மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாய் போற்றிய உடன்போக்கு

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 4, 2017

Siragu aganaanootru paadal1

அண்மைக்காலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்ற தமிழ்ச்சமூகம் படிக்க வேண்டியப் பாடல் அகநானூற்றுப் பாடல் 203, கபிலர் எழுதிய இந்தப் பாடல் பாலைத்திணையைச் சார்ந்தது. பாலைத்திணைப் பாடல்களின் சூழ்நிலைகள் இரண்டு. ஒன்று பணம் ஈட்டச் செல்லும் தலைவனின் பிரிவை தாங்கொணாது தலைவி வருந்தி இருத்தலைக் குறிக்கும் பாடல்கள், இரண்டாவது உடன்போக்கு (தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு வெளியேறுதல்) பற்றியச் செய்திகளைக் கூறும் பாடல்கள்.
இந்தப் பாடல் உடன்போக்கைப் பற்றியது. மகட்போகிய தாய் அல்லது செவிலித்தாய் கூறியது.
பாடல் :
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5
மகிழ்ச்சி அடைந்தாலும், ஆத்திரம் கொள்வாள் என்றாலும் அதனை தாய் அவளே அறிந்து தெரிந்துக்கொள்ளட்டும் என்று விடாது, தீ மொழிகளைக் கொண்டு புறம் கூறும் பெண்கள், உன் மகள் களவொழுக்கத்தில் உள்ளாள் எனப் பல நாட்கள் என்னிடம் கூறியபோதும் நான் அதனைப்பற்றி என் மக்களிடம் கேட்கவில்லை.

நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய, தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுறப் 10
நான் அவள் களவொழுக்கத்தைப்பற்றி கேட்டால் என் மகள் நாணுவாளோ என எண்ணி, மறைத்துவிட்டேன். தன் களவு வாழ்க்கைப்பற்றி அன்னை அறிந்து கொண்டாள், தன் காதல் வாழ்வு எளிதில் கிட்டாது என்று எண்ணி, கழல் அணிந்த, நீண்ட வேலினைக் கையில் கொண்ட இளைஞனோடு இந்த மனையில்(வீட்டில்) தனித்து இருக்குமாறு விட்டு என் மகள் சென்று விட்டாள்.

பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக,
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர் 15
பல மலைகளைக் கொண்ட பாலை நிலத்தின் வழியே சென்ற அவளுக்கு நான் அவள் காதலை எதிர்க்கும் மனநிலை கொண்டவள் அல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு விலங்குகள் நிறைந்து இருக்கும் சிறிய அடி கொண்டப்பாதையில், பொலிவற்ற மலைகளைக் கொண்ட சிறிய ஊருக்கு அவர்களுக்கு முன்னதாக சென்று,
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

அவர்களை விருந்தினர்களாக ஏற்று விருந்து படைத்து, தனியான இடத்தில் அவர்களை இருத்தி அசைந்தாடும் நொச்சி மரங்கள் கொண்ட இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேன் எனக் கூறுகின்றாள். மன்னே என்பது ஒரு அசைச்சொல்.
என்னே வியப்பு? தாய் தன் மகளுக்கு முன் அவள் அடையப்போகும் ஊரினை சென்றடைந்து அவர்களுக்கு உணவு தயாரித்து, தனி இடம் தந்து அவர்களை இருக்க வைப்பேன், என்று கூறும் தன்மை உடன்போக்கில் மகள் சென்று விட்டாலும் அவர்கள் காதலை நான் ஏற்று அவர்களை உபசரிப்பேன் என்பது தமிழர்களின் தனிப்பண்பாக இருந்துள்ளது.
இன்றோ மகள் தங்கள் விருப்பத்தை எதிர்த்து வேறு ஒரு ஆடவனை மணந்துக்கொண்டால் என்பதற்காக நடு சாலையில் மணமக்களை வெட்டும் கீழான செயல்களை செய்யத்துணிகின்றனர் என்பதை எண்ணி வெட்கிதலைக்குனிய வேண்டும். பண்பாடு போற்றுதல் என்பது இத்தகு அறிவான பக்குவப்பட்ட மனநிலை கொண்ட சமூகமாக மாறுவதில் தான் உள்ளது என்பதை தமிழ்ச்சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாய் போற்றிய உடன்போக்கு”

அதிகம் படித்தது