மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 9

முனைவர் மு.பழனியப்பன்

Dec 5, 2020

siragu sukkira needhi1சுக்கிரநீதி

வடமொழியில் பொருள் நூல்கள் வெள்ளி, வியாழன், சாணக்கியர் ஆகியோரால் இயற்றப்பெற்றுள்ளன. பாருகற்பத்தியம், ஔசநசம், கொளடிலியம் என்பன அம்மூவர் இயற்றிய நூல்கள் ஆகும். இவற்றுள் ஔசநசம் என்பது வெள்ளி அதாவது சுக்கிரன் எழுதிய பொருள் நூல் ஆகும்.

சுக்கிர நீதி ஐந்து வகைப்பட்ட நீதிகளை வழங்குகின்றது. முதல்பகுதியில் நீதி நூல்களின் இன்றியமையாமை விளக்கப்படுகிறது. இதனுடன் அரண்மனை, அரசவீதி, நகர், கிராமம் ஆகியவற்றின் அமைப்பு இலக்கணங்கள், அரசரின் மூவகை, அரசர் தம் கடமைகள், குடிமக்கள் நன்மைக்காக அவன் இயற்றும் கட்டளைகள், அவற்றைப் பறைசாற்றும் முறைகள் போன்றன சுட்டப்பெற்றுள்ளன.
இரண்டாம் பிரிவில் அரசனின் நன்னட்பு, தீ நட்பு குறித்தும் அரசின் சுற்றம், அரச சுற்றத்தார் இயல்புகள் ஆவணங்களின் தன்மைகள், அளவைகள் போன்றன பற்றிய செய்திகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.
மூன்றாம் பிரிவில் சமுதாய ஒழுக்கம் பற்றி விரிவாக உரைக்கப்படுகின்றது. ஒழுக்கம், உலக நலம் போன்றன பற்றிய செய்திகள் இங்கு விரிக்கப் பெற்றுள்ளன.
நான்காம் பிரிவில் நட்பு மேற்கொள்ளும் முறை, தண்டங்களை அளிக்கும் முறை, தண்டனைகளின் கடுமை போன்றன பற்றியும், கருவூலத்தின் சிறப்பு, இயல்பு, பொருள்களைத் தொகுக்கும் முறை, பொருள்களின் விலையளவு முதலியன பற்றிய கருத்துகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. இதன் அடுத்த பகுதியில் வேத இயல்பு, அறுபத்து நான்கு கலைகள், சாதிகளின் இயல்பு, தொழில்களின் இயல்பு போன்றன குறித்த செய்திகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, நால்வகை ஆசிரமங்கள், பெண்களின் ஒழுக்கம், மரங்கள் தோட்டங்கள் பாதுகாப்பு, நீர் நிலைகள் அமைத்தல், அணைகட்டல். திருக்கோயில் வழிபாட்டு முறை முதலானவற்றைப் பற்றிய செய்திகள் காட்டப்படுகின்றன. இப்பகுதியின் ஐந்தாம் பகுதியாக நியாய மன்றங்கள் அவற்றின் நடைமுறைகள் பற்றிய செய்திகள் தரப்பெற்றுள்ளன. ஆறாம் பகுதியில் அரண் பற்றிய செய்திகள் தரப்பெற்றுள்ளன. ஏழாம் பகுதியில் தேர், யானை, குதிரை இவற்றினிலக்கணங்கள், இவற்றின் ஆயுட்கால ஆராய்ச்சி, போர் முறை, தன் வலி அறிதல், மாற்றான் வலி அறிதல் ஆகியன பற்றிய செய்திகள் தரப்பெற்று இப்பகுதி விரிவானதாக அமைகின்றது.
பொதுப் பிரிவில் அடங்கும் ஐந்தாம் பிரிவில் அரசரின் வெற்றிக்கான வழிகள் காட்டப்பெறுகின்றன.
இப்பகுதிகள் அனைத்தையும் முற்றிலும் மொழியாக்கம் செய்துப் பண்டிதமணியார் அளித்துள்ளார். இந்நூலின் அடிக்குறிப்பு பண்டிதமணியாரின் பரந்த நீதி நூல் அறிவைக் காட்டுவதாக உள்ளது. இவ்வடிக்குறிப்பில் சுக்கிர நீதியுடன் ஒத்துச்சொல்லும் நீதி நூல் கருத்துகள் காட்டப்படுவது ஆய்வாளர்களுக்கு பெருந்துணை புரிவதாகும்.
சுக்கிர நீதியில் உள்ள ஒரு மொழிபெயர்ப்புப் பகுதி பின்வருமாறு.
‘‘அரசன் தனக்குரிய ஆண்டு வருவாயில் மூன்று கூறு படைகளைக் காத்தற்கும், அரைக் கூறு தாளத்திற்கும், அரைக்கூறு அமைச்சர் முதலிய தலைமையதிகாரிகளுக்கும், அரைக்கூறு அரசியற்றொழில் புரியும் மற்றவர்களுக்கும், அரைக் கூறு தன் வாழ்க்கைக்கும் செலவிட்டு எஞ்சிய ஒரு கூற்றைத் தன் கருவூலத்து வைப்பு நிதியிற் சேர்த்தல் வேண்டும்’’ (மேற்கோள், பண்டிதமணியின் தமிழ்ப்பணி,ப.164)
இப்பகுதி அரசனின் வருவாய்ப் பகுப்பு பற்றி அறிவிக்கின்றது. மற்றொரு பகுதி பற்களும், மயிர்களும், உகிர்களும் தமக்குரிய இடங்களினின்றும் இழிந்தக்கால் விளக்கம் எய்தா. அங்ஙனமே அரசனும் நன்னிலையினின்றும் இழிந்தக்கால் விளக்கமுறான் (சுக். 1. 381) இப்பகுதி தலையின் இழிந்த மயிரனையர் என்ற குறட்பகுதியை நினைவுபடுத்துவதாக உள்ளது.
இவ்வகையில் சுக்கிர நீதியை மற்ற நீதி நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்வதற்கு பெருங்களம் ஆய்வாளர்களுக்குக் காத்துக்கிடக்கின்றது.
கௌடலீயம்
சாணக்கியர் வரைந்த பொருள் நூல் கௌடலீயம் என்பதாகும். இந்நூலின் முதல் மூன்று அதிகரணங்கள் பண்டிதமணியாரால் தமிழாக்கம் செய்யப்பெற்றுள்ளன. மற்ற பகுதிகள் பி. எஸ். இராமானுசாசாரி என்பவர் பண்டிதமணியின் வழியில் மொழிபெயர்த்து நிறைவேற்றினார்.
சங்க இலக்கியங்களிலும், திருக்குறளில் கிடைத்துள்ள தமிழ்நாட்டுப் பொருள் நூல் அமைப்பு, இவ்வடமொழி நூலின் மொழிபெயர்ப்பால் வடநாட்டில் அமைந்த ஆட்சிமுறை, சமுதாய அமைப்பு ஆகியவற்றுடன் ஒப்புநோக்கி உய்த்துணர்ந்து கொள்ள முடியும் என்பதாகும் என்று இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டதன் நோக்கத்தை எடுத்துரைக்கின்றார் ஆய்வாளர் தியாகராசன் (பண்டிதமணியின் தமிழ்ப்பணி,ப.167)
இந்நூல் பதினைந்து அதிகரணங்களையும், நூற்றைம்பது அத்தியாயங்களையும் தன்னகத்தே கொண்ட விரிந்த நூல் ஆகும். இந்நூலை மொழியாக்கம் செய்யச்சொல்லி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பண்டிதமணியாருக்கு ஒரு திட்டத்தை அளித்தது. கௌடலீயம் குறியீட்டுச் சொற்கள், குழூஉக்குறிச் சொற்கள் பல மிடைந்து காணப்படுவதாகும். இக்குறியீட்டுச் சொற்கள் இடம்பெறும் தருணத்தில் அச்சொற்கள் பற்றிய விளக்கத்தை அடிக்குறிப்பில் தருவது பண்டிதமணியாரின் இயல்பாகும்.
‘ஆன்விடசிகீ’ திரையீ, வார்த்தை, தண்டநீதி என்னும் இவை வித்தையாம்’ என்றொரு பகுதி கௌடலீயத்தில் இடம்பெறுகின்றது.
அரசன் பயிலவேண்டிய வித்தைகளை மேற்கண்ட தொடர் எடுத்தியம்புகின்றது. இச்சொற்களுக்குக் குறிப்புரைகளைத் தருகிறார் பண்டிதமணி.
ஆன்விட்சிகீ – பொருள் உண்மையை அவற்றின் இயல்பை ஆராய்தற்குரிய ஏதுக்களை எடுத்துக் கூறும் தருக்கம் முதலிய நூல்கள்.
வார்த்தை – உழவு, பசுக்காவல் வாணிகம் இம்மூன்றும் ஆம்
என்று வடமொழிக் குறிச்சொற்களுக்கு விளக்கம் அளிக்கும் பண்டிதமணியாரின் திறம் இருமொழிச் சொல்லாய்வு மிக்கவர் என்பதை எடுத்துக்காட்டும்.
இவ்வாறு மொழிபெயர்ப்பு நூல்களின் வழியாக தமிழுக்கு அழியாத் தொண்டைச் செய்துள்ளார் பண்டிதமணியார். இந்நூல்கள் இருக்கும் வரை பண்டிதமணியாரின் பெருமையைத் தமிழ் உலகம் எண்ணிப்பார்த்துக்கொண்டிருக்கும்.
மாலதி மாதவம் என்ற நூலையும் பண்டிதமணி மொழி பெயர்த்துள்ளார். இது கைப்படியாகவே இருக்கின்றது. இதனை வெளிப்படுத்தித் தமிழுக்கு தக்கதொரு அணிகலனைத் தரப்போகிறவரைத் தமிழுலகம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளது.
இவ்வகையில் பண்டிதமணியாரின் எழுத்தாற்றல் என்பது பல்திறப்பட்டதாகவும், செம்மைநலம் சார்ந்ததாகவும் உள்ளம் உருக்குவதாகவும் அமைந்து அவரின் பெருமையை உலகிற்கு அறிவிப்பதாக உள்ளது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 9”

அதிகம் படித்தது