மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கார் பருவம்

பேரா. க. கார்த்திகா

Sep 21, 2019

siragu kaarparuvam1
இயற்கை கூறுகளின் சங்கமமாக அமைந்திருப்பதே உலகம். உலகின் முதல்பொருளாக நிலமும் பொழுதும் அமைந்துள்ளன. பொழுதுகள் பற்றியதான சங்கப் புலவர்களின் திறனை நற்றிணைவழி அறிவதே இக்கட்டுரையாகும்.
பொழுதுகள்

வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப பாகுபடுத்தப்பட்டதே பொழுதுகள் ஆகும். பொழுதுகள் பற்றி வானிலை அறிவியல் பருவமழைக்காலம், பருவ மழைக்கு பிந்தைய காலம், குளிர்காலம், கோடைகாலம் என நான்காக வகைப்படுத்துகின்றது. இவ்வகைப்பாடானது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. பொழுதுகளை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பிரித்து, ஒரு ஆண்டின் கூறுகளாக அமைவது பெரும்பொழுது எனவும் ஒரு நாளின் கூறுகளாக அமைவது சிறுபொழுது எனவும் கூறி, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும்பொழுதுகளையும் மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என சிறுபொழுதுகளையும் வகைப்படுத்தியிருப்பது சங்கப்புலவர்களின் பொழுதியியல் அறிவைக் காட்டுகின்றது.
மழை
உலக உயிரினங்களுக்கு அடிப்படை ஆதாரங்களாக அமைவது நீர் ஆகும். நீரின்றி உலகம் இயங்காததைப் போல தலைவனின்றி தன் உயிர் இயங்காது என்று தலைவி கூறுவதாக நற்றிணையின் முதல் பாடல் அமைந்துள்ளது. நீரின் தன்மையுணர்ந்தவராய் எதிர்காலச் சிந்தனையுடையவராய் தமிழர் இருந்துள்ளனர். அதனால்தான் இளங்கோவடிகளும் தன் நூலில் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதம் என்கிறார்.
‘‘நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு” (குறள்-20)
என்ற வள்ளுவனின் கூற்றும் இதை வலியுறுத்துவதாய் அமைந்துள்ளத. கடல்நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்த காற்று வீசுவதன் மூலம் மழையானது பொழியும் என்கிறது அறிவியல்.
இவ்வுண்மையை,
‘‘மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மாமழை”(நற்-99-6)
‘‘குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி”(நற்-153-1)
‘‘வானம் நனிகடல் முகந்து செறிதக இருளி (நற்-289-3)
‘‘இருவிசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே” (நற்-329-10-11)
‘‘மாக்கடல் முகந்து” (நற்-112-6)
‘‘நளி கடல் முகந்து செறிதக இருளி “ (நற்-289-4-5)
என்று செம்மொழி இலக்கியமான நற்றிணை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துள்ளது. இதனை
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு
வளைஇ மாதிரம் புதைப்ப
பொழிதலின் காண்வர(அகம்-84-2-4) என்று அகநானூறும் எடுத்தியம்புகிறது.

மலர்

siragu kaarparuvam2

மனித வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைப் பொருளாக விளங்கும் பதினான்கு கருப்பொருகளில் ஒன்றாக விளங்குவது மலர் ஆகும். மலர்கள் பற்றியும் அம்மலர்கள் மலரும் பருவங்கள பற்றியும் அறிந்தவராகப் பழந்தமிழர்கள் இருந்துள்ளனர். முல்லை, குருக்கத்தி, பித்திகை (செண்பகம்) களா, பிடவம், கொன்றை, கர்யா போன்ற மலர்கள் கார்கால மலர்களாக இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. வினைவயின் சென்ற தலைவன் குறித்த கார்பருவம் வந்தும் வரவில்லை. அதை நினைத்து வருந்திய தலைவியிடம் தோழி, கடல் நீரை அதிகம் உண்ட மேகம் அதை நீண்ட காலம் வைத்துக் கொள்ள முடியாமல் மழையாகக் கொட்டியது. மழையைப் பார்த்தவுடன் கார்காலம் வந்துவிட்டதென பிடவமும் கொனறையும் காந்தளும் அறியாமையால் மலர்ந்துவிட்டன. அதனால் அம்மலர்களைப் பார்த்து நீ கார்க்காலம் என மயங்காதே என்பதாக

‘‘மறந்து கடல்முகந்த கமஞ்சூழ் மாமழை …… மலர்ந்தன் பலவே” (நற்-99-6-10)

என்ற இப்பாடல் அமைந்துள்ளது. கொன்றை பருவமறியாது மலர்ந்தது என்பதை ‘‘மடவ மன்ற தடவு நிலைக்கொன்றை” (குறு-66-1-5) புதுப்பூங்கொன்றை , கானம் காரெனக் கூறினும், யானோ தேரேன் அவர் பொய் வழங்கலாரே (குறு-23-3-5) என்ற குறுந்தொகை பாடல்வழி அறிந்துக்கொள்ள முடிகின்றது.

பித்திகை கார்காலத்தில் மலர்வதை,

‘‘பேருந்தண்மாரி பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிறந்தனவே” (குறு-94-1-2)
என்று குறுந்தொகையிலும் ‘‘மலிபெயற் கலிதத மாரிப் பித்திகத்து” என அகநானூறிலும் (42-1) கூறப்பட்டுள்ளது. தெறுழ் கார்காலத்தில் மலர்வதொரு கொடியாகும். தெறுழ் கொடியில் பூக்கும் மலர்கள் நீலநிறமானவை. அம்மலர்கள் கார்பருவம் நீங்கியதால் வெண்மை நிறமாக மாறியதைப் பார்த்தும் கூட தலைவன் வாராதிருக்கிறாரே என்ற தலைவியின் புலம்பலில் (நற்-302-4-5) இருந்து பருவ மலர் பற்றிய அறிவுடையோர் நம் முன்னோர்கள் என்பது புலனாகிறது.

கார்பருவம்

siragu kaarparuvam3

மழை பொழியும் பருவமே கார்பருவமாகும். உயிரினங்களிடம் புணர்ச்சி வேட்கையை ஏற்படுத்தக் கூடிய பருவமாக இப்பருவம் அமைந்துள்ளது. குயில் தன் பெடையைத் தேடுவதற்கானப் பருவமாகவும், மான் தன் துணையை நாடுவதற்கான பருவமாகவும், தலைவன் தலைவியைக் கூடுவதற்கானப் பருவமாகவும், கார்ப்பருவம் அமைகிறது. மழையால் நீங்கிய வெப்பமும் நிலத்தின் குளிர்ச்சியும் மழையுடன் சேர்ந்து வரக்கூடிய வாடைக் காற்றும் மற்ற பருவங்களைவிட கார்பருவத்தில் அதிகப்படியான புணர்ச்சி வேட்கையை ஏற்படுத்துகின்றது. தலைமக்கள் பிரிய நினைக்காத பருமாகவும் பிரிந்து சேர்ந்திருக்கும் பருவமாகவும் கார்காலம் விளங்குகிறது என்பதாக இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. பொருள்வயின் பிரிய நினைக்கும் தலைவனின் செயல்களை தோழி தலைவியிடம், தலைவன் பொருள்வயின் பிரிந்து செல்கிறானாம். அவன் திரும்பி வரும்வரை நாம்மட்டும் இம்மழைக்காலத்தில இம்மழையைப் பார்த்தபடி தனியாக இருக்க வேண்டுமாம். இச்செயல் நகைப்புக்குரியதாய் உள்ளதல்லவா” என்றுரைப்பதிலிருந்து தலைமக்கள் பிரியாத பருவமாகக் கார்பருவம் அமைகிறதென்றும் அதனால்தான் அப்பொழுதில் பிரிய நினைக்கும் தலைவனின் செயல் தோழிக்கு நகைப்பை ஏற்படுத்தியது என்றும் அறிய முடிகின்றது.

(நற்-129-1-9)
தலைவியைத் தழுவ உதவிய மேகத்தை வாழ்த்தும் தலைவனை நற்றிணை எடுத்துரைக்கிறது. (139-8-10) பிரிந்தோரை சேர்த்து வைப்பதாக மழை பதிவு செய்யப்படுகிறது.

‘‘இன்துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும் இப்பெருமழைக் குரலே”(நற்-208-11-11)

மழையுடன் வரக்கூடிய வாடை பிரிந்தோரை வருத்தும் என்பதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பிரிவுக் காலத்தில் வாடை கொடிதாதலை
‘‘இரும்புறம் தமூஉம் பெருந்தண் வாடை” (நற் -153-1)
‘‘தண்வரல் அசைஇய பண்பில் வாடை” (அகம்-58-11)
‘‘ஆனாது எறிதரும வாடையொடு நோனேன்” (அகம்-294-15)
என்ற இவ்வடிகளின் மூலம் அறிய முடிகின்றது.

காமம் என்ற ஒரு கொடிய நோயை ஏற்படுத்தும் பருவமாக மழைக்காலமும் மாலைக்காலமும் அமைந்துள்ளன. மாலையின் தன்மையை வள்ளுவர், காமநோய், காலையில் அரும்பாகி, பகலில் முதிர்ந்து மாலையில் மலராய் மணம பரப்பும் என்கிறார்.
‘‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய் “ (குறள்-1227)
பிரிந்தோரை வருத்தும் பருவமாய் மழைக்காலத்து மாலைப்பொழுது அமைந்துள்ளது. கார்பருவ மாலையில் தனித்திருந்த தலைவி பிரிந்தோரை வருத்தும் மாலைப்பொழுது என் தலைவன் சென்றுள்ள நாட்டில் இல்லை போலும் இருந்திருந்தால் அவர் உடனே வந்திருப்பாரல்லவா? எனத் தனக்குத்தானே பேசிக்கொள்பவளாய், தோழியிடம் கேட்பவளாய் நற்றிணைத் தலைவி படைக்கப்பட்டிருக்கிறாள்.

‘‘படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி தோழி” (343-7-8) பிரிந்தோரை மாலைப்பொழுது வருத்துமென்பதை
‘‘ஆருயிர் அணங்கும் தௌ;ளிசை
மாரி மாலையும தமியோன் கேட்டே” (அகம்-214-14-15) காமம் தாங்குதற்கரியது என்றும் (குறு-18-5)அக்காம நோயை மிகுவிப்பதாக மாலைப்பொழுது அமைகிறது என்றும் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ‘‘நோயும் பெருகும் மாலையும் வந்தன்று”(நற்-397-5)

உளவியல்

மனம் பற்றிய அறிவியலே உளவியல், அதை சங்கத்தமிழ் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி உள்ளது. மழைக்காலமும் , அக்கால மாலைப்பொழுதும், அப்பருவத்தில நிகழும் புற நிகழ்வுகளும் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு எத்தகைய எண்ண ஓட்டங்களை பாதிப்பை உண்டாக்கும் என்பதை பழங்காலத்திலேயே எடுத்துரைத்த மொழி தமிழ்.

மாலைப்பொழுதில் பெண்கள் விரும்பி சூடிய பூக்களாக குருக்கத்தி, பித்திகை, முல்லை போன்றவை குறிப்பப்படுகின்றன.

தலைவி காம நோயில் துன்புற்றிருக்கும் போது மேலும் துன்பத்தைத் தரவல்லதாய் உள்ளது குருகத்தி, பித்திகை மலரை வீதி தோறும சென்று விற்றுவரும் பெண்ணின் குரல் பிற உயிரினங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையறி தாவரங்கள் பற்றி எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் தன் எண்ணங்கள் என்னும நூலில் குறிப்பிட்டுள்ளார். தாவரங்களையே இசையானது ஆட்கொள்ளும் போது மனிதர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எண்ணி பார்த்தல் வேண்டும். யானைபாகனின் இசை அமிர்தவதி என்பவளுக்கு அவன்மீது காமத்தை மிகுவிக்கின்றது. அவனுடன் கள்ள உறவு கொள்கிறாள். இச்செயலை கணவன் யசோதரனும் மாமியாரும் அறிய, தடைய இருக்கும் இருவரையும் உணவில் நஞ்சைக் கலந்து கொள்கிறாள் என்பதாக அமைகிறது. யசோதர காவியம் “இசை காமத்தை மிகுவிக்கும்” என்பதை உணர்த்வல்லதாய் இவ்விலக்கியம் அமைந்துள்ளது. சூழலுக்கேற்ப மற்ற உயிரினங்களிடம் இன்பத்தை, துன்பத்தை, காமத்தை ஏற்படுத்தும் அற்புதக் கருவியாக இசை அமைகின்றது. முத்தமிழில் ஒன்றாக இசைத்தமிழ் அமைந்துள்ளதைக் கொண்டு இதனை அறிய முடிகின்றது. இயல்பாகவே, காமத்தை மிகுவிக்கும் புல்லாங்குழலின் இனிய இசையை கார்கால மாலைப்பொழுதில் கேட்கும்போது , படையுடன் வந்து தன் உயிரை கொல்லும் தன்மையில் இருந்தது என்பதை,

‘‘அழம் போலும் மாலைக்குத் தூது ஆகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை” குறள்-1228 என்று திருக்குறள் பதிவு செய்கிறது. ‘‘நோயும் பெருகும் மாலையும் வற்” (நற்-397-5) என வருந்தும தலைவிக்கு அப்பொழுதில் கேட்கக்கூடிய புல்லாங்குழலின் இசை வருத்தத்தைத் தருகிறது. அழகிய புறா அதன் பேடையோடு கூடி மகிழும் மாலைப்பொழுதில் நீ இன்றி நான் தனியே இருப்பதைவிட கடுமையான பாலை வழியில் உன்னோடு நானும் வருவது எனக்கு மகிழ்வை தரும் என்கிறாள் தலைவி.

‘‘மனை உறை புறவின் செங்காற் பேடைக். . . . . . . . . . . . ஆற்றேன்”(நற்-162-1-4)
இதிலிருந்து கொடுமையான பாலைநிலப்பயணத்தைவிட மாலைப்பொழுது மிகக் கொடியதாகப் பதிவுசெய்யப்படுகின்றது. இத்தன்மையுடைய மாலைப்பொழுதில் நடக்கும் சில நிகழ்வுகள் பிரிந்தோரை மேலும் துன்புறுத்தவல்லதாய் அமைகின்றன. பறவை இனங்கள் ஒன்றுடன்ஒன்று கூடி இன்புற்றிருக்கவும், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடவும் பெண்கள் மாலை நேரத்தில் சூடிக்கொள்ளும் முல்லை, சண்பகம், குருகத்தி போன்ற மலர்கள் பூக்கவும் காரணமாக அமைவது கார்ப்பருவமாகும். கார்ப்பருவ மாலைப்பொழுதில் இந்நிகழ்வுகள் நடைபெறும்பொழுது மேலும் பிரிந்தோரை வருத்துவதாய் அமைகின்றது. ஏற்கனவே மார்பில் ஏற்பட்ட ஆழமான புண்ணின் தசை காயும முன்பே மீண்டும அவ்விடததில் வேலைச் செலுத்தியது போல் உள்ளது இம்மாலைப்பொழுது. தன் பெடையைக் கூடுவதற்கு அழைக்கும் குயிலின் ஓசை இவ்வேளையில் எனக்கு கொடியதாகத் தோன்றுகிறது. குயிலின் கூவலை விட நீர் பெருகி வரும் ஆறு கொடியதாக உள்ளது. பசுமையானக் குருக்கத்தி மலருடன் வாசமிகு பித்திகை மலரையும் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறும் பூவிற்கும் பெண்ணின் குரலானது முற்கூறிய குயிலைவிட ஆற்றைவிட மிகமிகக் கொடியதாக உள்ளது என தன் ஆற்றாமையைத் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைகிறது மாறன் வழுதியின் பாடல்.

‘‘அழுந்து படு விழுப்புண் வழும்பு வாய் புலரா . . . . . .
தண்டலை உழவர் தனி மட மகளே” (நற்-97)

தலைவி தனிததிருக்கும் பருவத்தே இசையெனும நெருப்பால் குயில் துயரம் பெருக்கவே குயில் கொடிது என்றாள்(157-5-7) காதலால் மேனிக்கண் ஏற்பட்ட வெப்பத்தை ஆறு போக்காததால் ஆற்றைக் கொடிதென்றாள். தலையில் சூடும் பூக்கள் தலைவன் இல்லாத பொழுது மகிழ்ச்சியைத தராததால் பூ விற்கும் பெண்ணைக் கொடியள் என்றாள். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு மாலைப்பொழுதில் காணும் இனிய நிகழ்வுகள் எல்லாம் வருத்தத்தையே தரும் என்பதை உணர்த்தவல்லதாய் அமைகின்றது. தமிழ் இலக்கியங்கள் காமநோயை மிகுவிக்கும் கார்கால மாலைப்பொழுதின் தன்மை கருதியே மேற்கொண்ட பயணத்தை நிறுத்தி செயவழுங்கியத் தலைவர்களைக் காட்டுகின்றனர் சங்கப்புலவர்கள் . (நற்-256-7-9)

தவிர்க்க இயலாச் சூழலில் தலைவியைப்பிரிந்த தலைவன் வினைமுடிந்து திரும்பி வரும்பொழுது மழைக்கால மாலைப்பொழுதின் வலிமையையும் தன் தலைவியின் நிலைமையையும் உணர்ந்த தலைவன் தேர்ப்பாகனிடம். தன் தலைவியின் நிலைமையையும் உணர்ந்த தலைவன் தேர்ப்பாகனிடம் , முல்லை மலரைச் சூடி இருக்கும் பார்ப்பன மகளிரை மாலைப்பொழுதில் காணும்போதெல்லாம் நான் இல்லாது வெறுமையாக இருக்கும் மனையைப் பார்த்து வருந்துவாள். நான் உடனே சென்றாகவெண்டும். இல்லையெனில் காமம் தாங்காது அவள் அழுதே விடுவாள். அதனால் தேரை விரைந்து செலுத்து என்கிறான்.

‘‘புல்லென்வெறு மனை நோக்கி. மெல்ல
வருந்தும் கொல்லோ” (நற்-321-6-7-)
‘‘நிழல் திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிமை”(371-7)

முடிவுரை

இவ்வாறாக நிலவியல், வானியல், பருவவியல், மலரியல் , உளவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய அறிவியல் அறிவுடையோர் பழந்தமிழ்ப்புலவர்கள் என்பதை கார்பருவத்தின்வழி எடுத்துரைக்கின்றது செம்மொழி இலக்கியமான நற்றிணை.


பேரா. க. கார்த்திகா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கார் பருவம்”

அதிகம் படித்தது