மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மொழி இலக்கியங்களில் உயிரியல்

முனைவர் சே.குமரப்பன்

Sep 28, 2019

 siragu uyiriyal2
செம்மொழி இலக்கியங்களில் சூழ்நிலைஇயல், உயிரியல், விலங்கியல், தாவரஇயல், மருத்துவஇயல், வானிலை இயல், உணவியல் எனப் பல்வேறு அறிவியல் சிந்தனைகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் “உயிரியல்” பற்றிய செய்திகள் பெருவாரியாக உள்ளன. இவற்றில் திருக்குறள், குறுந்தொகை மற்றும் தொல்காப்பியத்தில் காணப்படும். “உயிரியல்” தொடர்பான கருத்துக்களை இக்கட்டுரையிலிடம் பெறச் செய்துள்ளேன். உலகப்பொதுமறை என அழைக்கப்படும் “திருக்குறள்” ஏறக்குறைய அறிவியல் அறிஞர்கள் குறைவாகவே இருந்திருப்பர். அறிவியல் எண்ணங்கள் என்பது அரிதாகவே இருந்திருக்கும். அக்காலட்டத்தில் விலங்குகள், தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களின் பல்லுயிர்ப் பரவல் விலங்குகளின் நடத்தை இயல், பண்பு நலன்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைகள், வாழும்இடம், இவற்றின் சந்ததிகள் உணவு பழக்கவழக்கங்கள் பலவற்றை திருக்குறளில் பல குறட்பாக்களில் எடுத்துக் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் 46 குறட்பாக்களில் உயிரினம் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார். அனிச்சம், குவளை எனும் இருமலர்கள் மட்டும் கூறப்பட்டுள்ளது. இதில் அனிச்சமலர் 4 முறை கூறப்பட்டுள்ளது. நெருஞ்சிப்பழம் எனும் ஒரே பழவகையும் குன்றி மணி எனும் ஒரே விதையும் பனை, மூங்கில் எனும் இரு மரங்களும் யானை 8 முறையும், பாம்பு 3 முறையும், ஆமை, கொக்கு, முதலை, காகம், மீன், நரி, கவரிமான், பசு, காளை, சிங்கம், புலி, ஆடு, குதிரை, முயல், அன்னம், மயில், ஒட்டகம், வாத்து, எருமை ஆகிய உயிரினங்கள் குறட்பாக்களில் கூறப்பட்டுள்ளன. புல், பயிர், கொம்பு, கொடி, மரம், மலர், காய், கனி, வித்து, மொட்டு எனத் தாவரங்களின் வகைகள் மற்றும் வளர்ச்சிப்பருவங்கள் கூறப்பட்டுள்ளன. அன்புடைமை அதிகாரத்தில் 77வது குறள் “என்பிலாதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” எனும் குறளில் எலும்பு இல்லாத உயிர்களான புழு போன்றவை வெயிலில் காய்ந்து அழிந்துவிடும். இதுபோல் அன்பு இல்லாத உயிர் அறத்தினை செய்ய இயலாமல் துன்புறும் எனக் கூறியுள்ளார். இக்குறளின் மூலம் விலங்குகளில் எலும்பு உள்ளவையும் எலும்பு அற்றவையும் உள்ளன என்பதைக் கூறியுள்ளார்.

siragu uyiriyal3

குறள் 78 “அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த் தற்று” அன்பில்லாது வாழும் வாழ்க்கை வறண்ட பாலை நிலத்தில் தளிர்விடாத உலர்ந்த மரம் போன்றது எனும் பொருள்படும் இக்குறளில் நிலங்களை வகைப்படுத்தி அதில் பாலைநிலம் ஒன்று என்றும் அது வறண்ட தன்மையுடையது என்றும், இந்நிலத்தில் தாவரங்கள் எளிதாக வளர முடியாது என்பதையும் உணர்த்தி உள்ளார். குறள் 90 “மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” அனிச்ச மலர் மிக மென்மையானது. முகர்ந்தாலே வாடிவிடும் இதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகம் மலர வரவேற்காமல் முகம் கடுக்க வரவேற்றால் விருந்தினர் முகம் மாறிவிடும். இப்பாடலில் அனிச்ச மலரின் தன்மையை அறிந்து உவமையாகக் கூறியிருப்பது வியப்பைத் தருகிறது. குறள் 126 அடக்கம் உடைமை அதிகாரம் “ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து” ஒரு மனிதனுக்கு அடக்கம் அவசியம். உடலின் ஐம்பொறிகளையும் அடக்கி வாழப் பழகிக் கொண்டால் அது ஏழு பிறவிக்கும் பயனளிக்கும் எனக் கூறும் திருவள்ளுவர் இதற்கு உவமையாக ஆமையையின் நடத்தையைக் கூறுகிறார். எப்படி ஆமை தனது உறுப்புக்களை உள்ளே இழுத்து ஓட்டுக்குள் அடக்குகிறதோ அதுபோல் ஐம்புலன்களை அடக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.

காலம் அறிதல் அதிகாரம் குறள் 481 “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தற்கு வேண்டும் பொழுது” மன்னன் பகைவரை வெல்ல தக்க காலம் அறிந்து செயல்பட வேண்டும். அப்பொழுது தான் வெல்ல முடியும் என கூகை, காக்கை ஆகிய இரண்டு விலங்குகளின் உடல்தன்மை, செயல்பாட்டை உவமையாகக் கூறுகிறார். கோட்டானுக்கு பகலில் கண் தெரியாது. எனவே காகம் கோட்டானை எளிதில் வென்றுவிடும். காகத்திற்கு இரவில் கண் தெரியாது எனவே கோட்டான் காகத்தை இரவில் எளிதில் வென்றுவிடும். எனவே வெற்றிபெற காலம் அறிந்து செயல்படுதல் முக்கியம் என வள்ளுவர் அறிவுறுத்தி உள்ளார். குறள் 486 “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருநகர் தாக்கற்குப் பேரும் தகைத்து” எனும் குறளில் ஆட்டுக்கிடாய் காத்திருந்து பாயும் அது போல் ஊக்கம் உடைய வேந்தனுக்கு காலம் பார்த்து காத்திருந்து செயல்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் முழுவலிமையோடு தாக்குவதற்கு ஏற்ற காலம் வரும்வரை காத்திருந்து முழுவலிமையையும் ஒரே இடத்தில் செலுத்தி வெற்றிபெற வேண்டும் எனவும் கூறிஉள்ளார்.

குறள் 490 “கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து” எனும் குறளில் கொக்கு உணவுபெறும் முறையையும், உணவைப் பெற எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அழகு படக்கூறியுள்ளார். கொக்கு மீன் வரும் வரை அமைதியாகக் காத்திருக்கும். எப்பொழுது மீன் வருகிறதோ அப்போது பாய்ந்து சென்று மீனைக் கௌவிப்பிடிக்கும். இதனைப் போல் ஒருவினையைச் செய்யும்போது முயற்சி குன்றாது. சமயத்தையும், இடத்தையும் நழுவவிடாது வினையைச் செய்து முடிக்க வேண்டும் என நடைமுறை உவமையின் மூலம் எளிதில் புரியும் வண்ணம் கூறியுள்ளார். குறள் 495 “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற” முதலை நீரில் வாழக்கூடிய விலங்கு. அதன் உடல் அமைப்பானது நீரில் வாழ்வதற்கான தகவமைப்புடன் உள்ளது. எனவே நீரில் அது பலம் மிக்கதாக இருக்கும். எனவே பிற விலங்கினங்களை எளிதில் வென்று விடும். ஆனால் அதே முதலையின் உடல் தகவமைப்பு தரை வாழ்க்கைக்கு மிக ஏற்படுதையாக இருக்காது. எனவே அது தரையில் பலவீனமாக இருப்பதால் பிற உயிர்கள் முதலையை எளிதில் வெல்லும். தேர்ந்தெடுக்கும் இடமே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கிறது. எனவே தகுந்த இடத்தைத் தேர்வு செய்து வெல்ல வேண்டும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

siragu uyiriyal5

குறள் 500 “கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா வேலாள் முகத்த களிறு” யானை பலம் மிக்கது. போரில் வேல்கொண்டு தாக்கவரும் வீரர்களைக்கூட கொம்பால் குத்தி வீழ்த்தி வீடும். ஆனால் இப்பலம் மிக்க யானை புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறுநரி கூட யானையை வென்றுவிடும். எனவே இடனிறிந்து வினையைத் தொடங்க வேண்டியது அவசியம். இதில் உருவம் பெருத்த யானையையும் உருவம் சிறுத்த நரியையும் ஒப்பிட்டு எளிதில் புரியும் வண்ணம் செந்நாப்போதார் கூறியுள்ள பாங்கு அருமை. அதிகாரம் சுற்றம் தழால் குறள் 527 “காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள” காக்கை கிடைத்த உணவைத் தானே உண்ணாது. மறைக்காது. “கா‟,‟கா‟ எனக் கூவி அழைத்து தனது இனத்துடன் கூடி உண்ணும். அதுபோல் சுற்றத்தை அழைத்து உண்ணும் இயல்புடையவனுக்கு ஆக்கம் வந்து சேரும். அவனைப் பலரும் விரும்புவர். இக்குறளில் திருவள்ளுவர் விலங்குகள் உண்ணும் போக்கை ஆய்வு செய்து காக்கை உணவு உண்ணும் முறையை சுற்றம் தழுவுதலுக்கு உவமையாகக் கூறியிருப்பது அவரது அறிவியல் அறிவைப் புலப்படுத்துகிறது.

அதிகாரம் ஊக்கம் உடைமை குறள் 595 “வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு” நீரில் வாழும் தாவரங்களின் மலர்கள் நீரின் மேற்பரப்பிற்கு ஏற்ப தண்டு நீண்டு நீர்ப்பரப்பில் காணப்படும். எவ்வாறு மலர்தாள்களின் நீலம் நீரின் அளவைப் பொறுத்து உள்ளதோ அதுபோல் மக்களின் வாழ்க்கையின் நிலை அவரவர் முயற்சியைப் பொறுத்தே அமையும். எனவே முயற்சியும், ஊக்கமும் இருந்தால் உயர்நிலையை அடையலாம். குறள் 599 “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்” யானை பருத்த உடலையும் கூரிய கொம்புகளையும் கொண்டது. பலம் மிக்கது. உருவத்தில் பெரியது. எனினும் உருவத்தில் சிறிய புலி தாக்கினால் யானை பயந்து ஓடிவிடும். யானையை விட புலியின் ஊக்கம் அதிகம் இருப்பதால் பெரிய யானையை வெல்ல முடிகிறது. எனவே ஊக்கம் உடையவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதனை புலி-யானையின் செயல்திறனை வைத்து விளக்குகிறார் வள்ளுவர். அதிகாரம் படைமாட்சி குறள் 763 “ஒலித்தக்கால் என்னும் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்”. எலிகள் கூட்டமாகச் சேர்ந்து கடல் போல ஒலித்தாலும், நாகம் சீறினால் எலிக்கூட்டம் ஓடிவிடும். நாகம் மூச்சுவிட்டால் அவை அழியும். இதுபோல் பலமற்றவர்கள் பலர் கூட்டமாகச் சேர்ந்து எதிர்த்தாலும் வீரம் நிறைந்தவன் பயப்படமாட்டான். மாறாக வீரம் நிறைந்தவன் சீறி எழுந்து தாக்கினால் எதிர்க்கூட்டம் மடியும். இக்குறளில் எலியின் இயல்பையும், நாகத்தின் இயல்பையும் உவமையாகக் கூறி விளக்கி உள்ளார்.

அதிகாரம் படைச்செருக்கு குறள் 772 “கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது”. காட்டில் உள்ள முயலைக் கொன்ற அம்பைவிட யானையைக் கொல்ல குறிவைத்துத் தவறிய அம்பே சிறப்புடையதாகும். இவ் அம்பினை ஏந்திய வீரனும் சிறப்புடையவனாவான். குறள் 774 “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நடும்” கையில் உள்ள வேலை யானையின் மீது பாய்ச்சிவிட்டு வறிதுநின்ற வீரன் எதிர்வரும் யானையைக் கொல்ல தன் உடம்பின் மீது பாய்ந்துள்ள வேலைப் பறித்து வீசி மகிழ்வான். அதிகாரம் மானம் குறள் 969 “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” காவரிமான் மானம் மிக்கது. அதன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாது. அதுபோல் சான்றோர் அவர் தம் மானத்துக்கு இழுக்கு வரும் என்றால் உயிரை நீப்பர். சான்றோர்கள் மானத்தை உயிரைவிட மேலாகக் கருதுவர் என்பதை கவரிமான் மற்றும் அதன் வாழ்க்கை முறையை உவமையாகக் கொண்டு விளக்குவது சிறப்பாகும். அதிகாரம் நன்றி இல்செல்வம் குறள் 1008“ நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று” சிலரிடம் பெரும் செல்வம் இருக்கும். ஆனால் பிறருக்குக் கொடுத்து உதவமாட்டார்கள். நடுஊரில் நச்சு மரம் பழுத்தால் யாருக்கும் பயன் இருக்காது. இதுபோல் செல்வம் இருந்து பிறருக்கு உதவாமல் இருப்பது நச்சுமரம் பழுத்தது போன்றதாகும். எப்படி நச்சு மரத்தை மக்கள் விரும்பமாட்டர்களோ, எப்படி வெறுப்பார்களோ அதுபோல உதவாத செல்வம் உடையவனையும் விரும்பமாட்டார்கள்.

அதிகாரம் நலம்புனைந்து உரைத்தல் குறள் 1114 “காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் மாண்இழை கண்ஒவ்வேம் என்று” குவளை மலர்கள் மிக அழகானவை. ஆனால் அழகுமிக்க குவளை மலர்கள் தலைவியின் கண்களைக் கண்டால், தலைவியின் கண்களுக்கு நாங்கள் நிகராகமாட்டோம் என நாணித் தலைகுனியுமாம். குவளை மலரின் தன்மையை அறிந்து அதனைத் தலைவியின் கண் அழகிற்கு ஒப்பிடுவது மிக அருமை. குறள் 1115 “அணிச்சப்பூக் கால்களையால் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை” அனிச்சப்பூவே மெல்லியது. எடை குறைவானது. இத்தகைய அனிச்சப்பூவின் காம்பினை நீக்காது இவள் மலரைச் சூடுகின்றாளே! காம்பின் சுமை தாங்காது இடை ஒடிந்துவிடுமே. இனி இங்கு நல்ல பறை ஒலிக்காதே. இக்குறளில் அனிச்சப்பூ மெல்லியது என்றும் பெண்ணின் இடை அதைவிட மெல்லியது எனக் காட்டுவதும் சிறப்பு. குறள் 1120 “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” அனிச்சப்பூவும், அன்னப் பறவையின் இறகும் மென்மையானவை. அவை கூட மாதரின் கால்களுக்கு நெருஞ்சி முள்ளாகத் தோன்றுகின்றன.

மலர் மற்றும் பறவைகளின் தன்மையை ஆய்வு செய்து அதில் மெல்லிய தன்மை உடைய அனிச்சப்பூவையும் அன்னப்பறவையையும், உவமையாகக் காட்டியிருப்பதும் வள்ளுவரின் அறிவியல் அறிவை நன்கு புலப்படுத்துகிறது. மேலும் இவை நெருஞ்சி முள்ளாகத் தோன்றுவன் மூலம் பெண்ணின் பாகம் எவ்வளவு மென்மையானது என்பதைப் புலப்படுத்துகிறது. அதிகாரம் குறிப்பறிவுறுத்தல் குறள் 1274 “முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு” மலர இருக்கின்ற மலரின் மொட்டுக்குள் நறுமணம் இருப்பதுபோல் காதலின் புன்முறுவலில் குறிப்பு ஒன்றும் உள்ளது. எப்படி மொட்டுக்குள் உள்ள மணம் தெரியாமல் உணரப்படுகிறதோ அதுபோல் காதலியின் புன்முறுவலில் குறிப்பு உணரப்படுகிறது என மலர்மொட்டை உவமையாகக் கூறியிருக்கும் பங்கு சிறப்பானது. அதிகாரம் இனியவை கூறல் குறள் 100 “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” “இனிய சொற்களைக் கூறாமல் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது கையில் இருக்கும் கனியைவிட்டுவிட்டு காயை விரும்புவது போலாகும். காயைவிட கனி சுவையுடையது. பெரும்பாலும் கனியையே விரும்புவர் என்ற அறிவியல் சிந்தனை சிறந்த உவமையாகும். அதிகாரம் ஒப்புரவு அறிதல் குறள் 216 “பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின்” ஊருக்கு நடுவே உள்ள பயன் தரும் பழமரம் பழுத்தால் ஊரில் உள்ள மக்கள் பயனடைவர். இதுபோல் மக்களிடத்து அன்பு வைத்திருப்பவனின் செல்வம் அனைவருக்கும் பயன்படும்.

காய்களை விட கனிகளையே மக்கள் அதிகம் விரும்புவர். அதனாலேயே பழமரத்தினை இக்குறளில் உவமையாகக் கூறிஉள்ளார். குறள் 217 “மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்” மருந்துக்குப் பயன்படும் மரத்தில், அவற்றின் இளம் தளிர் முதல் வேர்வரை அனைவருக்கும் பயன்படும். அதுபோல் பிறருக்கு வழங்கும் பண்புடைய உள்ள செல்வமும் மக்கள் அனைவருக்கும் பயன்படும். இக்குறளில் மரத்தின் பாகங்களைக் கூறியுள்ளார் வள்ளுவர். அதிகாரம் புகழ் குறள் 235 “நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது” சிப்பியானது உடலுக்குள் முத்தை உண்டாக்கும். ஆனால் முத்தை சிப்பியின் உடலைக் கிழித்து எடுக்க வேண்டும். சிப்பி தன்னை இழந்தாலும் முத்தாக இருந்து ஒளிரும். இதுபோல சான்றோர்களின் பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு ஒளிரும். இவ் உவமையில் முத்துச் சிப்பியின் வாழ்க்கை, முத்து எடுக்கும் பங்கு பற்றிய அறிவியல் புலப்படுகிறது.

அதிகாரம் கூடா ஒழுக்கம் குறள் 277 “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கில் கரியார் உடைத்து” குன்றிமணி புறத்தே சிவந்து மூக்கில் கரும்புள்ளி பெற்றிருக்கும். மனிதர்கள் சிலர் வெளுப்பாக இருப்பார்கள் ஆனால் அகத்தே கறுத்து இருப்பார்கள். வஞ்சனை உடையவர்களாக இருப்பர். இவரிடத்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இக்குறளில் குன்றுமணியின் நிறம், தோற்றத்தை உவமையாகக்காட்டி வஞ்சனை உடையவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என இயம்பப்பட்டுள்ளது. அதிகாரம் கொல்லாமை குறள் 322 “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” அறநூல்கள் கூறும் எல்லா அறங்களிலும் மேலானது தன்னிடம் உள்ளதை மற்றவர்களோடு பகுத்து உண்பதாகும். இக்குறளின் மூலம் இயற்கை வழங்கும் உணவை உயிர்கள் பகுத்து உண்ணுகின்றன. ஓர் உயிரினம் மட்டும் உண்ணாமல் பல உயிரினங்களும் உண்ணுவதால் பல் உயிர்ப்பெருக்கம் மிக அவசியம். விலங்குகள் பற்றியும் அவைகளின் வாழ்க்கை முறை, பண்பு நலன்கள் ஆகியவற்றை நன்கு அறிந்து இந்த அறிவியல் சிந்தனைகளை உவமையாகக் கையாண்டிருப்பது வியக்கத்தக்கதும் போற்றத்தக்கதும் ஆகும்.


முனைவர் சே.குமரப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் உயிரியல்”

அதிகம் படித்தது