும் பெறலாம்.

நூல்: ரவிசந்திரிகா

ஆசிரியர்: மீ.ப. சோமசுந்தரம்

நான்காம் பதிப்பு: 1989

வெளியீடு: வானதி பதிப்பகம்

வகை: புதினம்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலைக்காக ஒரு கதை”

அதிகம் படித்தது