மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாயன்பு (சிறுகதை)

ஸ்ரீதரன்

Aug 25, 2018

siragu thaayanbu1
“அம்மா என்னைப் பள்ளிக்கூடத்திலே கொண்டு விடுமா” சிணுங்கிய மோகனை, ”வாடா போகலாம்” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் பவித்ரா. அவன் ஒரு பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறான். அவன் அம்மாவின் கையை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தான் வைத்திருக்கும் புத்தகப் பையுடன் நடந்து சென்றான்.

அவள் அம்மா விமலா சென்னையில் இருந்தவரை பவித்ராவுக்கு மிகவும் செளகரியமாய் இருந்தது. அவள் அண்ணன் ராம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹீஸ்டன் நகரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பத்து வருடமாய் வேலை செய்கிறான். அமெரிக்க நாட்டு குடிமகன் ஆகி கீரின் கார்ட் வைத்திருக்கிறான். அம்மா போன வருடம் அமெரிக்கா போனபோது அம்மாவுக்கும் கிரின் கார்ட் கிடைத்துவிட்டது.. அம்மாவுக்கு கிரீன் கார்ட் வாங்குவதில் விருப்பம் இல்லை. அமெரிக்காவிலேயே அதிக நாட்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிவிடும் என்பதால் தயங்கினாள். ஆனால் ராம் பிடிவாதமாய், ”அம்மா, எனக்குச் சொந்த வீடு இங்கு இருக்கிறது. நீயும் எங்கூடத்தான் இருக்கவேண்டும்” என்று ஆசைப்பட்டதால் அம்மாவால் மறுக்க முடியவில்லை.

பவித்ராவுக்கு மூன்று வயதாய் இருக்கும்போதே அவளுடைய தந்தையை இழந்து விட்டாள். அவளுடைய உலகமே அம்மாதான். விமலா தன் மகள் மேல் மிகவும் பிரியமாய் இருப்பாள். ஓட்டலுக்குச் சாப்பிட போனால் கூட பவித்ராவுக்குப் பிடிக்கும் என்று பூரி, கிழங்கை பார்சல் செய்து வாங்கி வருவாள். உறவினர் கல்யாணத்துக்குச் சென்றால் இலையில் போட்ட இனிப்பைச் சாப்பிடாமல் கொண்டு வந்து பவித்ராவுக்குக் கொடுப்பாள். பவித்ராவும் அம்மாவின் மேல் ஆசையாய் இருப்பாள். பத்து மாதம் சுமந்து பெற்று, பாலூட்டி, சீராட்டி பாரத்துடன் வளர்த்தவள் இல்லையா? ஆனாலும் அண்ணன் ராம் வசிக்கும் அமெரிக்காவுக்கு அம்மா போனாலும் அலைபேசி மூலம் அடிக்கடி பேசுகிறாள்.

பவித்ராவின் கணவர் சுந்தர் கல்யாணம் ஆகும் போது சோப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதில் அளவுக்கதிகமான நஷ்டம் ஏற்பட்டு நொடித்துப் போய்விட்டார். இப்போது சொற்ப சம்பளத்தில் ஒரு மார்வாடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினார் என்றால் இரவு ஒன்பது மணிக்குத்தான் திரும்புவார். பவித்ரா தனியார் அலுவலகத்தில் வேலைக்குப் போகிறாள். இருவர் வருமானம் வருவதால் வாழ்க்கை தடையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் அந்தோ! அந்தோ! அந்தோதான்!
அவர் காலையில் மோகனைக் குளிப்பாட்டுவார். வேறெந்த விதத்திலும் அவரால் பவித்ராவுக்கு உதவி செய்ய முடியாது. மாமியாருக்கு மூட்டு வலி என்பதால் அவராலும் எதுவும் செய்ய முடியாது. தன்னந்தனியே இருந்துகொண்டு வாலு பையன் மோகனை வைத்துக்கொண்டு பவித்ரா படும் கஷ்டத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவள் அம்மா, பவித்ரா என்ன கஷ்டப்படறாளோ. நான் இருந்தாலாவது மோகனைப் பார்த்துக்கொள்வேன். பாவம் பவித்ரா என்று அடிக்கடி அங்கலாய்ப்பாள்.

பள்ளிக்கூடத்தில் நுழைந்த பவித்ரா, மோகனை அவன் வகுப்பில் விட்டுவிட்டு தலைமை ஆசிரியர் அறையை நோக்கிச் சென்றாள். அவளுக்கு மோகனின் படிப்பில் குறை இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. முன்பு எல்கேஜி, யூகேஜி படித்த பள்ளியில் அவன் ஆங்கிலம் நன்றாகப் பேசினான், இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் சரியாக கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது அவள் எண்ணம். தலைமை ஆசிரியர் முன் நின்று, ”நீங்க குழந்தைகளுக்குச் சொல்லித்தருவது பத்தாது. இன்னும் நல்லா சொல்லித்தரலாமே? என்ற பவித்ராவைப் பார்த்து, நாங்க உங்க பையனுக்காக வாங்கற தொகை முப்பத்து ஐந்து ஆயிரம் ரூபாய்தான். அதுக்கு இவ்வளவுதான் கற்றுக்கொடுக்க முடியும். உங்களுக்குப் பிடிக்கலேன்னா உங்க பையனை வேறே பள்ளிக்கூடத்திலே தாராளமாய் சேர்த்துடங்க. எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” என்று பொறிந்து தள்ளிய அவரை பவித்ரா கடுப்புடன் நோக்கினாள்.

”என் மனசில் பட்டதை வெளிப்படையாய் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க“ என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள். தெருவில் போகும்போது மோகனை இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட வேண்டுமென்று சிந்தித்துக்கொண்டே சென்றாள். அவள் மாமா பெண் கல்பனா எதிரே வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் பவித்ராவின் முகம் கதிரவனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது. கல்பனா அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறாள். கல்பனா என்ன ஆச்சரியம். நீ இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா?
நேற்று நானும் என் கணவரும் திருப்பதி போய் ஏழுமலையானைச் சேவித்துவிட்டு வந்தோம். நான் நடந்தே மலை ஏறினேன். இன்று எனக்கு முடியவில்லை. இன்று நான் விடுப்பு எடுத்து விட்டேன்.

நான் மோகனை பள்ளியில் விட்டுவிட்டு வந்தேன். அலுவலகம் போகவேண்டும். ஆமாம், உங்கள் பள்ளிக்கூடம் எப்படி? மோகனைச் சேர்ப்பதற்காகக் கேட்கிறேன். எங்கள் பள்ளியில் சர்வதேச பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல கல்வியைப் போதிக்கிறார்கள். பிற்காலத்தில் மோகன் அமெரிக்கா அல்லது லண்டனில் மேற்படிப்பு படிக்க வசதியாய் இருக்கும்.

பவித்ராவுக்கு மலைப்பாக இருந்தது.

அவள் மனதில் மோகன் வாலிபன் ஆகி விட்டது போலவும் அவன் இலண்டனில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்து படிப்பது போலவும் மனசில் கோலம் போட்டாள்.

”பள்ளியில் சேர கட்டணம் எவ்வளவு?”

”மோகன் என்ன வகுப்பு படிக்கிறான்?”

”அவன் இப்போது முதல் வகுப்பு படிக்கிறான்”.

அவன் இரண்டாம் வகுப்பில் சேர ஒரு இலட்ச ரூபாய் கட்டணம். வருடத்துக்கு. அதை ஆரம்பத்தில் சேரும்போதே கட்ட வேண்டும். நீ வேலை செய்கிறதினாலே பணம் ஒரு பொருட்டாக இருக்காது உனக்கு. நான் சொல்றது சரிதானே?“

கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்தாலும் தன் மாமா பெண்ணிடம் உண்மையைச் சொல்ல சங்கடமாய் இருந்தது அவளுக்கு.

”ஒரு இலட்சம்தானே பரவாயில்லை. குழந்தைகள் திறமைசாலியாய் ஆவார்களா? என்று அப்பாவியாய் கேட்டாள். குழந்தையின் திறமை மட்டுமல்ல, குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் திறமை கூட அதிகரிக்கும். பள்ளிக்கூடத்தில் கொடுக்கிற வீட்டு வேலை அப்படி. ஏப்ரல் மாதம் முதல் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். ஜீன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிவிடும்..”

”என் கணவரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கிறேன். அவர் என் விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்ல மாட்டார். நான் தீர்மானித்தால் சரி என்று சொல்லிவிடுவார். ஏப்ரல் மாதம் உன்னை வந்து பார்க்கிறேன். நன்றி கல்பனா” என்று விடை பெற்றாள்.

அந்த வாரம் சுந்தர் வந்தபோது அவனிடம் சர்வதேச பள்ளிக்கூடம் பற்றி விவாதித்தாள்.

இதோ பார் பவித்ரா, என்னுடைய வேலை நிரந்தமாய் இருக்குமா? இல்லை என்னை வேலையிலிருந்து என்னை எடுத்துவிடுவார்களா என்பது மர்மமாய் இருக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலையில் என்னால் மோகன் பள்ளிக்கூடம் மாறுகிறது பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஒரு இலட்சம் என்பது பெரிய தொகைதான். ஆனால் நீ ஆசைப்பட்டதால் உன் விருப்பம் போல் செய். நான் தடை சொல்ல விரும்பவில்லை.

”மாமியாரிடம் கேட்டதிற்கு, எனக்கு எதுவும் தெரியாது. உன் இஷ்டம் போல் செய்” என்றாள்.

தன் தாயாரிடம் அலைபேசியில் போன் செய்து பேசினாள்.

பவித்ரா, உன் மனசுக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய். என்றாள் விமலா.

கல்பனாவிடம் இன்னொரு முறை பேசி மோகன் சேருவது நல்ல பள்ளிக்கூடம்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள்.

தன் நெருங்கிய தோழியிடம் ஆலோசனை கேட்டாள். அம்மாவைக் கேட்டாய். கணவனைக் கேட்டாய்.. பத்து பேரை கேட்டார் ஆளுக்கு ஒண்ணு சொல்லுவாங்க. நீ எடுத்து முடிவைச் செயல்படுத்து.

மோகன் பெரிய ஆளாக வரவேண்டும். அதற்காக எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று எண்ணினாள். அவளிடம் பணமில்லை. முதலில் என்ன செய்வது? என்று முதலில் யோசித்தாள். தன் பையனுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டுமென்னும் உந்துததில் பவித்ரா கடன் வாங்கிப் பணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டாள். நண்பர்களும், சுற்றத்தாரும் அவளை வியப்போடும் மதிப்போடும் பார்த்தனர். அவள் முதுகுக்குப் பின்னால் அவளைச் சிலர் கேலி செய்தனர்.

ஒரு நல்ல நாளில் மோகனை புதிய பள்ளியில் சேர்த்து விட்டாள். ஜீன் மாதத்திலிருந்து அவன் புதிய பள்ளிக்குப் போக ஆரம்பித்தான்.

எந்த ஒரு செயலும் அதன் பலன் தெரிய சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகும். உடற்பயிற்சி செய்தாலோ அல்லது ஒரு மருந்தை உட்கொண்டாலோ அதன் பலன் சில மாதங்கள் கழித்துத்தான் தெரியும். அதுபோல் மோகனிடம் சில நல்ல மாற்றங்கள் தெரிந்தன. அவன் வாயில் ஆங்கிலம் தாண்டவமாடியது. ஆனால் தாய் மொழியான தமிழை அறவே மறந்து விட்டான். ஆனால் பெரியோரிடம் மரியாதை, தெய்வ பக்தி என்பது எள்ளவும் இல்லை. பழைய பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து என்று ஏதாவது சொல்லுவான். இப்போது சுத்தமாக ஒன்றுமே சொல்வதில்லை. அடம் பிடிக்கிறான். இருபத்தைந்து மாணவர்கள் இருக்கும் வகுப்பில் அவன் படிப்பில் கடைசியாய் இருக்கிறான் என்று வகுப்பு ஆசிரியர் சொன்னபோது அவள் மிகவும் வருந்தினாள். அவளால் வேலையும் பையனையும் சமாளிக்க முடியவில்லை. தான் எடுத்து முடிவு தவறானதோ என்று அவளுக்குப்பட்டது.

ஒரு முறை உறவினர் வீட்டு கல்யாணம் போனபோது அங்கு மோகன் யாருடனும் விளையாடாமல் தனியாக இருந்தான். கேட்டால் மற்ற பசங்கள் ஆங்கிலம் பேச மாட்டேங்கிறாங்க. நான் என்ன செய்யட்டும்மா” என்கிறான். அந்தக் கல்யாணமோ பரபரப்பு இல்லாமல் திட்டமிட்டு செய்த மாதிரி அலட்டிக் கொள்ளமல் நிதானமாக குறிப்பிட்ட நேரத்தில் மணப்பெண்ணுக்குத் மாப்பிள்ளை தாலி கட்டினார். பவித்ராவும் தானும் அதுபோல் திட்டமிட்டு மோகனைப் படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

ஒருமுறை கடைத்தெருவுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அவள் தோழி மிருதுளாவைப் பார்த்தாள். இருவரும் ஒரே கல்லூரியில் பட்டதாரி ஆனவர்கள். இருவரும் பேரழகிகள். படிப்பில் மகா கெட்டிக்காரிகள். ஒருவரை ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று போட்டிப் போட்டவர்கள். இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் ஆகி ஒரே மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ரொம்ப நாள் கழித்து பவித்ரா அவளைப் பார்க்கிறாள். மோகனைப் போல மிர்துளாவின் பையன் கோதண்டராமன் இரண்டாவது வகுப்பு படிக்கிறான். அவனைக் கோண்டு என்று செல்லமாகக் கூப்பிடுவாள் மிர்துளா. கருநீல வண்ண சேலையில் கொடிபோல் மிக்க எழிலோடு காணப்பட்டாள்.

சிக்கென்று உடம்பை வைத்துக் கொண்டிருந்த மிர்துளாவைப் பார்க்க பவித்ராவுக்குப் பொறாமையாய் இருந்தது.

”எப்படி இருக்கிறாய் மிர்துளா?” என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது? சரி, பையன் எப்படிப் படிக்கிறான்?”.

”கோண்டு நல்லா படிக்கிறான். வீட்டுக்கு வாயேன் பவித்ரா. காபி குடிச்சுட்டு போகலாம். வீடு பக்கத்தில்தான் இருக்கிறது என்று அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள் மிருதுளா.

அவள் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்து அசந்துவிட்டாள் பவித்ரா. கோண்டு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டுப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மோகனாக இருந்ததால் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தாள்.

அதற்குள் மிர்துளா காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

காபியை ரசித்துக் குடித்த பவித்ரா, “இவ்வளவு நல்லா சொல்றானே. மோகனை முன்பு சேர்த்திருந்த பள்ளிக்கூடத்திலியா படிக்கிறான்” என்று கேட்டாள் பவித்ரா ஆச்சர்யத்துடன்.

”ஆமாம். அவன் அங்கேதான் படிக்கிறான். மோகன் எப்படிப் படிக்கிறான்”.

”நன்றாகப் படிக்கிறான். ஆனால் அவனுக்கு தமிழ் மொழி சரியாக தெரியவில்லை”.

”நீ தப்பு பண்ணிவிட்டாய் பவித்ரா. அவனை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றி இருக்கக் கூடாது. உனக்கு ஒண்ணு தெரியுமா? குதிரையைத் தண்ணீர் தொட்டி அருகே தான் நாம் அழைத்துச் செல்ல முடியும். தண்ணீரைக் குடிக்க வைக்க முடியாது. அதுபோல் நீ எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாலும் பையன் ஈடுபாட்டுடன் படித்தால்தான் உண்டு. நாம்தான் குழந்தைகளுக்கு நல்லறிவை ஊட்ட வேண்டும்” என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள். வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் அவள் வென்று விட்ட மாதிரி தோன்றியது பவித்ராவுக்கு.

அவள் எதுவும் பதில் சொல்லாமல் புன்சிரிப்பை உதிர்த்தாள். மோகன் ஒன்றுமே தெரியாமல் இருக்கிறானே என்று வருத்தப்பட்டாள். மோகன் விசயத்தில் தான் அவசரப்பட்டு விட்டோமோ. அவனை அந்தப் பள்ளிக்கூடத்திலே படிக்க வைத்து இருக்காலோமோ” என்று அவளுக்குத் தோன்றியது.

மிர்துளாவைச் சந்தித்தது பவித்ராவின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பொறாமை மனிதர்களின் பிறவி குணம். பவித்ரா அதற்கு விதிவிலக்கல்ல. கோண்டுவின் நினைவு வந்தது. இரவு வெகுநேரம் தூக்கமில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். கணவரிடம் புலம்பினாள். ”என்ன செய்யலாம்?” என்று சிந்தித்தாள். காலையில் எழுந்திருக்கும்போது அவள் தெளிவுடன் இருந்தாள், அதிகாலையில் பவித்ரா உடற்பயிற்சி செய்வதைக் கண்ட அவள் கணவன் ஆச்சரியப்பட்டான்..

என்ன விசயம் எனக்கு இன்று அதிர்ச்சியைக் கொடுக்கிறாய்,

”என் உடல் குண்டாகிவிட்டது. நேற்று மிர்துளாவைப் பார்த்தேன். என் உடம்பை இளைக்கத்தான் இந்த உடற்பயிற்சி” தான் எடுத்து தீர்மானத்தை தன் கணவனிடம் சொன்னாள். அவன் திகைத்தான்”.

“நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவு எடுத்தாயா?” என்று கேட்டான். ”ஆமாம் இரவு முழுவதும் யோசித்தேன். இதைவிட எனக்குச் சிறந்த வழி தோன்றவில்லை”.

“அப்ப சரி. உன்னிஷ்டம்“ என்று ஒப்புதலைத் தந்தான்.

அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இரவு ஏழு மணிக்கு அம்மாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

அம்மாவிடம் தான் எடுத்து முடிவைத் தெரிவித்தாள். ”ஏண்டி உனக்கு என்ன யாரும் இல்லையா? நீ ஏன் அந்த முடிவுக்கு வந்தே?” என்றாள் விமலா.

அவனைக் கவனிச்சுகிறது என் கடமையில்லையா? அதனாலேதான் நான் வேலையை விட்டு விடும் முடிவு எடுத்தேன்.
”நான் இருக்கும்போது நீ எதுக்குக் கவலைப்படணும். வேலையை விடாதே. நான் வந்து உன்னுடன் இருக்கிறேன். நீ கஷ்டப்படுகிறதைப் பார்த்து என்னால் சும்மா இருக்க முடியாது”.

”உன்னால் ராமை விட்டு எப்படி வர முடியும். கிரீன் கார்டு வேறு வைத்திருக்கிறாய். உன்னால் இந்தியாவில் ரொம்ப நாள் தங்க முடியாதே”.

”நீ தான் எனக்கு முக்கியம். ராம் எப்படியாவது சமாளித்துக் கொள்வான். வருடம் ஒரு முறை இந்தியா வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவான். உன் அண்ணியும் வீட்டிலே தான் இருக்கா. அதனால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது பிரச்சனை அல்ல. நீ தான் பாவம்!! வேலைக்கும் போய்க்கொண்டு குழந்தையும் பார்த்துக் கொண்டு கஷ்டப்படுகிறாய். கிரீன் கார்டு எனக்கு ஒரு பொருட்டல்ல. அதை ராமிடம் கொடுத்து ரத்து செய்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரைக்கும் பொறுத்துக்கொள் கண்ணு” என்றாள் தாயன்புடன்.

அதைக்கேட்ட பவித்ராவின் மனதில் ஆனந்த தேனை சொரிந்தது போல் இருந்தது. கண்கள் பனித்தன.

அ..ம்..மா, அ..ம்..மா என்றாள் . அவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாயன்பு (சிறுகதை)”

அதிகம் படித்தது