மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்

முனைவர் மு.பழனியப்பன்

Apr 22, 2017

05_D_Jayakanthan_vg

எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியாத உயரங்களை, தனித்தன்மைகளை, புதுமைகளை  வல்லமைகளை அவர் செய்தார் அல்லது அவரின் எழுத்துகள் செய்தன.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சி மணிமேகலைக் காப்பியம். சிலப்பதிகாரக் கதையில் கோவலன், கண்ணகி ஆகியோர் வாழ்நாளின் இறுதியைத் தொட்டுவிடுகின்றனர். முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான மாதவி மட்டும் என்ன ஆனாள் என்பது தெரியாமல் சிலப்பதிகாரம் முற்றுப் பெற்றுவிடுகிறது. கோவலன், கண்ணகி இறப்பிற்குப் பின்னான மாதவியின் வாழ்க்கையை விரிக்க முயன்று மணிமேகலையின் கதையை வளர்க்கிறது மணிமேகலைக் காப்பியம். ஒரு பாத்திரம் அழிந்து கரைந்து போகும்வரை படைப்பாளனால் அப்பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதே நிலையை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். கங்கையின் நிறைவு வரை அப்பாத்திரத்தை வளர்த்தெடுத்தார். அக்னிப் பிரவேசம் என்ற சிறுகதையில் பெயரற்றவளாகப் பிறந்த இப்பாத்திரம், சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் பெயர் பெற்று குடும்பம் பெறாமல் அலைப்புறுகிறது. கங்கா எங்கே போகிறாள் நாவலில் குடும்பத்தைப் பெற்று கங்கை என்னும் புண்ணிய நதிக்குள் இனிய மோனத்தில் சாந்தி பெறுகின்றது.

ஆனந்தவிகடனில் அக்னிப் பிரவேசம் சிறுகதை வெளிவந்தது. தினமணிக் கதிரில் அது சில நேரங்களில் சில மனிதர்கள் கதையாக வளர்ந்தது. அதனைத் தொடர்ந்து குமுதத்தில் கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலாக நிறைந்தது. ஒரு எழுத்தாளன் ஏதோ ஒரு பத்திரிக்கைக்கு மட்டும் தாலி கட்டிக்கொள்கிறவன் இல்லை என்பதையும், ஏதோ ஒரு வட்ட வாசகர்களுக்கு மட்டுமே உரியவன் என்பதையும் தகர்த்தெறிந்த எழுத்து விடுதலை பெற்றவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஒவ்வொரு பத்திரிக்கையில் ஒவ்வொன்றையும் எழுதினாலும் வாசகர்கள் அந்த அந்தப் பத்திரிக்கையில் எழுத்தாளர் ஜெயகாந்தனைத் தொடர்ந்தார்களே. இந்த எழுத்துச் சக்திக்கு இணையாகத் தமிழ் மொழியில் தற்கால படைப்பாளர் எவரும் இல்லை என்பதை எண்ணிப்பார்க்கின்றபோது எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தாளுமை தெரியவருகிறது.

‘அக்னிப் பிரவேசம்’  என்ற சிறுகதையில் பெயர்கூட அவசியமில்லாத ஒரு அவளாய்த் தேனர்றி கங்கையில் சங்கமிக்கிறவரை ஒரு முழுவாழ்வு பெற்ற பூரணத்துவம் பெற்ற ஒரு பாத்திரம் – ஒரு விசேசமான, விபரீதமான யுகத்தில் தோன்றிய இந்தியப் பெண்களின் பிரதிநிதி, இவளை ஒரு விரக்தியுற்ற, வாழ்வின் உறுத்தல்களை மறக்க முயல்கிற மனோவியாதிக்காரியாகத்தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில் விட்டிருந்தேன். அது அவளுடைய முடிவாகிவிடுவதில் வாசகர்களுக்கோ எனக்கோ துளிகூட சம்மதமில்லாமலிருந்தது போலும்…..

யோசித்துப் பார்த்தால் அதுவே ஒரு முடிவாகிவிடக் கூடாது- ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ வாழ்க்கையில் விரக்தியும் சோகமும் முடிவாகிவிட்டாலுங்கூட, அப்படியொரு விரக்தியில் ஒருவரின் வாழ்க்கை முடிவு பெற்று விடுவதை மனிதமனம்  கொண்டோர் விரும்ப முடியாதுதான் என்பதை நானும் உணர்ந்தேன். கங்கா கதையில் மட்டுமில்லாது கதாசிரியனுக்கும் ஒரு பிரச்சனையாகிப்போனாள்.

தினமணிக்கதிரில் தொடர்கதையாக சி.நே.சி மனிதர்கள் நாவலை எழுதி முடிக்கும்போது, காலத்தின் அலைகளால் எற்றுண்ட மோதி மூழ்கிய போக்கில் மிதந்த எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆன்மாவின் கதை இது என்று இறுதியாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்த முத்தாய்ப்புக்கு வரவேண்டுமானால் இன்னும் சொல்லப்பட வேண்டியது இவள் வாழ்க்கையில் நிறைய இருக்கவெண்டும் என்று எனக்கே தோன்றியது. அவ்வாறு நிறைய நிறைய இவளைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு மிகுந்தது (கங்கை எங்கே போகிறாள் – முன்னுரை) என்ற பகுதியைப் படிக்கும்போது தான் படைத்த பாத்திரத்தை ஒரு நல்ல முடிவை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம், அதுவரை அதனை வளர்த்தெடுக்கவேண்டிய தாய்மைப் பொறுப்பு ஒரு எழுத்தாளரிடம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

Siragu jeyakanthan2

மேலும் தன் படைப்பின் முன்னுரைகளால் தன் படைப்புகளைக் காரண காரிய மிக்கப் படைப்புகளாக் காணவைக்கும் அரிய விமர்சனப் பார்வை ஒரு எழுத்தாளரிடம் இருந்தது என்பதற்கு என்றைக்கும் அடையாளம் எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே. அவரின் முன்னுரைகளே தனிப் படைப்புகளாக விளங்குகின்றன.

கங்காவை புண்ணிய நதியாம் கங்கைக்குள் அடைந்துப் புனிதப்படுத்திக்கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன்  இப்பாத்திரத்தின் இணையாக சித்திரிக்கப்பட்ட மிஸ்டர் பிரபு என்ன ஆனார். அவரின் கதையும் இந்த மூன்று படைப்புகளிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா. அப்பாத்திரமும் ஒரு நிறைவை எட்டியிருக்க வேண்டுமல்லவா? இதுபோன்றே கங்காவையும், பிரபுவையும் இணைக்கோடுகளாக பல சந்தர்ப்பங்களில் ஆக்கிய எழுத்தாளர் ஆர்.கே.விஸ்வநாத் என்ற பாத்திரமும் ஒரு நிறைவை எட்டியிருக்க வேண்டுமல்லவா? இவ்விரு கேள்விகளில் இரண்டாம் கேள்விக்கு முன்னதாக பதில் சொல்லிவிட முடியும். ஆர்.கே. விஸ்வநாத் என்ற கற்பனை சார்ந்து படைக்கப்பெற்ற எழுத்தாளரும், ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரும் வேறு வேறானவர்கள் அல்லர். அவர் என்று பிறந்தாரோ அன்றே இவரும் பிறந்தார். அவர் என்று நிறைந்தாரோ அன்று இவரும் நிறைந்தார். இப்பதிலை உணர்வுப் பூர்வமாகவும் படித்துக் கொள்ளலாம், வெறும் சொற்களாகவும் படித்துக்கொள்ளலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் பழகியவர்களுக்கு இவ்விரு பாத்திரங்களையும் வேறு பிரித்து அறிய முடியாது. வேதனை சொல்லி முடியாது. படித்துக்கொண்டிருக்கும்போதே அவரின் கரங்கள் மீசையை வருடிவிட்டுக்கொண்டு இருப்பதை உணரமுடியும். நமக்கு முன்னால் ஒரு எழுத்தாளர் சிம்மாசனத்தில் அமர்த்திருக்கிறார் என்ற கௌரவத்தை நாம் பெற முடியும்.

மிஸ்டர் பிரபு என்ன ஆனார், அவர் பைப்பைப் புகைத்துக்கொண்டு, கங்கைக் கரையில் நின்று கொண்டிருக்கிறார் என்று மூன்று படைப்புகளையும் படைத்துக்கொண்டிருக்கிறார் என்று கதை சொல்லிவிடுவார்கள். இன்னமுமா கால் கடுக்க கங்கைக் கரையில் மிஸ்டர் பிரபு நின்று கொண்டிருக்கிறார். எத்தனை காலம் நின்று கொண்டிருக்க முடியும். கங்காவின் கதை விரித்து விரித்து எழுதி அதனை நிறைவுக்குக் கொண்டுவர பாடுபட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் மிஸ்டர் பிரபுவை ஏன் அம்போ என கங்கைக் கரையில் நிறுத்தியிருக்கிறார்.

பிரபுவை வைத்து அவர் மற்றொரு படைப்பினை எழுதத் திட்டமிட்டிருக்கவேண்டும் அல்லது பிரபுவின் வாழ்வினை நிறைவிக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது என்பதை கங்கை எங்கே போகிறாள் நாவலில் காணமுடிகிறது. காலம் வென்றிருந்தால் இன்னொரு இதழ் இதனைத் தூண்டியிருந்தால் மற்றொரு இணையற்ற படைப்பு கிடைத்திருக்க முடியும். கங்கை எங்கே போகிறாள் நாவலில் லட்சாதிபதிகள் என்று ஒரு கதை இடம்பெற்றிருக்கும். கங்காவின் வாழ்வை  அக்னிப்பிரவேசம் என்ற ஆனந்தவிகடன் சிறுகதை எப்படித் தொடங்கி வைத்ததோ அதே போல லட்சாதிபதிகள் கதை மிஸ்டர் பிரபுவின் வாழ்வை எழுதத்தொடங்கிய ஊற்றுக்கண். இந்தக்கதையும் ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வருவதாக ஜெயகாந்தன் புனைகிறார்.

இந்த லட்சாதிபதிகள் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது, ‘எனக்குத் தெரிந்த லட்சாதிபதியின் கதை இது’.  இதனைத்தொடர்ந்து கங்கை எங்கே போகிறாள் நாவலில் நூற்றைம்பது பக்கங்கள் மிஸ்டர் பிரபுவின் வாழ்க்கையாக விரிந்திருக்கிறது என்பதை இந்நாவலைப் படித்தவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்புண்டு. இறக்கும் எண்ணத்துடன் செல்லும் மிஸ்டர் பிரபுவை எதிர்பாராமல் ஒரு குழந்தையின் பிறப்பு மாற்றிவிடுகிறது. ஆதரவற்ற அக்குழந்தையைத் தன் குழந்தையாக வளர்ந்தெடுக்கிறார் அந்த வளர்ப்புத் தந்தை. தனக்கான ஒரு ஒட்டுறவை ஏற்படுத்திக்கொள்கிறார் மிஸ்டர் பிரபு. மிஸ்டர் பிரபு எப்பவும் அந்நியப்பட்டவர். இந்த வாழ்வில் இருந்தும் அந்நியப்பட்டு, கங்காவுடன் காசிக்கு தேசாந்திரம் கிளம்புகிறார். இதோ கங்காவின் கரைவைக் கரையில் நின்று கொண்டு பார்த்த வண்ணம் நிற்கிறார். கால் வலிக்கிறது மிஸ்டர் பிரபுவுக்கு. எத்தனை மணிநேரம் மிஸ்டர் பிரபுவால் நிற்கமுடியும். பிரபுவுக்காக அவரின் நிறைவுக்காக மீண்டும் எப்போது உங்களால் எழுதமுடியும் ஜே.கே.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்”

அதிகம் படித்தது