மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பள்ளிகளின் ஊடே ஒரு பயணம்

தேமொழி

Sep 28, 2019

siragu NIRMALA BOOK COVER

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலேய பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண் எதிர்கொண்ட சூழல் எத்தகையதாக இருந்திருக்கும் என அறிய விரும்பினால் படிக்க வேண்டிய நூல் இது. அதை விளக்கும் வகையில், 50 சிறு சிறு நிகழ்வுகளின் தொகுப்பாக அக்கால வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது இந்த புதினம். மலேய பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் அகிலா என்ற பெண்மணி. அவர் தனது ஏறத்தாழ ஒரு 30 ஆண்டுக்கால பணி குறித்த நிகழ்ச்சிகளின் நினைவுக்கடலில் மூழ்கி அவற்றை அவ்வப்பொழுது தனது கணவரிடமும் பகிர்ந்து கொள்ளுவதாக நூலின் போக்கு அமைந்துள்ளது. தான் தமிழில் எழுதியதை ஆங்கில மொழி பெயர்ப்பாக “எ ஜர்னி துரு ஸ்கூல்ஸ்” (A Journey through Schools,  Nirmala Raghavan, 2019) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன்.

நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று திருமணத்திற்குப் பிறகு மலேசியாவில் குடியேறிய தமிழர். மலேய கல்வித்துறையிலும் பள்ளிகளிலும் பணியாற்றியவர். பெண்ணியச் சிந்தனை கொண்ட சமூக ஆர்வலரான நிர்மலா வானொலி நாடகங்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டவர். இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உளவியல் கோணத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மனவளக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் பல்கலைக்கழக ஆய்விற்கான பொருண்மையாகத் தேர்வு செய்யப்பட்டதும், இவரது சிறுகதை நூல்களுள் ஒன்று கல்லூரி பாடநூலாக எடுத்துக்கொள்ளப்பட்டதும் இவர் பெற்ற சிறப்பு.  இவரது வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பு பாராட்டப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார்

பள்ளிகளின் ஊடே ஒரு பயணம் என்ற தலைப்பில் கோலாலம்பூர் பள்ளிகளில் ஆசிரியையாக பணிபுரிந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. தனது பெயரைக் கையெழுத்திட மட்டுமே அறிந்திருக்கும் நாவிதர் நல்லசாமியின் மகள் அகிலா பட்டம் பெற்ற பிறகு ஆசிரியையாகப் பணியேற்கும் 1973 இல் கதை தொடங்குகிறது. தாயற்ற தனது இரு மகள்களையும் தனது வருமானத்தில் கல்லூரி படிப்பு படிக்க வைக்க இயலாத தந்தை அகிலாவை இந்தியாவில் தஞ்சையில் சென்று படித்து பட்டம் பெற வைக்கிறார். தனது தந்தையைப் பிரிந்து செல்ல விரும்பாவிட்டாலும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு அறிவியல் பட்டதாரியாகத் திரும்புகிறாள் அகிலா. பள்ளியில் பணியேற்கும்போது அவளது இந்தியப் பட்டம் மற்ற நாடுகளின் ஆசிரியர்களின் பட்டம் போல அங்கீகரிக்கப்படுவதில்லை. ஊதியம் குறைவாகக் கொடுக்கப்பட்டாலும் அதிக ஊதியம் பெறும் பிற நாட்டுப் பட்டதாரிகளிடம் பெறப்படும் அதே அளவு வேலையைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது துவக்கத்தில் அகிலாவிற்குப் பணியில் ஆர்வத்தையும் தரவில்லை. அவளால் பணி குறித்து மகிழ்ச்சியடையவும் முடியவில்லை.

போதாக்குறைக்கு அவள் இயற்பியலில் பெற்ற இந்தியப் பட்டத்தால் அவள் பாடங்களைச் சரிவர அறிந்திருக்கவில்லை என்றும், அதே பட்டம் பெற்ற தான் அவளுக்கு வார இறுதியில் பாடம் சொல்லித் தருவதாக நைச்சியமாகக் காதல் வலைவீசும் மணமான, அதிகார மமதை கொண்ட தலைமையாசிரியர் தரும் தொல்லை ஒருபக்கம். அவளது இன பின்புலம் குறித்து இனபேதம் பேசி நையாண்டி செய்யும் திமிர் பிடித்த வகுப்பு மாணவர்கள் மறுபக்கம் என்ற தொல்லைகள் அணி கட்டி நிற்கின்றன. புதுவரவு கற்றுக்குட்டி ஆசிரியை என்ற பிற ஆசிரியர்கள் அவளிடம் கொண்டிருக்கும் இளக்காரம், மாணவர்கள் எதிரில் அவளை அவமதிக்கும் தலைமை ஆசிரியரின் செயல்பாடு, பல்லின மாணவர்களும் வாழும் சூழலில் எழும் இனபேத நடவடிக்கைகள் என அனைத்துமே நிர்மலா எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக இருக்கின்றன.

இத்தகைய முட்டுக்கட்டைகள் நிரம்பியிருந்தாலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்குச் சிறந்தமுறையில் கல்வி கற்பித்து தன்னால் இயன்றவரை உதவும் மனப்பாங்குதான் அகிலாவின் பண்பாக இருக்கிறது. வறுமையான சூழலில் வளரும் மாணவர்கள், சிதைவுற்ற வன்முறை நிறைந்த குடும்பச் சூழலிலிருந்து பள்ளி வரும் மாணவர்கள் ஆகியோர் பள்ளிக்கு வருவதே தடைப்படும் நேரங்களில் அவர்கள் மேல் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு அவர்களை வழிநடத்தி, மாணவர்களை அச்சுறுத்த விரும்பாமல் அவர்களுக்கு இணையாகத் தோழமையாகப் பழகும் அகிலா ஒரு மாறுபட்ட ஆசிரியைதான்.

தனது ஆசிரியப்பணி வாழ்வு குறித்துப் பணி ஓய்வுக்குப் பிறகு நினைவு கூரும் அகிலா தனது பணி வாழ்க்கையை ஒரு சுனாமி தாக்கி முடிந்த பிறகு கிடைக்கும் மகிழ்ச்சியற்ற நிலையுடன் ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது. தன்னைவிடத் தகுதியில் குறைந்தோர், மேலிடத்தில் உள்ளோருடன் இணக்கத்துடன் நடந்து கொண்டு தனது பதவி உயர்வுகளைத் தட்டிப் பறித்துவிட்டதால் தான் அடைந்த ஏமாற்றமும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்மணி என உடன் பணியாற்றும் ஆசிரியர்களால் கருதப்பட்டதும் இறுதியில் கசப்பும் இனிப்புமாகப் பணி வாழ்வு குறித்த நிகழ்வுகளாக அகிலாவின் நினைவில் தங்கிச் செல்கிறது. தொலைபேசியில் அன்புடன் அழைத்து, அகிலாவிடம் பயின்றதால் தான் மேன்மையுற்றதாகக் கூறும் பழைய மாணவர் ஒருவரின் எதிர்பாராத பாராட்டிற்குப் பிறகு, எந்தப் பணியாக இருந்தாலும் உழைப்பவருக்குத் தனது பணியில் நேர்மையான நடத்தை இருப்பது இன்றியமையாத ஒன்று என்ற அகிலாவின் சிந்தனையில் தோன்றும் கருத்துடன் நூல் நிறைவு பெறுகிறது.

அகிலாவின் வாழ்வுடன் பயணிக்கையில் மலேசியாவின் கடந்த கால வரலாற்றின் அரசியல், பூமி புத்திரர்கள், இந்தியர், தமிழர், சீனர், மலேய மக்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், வாழ்வியல்முறை, பண்பாடு ஆகியவற்றை நூலின் ஆசிரியரின் பார்வையில் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நூலைத் தமிழிலும் முன்னர் தொடராகப் படித்ததுண்டு, இப்பொழுது ஆங்கிலத்திலும் படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்ற காரணத்தால் உலகில் பிற மொழியினரும் மலேயத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சூழ்நிலையை அறியும் வாய்ப்பை ஏற்படுத்திய நிர்மலா ராகவன் பாராட்டிற்குரியவர். அவரது முயற்சியைப் பிற தமிழ் எழுத்தாளர்களும் பின்பற்ற வேண்டும்.

About the Book:

A Journey through Schools

by Nirmala Raghavan

Paperback: 248 pages

Publisher: Independently published (August 29, 2019)

Language: English

ISBN-13: 978-1689336888


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பள்ளிகளின் ஊடே ஒரு பயணம்”

அதிகம் படித்தது