மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் பகுதி 54

கி.ஆறுமுகம்

Mar 28, 2015

bose2கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருவமாறு, “நான் அங்கிருந்த போது போருக்குப் பிந்தைய பிரித்தானிய பிரதம மந்திரியாக இருந்த கிளைமண்ட் அட்லி இந்தியாவின் சுதந்திரத்திற்கு பொறுப்புடையவராக இருந்தார். இந்தியாவிற்கு வருகைபுரிந்த அவர் கல்கத்தா ராஜ்பவனில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். நான் அவரிடம் நேரடியாகவே இவ்வாறு கேட்டேன் “காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1947க்கும் வெகுமுன்னரே தோற்றுப்போய்விட்டது. பிரிட்டிசார் இந்தியாவைவிட்டு வெகுவிரைவாக வெளியேற வேண்டும் என்கிற அளவிற்கு சூழ்நிலை எதுவும் இல்லை, பிறகு ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?” அதற்கு பதிலாக அட்லி சில காரணங்களைக் குறிப்பிட்டார். அதில் மிகமுக்கியமானது “நேதாஜி சுபாசு சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகள் இந்தியாவில் பிரித்தானிய பேரரசின் அடித்தளத்தை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. அத்துடன் ஆர்.ஐ.என் கலகத்தினால் பிரிட்டிசாருக்கு இந்திய ஆயுதப்படைகள் இனிமேலும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது என்பதை பிரிட்டிசார் உணர்ந்துவிட்டனர்”.

subash1“காந்தியின் 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவை விட்டு பிரிட்டிசார் வெளியேறுவது என்ற முடிவில் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்தியது” என்று நான் கேட்டபோது, அட்லி தனது உதடுகளை விரித்து ஒரு புன்முறுவலுடன் உற்று நோக்கியபடி மெதுவாகச் சொன்னார், மிகவும் குறைவு இருப்பினும் சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள், இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது. முதலாம் உலகப்போரின் போது ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம் நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில் ஜெர்மானியர்களின் அனுகூலத்தை இந்திய புரட்சியாளர்கள் கோரினர். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சுபாசு சந்திர போசு இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்த போதிலும் சுபாசு சந்திர போசின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது. இந்திய சுதந்திரத்திற்கான போர் ஐரோப்பாவில் ஹிட்லராலும் ஆசியாவில் ஜப்பானும் மறைமுகவாகவேனும் பிரிட்டனுக்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை. ஆனால் இந்தியாவிற்கு சுதந்தரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணையின் போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த வெள்ளையரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெறும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பிரிட்டன் படைகளை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி போர்களத்தில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழர் போக தமிழ்நாட்டிற்குத் திரும்பிய வீரர்களின் எண்ணிக்கை 4241 என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள விடுதலைவீரர் யார் எவர்? என்ற நூல் கூறுகிறது.

இந்திய சுதந்திரத்திற்கு எப்படிப்பட்ட புரட்சி வேண்டும் என்பதை சரியாக கணித்து திட்டமிட்டு செயல்படுத்தியவர் போசு. அவரின் எண்ணங்கள், சிந்தனைகளின் மூலம் இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிசார் படையை போர்க்களத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றாலும் இந்தியா விடுதலைப் பெற்றேத் தீரும் அல்லது இந்திய தேசிய இராணுவம் தோல்வியை அடைந்தாலும் அதனால் இந்தியாவில் மக்களிடம் ஏற்படும் கிளர்ச்சி இந்திய சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் சிந்தனைபடியே இந்தியா சுதந்திரம் அடைந்தது. போசு ஆகஸ்ட் 15 1945ல் வானொலியில் இந்திய தேசிய இராணுவம் இயற்கையின் பாதிப்புகளினால் பின்னடைவை சந்திக்கும் போது பேசியது. நாம் தற்காலிகமாக தான் பின்னடைவை சந்தித்துள்ளோம் இது நிரந்தரம் அல்ல இந்தியா சுதந்தரம் அடைந்தே தீரும் என்று கூறினார். அதன்படி 1947 ஆகஸ்ட்டு 15ல் இந்திய சுதந்திரம் அடைந்தது. அவர் வாக்கு உண்மையானது.

subash3போசின் மரணம் குறித்து மக்களினாலும், தேவரினாலும் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்காக நேரு அரசு 1956ம் ஆண்டு நேதாஜியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில் ஷாநவாஸ் மற்றும் S.N.Maitra இவர் ICS அதிகாரியாக கல்கத்தாவில் பணிபுரிந்தவர் இவரை கல்கத்தா அரசு நியமித்தது. மற்றொருவர் நேதாஜியின் சகோதரர் சுரேசு சந்திரபோசு இந்த மூவர் கொண்ட விசாரணை குழு 67 சாட்சிகள் இந்தியாவிலும் மற்றும் ஜப்பான் டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் தனது அறிக்கையை அரசிடம், குழுவில் இருந்த இருவர் நேதாஜி விமான விபத்தில் உயிர் இழந்தது உண்மை, டோக்கியோவில் புத்தர் ஆலயத்தில் இருப்பது நேதாஜியின் சாம்பல்தான் என்று தெரிவித்தனர். இவர்களின் அறிக்கையை முற்றிலும் நிராகரித்து நேதாஜியின் அண்ணன் சுரேசு சந்திரபோசு ஒரு தனி அறிக்கையை அரசிடம் கொடுத்தார். அதில் நேதாஜி விமான விபத்தில் உயிர் இழக்கவில்லை டோக்கியோவில் புத்தர் ஆலயத்தில் இருப்பது நேதாஜியின் அஸ்தி இல்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கைகளினால் மக்கள் மீண்டும் நேருவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். நேரு அரசு விசாரணைக் குழு அமைத்ததே போசு இறந்துவிட்டார் என்று ஜப்பான் அரசு அறிவித்ததில் இருந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்போதும் போசு உயிருடன் இருக்கிறார் என்ற அறிக்கை வரும் போது நேருவின் தவிப்பு அதிகமானது. மக்களை கட்டுப்படுத்துவதற்காக விசாரணை குழுவில் மூவர் உள்ளனர், அதில் இருவர் ஒருமித்த கருத்தை தெரிவிக்கின்றனர் எனவே அரசு அவர்களின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறது என்று நேரு அரசு தெரிவித்தது. ஆனால் இந்திய மக்களிடம் போசின் மரணம் குறித்து மீண்டும் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வந்தது.

Indira Gandhi1970ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு மீண்டும் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஆணையிட்டது. இந்தக் குழு ஒய்வுபெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவின் தலைமையில் செயல்பட்டது. இந்தக் குழு விசாரணையைத் தொடங்கியதும் இவர்களுக்கு முன் அமைந்த விசாரணை குழுவின் அறிக்கையை எடுத்து பரிசீலனை செய்து பிறகு தனது விசாரணையைத் தொடங்கியது. இவர்களும் இந்தியாவில் உள்ள அனைத்து சாட்சிகளையும் விசாரித்து பின் ஜப்பான், டோக்கியோ, தைவான் சென்று விசாரணை செய்து இந்த விசாரணை குழுவானது ஒரு நபர் விசாரணை ஆணையம். இவர் இந்தியாவில் இந்திய அரசிடம் இருந்து போசின் சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் பார்த்தது மற்றும் முழுமையான விசாரணை நடத்தினார். இந்திய அரசிடம் போசின் உடன் தொடர்பு கொண்ட சுமார் 10000 ஆவணங்கள் இருந்தது. இதனை இந்த விசாரணை குழு பார்த்தது. இதில் இருந்த சில ஆவணங்களை இந்திய அரசு தொலைத்தது. பின் சுமார்30 ஆவணங்களை இந்த ஜி.டி. கோசலா விசாரணை ஆணையம் எரித்தது.

subash6இந்த விசாரணை ஆணையத்தின் முன் சாட்சியாக வந்த Dr.சத்திய நாராயண சின்கா என்பவர் கூறுகையில், நாவசுகான் குழு 10/misc/INA Allied Secret Report No என்ற எண் கொண்ட ஆவணங்களை பரிசீலிக்கவில்லை என்றும் போசு ரசியாவில் Yakutsk என்ற உலகின் மிகவும் குளிர்ந்த இடம் இது. அங்கு சிறை எண் 45ல் போசு சிறைவைக்கப்பட்டுள்ளார் என்றும் இது நேருவுக்கு நன்றாகத் தெரியும். அவர் தனது பதவியையும் அரசாங்கத்தையும் மக்களிடம் இருந்து காத்துக் கொள்ளுவதற்காக போசை இந்தியாவிற்கு வரவிடாமல் உள்ளார். அவர் போசை இந்தியா அழைத்துவர எந்த முயற்சியும் செய்யவில்லை என்று கூறினார். மேலும் கூறுகையில் நேருக்கு நன்றாகத் தெரியும், மக்கள் நேதாஜியின் மீது கொண்டுள்ள பற்று எனவே இந்த சூழ்நிலையில் போசு மட்டும் இந்தியா வந்துவிட்டால் நேருவின் செல்வாக்கு போய்விடும் ஏனெனில் மக்கள் நேதாஜியின் மீது கொண்டுள்ள அன்பு நேருக்கு நன்றாகத் தெரியும்.

விசாரணை குழு: நீங்கள் போசை பார்த்த செய்தியை நேருவிடம் கூறினீர்களா?

சின்கா: ஆம் 13 ஏப்ரல் 1950ல் டெல்லியில் சந்தித்தேன். நான் போசைப் பற்றிய அனைத்தையும் கூறினேன். அதற்கு நேரு இது அமெரிக்காவின் பிரச்சாரமாகக் கூட இருக்கலாம் என்றார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் பகுதி 54”

அதிகம் படித்தது