மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 5

முனைவர் மு.பழனியப்பன்

Nov 7, 2020

siragu kathiresa chettiyar1
இலக்கியத்திறன்

பண்டிதமணியார் தேர்ந்த தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சியும் பயில்வும் மிக்கவர். அவரின் வடமொழி அறிவும், தமிழ்மொழிச் சால்பும் இதற்கு முன்னரின் கம்பரிடம் இருந்திருக்கலாம். கம்பருக்குப் பின்னதாக கம்பு கொண்ட கம்பரான இவரிடமே அவ்வறிவு காணப்படுகின்றது. இவருக்குப் பின்னதாக இவ்விரு மொழி அறிவு வாய்த்த புலவர்கள் இல்லவே இல்லை என்னும் அளவிற்கு வெறுமையே சூழ்கிறது. வடமொழியைப் பகையாகப் பார்க்கும் அரசியல் பார்வை திணிக்கப்பட்டதால் இவ்விரு மொழிகளுக்குமான தொடர்பிழை மெல்ல நைந்து கொண்டே வருகின்றது. இதனை மீட்டெடுப்பார் கண்ணுக்கு தோன்றியவரை எவருமே இல்லை என்று உணருகையில் பண்டிதமணியாரின் புலமை தலைமேல் வைத்து வணங்கத்தக்க பெருமையாகும்.

பண்டிதமணியார் தன் இலக்கண, இலக்கியப் பயில்வுகளைத் தமிழ்ச் சமுதாயம் பயன் கொள்ளும் வண்ணம் பேச்சுரைகளாக, எழுத்துக்கோர்வைகளாக அவ்வப்போது வெளியிட்டுவந்தார். அவை நூற்றாண்டுகள் கடந்தும் தமிழ் மக்களால் விரும்பத்தக்கனவாக உள்ளன, தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவனவாக விளங்குகின்றன என்பது அவரை மேலும் மேலும் நினைவு படுத்துகின்றது.

பண்டிதமணியார் தேர்ந்த பேச்சாளர், அங்கதச்சுவையுடன் தன் பேச்சினை அமைத்துக் கொள்பவர். இதன் காரணமாக அனைவரும் பண்டிதமணியாரின் பேச்சினை விரும்பினர். அவரின் பேச்சு துவண்டு கிடந்த அனைவரையும் ஏணி மேல் உயர வைத்தது.

எழுத்துரைகள் என்பன மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியனவாகும். இவரின் எழுத்துரைகள் அழியாச் சொத்துக்களாக விளங்குகின்றன.

இவ்வகையில் பேச்சும் எழுத்தும் வல்ல பெருமகனாராகப் பண்டிதமணியார் விளங்கினார். தற்காலத்தில் பேச்சாளர்கள் எழுதுவதில்லை. எழுத்தாளர்கள் பேசுவதில்லை. பேச்சாளர்கள் எழுதினால் படிப்பவர்கள் யாருமில்லை. எழுத்தாளர்கள் பேசினால் கேட்பவர்கள் யாருமில்லை. ஏனெனில் எழுத்து மொழியும் பேச்சு மொழியும் பெருத்த வேறுபாடுகளும் திரிபுகளும் கொண்டு மாறுபட்டு அமைகின்றன. அதைவிட பேச்சு – வாழ்க்கை, எழுத்து- வாழ்க்கை ஆகியவற்றிற்கு பெருத்த இடைவெளி விழுந்துவிட்டதே பெரும் காரணம் ஆகும். பண்டிதமணியார் காலத்தில் எழுத்து, பேச்சு, வாழ்க்கை இவை அனைத்தும் ஒன்றாய்ச் சத்தியம் நிரம்பியதாய் இருந்தன என்பது கருதத்தக்கது.

தமிழ் உரைநடை பண்டிதமணியார் காலத்தில் தோன்ற ஆரம்பித்தது. அவ்வுரைநடைக்குத் தனித்த தன் நடையால் பெருமை சேர்த்தார் பண்டிதமணி. இவரின் இலக்கியப் பணிகளை அவற்றின் மேன்மையை இப்பகுதி எடுத்தியம்புகின்றது.

தேர்ந்த பேச்சாளர்

பண்டிதமணியாரின் சொல்லாற்றல் திறத்தைப் பற்றிப் பல அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். ‘‘கதிரேசனார் தாம் கற்று உணர்ந்து துய்த்த நுண்பொருள்களையும் கற்றோரும் மற்றோரும் உளங்கொள்ளுமாறு எடுத்துரைக்கும் பெற்றி வாய்ந்த சொல்லின் செல்வர். அவர் தமிழகத்துப் பல பகுதிகளுக்கும் சென்று, செவிச்செல்வம் அளித்து வந்ததோடு, தமிழ் மக்கள் வாழும் ஈழ நாட்டுப் பகுதிகளிலும், மைசூர் நாட்டுப் பகுதிகளிலும், மலையாள நாட்டுப் பகுதிகளிலும் சென்று சொற் பெருக்கு ஆற்றியுள்ளார்’’ (செல்வத்தாண்டவன், திருவுருவச் சிலை திறப்புவிழா மலர்,ப.35) என்ற கருத்து பண்டிதமணியாரின் சொல்லற்றல் திறமையை எடுத்துரைக்கும் ஓர் அறிஞரின் கருத்தாகும்.

பண்டிதமணியார் பேச்சுரையில் இடம்பெறும் நகைச்சுவை குறித்து அவருக்குப் பணிசெய்த சி.ராம. நாகப்பன் பின்வருமாறு எழுதுகிறார். ‘‘முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள் நகைச்சுவையுடன் குலுங்கக் குலுங்கச் சிரித்துப் பேசுவார்கள். அவர்கள் சொற்பொழிவுகளிலும் நயமும் நகைச்சுவையும் இழையோடும். உரையால்களிலும் சொல்நயமும் நகைச்சுவையும் தவழும். அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் அன்றாடம் அவர்கள் பேச்சில் தவழும் நகைச்சுவையில் ஊறித் திளைத்து மகிழ்வார்கள். அவர்களிடம் வேலை பார்த்தவர்கள் பலர் தம் வேலையின் அலுப்பு தெரியாமல் மனம் மகிழ்வதற்கு இந்நகைச்சுவைப் பேச்சு துணைபுரியும். எந்த நேரத்திலும் புன்சிரிப்போடுதான் பேசுவார்கள். பிறரையும் சிரிக்கவைத்து மகிழ்வார்கள்’’ (சி. இராம. நாகப்பன், மேலது, ப.74) என்ற இவரின் பண்டிதமணியார் தம் பேச்சு பற்றிய மதிப்புரை பண்டிதமணியாரின் நாநலத்தை, நகைச்சுவைச் சிறப்பை எடுத்தோதுவதாக உள்ளது.

அக்காலத் தமிழகத்தின் அரும்பெரும் மேடைகள் அனைத்திலும் பண்டிதமணியார் சொற்பெருக்காற்றியுள்ளார். சென்னை சைவ சித்தாந்த மகா சமசத்தின் வெள்ளிவிழா, கரந்தை தமிழ்ச்சங்க ஆண்டுவிழா, தூத்துக்குடி சைவ சித்தாந்த சபைப்பொன்விழா, சென்னை, தமிழ்ப்புலவர் மாநாடு, குறுந்தொகை மாநாடு, புதுக்கோட்டை இலக்கிய விழா, சென்னை இராயபுரத் தமிழ்விழா, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்ற விழாக்கள், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை விழா, குன்றக்குடி சைவ சித்தாந்த சமாஜ மாநாடு, காந்தியடிகளின் வெள்ளிவிழா, தூத்துக்குடி சைவப் பெருவிழா, சென்னை கம்பன் விழா போன்ற பல விழாக்களில் பண்டிதமணியார் சொல்பெருக்கு ஆற்றியுள்ளார்.

இவரின் சொல் பெருக்கு ஆற்றும் நிலையை ஊன்றுகோல் என்ற காவியத்தில் பின்வருமாறு முடியரசனார் பாடுகின்றார்.

‘‘சிரிப்பிருக்கும் அவர் வாயில், பேசுங்காலை
சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்மு கத்தில்
விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியி ரண்டில்
விரிநெற்றி பொலிவுபெற நீறி ருக்கும்
பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்தி ருக்கும்
பளபளக்கும் அக்கழியில் பூணி ருக்கும்
விரித்திருக்கும் நீள் விரிப்பில் அமர்ந்திருப்போர்
விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பிருக்கும்’’
(முடியரசன், ஊன்றுகோல், ப. 68)

என்று கேட்பவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் இவரின் பேச்சுரை அமைந்திருக்கும் எனப்பாடுகின்றார் கவிஞர்.

சங்க காலத்து அங்கதம் என்ற பேச்சு திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசப்பட்டதாகும். இதில் அங்கதம் என்பதற்கு இலக்கணம் வகுக்கிறார் பண்டிதமணியார்.

‘‘ஒருவனுடைய குறையையோ ஒரு சமூகத்தாரின் குறையையோ, அன்னார் நெஞ்சில் உறுத்தும் வண்ணம் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கூறுதல் அங்கதம் ஆகும். அங்ஙனம் கூறுங்கால் நகைச்சுவை தோன்றக் கூறுதல் அங்கதமாகும்’’ (உரைநடைக்கோவை, பகுதி.2. ப.75) என்ற இவரின் குறிப்பு அங்கதத்தை வரையறை செய்வதாகும்.

மேலும் சங்க இலக்கியப்பாடல் ஒன்றில் அங்கதம் வந்திருப்பதைப் பண்டிதமணியார் இதே கட்டுரையில் எடுத்துக்காட்டுகின்றார். தலைவன் பரத்தை ஒழுக்கம் உடையவன். அவன் பரத்தையர் வீடுகளுக்குச் செல்வதோடு தலைவி வெளிப்போந்த நேரத்தில் தன் இல்லத்திற்கும் பரத்தைகளை அழைத்து வந்துவிடக் கூடுபவன். இதனை அறிந்த தலைவி மிகவும் வருத்தப்பட்டாள். ‘‘பரத்தையர் தங்குதற்கு உரிய இல்லில் யானிருந்து விருந்தினர் முதலியோரை உபசரிக்கலானேன்’’ என்று தலைவி தலைவனது தீய ஒழுக்கத்தைக் கடிந்து அவன் நெஞ்சுற உணர்த்தியது புலனாம்’’ (மேலது,ப.82) இப்பகுதி நகைச்சுவையை வெளிப்படுத்தும் பகுதி என்கிறார் பண்டிதமணியார்.

இவ்வாறு இலக்கிய நகைச்சுவைகளை எடுத்துக்காட்டுவது மட்டுமில்லைாமல் சாதாரணமாக நிகழும் நிகழ்வுகளில்கூட நகைச்சுவையைக் காண்பது இவரின் நுண்ணறிவாகும். சாதாரண நிகழ்வுகளில் நகைச்சுவையைக் காண்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்றை மட்டும் இங்குக் குறிப்பது தகும்.

‘‘பேராசிரியர் புலவர் முத்து இராசக் கண்ணனார் அவர்கள் ஒரு முறை பண்டிதமணியின் தலைமையில் புதுவை இளைஞர் கழகக் கூட்டத்தில் ‘’அமெரிக்க நாட்டின் ஆங்கிலக் கவிஞர்’’ என்ற தலைப்பில் பேசினார்கள். தலைவராகிய பண்டிதமணி அவர்கள் தம் முடிவுரையில் குறிப்பிட்டது சுவையாக இருந்தது. ‘‘மிகச் சாமர்த்தியமாக நான் கேட்க ஒரு பேச்சு இன்று நண்பர் இராசாக் கண்ணனார் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது. இடைவேளை உண்டாக்கும் இடைவேலை எனக்கு இல்லாமற் செய்து விட்டார்’’ (சோம.லெ. பண்டிதமணி,ப.93) இக்குறிப்பு பண்டிதமணியாரின் சொல் விளையாட்டிற்கு ஓர் சான்று மட்டுமே. இன்னும் பல சான்றுகள் உள்ளன. அவை விரிக்கின் பெருகும்.

பண்டிதமணியின் பேச்சுரையின் கட்டமைப்பினைப் பற்றி ‘‘மாநாட்டில் பேசுவதாயினும், வானொலியில் பேசுவதாயினும் முன்னரே குறிப்பெடுத்து உரையினைத் தயார் செய்து கொள்வது முறையென்பதால் இவருடைய பேச்சுக்களும் திருந்திய கட்டுரைகளாகவே கொள்ளப்படுகின்றன. வெளியிடுங்கால் திருத்தி வெளியிட்டிருப்பார் என்பதும் உண்மை’’ என்று குறிக்கிறார் க. தியாகராசன். (பண்டிதமணியின் தமிழ்ப்பணி,ப.100)

இவ்வகையில் திருந்திய பேச்சுரையாக, கட்டமைப்புடன் கூடிய பேச்சுரையாக கேட்போர் மகிழும் வண்ணம் பேசும் பேச்சாற்றல் மிக்கவர் பண்டிதமணி ஆவார்.

எழுத்துக்கலைச் சிறப்பு

பேச்சுக்கலை என்பது கேட்போரை மகிழ்விப்பது, நேர்முகமாக நின்று கேட்பவரை நன்னெறிப்படுத்துவது என்றாலும் எழுத்துக்கலை என்றைக்கும் நிலைத்திருப்பது, முகம் தெரியாத மனிதர்களுக்குள்ளும் எழுத்தாளனின் அகம் காட்டுவது, நிலைபெற்ற எழுத்தாற்றலிலும் வல்லமை பெற்றவராக விளங்கினார் பண்டிதமணியார். நூலியற்றுவதை அறிவு வளர்ச்சியாக அவர் கருதினார். ‘‘பொருளாற் படைக்கும் இன்பம் வளர வளர அதற்குக் காரணமாகிய பொருள் சுருங்கித் தேயும் என்பதும், அறிவாற் படைக்கும் இன்பம் வளர வளர அதற்குக் காரணமாகிய அறிவு மேன்மேலும் வளர்ச்சியடையும் என்பதும் யாம் உணர்ந்து வருகின்றோம். தானும் வளர்ந்து, தன் மூலத்தையும் வளர்க்கும் நூலின்பமே மக்கட்டன்மைக்கு இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாகும். இத்தகைய தூய நல்லின்பத்தைப் பயக்கும் நூல்கள், சொல்லானும் பொருளானும் இனிமை மிக்குப் பயில்வார் கருத்தைத் தம் வயப்படுத்துச் சுவை பல கனியப் பெற்றுக் கிளைக்கக் கிளைக்கக் கருத்து வகையால் அறிவு திளைக்க இடனளித்துத் தெளிவு மேற்கொடு மிளரும் நிலையினவாய் இருத்தல் வேண்டும் என்பது புலநலம் சான்ற கலை வல்லார் துனிபாகும்’’ (மண்ணியல் சிறுதேர், ப.8) இக்கருத்து பண்டிதமணி தரும் நூலுக்கான இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்தின்படி பற்பல நூல்களைப் படைத்தளித்தார் பண்டிதமணியார்.

கவிதைச் சிறப்பு

பண்டிதமணி மரபு சார்ந்த நல்ல கவிஞர். அவரின் கவிப்பெருமையைப் பின்வரும் நூல்களால் அறிந்து கொள்ள முடிகின்றது. பதிற்றுப் பத்தந்தாதி, சுந்தரவிநாயகர் பதிகம், வீரவிநாயகர்மாலை ஆகியன இவர் பாடிய கவிதைப் பனுவல்கள் ஆகும். இவை தவிர பாராட்டுப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், காணிக்கைப் பாடல்கள், கையறுநிலைப்பாடல்கள், மொழிபெயர்ப்புப்பாடல்கள், கடிதப்பாடல்கள் எனப் பல கவிதைகளைத் தேவைக்கேற்ப பண்டிதமணியார் பாடியுள்ளார்.

சன்மார்க்க சபைக்கு வரும் பேரறிஞர்கள் பற்றிய பாராட்டுப் பாடல்களைப் புனைவது பண்டிதமணியாரின் வழக்கம். உ.வே.சாமிநாதையர் அவர்கள் குறித்த பாராட்டுப் பாடல் ஒன்று பின்வருமாறு.

‘‘நூலாய்தல் உரைதல நூல்பயிற்றல்
முதுநூலின் நுணுக்கம் காட்டி
வாலாய எந்திரத்தின் வயக்கிவனப்
புறப்பதித்து வழங்கல் இன்ன
மேலாய செயல் புரிந்து தமிழ்த்தாயின்
தலைமகனாய் விளங்கு நின்றன்
பாலாய பெருஞ்சிறப்பு கண்டுவியப்
பெயதாரிப் பாரில் யாரே’’ ( மேலது, ப.84)

என்ற இப்பாடல் உ.வே.சாமிநாதரின் தமிழ்த்தொண்டை வகுத்தும் பகுத்தும் கூறுவதாகும். இவ்வாறு அவ்வவ் நேரங்களில் பல பாராட்டுப் பாடல்களைப் பாடித் தன் கவியாற்றலை வெளிப்படுத்தினார் பண்டிதமணியார்.

இவரின் கவியாற்றல் முழுவதும் வெளிப்பட்ட இடம் மண்ணியல் சிறுதேர் என்ற நூலில் ஆகும். இந்நூல் சூத்ரகர் என்பவர் எழுதிய மிருச்சகடிகம் என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு வடிவம் ஆகும். மொழிபெயர்ப்புகளை உரைநடையாகத் தருவது என்பது பண்டிதமணியாரின் வழக்கம். இதற்குச் சான்று உதயன சரிதமும், சுலோசனையும் ஆகும். ஆனால் இதிலிருந்து வேறுபட்டு, முன்னூற்று எண்பத்தியிரண்டு சுலோகங்களைக் கொண்ட மிருச்சகடிகத்தை முன்னூற்று எழுபத்தியரண்டுத் தமிழ்ப் பாடல்கள் கொண்ட பாவியமாக மண்ணியல் சிறுதேரை இயற்றினார் பண்டிதமணியார். இவரின் தமிழாற்றலும், வடமொழியாற்றலும் போட்டி போட்டுக்கொண்டு வெளிப்பட்ட பாவியம் இதுவாகும்.

வெயில் கடுமையை எடுத்துரைக்கும் மண்ணியல் சிறுதேர் பாடல் பின்வருமாறு.

‘‘ஆவினங்கள் உண்ட இளம் புல்லையசை
மீட்குநிழல் அயர்ந்து தூங்கும்
மேவிய நீர் வேட்கையினால் வெதும்பும் உழை
குளச்சுடு நீர் விரும்பியுண்ணும்
தாவமுறு வெயிற்பயத்தால் நகர்த்தெருவின்
மனிதர் நடை தவிர்ந்தார் வண்டி
ஓவலிலாச் சுடுநிலத்தை ஒருவியொரு
புறத்திருக்கு முதுவென் எண்ணம்’’
(மண்ணியல் சிறுதேர்,பா.எ.233)

என்ற இப்பாடலில் வெயிலின் கொடுமையைப் பண்டிதமணியார் விரித்துரைக்கும் கவிதைத்திறம் படிக்க படிக்க இன்பம் தருவதாக உள்ளது.
இவ்வகையில் நல்ல நல்ல கவிதைகளை இயற்றும் நல்லாற்றல் மிக்கவர் பண்டிதமணியார் என்பது தெளிவாகின்றது.

மேலும் இவரின் உரைநடைப் படைப்புகளுக்கு இறுதியில் சிலப்பதிகார வெண்பாப்போலப் பாக்கள் புனைதலும் இவரின் தனித்திறம் ஆகும். ஆங்கும் இவரின் கவியாற்றலைக் காணமுடிகின்றது.

சுலோசனை மொழிபெயர்ப்பின் அடியில் காணப்படும் வெண்பா இதுவாகும்.

‘‘கற்பிற் சிறந்த கனங்குழையார் தம்முள்ளே
சொற்புகழின் மிக்காள் சுலோசனையே – பொற்பிற்
றிகழுடலைத் தீப்பெய்து சென்றளாலன்பன்
புகுமிடத்தைச் சாந்த்தின் புற’’
(உதயண சரிதமும் சுலோசனையும்,ப.134)

பண்டிதமணியார் யாப்பிலக்கணத்திலும் வல்லவர் என்பதை இவரின் கவிதைகள் பறைசாற்றுகின்றன. இவர் வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளில் பாடல்கள் புனைந்தளித்துள்ளார். இவ்வகையில் பண்டிதமணியாருக்குக் கவிசிறப்பும் ஒரு அணிகலனாக விளங்கியுள்ளது.

கட்டுரைச் சிறப்பு

கட்டுரை வன்மையிலும் சிறந்தவர் பண்டிதமணியார். இவர்தம் கட்டுரைகள் அனைத்தும் தமிழ் உரைநடைக்கு ஆக்கம் சேர்த்தன. பண்டிதமணியாரின் நடை என்றே உறுதிபடக் கூறும் அளவிற்கு இவரின் உரைநடைப் பாங்கு தனித்து இலங்குகின்றது.

பண்டிதமணியாரின் உரைநடை நூல்கள் மொத்தம் நான்கு ஆகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், உரைநடைக்கோவை (முதல் பகுதி), உரைநடைக்கோவை (இரண்டாம் பகுதி), இலக்கிய நயம் ஆகிய அந்நான்கு நூல்களும் ஆகும். இந்நான்கு நூல்களையும் ஒப்பு வைத்துக் காண்கையில் கடுமையாகத் தொடங்கிய பண்டிதமணியாரின் நடை நிறைவில் மிக எளிமையும் இனிமையும் கொண்டதாக மாறி வளர்ந்துள்ளது என்று கருதுகின்றனர் ஆய்வாளர் இரா. மோகன் போன்றோர்.

இவற்றில் உரைநடைக்கோவை பெரும்பாலும் பேச்சுரைகளின் கட்டுரைப்பதிவுகள் ஆகும். எனவே பேச்சுரை உத்திகள் இக்கட்டுரைகளில் காணப்படுவதாக இரா. மோகன் குறிப்பிடுகின்றார்.

அறிவிப்பு, அவையினரை விளத்துப் பேசுதல், அவையினரை உளப்படுத்திப் பேசுதல், தன் வெளிப்பாடு, நன்றியறிதலைப் புலப்படுத்துதல், வாழ்த்து ஆகிய பகுதிகள் பண்டிதமணியாரின் பேச்சுரைகளில் இருக்கும். இப்பேச்சுரைகள் பின்னாளில் கட்டுரைகளாக நூலாக்கம் பெறும்போது இதே தன்மைகளுடன் அச்சேறின. இருந்தாலும் பேச்சுத் தமிழுக்கும் கட்டுரைத் தமிழுக்கும் அதிக வேற்றுமை இல்லாத காலம் பண்டிதமணியாரின் காலம் என்பதால் இரண்டுமே இலக்கியத் தரத்தை உயர்த்தி நின்றன.

பண்டிதமணியாரின் உரைநடையில் சொல்நலம், சந்தி விகாரங்களைக் கொண்டு எழுதுதல், நீண்ட சொற்றொடர் அமைப்பு, தொகையுரை, வியங்கோள் வினைமுற்றுக்களின் ஆட்சி, வினா விடைப் பாங்கு, உணர்ச்சிக் குறிகளைக் கையாண்டு எழுதுதல், இயைபு படுத்தி எழுதுதல், சொற்பொருள் விளக்கம் கூறுகள் முதலியன இடம் பெற்றிருப்பதாக இரா. மோகன் கருதுகின்றார், (பண்டிதமணியின் நடைநயம் என்ற நூலில் தரப்பெற்ற கருத்துகளின் சுருக்கம்)

மேலும் பண்டிதமணியாரின் நடை அணிநலன்கள், உவமை, உருவகம், எதுகை, மோனை, முரண், பழமொழிகளைக் கையாளுதல் போன்ற பல வனப்புகளை உடையது என்பதும் மேற்குறித்த ஆய்வாளரின் கருத்தாகும்.

இவ்வகையில் உரைநடையை அழகுபடக் கையாண்டவர் பண்டிதமணி என்பது கருதத்தக்கது. பண்டிதமணியாரின் கட்டுரைத்திறம் அறிய இதன்பின் சில பகுதிகள் சான்றிற்காகக் காட்டப்பெறுகின்றன.

இவரின் கட்டுரைகளில் அன்பின் திருவுரு என்ற கட்டுரை கண்ணப்பர் பற்றியதாகும். இக்கட்டுரையில் சைவ சித்தாந்தக் கருத்துகளை அடிப்படையாக வைத்துக் கண்ணப்பரின் வரலாற்றை நோக்குகின்றார் பண்டிதமணியார்.

‘‘கண்ணப்ப நாயனாருடைய தந்தையாகிய நாகனை மூலமலமாகிய ஆணவம் என்று குறிப்பிடலாம். ‘‘மகனறிவு தந்தை யறிவு’’ என்பதனால் தந்தையின் தொடர்பு மகனை விட்டு நீங்காதொன்றாம்.

இனி, மாயை யென்னும் பாச நிலையில் கண்ணப்பருடைய நற்றாயாகிய தத்தையைக் குறிப்பிடலாம் மாயை உலகத் தோற்றத்திற்கு முதற் காரணமாகும்.

காடனைக் கன்ம மலமாகக் குறிப்பிடலாம். கண்ணப்பருடைய கன்மக் கூற்றில் பாவப் பகுதி முற்பிறப்பிலேயே ஒழித்திருக்கலாம். எஞ்சிய புண்ணியக் கூறே இப்பிறவிக்குக் காரணமாகும். மாயேய மலத்தின் நிலையில் நாணனைக் குறிப்பிடலாம்

இந்நிலையில் தேவராட்டியைத திரோதமலமென்று குறிப்பிடலாம் திரோதாயி மூலமலமாகிய ஆணவத்தோடு கூடிநின்று தொழிற்படுத்து மென்பதைத் தேவராட்டி நாகனோடு கூடிநின்று வேட்டைத் தொழிலிற் கண்ணப்பரை ஏவிய செய்தி புலப்படுத்தும். இனி இவ்வகைப் பாசங்களையும் ஒருவிவிட்டு நிலை யெய்திய ஆன்மா கண்ணப்பரென்பது தெளிவாம்.

கட்டாகிய ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி என்னும் ஐவகைப்படும் பாசங்களின் இயல்புகளை முறையே நாகன், தத்தை, காடன், நாணன், தேவராட்டி என்னும் இவர்கள் செயல்கள் புலப்படுத்துவன வென்பதூஉம், திருக்காளத்தி மலைமிசை யேறியது தத்துவங் கடத்தலைப் புலப்படத்து மென்பதூஉம், குடுமித் தேவர் ஞானாசிரியராக நின்று ஞானவதியாகிய நயனதீக்கையால் கண்ணப்பரது மலத்தொடர் பொழித்தன ரென்பதூஉம், இறைவன் தமது கலக்கண்ணில் ஊறுபாடு காட்டி இவர் வலக்கண்ணை யேற்றுக் கொண்டதும், இடக்கண்ணை யேற்றுக்கொள்ளாமல் கையைப் பிடித்து வலத்தே நிற்க வென்றதும், கண்ணப்பர் ஆறாம் நாளில் வீட்டுநிலை யெய்தியதும் ஆகிய இவையெல்லாம் இன்னின்ன நுண்பொருளைப் புலப்படுத்துவன வென்பதூஉம், ஐம்புல வேடரின் என்னும் சிவஞானபோதச் சூத்திரக்கருத்துக்கும் இவர் வரலாற்றுக் குறிப்பு ஒத்தாகு மென்பதூஉம் தாய் தந்தை முதலியோர் செயல்களைக் கொண்டு பாசங்களின் இயல்புகளைக் குறிப்பிட்டமையால் அன்னார் பெருமைக்கு ஏதுங் குறைவு வாரதென்பதூஉம் பிறவுமாம்’’ (உரைநடைக்கோவை பகுதி. 1 அன்பின் திருவுரு என்ற கட்டுரையில் தேர்ந்தெடுத்த பகுதிகள்)

மேற்சுட்டிய பகுதிகள் கண்ணப்பரின் வாழ்வினை சைவசித்தாந்த அடிப்படை கொண்ட வாழ்வாக இயைத்துள்ளார் பண்டிதமணியார். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் எவ்வுயிரின் எத்தகைய வாழ்வையும் வரையறுக்க இயலும் என்றாலும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆன்ம ஈடேற்றத்தைப் பெற்ற தூயவரான கண்ணப்பரின் முக்தி வழியைப் படிப்பவர்க்கு எடுத்துக்காட்டி தமிழுக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் வளமை சேர்த்துள்ளார் பண்டிதமணியார்.

சங்ககாலச் சிறப்பை இலக்கிய நயத்தை எடுத்துரைக்கும் இவரின் கட்டுரை குறுந்தொகை என்ற தலைப்பில் எழுதப்பெற்றுள்ள கட்டுரையாகும். ‘‘இனிப் பழங்காலத்துத் தமிழ் மக்கள் மனநிலைகளை அறிதற்குச் சங்க நூல்களே சிறந்த கருவிகளாகும். ஒருவனும், ஒருத்தியுந் தம்முட்கொண்ட காதல் எத்தகைய இடையூறானும் பிறழ்ச்சி எய்துவதன்று. காதல் வயத்தான் ஒன்று கூடுவர். தம் மனத்திற்குச் சான்றாக வேறுபொருள்களை எதிர்பார்ப்பதில்லை. அவரவர் உள்ளங்களே சான்றாவனவாகும். களவொழுக்கத்து நெடுங்காலம் பயின்று கற்பு முறையில் மணஞ் செய்து கொள்ளாதிருந்த தலைவனியல்பைக் குறித்துத் தலைமகள் தோழியை நோக்கி ‘‘தோழி! தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறொருவருமிலர். தலைவர் ஒருவரே இருந்தனர். அவரே தாம் கூறிய சூளுறையினின்றுந் தப்பியொழுகுவாராயின், யாஞ் செய்யத்தக்கது யாதுளது? அவ்விடத்து அவ்வமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதவும் ஓடும் நீரில் தானுண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின் எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது. காணத தொன்றைப் பற்றிச் சான்றாதற்குத் தமிழ் நிலத்துப் புள்ளும் ஒருப்படாது. வாய்மைநெறி யொழுக்கும் இயல்பின தாகலின் என்று தலைவி கூறினாளாம்.’’ (உரைநடைக்கோவை. பகுதி 2. ப.110)

இப்பகுதி சங்க கால மக்களின் வாழ்வுச் சிறப்பினை எடுத்துரைப்பதாக உள்ளது. சங்க மக்கள் வாய்மை நெறி ஒழுகினர் என்பதை உயர்திணையாகிய தலைவியைக் கொண்டும், அஃறிணையாகிய நாரையைக் கொண்டும் காட்டியுள்ளார் பண்டிதமணி. சங்க காலச் சிறப்புடைய மண்ணில் பிறந்த அவரின் சங்கப் பாடல் விளக்கவுரை அண்மைத் தன்மை கொண்டதாக இருப்பது என்பது இயல்பானதுதான்.

தன் உளம் கவர்ந்த பக்தியாளர்மாணிக்கவாசகரையும் அவரின் பாடல் திறத்தையும் பின்வரும் உரைநடைப் பகுதியால் சிறப்பிக்கின்றார் பண்டிதமணி..

‘‘அடிகள் உலகியல் கடந்த நிலையில் நின்று, மறையோனாகிய இறைவன் அருள் வெள்ளத்துள் மூழ்கிப் பேரின்ப நிலையில் தடைப்பட்டு அநுபவித்த உண்மைகளெல்லாம் மனம் வாக்குகளுக்கு அடங்காதனவாகவும், அவற்றைப் பதி காரணமாக மாறப்பெற்ற நம் உள்ளத்தால் அறுதியிட்டுத் தெள்ளமுத உரைகளால் அறிவிற் சிறியாரும் உணர்ந்து இன்புறும் வண்ணம் இசையினிமை மகிக் பாடல் வடிவில் வெளிப்படுத்திய முறை மிகவும் பாராட்டற்குரியது. அம்மானை, ஊசல் முதலிய மகளிர் விளையாடல்களில் அவர் தம்முள் உரையாடும் முகமாக அரிய அநுபவ உண்மைகளை எளிய முறையில் தெளிவுபடுத்தியது, அடிகள் ஏனைய மக்கள் பால் வைத்த பெருங்கருணைக்குப் பெரிது சான்றாவதாம். குயிலை முன்னிலைப்படுத்தி இறைவன் அருட்குணங்களை இங்ஙனம் கூவுக எனவும், வண்டுகளை நோக்கி இங்ஙனம் ஊதுக எனவும் அருளிச் செய்த திருவிளையாடல்களை நோக்குங்கால், ஓசையொலி யெல்லாம் சிவமயமாகக் கண்டார் என்பது புலனாம். ’’(மேலது, ப.73) என்ற இக்கருத்துரை மணிவாசகரின் மேன்மைகளையும் அவர் சிற்றறிவுடைய உயிரினங்களும் அருள்பெறும் வண்ணம் தன் ஞானனுபவத்தைப் பாடல் வழியாகப் புனைந்த திறமும் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன.

இவ்வாறு கட்டுரைகள் வழியாக சமயமும், சமுதாயமும் மேம்பட பல்வேறு நல்லக் கருத்துக்களை அளித்தவர் பண்டிதமணி என்பது சிறப்பாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 5”

அதிகம் படித்தது