மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு

முனைவர் மு.பழனியப்பன்

Mar 14, 2020

siragu pakthi ilakkiyam1

பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக  உயிர்க்கான நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக் கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச் சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.

கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர் பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன் மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல் ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப் பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும். எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.

தமிழகத்தில் தோன்றிய வேதாந்த நூல்களுள் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்பதாகும். திருவேங்கடநாதர் என்ற தொண்டை நாட்டு மன்னர் எழுதிய நூல் இதுவாகும். தன் மகளுக்குக் குழந்தை பிறக்கவேண்டி இத்தாலாட்டைப் பாடித் தந்ததாகவும். இத்தாலட்டைப் பாடி இவரின் மகள் குழந்தை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நூலும் கர்ம பலன், அதனை அனுபவிக்கும் தன்மை, அதனின்று மீளும் தன்மை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இது நூற்றி மூன்று கண்ணிகளை உடையது. மொத்தம் இருநூற்று ஆறு அடிகளைக் கொண்டது. தமிழ்க்கவிதை வடிவில் எழுதப்பெற்றுள்ள இந்நூல் பகவத்கீதையின் கருத்துகளை எடுத்துரைப்பதாக உள்ளது. அர்ச்சுணன் எழுப்பும் வினாக்களுக்கு விடை பகரும் நிலையில் கிருஷ்ணர் சொன்ன பதில்களாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.

இவ்விரு நூல்களில் காணப்படும் கருத்துகளை ஒப்பாய்ந்து உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கீதையே அடிநாதம்

பூந்தானம் எழுதிய ஞானப்பானாவிற்கும், திருவேங்கடநாதர் எழுதிய கீதாச்சாரத்தாலாட்டிற்கும் அடிப்படையாக அமைவது பகவத் கீதையேயாகும். பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

‘‘திருத்தேரில் சாரதியாய்ச் சேர்ந்து இருந்தும் கீதையினால்

அருச்சுனற்கு மெய்ஞ்ஞானம் அனைத்தும் உரை செய்தவரோ

செஞ்சமரில் பந்துசனம் சேதம்வரும் என்று இரங்கி

அஞ்சினவன் பயம் தீர்த்தே அமர்செய்யச் சொன்னவரோ’’

(கீதாச்சாரத் தாலாட்டு- 2,3)

என்று திருவேங்கடநாதர் பாடுகிறார். இருவரும் கீதையின் கருத்துகளை உள்வாங்கித் தன் நூல்களைப் படைத்துள்ளனர் என்பது இதன்வழி தெரியவருகிறது.

இறைவன் திருநாமம்

இறைவன் திருநாமமே முக்தி தரும்  என்பதை இரு கவிஞர்களும் காட்டியுள்ளனர்.

பூந்தானம் பல இடங்களில் இறை நாமங்களைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்.

‘‘குருநாதன் துண செய்க சந்ததததம்

 திருநாமங்கள் நாவின்மேல் எப்போதும்

 பிரியாதே இருக்கணும் நம்முடே

நரஜன்மம் சப்கால மாக்கிடுவன்” (ஞானப்பானா- 1)

என்றும்

‘‘கிருஷ்ணா, கிருஷ்ணா, முகுந்தா, ஜனார்த்தனா

கிருஷ்ணா, கோவிந்தா, ராமா என்னின்ஜினெ

திருநாம சங்கீர்த்தனம் எண்ணியே”  (ஞானப்பானா-28)

என்றும்

இறைவன் நாமத்தை எண்ணிக்கொண்டே இருக்கிறார் பூந்தானம். குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை வணங்குவது, பகவத் விஷயங்களைச் சொற்பொழிவாற்றுவது என்று தன் வாழ்வை இறைமயமாக ஆக்கிக் கொண்டவர் பூந்தானம்.

இறைவனைக் குருவாகக் காண்கிறார் பூந்தானம். திருவேங்கடநாதரும் அதே நிலையைப் பாடுகிறார்.

‘‘சீர் ஆரும் பரமார்த்த தெரிசனத்தை அருள் செய்யப்

பேர்ஆரும் தேசிகனாய்ப்  பெருமாளே வந்தவரோ” (கீதாச்சாரத் தாலட்டு- 1)

இறைவன் தேசிகனாய் அதாவது ஆசிரியனாய் வந்து அருச்சுணருக்குப் பரமார்த்த தரிசனத்தைத் தந்து அருளினார்  என்பதை மேற்காணும் பாடலடிகள் காட்டுகின்றன.

எந்நேரமும் குருநாதன் துணை அருள் செய்யட்டும் என்னும் பூந்தானத்தின் வாக்கும், இறைவனே குருவாக வந்து காட்சி தருவான் என்ற திருவேங்கடநாதர் கூற்றும் இவ்வகையில் ஒன்றிணைகின்றன.

ஆசை மனம்

மனதில் ஏராளமாக ஆசைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவே நிகழ்காலத்தில் நிறைவேறுகின்றன. பல ஆசைகள் முடிவு பெறாமலே, அடையப் பெறாமலே தொக்கி நிற்கின்றன.

ஆசையின் அளவினைப் பற்றி ஞானப்பானா பின்வருமாறு பாடுகிறது.

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

இதனைத் திருவேங்கடநாதர், ஆசை என்னும் களங்கம் உள்ளத்தை அழுக்காக்குகிறது என்கிறார்.

‘‘சுத்தபடிகம் போல் சொரூபமாய்த் தான் இருக்க

மெத்தவும் ஆசாமலினம் மேவியது என் சொல்லும் என”

(கீதாச்சாரத்தாலாட்டு- 33)

கலங்கமில்லாத பளிங்கு போல் உள்ள மனத்தை ஆசை என்னும் அழுக்கு பற்றுவது ஏன் என்று அருச்சுணன் கிருஷ்ணரிடம் வினவுகிறான்.

அதற்குக் கிருஷ்ணர்  பின்வருமாறு பதிலுரைக்கிறார்.

‘‘ அநாதியாம் வாசனையால் அடைந்தது ஆசாமலினம்

  மனோபந்தம் இருக்கில் முத்தி வாராது என்று உரைத்தவாரே”

(கீதாச்சாரத்தாலாட்டு, – 34)

தொன்று தொட்டு வரும் பழைய கருமங்களின் வாசனையால் ஆசையாகிய களங்கத்தை ஆன்மா பெற்றது. மனதில் ஆசை, பாசம், இன்பம், துன்பம் இருக்குமானால் வீடுபேறு கிடைக்காது என்பது கிருஷ்ணரின் பதில்.

இவற்றின் வழியாக தமிழ் மொழி நூலான கீதாச்சாரத் தாலாட்டும், மலையான மொழிநூலான ‘ஞானப்பானா“ வும் ஆசையின் அளவையும் அதன் இழிவையும் காட்டியுள்ளன. இது ஒப்பிடத்தக்க ஒரு பகுதியாகும்.

உலக உயிர்கள் பிறப்பு

உலகில் பல பிறவிகள் பிறக்கின்றன. அவற்றின் அளவு, தன்மை சொல்ல இயலாத அளவு பெருமை வாய்ந்தது.

‘‘இந்திரஜாலம்போல இவ்வுலகை நம்மிடத்தில்

தந்திரமாத் தோற்றுவித்தோம் சத்தியம் அல என்றவாரோ”

(கீதாச்சாரத்தாலாட்டு, 60)

இந்திர ஜால வித்தை போல இவ்வுலகம் கிருஷ்ணரால் தோற்றுவிக்கப்பெற்றது. ஆனால் இது பொய்யானது. மாயை மிக்கது என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறது கீதாச்சாரத்தாலாட்டு.

உலக உயிர்கள் பற்றியும் பாரத கண்டம் பற்றியும் சிறப்புடன் பல இடங்களில் குறிக்கிறது ஞானப்பானா.

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

மேலும் பாரத கண்டத்தை அவர் நலமான பூமி என்று விவரிக்கிறார். இதனில் பிறப்பதால் சாதாரண மனிதன் புனித ஆன்மாவாக ஏற்றம் பெறுகிறான் என்கிறார்.

‘‘ ………மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

 கலிதடராம் கை வணங்கினு”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

கருமம் பற்றிய கருத்துகள்

இந்தப் பூமியில் பிறப்பும் இறப்பும் உயிர்கள் செய்த முன்பிறவி செயல்களால் ஏற்படுகின்றன என்பதை இரு நூல்களும் ஏற்கின்றன. திருவேங்கடநாதர்

‘‘இத்தரையில் பிறந்து இறப்பது எடுத்த உடற்கு அடுத்த பொறி

 நித்தியம் ஆகிய ஆன்மா நின் சொரூபம் என்றவாரோ”

(கீதாச்சாரத் தாலாட்டு- 8)

உயிர்கள் முன் பிறவிச் செயலின்படி இத்தரையில் பிறப்பது இறப்பது ஆகியன நடக்கின்றன என்கிறார் திருவேங்கடநாதர்.

கீழ் மேலன்ஜினி மண்டுன்ன ஜீவன்மார்

பூமியினாத்ரே நீடுன்னு கர்மங்கள் (ஞானப்பானா- 18)

என்று இரு பக்தியாளர்களும் முன்வினைக் கரமங்களே இப்பிறவிக்கு உயிர்களை ஆளாக்கியது என்கின்றனர்.

இருவரில் பூந்தானம் மனிதப் பிறவியே மகத்தான பிறவி. இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

 சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

குழந்தை மையம்

ஞானப்பானா, கீதாச்சாரத்தாலாட்டு இரண்டுமே குழந்தைகளை மையமிட்டவை. ஞானப்பானா பூந்தானம் அவர்களால் அவரின் மகன் இறந்த நேரத்தில் பாடப்பட்ட சோகராகம். பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்திய பூந்தானம்  குருவாயூரப்பனை வேண்டி மகன் பெறுகிறார். அம்மகனுக்கு முதல் சோறூட்டல் நிகழ்ச்சி மிகப் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பலரும் கூடுகின்றனர். குழந்தை ஓர் அறையின் மூலையில் படுத்துகிடக்கிறது. இக்குழந்தை படுத்துக் கிடப்பது தெரியாமல் யாரோ அதன் மீது பெருத்த துணிக்குவியலைப் போட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக அக்குழந்தை மூச்சு திணறி இறக்கிறது. இதனால் சோகம் அடைகிறார் பூந்தானம். அவர் குருவாயூரப்பனை வேண்டிய இப்பிறவி சுகமெல்லாம் பெருமானை அடைவதே என்று சரண் புகுகிறார். இதன் காரணமாக குருவாயுரப்பனே ‘நானே உன் குழந்தை எங்கே உன் மடி” என்று இறங்கி வந்ததாகச் செவிவழிக்கதை கேரளத்தில் விளங்கிவருகிறது. இவ்வகையில் ஞானப்பானா படைக்கப்பெற்றுள்ளது.

திருவேங்கடநாதருக்கு இரு பெண்பிள்ளைகள். ஒரு பெண்ணிற்குக் குழந்தை பிறக்க மற்றொருத்தி குழந்தை இன்றித் தவித்தாள். அவளிடம் ஒரு கண்ணன் உருவைத் தந்தார் திருவேங்கடநாதர். பின்பு அவளுக்காக கண்ணன் மீது ஒரு தாலாட்டைப் பாடினார். அவ்வாறு பாடப்பெற்ற பாடல் கீதாச்சாரத்தாலாட்டு. இத்தாலாட்டினைப் பாடி அப்பெண்மகள் மகன் பெற்றாள் என்பது செவிவழிக்கதை.

குழந்தை கிருஷ்ணனை மையப்படுத்தி குழந்தை கருதி பாடப்பட்ட பாடல்கள் இவையிரண்டும். இப்பொதுமை இந்நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.

‘‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

 உன்னிகள் மது வேணுமோ மக்களே

 மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

‘‘அருச்சுனன்தன் பொருட்டாக அனைவருக்கும் ஞானம்வரப்

பொருந்தியதே சிகவடிவாம் புண்ணியரே கண் வளரீர்

பரமமுனிவர் முன்னே பரிச்சித்தைத் தீண்டி அன்று

பிரமசரியம் செலுத்தும் பேர்ஒளியே கண்வளரீர்” (கீதாச்சாரத்தாலாட்டு 103)

என்று தாலட்டு வடிவில் கண்ணனைத் தூங்க வைக்கிறது கீதாச்சாரத் தாலாட்டு . இவ்வாறு கண்ணன் என்னும் குழந்தையை இரு பக்தி நூல்களும் நம்பி அவனடி தொழுகின்றன.

மெய்மை தேடிப் புகுவோம்

இரு  பக்தியாளர்களும் மாயை நீங்கி மெய்மை நோக்கிப் பயணிப்போம் என்ற கொள்கை உடையவர்களாக உள்ளனர்.

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

 நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்.

  இதே உவமையை கீதாச்சாரத்தாலாட்டிலும் காண முடிகிறது.

‘‘ பரம் ஏகம் ஆயும் அதில் பல சீவர் ஏது எனவே

 ஒரு கடலில் பல குமிழி உதிப்பதுபோல் என்றவாரோ”

(கீதாச்சாரத்தாலட்டு, 77)

கடலில் காற்றால் பல நீர்க்குமிழிகள் ஏற்படுவதுபோல் பல சீவன்கள் தோன்றுகின்றன என்று இருவரும் மனித வாழ்விற்கு உவமையாக நீர்க்குமிழியைக் கையாண்டுள்ளனர்.

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

 வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

 குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர் பூந்தானம். பூந்தானம் தன் காலத்தவரான நாராயண பட்டாத்திரியிடம் தன் ஞானப்பானாவைக் காட்டி அதனைத் திருத்தம் செய்து தரக் கூறுகிறார். ஆனால் அப்பண்டிதர் பூந்தானம் சரியான கல்வியறிவு அற்றவர் என்பது கருதி அவரைப் புறக்கணிக்கிறார். இது பூந்தானத்தின் மனதில் பெருத்த வருத்தத்தை அளிக்கிறது.

நாராயண பட்டாத்திரி இதே நேரத்தில் நாரயணீயம் என்ற நூலை எழுதி வந்தார். பூந்தானத்தைப் புறக்கணித்த அன்று அவர் நாராயணீயம் சொல்லச் சொல்ல ஒரு சிறுவன் அதனை எழுதிக் கொண்டிருந்தான். அன்றைய முதல் பாடல் முடிந்ததும் ஒரு தவறு உள்ளது என்று அச்சிறுவன் சுட்டிக்காட்டினான். இரண்டாம் பாடல் எழுதிய போது இரண்டு தவறுகள் உள்ளன என்றான் அச்சிறுவன். அவற்றைத் திருத்த முற்பட்டார் பண்டிதர். இவ்வாறு பத்துப் பாடல்கள்தான் அன்று எழுதப்பட்டது. அப்பாடல் ஒவ்வொன்றிலும் அப்பாடல் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் தவறுகள் எழுந்தன. இதன் புதிரை அறிந்து வந்த சிறுவன் குருவாயூரப்பன் என்று எண்ணி அவனிடம் மன்னிப்பு வேண்டி பூந்தானத்தின் பக்திச் சிறப்பை ஏற்றார் பண்டிதர்.

இதன் காரணமாகவே வித்வான் என்று நடிக்கிறார்கள் சிலர் என்று எழுதுகிறார் பூந்தானம்.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

 பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது. இவ்வாறு இவ்விரு நூல்களும் மெய்ஞ்ஞானம் தேடிப் பயணிக்கின்றன.

பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.

கீதாச்சாரத்தாலாட்டு கோவிலூர் வேதாந்த மடத்து நூல்களுள் ஒன்றாக இன்றும் பயிலப்பெற்று வருகிறது. வேதாந்த விளக்கங்களை அறிய முற்படும் தொடக்க நிலையாளர்களுக்கு இந்நூல் முதன்முதலாக சொல்லித்தரப்படும். பதினாறு வேதாந்த நூல்களை ஒருங்கிணைத்து வேதாந்த பாடங்கள் கோவிலூர் முத்துராமலிங்கரால் அமைக்கப்பெற்றன.

இவ்வகையில் இவ்விரு நூல்களும் தற்காலத்தில் பக்தி இலக்கியங்களாக இருமொழிகளிலும் அமைந்து விளங்கி வருகின்றன. இப்பிறவி கொண்டு முக்தி அடையும் வேதாந்தநிலையை இவ்விரு நூல்களும் காட்டுகின்றன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு”

அதிகம் படித்தது