மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பகல்நேரத்து ஆந்தை(சிறுகதை)

மா.பிரபாகரன்

Apr 1, 2017

Siragu pagal neraththu aandhai2

பொதுவாக இரவாடிப் பறவைகளை மனிதர்கள் அதிகம் கண்டுகொள்வதில்லை. அவைகளை விரும்புவதுமில்லை. பகல்நேரத்து பறவைகளைத்தான் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஏனென்றால் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குவது அவர்களின் வழக்கம். கிளி, புறா, மைனா போன்ற பறவைகள் பகலாடிகள் அதனால் தங்கள் கண்ணில்படும் அவைகளை அவர்கள் பைங்கிளி, மாடப்புறா, அழகுமைனா என்றெல்லாம் கொஞ்சுகிறார்கள். அந்தப்பறவைகளைக் கொஞ்சுவது போன்று, மனிதர்கள் தன்னையும் கொஞ்சவேண்டும் என ஆந்தை ஒன்று ஏங்கியது. அதற்கு அது மனிதர்களின் கண்ணில்படும் விதத்தில் பகலாடிப் பறவையாக நடமாட வேண்டும். அதுவுமல்லாமல் உலகமே பகலில் விழித்திருந்து இரவில்தான் உறங்குகிறது. அப்படி இருக்கும்போது நாம்மட்டும் ஏன் இரவில் அலைந்து திரியவேண்டும் என்றும் அது நினைத்தது. அது தனது விருப்பத்தை கடவுளிடம் வரமாகக் கேட்டது. கடவுளும் வரம் தந்தார். அப்போது முதல் அது பகலாடிப் பறவையாக மாறிப்போனது.

அந்தமரத்திலிருந்த அத்தனைப் பறவைகளும் வைகறைப்பொழுதில் பூபாளம் பாட ஆரம்பித்துவிட்டன. பின்னர் அவைகள் ஒவ்வொன்றாய் இரைதேடி செல்லஆரம்பித்தன. அந்தமரத்தில் அடைந்துகிடந்த ஆந்தையும் அதிகாலைப்பொழுதில் விழித்துக்கொண்டது. அது தன்சிறகுகளை விரித்து மிக்கமகிழ்ச்சியுடன் கிழக்குநோக்கி பறக்க ஆரம்பித்தது. காலைக்கதிரவனின் பொன்நிறக்கதிர்கள், மெலிதாய் பனித்திரை போர்த்திய சமவெளிப்பகுதிகள், அகன்ற நீர்நிலைகள், சுறுசுறுப்பாய் தங்கள் அலுவலை ஆரம்பிக்கும் மனிதத்தலைகள் என்று அனைத்தும் காண கண்கொள்ளாத காட்சியாய் இருந்தது. இத்தனை நாளும் இந்த அற்புதங்களைத் தவற விட்டுவிட்டோமே என அது எண்ணிக்கொண்டது. காலைநேரத்து இயற்கையை இரசித்தபடி அது நீண்டநேரம் சுற்றியலைந்தது. அப்புறம் அது சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு திடலில் சென்று அமர்ந்தது.

Siragu pagal neraththu aandhai1

சிறுவர்கள் பகல்நேரத்து ஆந்தையை பார்த்துவிட்டார்கள். அது தன் முட்டைக்கண்களை உருட்டியவிதம், கழுத்தைத் திருப்பியவிதம், அதன் உடலமைப்பு இவைகள் அந்தச்சிறுவர்களை ஆச்சரியப்படுத்தியது. சிறுவர்கள் தன்னைப்பார்த்து வியப்பதுகண்டு ஆந்தை பெருமிதம் கொண்டது. இதற்காகத்தானே அது பகலாடியாய் மாற ஆசைப்பட்டது. ஆனால் சிறுவர்களின் இந்த பிரமிப்பும் வியப்பும் சிறிதுநேரம்தான் நீடித்தது. திடீரென்று அதில் ஒருவன் குனிந்து கல்லை எடுத்து ஆந்தையை நோக்கி எறிந்தான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் ஆளுக்கொரு கல்லை எடுத்து ஆந்தையை நோக்கி வீசினார்கள். ஆந்தை அதிர்ச்சியடைந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்றெண்ணி அடிபடாமல் அங்கிருந்து எகிறிப்பறந்தது அது.

ஆந்தை இப்போது ஒரு குடியிருப்புப்பகுதியில் இருந்த வேப்பமரத்தின் அடர்ந்த கிளைகளில் போய் பதுங்கிக்கொண்டது. அதன் படபடப்பு அடங்க சிறிதுநேரம் ஆனது. அந்தச்சிறுவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? போகட்டும் அவர்கள் அறியாப்பிள்ளைகள் என்று எண்ணித் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டது. கொஞ்சம் ஆசுவாசப்பட்டதும் அது ‘கிறீச் கிறீச்’ என கத்தியது. வேப்பமரத்தை ஒட்டிய வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் ஒரு நீண்டகம்புடன் வெளியே வந்தார். “ராத்திரிதான் வந்து அலறி தூக்கத்தைக் கெடுக்குறீனா இப்ப பகல்லயே வந்துதொந்தரவு பண்றியா?”- என்றபடி அந்தக்கம்பினால் வேப்பமரக்கிளைகளை அடித்து ஆந்தையை விரட்டினார். எதற்கு வம்பு என்று ஆந்தை அங்கிருந்து பறந்துசென்று ஒரு உயரமான விளக்குக்கம்பத்தின் மீது பாதுகாப்பாக அமர்ந்துகொண்டது. சிறுவர்கள்தான் அறியாமையில் அப்படிச் செய்தார்கள் என்றால், அந்தப்பெரியவருக்கு என்னவந்தது? நான் அலறினால்தான் என்ன? இவர்கள் கண்டுபிடித்த இயந்திரங்களிலிருந்து வரும் ஓசையை விடவா எனது அலறல் சப்தம் கர்ணகொடூரமாக இருக்கிறது? ஆந்தைக்கு சே… என்றிருந்தது.

Siragu-pagal-neraththu-aandhai3

ஆந்தைக்கு இப்போது பசி எடுத்தது. அதற்குப்பிடித்த உணவான எலி தரையில் எங்கும் ஓடுகிறதா என தேடியது. எலிகள் எங்கும் கண்ணில் தென்படவில்லை. இது குடியிருப்புப்பகுதி விளைநிலங்களுக்குச் செல்வோம் என்றெண்ணி வயல்வெளிப்பக்கம் போனது. அங்கேசென்று நீண்டநேரம் காத்திருந்தும் எலிகள் கண்ணுக்குத் தென்படவில்லை. ஒன்றிரெண்டு தென்பட்டாலும் அவைகள் சட்டென்று வளைக்குள் ஓடி ஒளிந்துகொண்டன. எலிகள் இருவாடிகள்தான் இருந்தபோதிலும் அவைகள் பகற்பொழுதைவிட இரவில்தான் அதிகம் வெளியே நடமாடுகின்றன என்பதை ஆந்தை புரிந்துகொண்டது. அப்போது நண்டு ஒன்று வரப்பில் ஊர்ந்துசென்றதை அது கவனித்தது. பறந்துசென்று அதை லபக்கி உள்ளே தள்ளியது. ஒரே நேரத்தில் ஆறேழு எலிகளை முழுங்கும், அதற்கு அந்தச் சிறியநண்டு போதுமான உணவாக இல்லை. சரி இரவு வரட்டும் அப்போது எலிகளைப் பிடித்துக்கொள்ளலாம் என்று அது நினைத்தது.

மாலை மங்கத்தொடங்கியதும் ஆந்தையின் பார்வையும் மங்கத்தொடங்கியது. “அய்யோ! நான் இப்போது பகலாடிப் பறவையல்லவா? அதை மறந்துவிட்டேனே? மாலை மயங்கும்போது என் பார்வைத்திறனும் குறையத்தானே செய்யும்? இப்போது நான் உடனடியாக எனது இருப்பிடத்துக்குத் திரும்பியாக வேண்டும்!”- என்று எண்ணியபடி தட்டுத்தடுமாறி பறந்துவந்து தனது மரப்பொந்தை அடைந்தது. அன்று இரவுமுழுவதும் அது பட்டினியாக உறங்கப்போனது. தான் பகலாடியாக இருக்கவேண்டும் என்றால் தனது உணவுச்சங்கிலியில் இருக்கும் மற்ற உயிரினங்களும் பகலாடியாக இருக்க வேண்டும். அது சாத்தியமில்லை. கடவுள் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! மற்றவர்களைப் பற்றி பேசாதே!” – என்று சொல்லி விடுவார். ஆந்தை யோசித்தது.

பகலாடியாக அதன் முதல்நாள் அனுபவமே அதற்கு மோசமானதாக அமைந்துவிட்டது. அதன் மனத்தில் பல்வேறு சிந்தனைகள் ஓடின. தான் ஒரு பகலாடியாக ஆசைப்பட்டது சரியா என அது தன்னைத்தானே கேட்டுக்கொண்டது. இரவும் அழகுதான். அதுதரும் தனிமையும் ஏகாந்தம்தான். நடுநிசியில் அலறும் ஆந்தையின்குரல் அந்தப்பொழுதுக்கான தன்மையுடன் இணைந்த இயற்கையின் நளினம். மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக நாம் நம் பிரத்யேககுணங்களை இழந்துவிடக் கூடாது என்பதை ஆந்தை புரிந்துகொண்டது. மனிதர்களின் பாராட்டு தனக்கு வேண்டாம், அவர்கள் உற்பத்தி செய்யும் தானியங்களுக்குப் பெருத்த சேதாரத்தை உண்டுசெய்யும் எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆந்தையின்பங்கு முக்கியமானது, ஆந்தை விவசாயிகளின் நண்பன் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டால் போதும் என அது நினைத்தது. அது மீண்டும் இரவாடியாக மாற ஆசைப்பட்டது. அடுத்தகணம் அது இரவாடிப்பறவையாக மாறிப்போனது.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பகல்நேரத்து ஆந்தை(சிறுகதை)”

அதிகம் படித்தது