மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாதை மாறிய பயணம்(சிறுகதை)

வெங்கடேஷ்.மு

Nov 14, 2015

paadhai maariya payanam17000 ரூபாய். 2 சட்டைக்கும்,2 ஜீன்ஸ் பேண்டுக்குமான பில்லை எடுத்து இனி இதுதேவையில்லை என கிழித்துப் போட்டான் சூர்யா. முதன்முறையாக வெளிநாடு செல்வதால்தான் வாங்கியப் புதுத்துணியில் ஒன்றை அணிந்தவாறு சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். நண்பர்கள் கூட்டம் ஒன்று வழியனுப்ப வந்திருந்தது. கார்த்தியை அழைத்து “மச்சான் இன்னைக்கு நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி கொடுத்துரு” என்று 5000 த்தை நீட்டினான்.

சென்னையிலிருந்து அபுதாபி, பின்அங்கிருந்து புருசல்ஸ் செல்லவேண்டும். கிட்டத்தட்ட 17 மணி நேரப்பயணம். புருசல்ஸ் சென்றடைய மறுநாள் ஆகிவிடும். இடைப்பட்ட நேரத்தில் என்னசெய்வது? அதற்காகத்தான் புதிதாக 50,000 ரூபாய் கொடுத்து i-pad ஒன்றை வாங்கியிருக்கிறோமே என்று புது i-pad ஐத் தட்டியவாறே புருசல்ஸ் வந்தடைந்தான். அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து விமான நிலையத்தை விட்டு வெளிவர சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது.

பெல்ஜியத்தில் வாழும் நண்பர் மாதவன் முன்பே கூறியிருந்ததுபோல் விமானநிலையத்திலிருந்து தான் செல்லவேண்டிய லூவன் நகருக்கு 3 யூரோ கொடுத்தால் அரசுப்பேருந்து அழகாக வந்திறக்கிவிடும். அரசுப் பேருந்திலா அதில்யார் செல்வது? நாம் சென்னையிலேயே அதில் சென்றதில்லையே இப்போது பெல்ஜியத்திலா? 80 யூரோ கொடுத்து வாடகை வண்டியில் ஏறினான்.

சொர்க்கபுரியாக இருந்தது பெல்ஜிய வாழ்க்கை. 15 நாட்கள் கடந்தன. இரவு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது “டிங்” என தன் அலைப்பேசியில் வந்து விழுந்தது புதிய குறுஞ்செய்தி ஒன்று. கடந்தமாதம் கடன் அட்டை மூலம் வாங்கிய பொருட்களுக்கான பில். தொகை 1,43,567 ரூபாய். மொத்தத் தொகையையும் இப்போது எதற்குச் செலுத்த வேண்டும், தற்சமயம் குறைந்தபட்ச தொகை 23,567 ஐமட்டும் செலுத்திவிடலாம் என்று தன் மடிக்கணினியை எடுத்துக் கடனைச் செலுத்தினான்.

தான் வந்திருந்த ஒருமாத காலத்திற்கான வேலை முடிவடையும் நிலையில் இருப்பதால், கடைசிநாள் தனக்குத் தேவையான கைக்கடிகாரம், வாசனைதிரவியங்கள், உடைகள், நண்பர்களுக்காக விலை உயர்ந்த மதுபாட்டில்கள் என்று அனைத்தையும் வாங்கிவைத்துக் கொண்டான். ஏதோ ஒன்றை மறந்து விட்டதாக யோசித்துக் கொண்டே அறைக்கு வந்து சேர்ந்தான். நினைவு வந்ததும் மறுபடியும் ஓடிச்சென்றான் கடைவீதிக்கு.

30 யூரோவில் ஒருசட்டையும் 45 யூரோவில் ஒருஜீன்ஸ் பேண்டும் வாங்கினான். விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் புதுத்துணிதானே அணிய வேண்டும்.

காலை 10.10 க்குப்புறப்படும் விமானத்திற்கு 8 மணிக்கே ஒருடாக்ஸி எடுத்துக்கொண்டு புருசல்ஸ் விமானநிலையம் வந்தடைந்தான். வண்டிக்கான வாடகை அதே 80 யூரோ. இம்முறையும் புருசல் சிலிர்ந்து அபுதாபி பின் அங்கிருந்து சென்னை.

அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து விட்டு விமானநிலையத்தினுள் காத்திருந்தான். அவனுடன் இன்னும் பலர். 9.45 மணிக்கு ஒலிபெருக்கியில் ஒலித்தது அவனைக் கோபமடையச் செய்தது. அபுதாபி செல்லும் விமானம் ஒருமணிநேரம் தாமதம். ஒருவழியாக ஒருமணி நேரத்தாமதத்திற்குப் பின் விமானம் அபுதாபியை நோக்கிப் புறப்பட்டது. 7 மணிநேரப்பயணம். துணைக்கு மீண்டும் அதே i-pad.

அபுதாபி வந்திறங்கியதும் சென்னை செல்வதற்கான விமானத்திற்கு நேரமாகிவிட்டது. ஓடினான் மூச்சுவாங்க ஓடினான். சென்னை செல்லும் விமானம் மேலே பறந்தது இவனை விட்டு விட்டு. கோபத்தின் உச்சத்திற்குச் சென்றவன் அங்கிருக்கும் பணிப்பெண்ணிடம் கத்தினான். விட்டுச்சென்ற விமானத்தைத் திரும்பவரச் சொன்னான். ஒன்றும் நடக்கவில்லை.17 மணிநேரம் காத்திருக்கச் சொன்னாள். எவ்வளவோப் பேசிப்பார்த்தான். ஒன்றும் எடுபடவில்லை காத்திருப்பதைத்தவிர.

paadhai maariya payanam2இவனுடன் இன்னும் ஒருவர். சீவாத தலைமுடி, கசங்கியசட்டை, பழையஜீன்ஸ், கையில் ஒரு அட்டைப்பெட்டி. விமானத்தில்வருவதற்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாமல். வேறு வழியில்லாமல் பேசத்தொடங்கினான்.

என்பேருசூர்யா. உங்கபேரு?

சிராக்.

சென்னை தானா?

ஆமா.

பேரைப்பார்த்தா தமிழர்மாதிரி தெரியலையே?

குஜராத்தி. ஆனால் பிறந்து வளந்ததெல்லாம் தமிழ்நாடு தான்.

நா சென்னைல ஒரு I.T. கம்பனில வேலை செய்றேன். வேலை விஷயமா பெல்ஜியம் போய்ட்டு வரேன்.

ஓ! I.T. கம்பனியா? அப்போ மூளைக்காரர்னு சொல்லுங்க.

அப்படிலாம் இல்லசார்.நீங்க?

நா பிசினஸ்.

இந்தாங்க என்னோட விசிடிங்கார்ட். உங்களோடது?

இந்தாங்க சார்.

17 மணிநேரம் காத்திருக்க முடியாது.வேற ஏதாது வழி இருக்கான்னு கேப்போமா?

சரி சார்.

இரண்டு பேரும் சென்று, அங்குள்ள பணிப்பெண்ணிடம் மீண்டும் ஏதாவது வழி இருக்கிறதாவென்று கேட்டனர்.

நேராகச் சென்னைக்கு இல்லை. புனே போய் அங்கிருந்து சென்னை. பரவாயில்லையா? அதுதான் உடனே இருக்கிறது என்று பதில் வந்தது.

17 மணிநேரம் காத்துக்கிடப்பதற்கு, அதே பரவாயில்லை என்று எண்ணிய இருவரும் சரி என்றனர்.

மாற்றுப் பாதைக்கான டிக்கெட் இருவருக்கும் வழங்கப்பட்டது.

புனே விமானம் புறப்பட்டது. மூன்று மணி நேரப்பயணம். புனே வந்தடைந்தனர்.

புனேவிலும் ஒரு அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது இருவருக்கும். ஆம் சென்னை விமானம் சற்று முன்புதான் கிளம்பியதென்று. என்னதான் சண்டை போட்டாலும், உயர் அதிகாரியைப் பார்த்துப் பேசினாலும் எடுபடவில்லை. 9 மணிநேரக் காத்திருப்புதான் மிஞ்சியது. தங்குவதற்கு ஒரு அறையாவது கிடைத்ததா அதுவுமில்லை.

சிராக்சார்,பேசாம வெளில ஒரு ரூம் போட்ரலாமா?

சரிசார் போட்ரலாம்.

டாக்ஸி ஒன்றில் ஏறி, அருகிலிருக்கும் விமான் நகர் லேக்-வியுவ் ஹோட்டலுக்குச் சென்று ஒருஅறை எடுத்து இருவரும் தங்கலாம் என்று முடிவெடுத்தனர்.

ஒரு நாள் வாடகை எவ்வளவு?

3500 ரூபாய் என்றார் மனேஜர்

சிராக் சார் ஓகேவா?ஷேர் பண்ணிக்கலாமா?

எனக்கு ஓகே.

கேஷ் ஆர் கார்ட் என்றார் மனேஜர்.

என்ட கார்ட்தான், சிராக்சார்உங்கள்ட?

என்ட பணம் தான் சார். கார்ட்யூஸ் பண்ற பழக்கமில்லை.

சரிசார் நா இப்போ குடுத்துறேன். அப்புறம் பாத்துக்கலாம்.

அறை எண் 303 தரப்பட்டிருந்தது. தொலைதூரப் பயணக்களைப்பு இருவரையும் ஆழ்ந்த உறக்கத்துக்குத் தள்ளியது. 5 மணிநேர உறக்கம். எழுந்து குளித்துவிட்டு இருவரும் சாப்பிடச் சென்றனர்.

சிராக் சார் உங்களுக்கு மட்டனா, சிக்கனா?

ஐயோ நாசுத்த சைவம் சார்.

ஓ அப்படியா?

ஆமா.

சிராக் சார் உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே?

நா பிறப்பால் குஜராத்தி, ஆனா வளர்ந்ததெல்லாம் தமிழ்நாடுதான். இன்ஜினியரிங் படிச்சேன் ஆனா கடைசியில அப்பா பிசினஸ்கே வந்துட்டேன்.

என்ன பிஸ்னெஸ்?

மின்பொருள் மொத்த வியாபாரம். குஜராத்திக்காரங்களுக்கு எப்போதுமே பிசினஸ்மேல ஒருபெரிய ஈடுபாடு இருக்கும். என்னதான் படிச்சாலும், கடைசியா பிசினஸ் பண்ண வந்திருவோம்.

தமிழ் நாட்ல கூட நெறையா பிசினஸ் மேன் இருக்காங்களே சார்.

இருக்காங்க ஆனா எங்களுக்கும் அவங்களுக்கும் ஒருபெரிய வித்யாசம் இருக்கு சார்.

பெரிய வித்யாசமா?அப்படி என்னசார்?

தமிழ் நாட்டுக்காரங்க பணத்த எப்படிப் பெருக்கவேண்டும்னு மட்டும்தான் யோசிப்பாங்க. ஒருபோதும் சம்பாதிச்சப் பணத்த எப்படி செலவு செய்றோம்னு எண்ணிப் பார்க்கமாட்டாங்க. ஆனா நாங்க பணத்த எப்படி பெருக்கனும்னு யோசிக்கும் போது சம்பாதிச்சப் பணத்த எப்படி செலவு செய்யணும்னு ஒரு முறைக்கு பத்து முறை யோசிப்போம்.

சூர்யா எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆங்கிலத்தில் ஒருபுத்தகம் இருக்கு “Rich dad poor dad” னு. முடிஞ்சா வாங்கிப்படிங்க. கதைச்சுருக்கம் என்னன்னா ஒருஏழை அப்பா தன் மகனிடம் “நல்லா படிக்கனும் மகனே, நல்லாப் படிச்சு ஒருபெரிய கம்பனிக்கு வேலைக்குப் போகணும்” என்பார். ஆனால் பணக்கார அப்பா தன் மகனிடம் “நல்லாப் படிக்கணும் மகனே, பாடத்த மட்டும் இல்ல வாழ்க்கையையும் சேர்த்து படிக்கணும். படிச்சிட்டு அந்த பெரிய கம்பெனி போல நீயும் ஒரு பெரிய கம்பனிக்கு முதலாளி ஆகணும்” என்பார். இதில் இரண்டாவது வகைதான் நாங்க.

சூர்யாவால் கேட்பதைத்தவிர வேறொன்றும் கூறமுடியவில்லை.

நான் பணத்தைச் சம்பாதிப்பதை விட, அதை செலவு செய்யும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பேன். இந்தச் செலவு தேவைதானா என்று. கஞ்சன் என்பார்கள், சொல்லி விட்டுப் போகட்டும்.என் வீட்டில் 6 சொகுசுகார்கள் இருக்கு. இருந்தும் என்பையன சைக்கிள்ல தான் ஸ்கூலுக்கு அனுப்புவேன். அவனும் வாழ்க்கைய, பணத்தின் அருமைய கத்துக்கிடட்டும் என்பதற்காக.

சூர்யா வாயடைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

நா ஒருபோதும் அட்டையைப் பயன்படுத்தியது கிடையாது. பணத்த எண்ணிச் செலவழிக்கும் போதுதான் அதை சம்பாதித்த வலிதெரியும். அட்டையைத் தேய்த்தால் தெரியாது. கேட்டால் பழமைவாதி என்பார்கள். இருந்து விட்டுப் போகட்டும். யோசிச்சுப் பாருங்க நம்ம அப்பாவும், தாத்தாவும், பாட்டனும் எந்த வங்கியின் அட்டையை வைத்திருந்தார்கள்? பணத்தை எண்ணித்தானே செலவழித்தார்கள். அதனால்தான் நாம் இன்று இப்படி இருக்கிறோம். பணம் கையில் வைத்திருந்தால் பாதுகாப்பில்லை என்பார்கள். அட்டையில் இருக்கிறதா? அட்டை மோசடி நடப்பதே இல்லையா? என்அப்பா அந்த காலத்திலேயே ஒரு லட்ச ரூபாயை மடியில் கட்டிக்கொண்டு வியாபாரம் செய்தவர். நம் மடியைவிட அட்டைப் பாதுகாப்பானதா? நான் ஒருநாளும் செலவு செய்வதற்கு யோசிச்சதில்லை. அத்யாவசியமான்னு மட்டும் பார்ப்பேன். இருந்தா கண்டிப்பா செலவழிப்பேன்.

சொன்னாத் தப்பா நெனச்சுக்காதீங்க சூர்யாசார், நீங்க 3 மாசம் பேங்க்கார்ட் இல்லாம கையில் பணத்தை எடுத்து செலவு செஞ்சுப்பாருங்க சார், மாற்றம் கண்டிப்பாத் தெரியும்.

சூர்யாவால் “உம்” என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.

அவர் சொல்லி முடிப்பதற்கும் சென்னை வருவதற்கும் சரியாக இருந்தது.

அலைப்பேசியில் தன் மனைவியை அழைத்த சூர்யா.

சென்னை வந்துட்டேன். கார எடுத்துட்டு ஏர்போட்டுக்கு வா.

சரிங்க வாரேன்.எங்க வரணும்?

கரெக்டா உள்ள இருக்குற கேட் நம்பர் 3 கிட்ட வந்துரு.

சரிங்க வந்துரேன்.

அருகில் சிராக்சார் தன்மகளிடம்.

சென்னை வந்துட்டேன். காரஎடுத்துட்டு என்னக்கூப்பிடவா.

சரிப்பா வந்துரேன். உள்ள வந்தா அனாவசியமா 150 ரூபாய் டோக்கன் வாங்கணும், பக்கம்தான நீங்க அப்படியே வெளிய நடந்து வந்துரீங்களாப்பா, ப்ளீஸ்?

சிராக் சார் சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினார்.


வெங்கடேஷ்.மு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாதை மாறிய பயணம்(சிறுகதை)”

அதிகம் படித்தது