மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காதுகள்- நூலும் வாசிப்பும்

இல. பிரகாசம்

Jun 9, 2018

siragu kaadhugal1

(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.)

இயல்பான சம்பவங்கள்:

அது என் கல்லூரியின் மூன்றாமாண்டின் தொடக்க காலம். கல்லூரி முடிந்து பேருந்தைப் பிடிக்கச் செல்லும் போது சாலையின் சற்றுத் தொலைவில் கூட்டம் தென்பட்டது.

அதன் நடுவே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

எதற்காக அந்தக் கூட்டம், யார் அந்த நபர், அவருக்கு என்ன ஆயிற்று? என்று

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கிடையே ஒருசில நிமிடம் திடீரென்று ஓடிச் சென்று சாலையை நெருக்கடிக்கு ஆக்கிய பேருந்தை நெறிப்படுத்த நம்மூர் டிராபிக் போலீசைப் போல தானும் சைகைகளைக் காட்டி அப்பேருந்தையும் சில வாகனங்களையும் சாலையையும் நெறிப்படுத்தினார். கூடத்தில் நின்றிருந்த சிலர் ‘இவன் ஏதோ பைத்தியம் போலிருக்கு” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இடையே தன்னையும் தன்னுணர்வற்ற நிலையிலும் இடையிடையே

அவர் பேசிய ஆங்கிலம் மிக அழகாகவும் இருந்தது. அதில் ஒரு இலக்கணப் பிழையையும் காணமுடியாது. பிற துறையின் பாடங்களில் கூட அவருக்கு தேர்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்போது அவரை உற்று நோக்கிய நண்பன் ‘அவரு வேற யாருமில்ல நம்ம காலேஜில படிச்சாரே அந்த சீனியர் அண்ணாதான் இவரு”ன்னு சொல்லி அந்நபரை ஒரு நொடியில் கண்முன் நிறுத்தினான். எனக்குச் சற்று தூக்கிவாரிப் போட்டது.

பின்னால் மீண்டும் ஒரு நாள் அவரை சாலையில் சந்திக்க நேர்ந்ததாகவும் அப்போது கல்லூரியில் கண்டது போலவும் நல்ல சுயநினைவுடன் தனியார் வேலைக்கு சென்றதை பார்த்ததாகஎன் நண்பன் கூறினான். அது ஒரு ஆசுவாசத்தை அப்போது அளித்தது எனக்கு.

ஒரு குழந்தையிடம் தாய் தந்தை அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் பல கதைகளைக் கூறுவார்கள். ‘நீ ஏதாவது தப்பு செஞ்சீன்னா ராவுல சாமி வந்து உன் கண்ணைக் குத்தும்” என்றும், ‘அந்த ஒத்த வேப்பமரத்துக் கிட்ட யாருமில்லாம தனியா போகக் கூடாது,இல்லாட்டி பூச்சாண்டி பூதம் எதுனாவது வந்து புடிச்சிக்கும்” என்று பயத்தை விதைத்து அக்குழந்தையை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

அதன் விளைவாக அக்குழந்தை இரவில் மட்டுமல்லாது பகலிலும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு “வீல் வீல்” என்று அழ ஆராம்பித்துவிடும். அதன் பாதிப்பு குழந்தை பருவத்தைத் தாண்டியும் பலருக்கு இருக்கிறது என மனோ தத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். அதன் வெளிப்பாடு எந்த நிலைக்கும் ஒரு மனிதனைக் கொண்டு செல்லும் என்றும்கூறுகின்றனர்.

மேற்கண்ட இரு நிகழ்வுகளுமே நமக்குப் புதிதல்ல. ஆனால்,அவை இரண்டிற்கும் பொதுவாகஇருப்பது உளவியல் சார்ந்த பிரச்சனை. ஆனாலும்,அவை வெவ்வேறு தன்மையை படி நிலையைக்

கொண்டதாக இருப்பதை அறியலாம். முன் கூறப்பட்ட நிகழ்விற்கு அடிப்படையாக பின்னால் கூறப்பட்ட நிகழ்வின் ஒரு பகுதி தாக்கத்தை கொண்டதாக நிச்சயம் இருக்கிறது. பிரச்சனையின் வடிவமும் வேறாக இருக்கிறது.

இங்கு ‘வடிவம்” என்று குறிப்பிடக் காரணம் ஒவ்வொரு உடல்சார்ந்தும் மனோநிலைக்கும் ஏற்ப பிரச்சனையானது வேறுபடுவதைத்தான்.

நம் புற உடல்சாராத மனோநிலை சார்ந்தும் ஏற்படுகிற பாதிப்பை நாம் ஒருபோதும் முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. அல்லது குறைந்த பட்சம் ஒன்றின் மீது நமக்கு ஏற்பட்ட விசைத்தன்மையான

கோபத்தின் தாக்கமாகவே உணர்கிறோம். அதனையும் நம் புறம் சார்ந்த செயல் காட்டுகிறது. சில இயல்பான  ஒரு உடல் தாண்டிய மனோநிலை செயல்படுத்துகிற நிகழ்வு இது. இதன்தன்மை ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொளின் மீது அதிவேகமான வினையை செயல்படுத்த தூண்டுகிற போது முற்றிலும் தாக்கம் பெரிய அளவில் காணப்படும். அது மனோத்துவ தீர்வின் மூலம் சரிசெய்யப்படுகிறது. அல்லது சில காலகட்டத்திற்கு பின் அந்நிலை தானாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது.

மேற்கண்ட சில பொதுவான அம்சங்களைக் கொண்டு ஓர் மனிதன் தன்னையே ஒரு சோதனைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்ட படைப்பு பற்றிய கட்டுரையே இது.

காதுகள் நாவலும் – சோதனையும்:

பரம்பரை பரம்பரையாக தெய்வீகத்தைப் போற்றி தனக்கு விருப்பமான கடவுளை தொழுது வாழ்ந்து பெரிய எழுத்தாளராக இருக்கிறார் கதையின் கதாபாத்திரமான மகாலிங்கம். அவர் தெய்வ பக்தியை ஒரு போதும் விட்டுவிட்டவரல்ல. எவ்வளவு பெரிய வறுமையும் தன் குடும்பத்தை பாதிக்கிற போதும் அவர் போற்றுகிற கடவுளையே சரணாகதி என்று அடைகிறார்.

இடைப்பட்ட வயது காலத்தின் மத்தியில் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை வெறும் புறம் சார்ந்த பிரச்சனையாக மட்டும் அல்லாது,அது படிப்படியாக வளர்ந்து புறத்தைத் தாண்டிய வேறுஒரு உலகத்திற்கு இழுத்துக் கொண்டு போகிறது. தன்னுணர்வு நிலையை தனக்கு எதிர்ப்புறம் நிறுத்தி வெறித்து அதன் செயல்களைக் கண்டு மருள்கிற நிலை. இந்நிலையினை நாம் வெகு இயல்பாகவே நம்மைச் சுற்றியிருக்கிறசில மனோநிலை பாதிக்கப்பட்டவர்களுடன் ஓரளவிற்கு ஒப்பிடலாம். பெரும்பாலும் அவர்கள் சுயநினைவை முற்றிலும் இழந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் மகாலிங்கத்தின் காதுகள் மட்டுமல்ல பிற உறுப்புகளும் சுயநினைவுடன் வேறொரு அந்நிய உணர்வை நடத்திக்கொள்ள நாடக மேடையாக மாற்றிக் கொள்ள அனுமதி தருகின்றன என்பதுஇங்கு மேற்கண்ட பொது தன்மையிலிருந்து நழுவாது வேறொரு மேல்நிலையை அடைகிறது என்பதை கவனிக்க வேண்டியதாகிறது.

மகாலிங்கத்தை சூழ்திருக்கின்ற வறுமையானது தன் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போதும், காமம் எனும் உருவம் இரவில் அவனைச் செயல்படுத்தி பிரசவநிலையில் இருக்கும் தன் மனைவியிடம் உறவு கொள்ளத் தூண்டுகிறது. இதன் விளைவு நேர்கிற பல விரும்பத்தாக செயல்களிலும் அவனை பங்குகொள்ள வைக்கிறது. பிரசவத்தின் போது இறந்து பிறக்கிற குழந்தையை வெறும் சதைப்பிண்டமென என்னுமளவிற்கு அவனதுநிலையானது வெறும் உணர்வுகளற்ற வெறும் பிணம் நடப்பதையே காட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க, அவனுடைய மத்திய காலத்தில் சில புறத்தைச் சாராத ஓசைகள் காதுகளில் கேட்கின்றன. அவை நாளடைவில் மெல்ல மெல்ல அவனையே ஆக்கிரமித்துக் கொண்டு அவன் விரும்பாத பல கற்பனை நாடகங்களையும் செயல்படுத்துகின்றன. ஒருகட்டத்தில் குருசேத்திர போர் ஒன்றையே நடத்துவதற்கு ஆயத்தமாகி அவனை முழுவதும் ஒரு போர்க்களமாக மாற்றி பின் தங்களுக்குள் போரிட்டுக் கொள்கின்றன.

அவ்வப்போது ஏற்படுகிற ஓசைகள் மிக கோரமான உருவங்களை அவனுடைய இரவு நேரங்கள் மட்டுமல்லாது பகல் நேரத்திலும் தோன்றி தங்களது எண்ணங்களையும் ஆபாசங்களையும் அரங்கேற்றிக் கொள்கின்றன.

மகாலிங்கம் தன்னிலையை முற்றிலும் உணர்வில்லாமலும் பாதி உணர்வற்ற நிலையிலும் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய நிலையானது எந்தவொரு மனிதனுக்கும் உச்சகட்ட மனப்பிறழ்வு நிலையை நிச்சயம் ஏற்படுத்தும். ஆனால் மகாலிங்கம் என்கிற மாலி அதனை அறிந்தும் அடக்கமுடியாது வெறுமனே வெளியே நின்று பார்க்கும் நிலையே பாத்திரம் ஏற்றுச் செயல்படுகிறது.

‘சில விமர்சகர்கள் இந்நாவலை “மேஜிக்கல் ரியலிசம்”என்றும்,இந்நிலையினை மருத்துவர்கள், ‘இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன்” நாவல் என்று குறிப்பிடுகிறார்கள்” என்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார். இது முழுக்க தன்னை தன் அனுபவத்தை வாழ்வை சோதனை செய்து எழுத்தப்பட்ட நாவல் எனக் குறிப்பிடுவது சரியாகும்.

தன் வாழ்க்கை வரலாறு:

‘காதுகள்” நாவலுக்கு சாகித்திய அகாதமி பரிசு வழங்கிய போது எம்.வி.வி இப்படிக் குறிப்பிடுகிறார் ‘இந்த மனித வாழ்க்கையே என் இலக்கியப் படைப்புகளின் ஊற்றுவாய். என் புற,அக வாழ்ககையே என் இலக்கியமாக பரிணமித்தது. நான் பார்த்ததையும் கேட்டதையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அளித்ததையும் சிந்தனை செய்ததையும் தான் சுமார் அறுபது வருடங்களாய் எழுதி வருகிறேன். என் படைப்புகள் எல்லாவற்றிலும் நான் தான் நிரம்பி வழிகிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.

இத்தமையை எம்.வி.வியின் படைப்புகளில் காணமுடிகிறது. அதன் விளைவாக தன் வரலாறு ஒன்று நாவல், தன்மையில் எழுதியிருப்பதாகப்படுகிறது. அதனை ‘ சுமார் இருபது ஆண்டுகள் இந்த அதிசுதந்திரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது”. என்று கூறுகிறார். இந்நிலையை எழுத்தாளர் பிரபஞ்சனும் தான் அவரை நேரில், கண்டபோதும் அவரிடம் வறுமை இருந்தது என்று குறிப்பிடுவது வாசக கவனத்திற்கு முக்கியமான ஒன்று.

எம்.வி.வெங்கட்ராமன் தம் காதுகள் நாவலில் ‘தான்” என்பதை சோதித்ததை இப்படி தன்னுணர்வு நிலையிலேயே குறிப்பிடுவது போல,

“இவன் என் ஆழ்நிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற அருமையான பாத்திரம். இவன் என்னை நான் என்பான்.  நான் இவனை நான் என்பேன். சோதனைகள் செய்வதற்கு என்னைவிட நல்ல பாத்திரம் எனக்குக் கிடைக்குமா என்ன? “என்று குறிப்பிடுகிறார்.

தமிழில் இதுவரை நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நவீன கால நாவலின் வளர்ச்சிப் போக்கினை எக்காலத்திலும் ஆராய்ந்து இன்ன இவைகள் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் என்று பாராபட்சமின்றி பட்டியல் ஒன்றை போடுகிறபோது சோதனை ரீதியில் முதற்கொண்டு தமிழில் தன்வரலாற்றை நவாலாக எழுதியதற்காக ‘காதுகள்” நாவல் தீவிர வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.

                                                                                                                -இல.பிரகாசம்


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காதுகள்- நூலும் வாசிப்பும்”

அதிகம் படித்தது