மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா

முனைவர் மு.பழனியப்பன்

Dec 24, 2016

siragu-bharathidasan1

பாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும்,  நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின் சிறிய கவிதை முதல் காப்பியம் வரை இப்பொதுவியல்பு காணப்படும். அவரின் ஒரு நெடுங்கவிதை திருவாரூர் தேர் என்பதாகும். இது அருள்சுடர் பதிப்பகம் வெளியிட்ட பாரதிதாசன் கவிதைகள்  என்ற தலைப்புடைய முழுத்  தொகுப்பில், குயில் பாடல்கள் என்ற பகுதியில் உள்ளது.  இக்கவிதையில் நகையுணர்வும், புரட்சிக் கருத்துகளும் அமைந்து சிறக்கின்றன. எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றால் எதற்காக ஓரிடத்தில் எல்லா மக்களும் சென்று நெருக்கடியை உண்டு செய்யவேண்டும் என்ற அடிப்படைக் கேள்வியை முன்வைக்கும் நிலையில் இக்கவிதை வரையப்பெற்றுள்ளது.

திருவாரூரில் அருள்மிகு தியாகராசர் மூலக்கடவுளாக விளங்குகிறார். அவருக்குத் தேர்த் திருவிழா நடைபெறும். அத்தேர்த்திருவிழாவில் மக்கள் அதிக அளவில் கூடுவர். இத்தேர் ஆழித்தேர் என்று அழைக்கப்பெறும் அளவில் மிகப் பெரிதானது. எண்கோணத்தில் இருபது பட்டைகள் உடையதாய் முன்னூற்று ஐம்பது டன் எடை கொண்டதாக இத்தேர் விளங்குகிறது. பாரதிதாசன் காலத்தில் இத்தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது. அத்தேர்த் திருவிழாவைக் காண அக்காலத்தில் புகைவண்டியில்தான் செல்லவேண்டும். இதற்காக மக்கள் புகைவண்டியில் பதிவுசெய்ய முண்டியடித்தனர். தேருக்கு முதல் நாள் புகைவண்டியில் ஏறுவதற்கு இயலாத நிலை. மக்கள் கூட்டம் கூட்டமாக திருவாரூர் தேர் காண வந்த காட்சியை, அவர்கள் அக்கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பதை பாடமாக படிப்பவர்முன் சித்தரித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.

திருவாரூர் புறப்பட்ட செல்வர் நிலை செல்வர்கள் வசதியாகப் புகைவண்டியில் செல்லத் திட்டமிட்டு முன்பதிவு செய்துகொண்டனர்.

“செல்வர்கள் பின்னாள் புகைவண்டிச் சீட்டுப் பெறும் பொருட்டு  முன்னாள் பதிவை முடித்தார்கள்” என்று அவர்களின் நிலையைப் பாரதிதாசன் பாடுகிறார்.

எளியோர் நிலை

செல்வமற்ற எளியோர்கள் திருவாரூர் போக வேண்டும் போக வேண்டும் என்று சொல்லி அங்கும் இங்கும் திரிந்தார்களே தவிர  செல்வதற்கான ஒரு வழியையும் காணவில்லை. கல்லு உப்பு ஈரம் பட்டால் கசிவதுபோல் மனம் கசிந்தார்களே தவிர அவர்கள் திருவாரூர் செல்ல வழிகாணவில்லை.

திருவாரூர்த் தேர் திருவாரூர்த் தேரென்று
தெருவாரும் ஊராரும் சேர்ந்த — திருநாட்டார்
நெல்லுப் பொரிபோற் குதித்தார்கள், நீள் அன்பால்
கல்லுப்பாய் நெஞ்சு கரைந்தார்கள்!

இவ்வாறு கரைந்தவர்கள் செல்லும் வழி காணாமல்  பயணத்திற்குக் கொண்டு போகவேண்டிய பொருள்கள் பலவற்றைச் சேர்த்துக்கொண்டே இருந்தார்கள்.

siragu-bharathidasan

பொருள்களின் பெருக்கம்

வெளியூர் செல்லும்போது வசதிகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குப் பதிலாக இங்கே மக்கள் தங்கள் அறியாமையால் நிலங்களை அடகு வைத்து வசதிகளைப் பெருக்கிக் கொள்ள விழைகின்றனர். அடகு வைத்துக் கிடைத்த பணத்தில் வெள்ளி கூசா, புலித்தோல் கைப்பெட்டி, போர்வை போன்றன வாங்கினர். புகைவண்டி ஏறும் நாளில் புகைவண்டி நிலையம் செல்ல வண்டிக்கு அச்சாரமாகப் பெரும்பணத்தைத் தந்தனர். தான் மட்டும் செல்லதல்லாமல் தங்கள் உறவினரிடத்தில் தாங்கள் செல்ல இருப்பதைச் சொல்லி அவர்கள் மனதிலும் பேராசையைக் கிளப்பிவிடடனர். தேர் பார்க்கப்போவது குறித்து வாய்ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தனர்.

உணவுத் தயாரிப்பு

செல்லும் இடத்தில் உணவுக்குத் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற அளவில் பெருமளவில் உணவுப் பொருள்களைச் செய்ய மக்கள் முற்படுகின்றனர். பொரி விளங்காய் உருண்டை, போளி, எள்ளுருண்டை (400), வெல்லத்தால் செய்யப்பட்ட  கொழுக்கட்டை, வேர்க்கடலை, கொல்லிமலையில் விளையும் வாழைச் சுழியன், வடை, பொரிமா, உப்புமா, எருக்கங்காய், கைமுறுக்கு போன்றன செய்து பெண்கள் வைத்தனர். அவற்றை பானை, சட்டி, பெட்டி, சால் போன்றவற்றில் ஆண்கள் அடுக்கி வைத்தனர். பாடலில் கைமுறுக்கு பெருமளவு பாரதிதாசனால் சுவையூட்டப்பெற்றுச் சொல்லப்பெற்றுள்ளது. “தாழாமல் வேகையிலே நெய்மணக்கும்; வெந்தபின் எள்மணக்கும் பாகத்துக் கைமுறுக்கும் பண்ணியே” என்று கைமுறுக்கின் தன்மையைப் பாடலாக்கியுள்ளார் பாவேந்தர். இவை தவிர பொட்டுக்கடலையுடன் கலந்த பொரியைப் பயண இடைவெளியல் உண்பதற்காக எட்டுத் தகரத்தில் ஏற்றி வைத்திருந்தனர்.  இவையெல்லாம் சேர்ந்துச் சிப்பங்களாக ஐந்து, பத்து என்ற அளவில் வளர்ந்து இருந்தன.

திருவாரூரில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல்

திருவாரில் தேர் நடைபெறுவதால் பல்வேறு கடைகள் அங்கு விரிக்கப்பெற்றிருக்கும். அவற்றில் என்ன என்ன வாங்குவது என்று பட்டியல் போடவும் மக்கள் தொடங்கியிருந்தனர். துடைப்பம், மண்சட்டி, வடிதட்டு, சின்னக் கரண்டி, சீப்பு, முத்துவளையல், நீலக்கண்ணாடி, குண்டு மணிகோத்த அணிமாலை, துணிமணிகள், பட்டுக் கரைவேட்டி, சீட்டித்துணி, தாழை நிறத்தில் புள்ளி வைத்த சேலை, தடுக்கு என்று அடுக்கடுக்காய் பலரும் பலவகையாய்ப் பொருள்களின் பட்டியலைச் சொன்னார்கள். குறிப்பாகச் சீட்டித் துணி கமலாலயம் என்னும் திருவாரூர் குளக்கரையில் கிடைக்கும் என்று பாரதிதாசன் பாடுகிறார். “கமலாலை யத்துக் கடையிலுள்ள சீட்டி எமலோகம் ஏகிடினும் சாயம் கமராது” என்று எமலோகம் வரை சீட்டித் துணியின் புகழ் பரவியிருந்தது.   இவ்வாறு அனைத்து வேலைகளும் செய்து முடிக்க புறப்படும் நாளின் முதல் நாளின் நள்ளிரவு வந்துவிட்டது. விடிந்தால் பயணம் என்ற நிலையில் எவரும் தூங்கவில்லை.

siragu-bharathidasan3

அச்சாரம் கொடுத்த வண்டி அம்பாராமாய்ப் பொருள் சுமந்தது. அச்சாரம் கொடுத்துப் பேசியிருந்து மாட்டுவண்டி புகைவண்டி நிலையத்திற்குப் போகச் சரியாய் வந்து நின்றது. அதனுள் பொருள்கள் ஏற்றியதும் அதன் இடம் அடைந்து போனது. எனவே பல்வேறு முயற்சிகள் செய்து அவ்வண்டியில் பலரும் ஏறி அமர்ந்தனர். வண்டிமீது கூண்டு கட்டினர். அதில் பாக்கு அடைத்த பை போல் மக்கள் ஒடுங்கினர். மேலும் வண்டியோட்டி அமரும் அச்சிறு இடத்தில் வண்டியோட்டியோடு ஒருவன் ஒட்டிக் கொண்டான். அவ்வண்டியில் ஒரு கையால் வேட்டியைப்பற்றி, ஒரு தொடையால் மண்டி போட்டு,சொரி, சிரங்குமாய் தொங்கிய தொப்பையோடு ஏறினார். மற்றவர்கள் சிப்பங்களை வண்டியின் மேற்பகுதியில் கட்டினர். படுக்கைகளை வண்டியின் கீழ்ப்பகுதியில் கட்டினர். கைப்பெட்டிகளை நீட்டுக் கயிற்றினால் பிடியைக் கட்டித் தொங்கவிட்டனர். வெற்றிலைப் பாக்குப்பெட்டி, வெல்லம் ஆகியவற்றை மாதர்கள் தம் மடியில் வைத்துக்கொண்டனர். வண்டியில் தொட்டில்கட்டிக் குழந்தைகளின் கால்கள் வெளித்தொங்கும்படி அமைத்துக்கொடுத்தனர். அழும்பிள்ளையைப் பாட்டி மடியில் பதுக்கி வண்டியை ஒருவழியாய் கிளப்பினர். சிவா சிவா என்றுச் சொல்லியடி நூறாயிரம்பேர் நிலையம்  நோக்கி நடந்தனர். ஒருவழியாய் இந்த ஊர்வலம் நிலையத்தில் நின்றது. அங்கு சொல்லுக்கடங்காத கூட்டம். தமிழ்நாடே அங்கிருந்தது.

வண்டி வந்தது முண்டி அடித்து ஏறியது கூட்டம். திங்கள் கிழமை காலை புதுச்சேரிக்கு வந்த புகைவண்டியில் அனைவரும் ஏற முற்பட்டனர். வண்டி கதவு திறந்ததும் பிள்ளைகள் கைபிடித்து குண்டானோடு ஏற முயல்வாள் ஒரு பெண். வண்டியில் இருந்து பெருங்கூட்டம் ஏறுபவரை ஏற விடாமல் தடுத்துக் கீழிறங்குப் பாடாய்ப்படும்.  நாய்போல் குரைச்சல் ஒருபுறம்,  வள்வள் என்று இரைச்சல் ஒருபுறம். எள்போட்டாலும் கீழ் விழாத நெருக்கம். இதைப் பார்ப்பவர்கள் எள்ளி நகைப்பர். எல்லோரும் செல்லப்பர் ஆகி நின்றிருந்தார். செல்வமும், அறிவும், அருளும் நிரம்பிய செல்லப்பர் என்பவரும் இக்கூட்டத்துடன் வந்தார். அவர் ஒருவரே செல்லப்பர் என்ற நிலை மாறி தடைகள் மீறிச் திருவாரூர் செல்லும் அனைவரும் செல்வதால் அப்பர் ஆனார். செல்லப்பர் ஆனார் எல்லாரும். ஒருவழியாய்த் திருவாரூர் வந்துற்றனர்.

“ஒருவர்மேல் ஒருவர் விழுந்தும் எழுந்தும், உருண்டும் புரண்டும் ஒட்டியும் நெட்டியும் வெருண்டும் வெகுண்டும் அடித்தும் கடித்தும், செல்வதுதானா திருவிழா?” என்றொரு கேள்வியைப் பாரதிதாசன் இந்த இடத்தில் கேட்கிறார்.

நெருக்க மிகுதி

திருவாரூர் வந்து சேர்ந்த கதை இவ்வாறு இருக்க, தேர் பார்க்க அளவில்லா மக்கள் கூட்டம். செக்கில் அகப்பட்ட எள் போல கிழவியர் பலர் அக்கூட்டத்தில் சிக்கினர். அவர்கள் இரத்தம் பாய்ந்த நிலையில், தோல்போல் வீதியின் வீசப்பட்டனர். அவர்களின் மீது “தேர், தேர்” என்று சொல்லிப் பலர் மிதித்துச் சென்றனர்.

புதிதாய்த் திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் இக்கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டனர். அயலார் விரல் பட்டறியாத அவ்விளம்பெண் எங்கே போனாள் என்று தெரியவில்லை. அவளைப் பிடிப்பதாக எண்ணி வேறு ஒரு பெண்ணின் கையை அவளின் கணவன் பிடித்திழுத்தான். அப்பெண் “பாவி” என்று அவனை அறைந்தாள்.

குட்டையும் நெட்டையுமாய் இணைந்த ஆணும் பெண்ணும் அக்கூட்டத்தில் வதைபட்டனர். குள்ளமாய்  இருந்தத் தன்மனைவியைத் தூக்கித் தேரைக் காண்பித்தான் கணவன். பார்த்து முடித்ததும் குதித்தாள் அப்பெண். குதித்தவள் மற்றொருவன் தோளில் விழுந்தாள். ஐயோ என்று அலறி அவள் தன் நெஞ்சை இருகைகளால் பொத்திக் கற்பைக் காக்க சாக்காட்டைத் தழுவப்போனாள். “மலையினின்று மளமள வென்று, சரியும் சரிவின் நடுவிற் கொடியைப், பிடுங்குவான் போலப் பேதை ஒருத்தியை, மக்கள் நெருக்கில் சிக்காது காக்க, அணைத்தபடி சென்ற அருமைக் கணவன், சிறிது தொலைவு சென்று திரும்பி, அவள் முகம் கண்டான், ஆயினும் அவளின் இடுப்புக் குழந்தையின் தலையைக் காணான்” என்று குழந்தையின் தலையறுந்த சோதனையைக் காட்டுகிறார் பாவேந்தர்.

விழாவிற்கு வந்த எல்லாரும் விழாமல் இல்லை. விழுந்தே கிடந்தனர். கன்னியர் அழுவார், காளையர் அழுவார். ஏன் என்று கேட்பார் எவருமே இல்லை! தள்ளலும் இடித்தலும் தளரலும் உளரலும் குறைந்த பாடில்லை எங்கும் குறைபாடு.

மடத் தம்பிரான் வருகை

இந்தக் கலவரம் மிக்கச் சூழலில் மேளம் கொட்ட சிவிகையில் வந்தார் மடத்தலைவர். அவர் வடம்பிடிக்கத் தேர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரிடம் செல்லப்பர் சென்று “பார்த்தீரா மக்கள் கலக்கம்! நீங்கள் இதனைக் கட்டுப்படுத்த யாது செய்தீர்” என்று கேட்டார். அதற்கு அவர் “எம் பெருமான் ஆற்றல் பெருக்கம்” என்றார். சொல்லியவர் கூட்டத்தில் புகுந்து சென்றார்.

பக்தியில் பகுத்தறிவு

இந்நெடுங்கவிதையின் நிறைவில் பகுத்தறிவுச் சிந்தனையைத் தன் புரட்சிக் கருத்துரையாக வடிக்கிறார் பாவேந்தர்.
“எண்ணுவார் நெஞ்சில் தன்னுருக் காட்டித்
தண்ணருள் புரிவது சதாசிவன் வேலை
அப்படி யிருக்க மக்கள் ஐயோ
ஆரூர் வருவதேன்? அல்லல் அடைவதேன்?”
என்ற வினாவைச் செல்லப்பர் கேட்கிறார். மேலும் செல்லப்பர் மக்களைப் பார்த்து ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

“மக்களே, மக்களே! திருவாரூர்க்கு
வருதல் வேண்டா! வாழ்ந்திருக்கின்ற
அங்கங் கிருந்தே அப்பனை எண்ணுவீர்,
அகத்தில் அப்பனைக் கண்டு தொழுவீர்,
இங்குவந் திப்படி இன்னல் எய்தாதீர்.
ஒத்துத் தம்பிரான் உங்களை நன்றாய்ப்
பத்தாயிரம் ஆண்டு சிவத்தில் பயிற்றினார்!
ஆரூர் அப்பனை அங்கிருந்தபடி
தேரோடு நெஞ்சில் சேர்க்கும் ஓர் ஆற்றலைப்
பெற்றிடவில்லை என்றால்
வெற்று வெடிக்கஞ்சிய நாள்கள் வீணே!||
என்று பகுத்தறிவு மேம்பட உரையாற்றுகிறார் செல்லப்பர். செல்லப்பர் சென்ற வழி பக்தியில் பகுத்தறிவு காணும் வழியாகும். வெற்றாக வீசப்படும் வெடி, ஒலி மட்டுமே தரும். அதுபோல திருவிழாவுக்கான பக்தி வெற்று ஆடம்பரமே ஆகும். குறிப்பாக திருவாரூர் தேர் பார்க்க இறைவனைப் பார்க்க வந்த நோக்குமுடையவர் கூட்டம் ஒன்றிரண்டு மட்டுமே. கடைவீதி, வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே திருவிழாவில் அதிகம். அதைத்தான் பாரதிதாசன் இக்கவிதையின் முன் பகுதியில் காட்டுகிறார்.

பாரதிதாசன் திருவிழாவே வேண்டாம் என்று சொல்லவில்லை. அவரவர் ஊரில் அவரவர் மனதில் திருவாரூர்த் தேர்த்திருவிழாவைப் பக்தியுடன் கண்டாலே ஆண்டவனை அடைய இயலும். பத்தாயிரம் ஆண்டாக மடத்தலைவர் இதையே சைவம் என்று பயிற்றி வருகிறார். இதன்படி நடக்கத் தமிழ் மக்களைப் பாவேந்தர் அழைக்கிறார்.  கருத்தை நகைச்சுவையுடன் பகுத்தறிவுடன், தமிழ் நாடே அறிந்து கொள்ளும் நிலையில் வடித்துத் தந்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா”

அதிகம் படித்தது