மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாவேந்தரும் பாவலரேறும்

தேமொழி

May 15, 2021

siragu-pavendharum-pavalarerum1

பாவேந்தர் பாரதிதாசனுக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கும் கொள்கைகளிலும் தமிழ் இலக்கியப் பங்களிப்பிலும் ஒற்றுமைகள் பற்பல. அவர்கள் கருத்துக்கள் வேறுபடுவது மிகக் குறைவே. முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் பாவேந்தரையும் பாவலரேறையும் ஒப்பிட்டு “பாரதிதாசனும் பெருஞ்சித்திரனாரும்” என்ற ஓர் ஒப்பியல் நூலை வழங்கினார். அதில் ‘பாடு பொருளும்’ படைப்பாளுமையும், தமிழுணர்வு, குமுகநோக்கு, கதைநெடும் பாடல்கள், சொல்லாட்சியும், நடையும் என ஐந்து இயல்களில் பாரதிதாசனையும் பெருஞ்சித்திரனாரையும் ஒப்பியல் நோக்கில் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார்.

தமிழுணர்வு இருவருக்கும் அடிப்படை இணைப்பு இழை, அதில் பாக்கள் என்னும் பூக்களால் தமிழ்ப்பாமாலை தொடுத்து தமிழன்னைக்கு அணிவித்து அழகு பார்த்தவர்கள் இவ்விரு பாவலர்களும்.

புதுவை வாணிகராக இருந்த கனகசபை என்பார்க்கு மகனாகப் பிறந்த கனக. சுப்புரத்தினம், பிற்காலத்தில் பாரதிதாசன் என்ற புனைபெயர் தாங்கி

     “நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்,

          நான் நான் நான்”  என்று முழங்கி

     “எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

          தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

     தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்

          செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”  என்று அறிவித்து

     “என்தமிழ் அன்னை துன்பம் நீங்கித்

          தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன்,

     என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்

          துலங்கிடுதல் காண்பேன், தமிழர்

     நலங்காண் பேன்தான் நானில மீதிலே”

என்று தன் தமிழ்ப்பற்றை அறிமுகப்படுத்திக் கொண்டார் தமிழ்ப் பாவேந்தர்.

பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற இலக்கியங்களில் பாவேந்தர் வடித்துத் தந்த வாழ்வியல், இயற்கை, சீர்திருத்தம் போன்ற அருந்தமிழ்ப் பாக்களால் கவரப்பட்டவர் பெருஞ்சித்திரனார்.

சேலம் மாவட்டம், சமுத்திரம் என்ற ஊரைச் சார்ந்த துரைசாமியார் என்பார்க்கு மகனாகப் பிறந்த இராசமாணிக்கம், அவர்தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை. மாணிக்கம் என்று அறியப்பட்டார். மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் தலைமாணாக்கரான இவர் ‘தென்மொழி’ இதழைத் தொடங்கி நடத்தியபொழுது, அரசுப்பணியில் இருந்த காரணத்தால் தனித்தமிழ் இயக்கக் கொள்கை கொண்ட இதழில் பெருஞ்சித்திரனார் என்ற புனைபெயர் தாங்கி எழுதினார். இவரின் தமிழ் உணர்வு பொங்கும் பாடல்களைப் பாராட்டி பாவாணர் அவர்கள் “பாவலரேறு” என்னும் சிறப்புப் பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

     “என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்

          எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு

     எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்

          புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்

     பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)

          பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!”

என்ற தமது கொள்கையை அறிவித்து அதன் வழி இறுதிவரை வாழ்ந்தவர் பெருஞ்சித்திரனார்.

தமிழ் உணர்வு தழைத்தோங்கப் பாடுவதிலும் தமிழுக்காகப் பாடுபடுவதிலும் உள்ளத்தால் இணைந்தனர் இருவரும்.  பெருஞ்சித்திரனார் புதுவையில் பணியாற்றிய ஐந்தாண்டுக் காலம் (1954 முதல் 1959 வரை) இருவரும் இணைந்து இலக்கிய உலகில் இன்ப உலா சென்ற காலத்தில் பாவேந்தரின் குடும்பத்தில் ஒருவாராகவே மாறிப் போயிருந்தார் பெருஞ்சித்திரனார். ஒருமுறை பாவேந்தருக்கும் அவரது மகனாருக்கும் மனவேறுபாடு காரணமாகத் தனித்தனியே பிரிந்து வாழ்ந்த காலத்தில் அவர்கள் இடையே உள்ள பூசலைக் களையச் செய்ய அவர் எடுத்த முயற்சி வெற்றி பெறாவிட்டாலும் தம்மால் இயன்ற பெரு முயற்சியைச் செய்தவர் பெருஞ்சித்திரனார்.

இருப்பினும், இதற்கும் முன்னரே, பெருஞ்சித்திரனார் தனது மிக இளவயதிலேயே, அவர்தம் பதினான்காவது அகவையிலேயே எழுதியிருந்த ‘மல்லிகை’ ‘கொய்யாக்கனி’ என்ற இரண்டு பாவியங்களை புதுவைக்கு எடுத்துச் சென்று அவற்றுக்குப் பாரதிதாசனின் அணிந்துரை பெற அவரை அணுகியதுண்டு. அவரது கல்லூரிக் காலத்தில் சேலத்தில் இருந்து புதுவைக்குச் சென்று பாரதிதாசனை முதன் முதல் சந்தித்த அவரது அந்த நிகழ்வு தனது மனதுக்கு இனியதாக இருக்கவில்லை என்பதையும் பெருஞ்சித்திரனார் நினைவு கூர்ந்துள்ளார்.

அப்பொழுது பாவேந்தர், மல்லிகை”யின் முதல் பாடலாகிய,

     “கான்யாற்றின் கரையினில் நல் வஞ்சியர்கள்

          கமழ்கின்ற சந்தனத்தை யள்ளித் தம்மென்

     மேனிகளில் பூசுகின்றார்; பரிதி அந்த

          மெல்லனைய ஒண்டொடியர் மீதில் செம்பொன்

     போன்றொளியைப் பூசுகின்றான்!”

என்று பெருஞ்சித்திரனார் எழுதியிருந்த வரிகளைப் படித்துவிட்டுக், “கான்யாறு என்றால் காட்டாறு. அங்குக் குளிப்பவர்களுக்குச் சந்தனம் எங்கிருந்து வந்தது? சேறு தான் கிடைக்கும், அள்ளிப் பூசிக் கொள்ள” என்று குறைகூறிப் பாவியத்தை மேலும் பார்க்க மறுத்துத் திருப்பிக் கொடுத்துப் “பாட்டு எல்லாருக்கும் எழுத வராது: ஒரு சிலர்க்கே வரும். பாட்டுப் படிக்க வேண்டியவர்களெல்லாம் பாட்டு எழுதக் கூடாது. நீ போய் இன்னும் படி” என்று கூறி அனுப்பிவிட்டாராம். பலமுறை வேண்டியும் பாவேந்தர் நூல்களை மேற்கொண்டு படிக்க மறுத்ததால் மனமுடைந்து போனார் பெருஞ்சித்திரனார். அங்குள்ள கடற்கரைக்குச் சென்று அமர்ந்து மிகவும் வருத்தத்துடன் ‘என்னே செய்வேன்?’ புலம்பி ஒரு பாடல் எழுதினார், அதன் சில வரிகள் கீழே:

          என்னே செய்வேன்?

     “நிலைகுன்றி வாழ்கின்ற மக்கள் நெஞ்சில்

          நினைப்பூட்டும் பாடலெலாம் வரைவேன் என்று

     கலைவல்லார் பாற்சொன்னேன்; என்றன் பாட்டில்

          கருத்தில்லை’ என்கின்றார் என்னே செய்வேன்?”

பிற்காலத்தில் பெருஞ்சித்திரனார் இதை நினைவூட்டியபொழுது பாவேந்தர் ஆறுதல் கூறி அவரை அந்த நிகழ்வை மறந்துவிடும்படியும் சொல்லியிருக்கிறார். மேலும் “கொய்யாக்கனி” பாவியத்தை பாவேந்தரே தம் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டதும் அல்லாமல், அந்த நூலுக்குப் பெருஞ்சித்திரனார் மனம் நெகிழும் வண்ணம் மிகச் சிறந்த அணிந்துரையும் எழுதிச் சிறப்பித்துள்ளார்.

பாரதிதாசன் தமது இளமைக் காலத்தில் தனித்தமிழ் குறித்துப் பொருட்படுத்தாதவராக இருந்தார். அவர் எழுதிய கடிதங்களில் 1930கள் போன்ற காலகட்டத்தில் நமஸ்காரம், க்ஷேமம், சந்தோஷம் போன்ற சொற்களைப் பயன்படுத்தியவர். அவரது பாக்களிலும் இவ்வழக்கம் எதிரொலித்தது. தன் பிள்ளைகளுக்கும் சரசுவதி, கோபதி (பின்னர், மன்னர் மன்னன்), வசந்தா(பின்னர், வேனில்), இரமணி என்று பெயர் சூட்டியவர் பாரதிதாசன். தனித்தமிழ் இயக்கத்தின் ஆர்வலராக மாறிய பிறகோ தனது கதை மாந்தருக்கும் அழகு தமிழ்ப் பெயர் சூட்டி அழகு பார்த்தார். தனித்தமிழ் ஆர்வலரான பெருஞ்சித்திரனார் ஒருமுறை பாவேந்தரிடம் அவரது இளமைக்கால எழுத்துக்களில் உள்ள அயல்மொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களாக மாற்றலாமே என்று கூறிய பொழுது, இதை எதிர்பார்க்காத பாவேந்தர் சிலநொடி சிந்தனைக்குப் பிறகு, “இல்லை, வேண்டாம்!  நான் எப்படியெப்படி இருந்து வளர்ந்து இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கின்றேன், என்று மற்றவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று மறுமொழி அளித்துள்ளார். அவருடைய விடை பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு மிகவும் சரியாகவும், இயற்கையை யொட்டியதாகவும் தோன்றியுள்ளது.

பாரதிதாசனின் பாடல்களைத் தானே சிறப்பாக திறனாய்வு செய்ய முடியும் என்று கருதியவர் பெருஞ்சித்திரனார். ஒருமுறை பாரதிதாசன் பாடல்களைத் திறனாய்வு செய்தவர் ஒருவர் அதனை பாரதிதாசனிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெருஞ்சித்திரனார் கையில் கொடுத்து அவரது கருத்து என்ன என்று அறிய விரும்பியிருக்கிறார் பாவேந்தர். நூலை முழுதும் படித்த பெருஞ்சித்திரனார், “அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று சொல்லமுடியாது. உங்கள் பாடல்களின் சிறப்பியல்களை நானே எழுதலாம் என்றிருக்கின்றேன். வேறு யாரும் அதன் சிறப்புகளை அவ்வளவு எளிதில் மதிப்பிட்டு விட முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று மறுமொழி கூறியுள்ளார்.

பாவேந்தர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர், “பாவேந்தர் பாரதிதாசன்” என்ற தலைப்பிட்டு பெருஞ்சித்திரனார் பாவேந்தரின் பாடல்களைத் திறனாய்வும் செய்துள்ளார். 1. இயற்கை, 2. இனம், 3. சீர்திருத்தம் (சமத்துவம், பெண்ணியம், பொதுவுடைமை, சாதியொழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, தனித்தமிழ் வளர்ச்சி, கல்வி, பகுத்தறிவு ), 4. நாடு, 5. வீரம், 6. தமிழ் என்ற பிரிவுகளின் கீழ் பாவேந்தரின் பாடல்களை அலசி ஆராய்ந்துள்ளார். அந்நூலில் பாவேந்தர் வாழ்க்கை வரலாறு, தங்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பெருஞ்சித்திரனார் நேர்பட அறிந்த பாவேந்தரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் எனப் பல செய்திகளையும் இணைத்துள்ளார். அறிவுணர்வு மிகக் கலந்த பாடல்கள் அறநூலாகி விடும், கற்பனையுணர்வு மிகக் கலந்த பாடல்களே பாவியங்கள் என்பது பெருஞ்சித்திரனார் அவர்களின் கருத்து.

பாரதியைவிட பாரதிதாசன் சிறந்த பாவலர் என்ற கருத்து கொண்டவர் பெருஞ்சித்திரனார். இருப்பினும் பாரதி இன அடிப்படையில் மிகவும் உயர்த்திப் பிடிக்கப்பட்டார் என்று பெருஞ்சித்திரனார் உறுதியாகக் கருதினார். “பாரதியாரை விடப் பாரதிதாசன் இலக்கியத்திறனும் பாவன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும், அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப் பெறும்வகையில் மாறுபாடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல (‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’)” என்ற நூலில் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிறார். அவ்வாறு பாராட்டிப் போற்றி உயர்த்தப்படுவது யாரால் எக் காரணங்களினால் என்பதைச் சுட்டி, அவற்றின் பின்புலத்தையும் காட்டுகின்றார் பெருஞ்சித்திரனார்.

பாரதிதாசனின் மறைவிற்குப் பிறகு அவர் இயற்றிய “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு “சாகித்திய அகாடமி பரிசு” 1969 இல் கொடுக்கப்பட்டது. விருதுக்கான அந்நூலின் தேர்வு குறித்து பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு மிகுந்த மனக்குறை உண்டு. இது விருது அளிக்கும் பெயரில் நடந்த வஞ்சம் என்று கருதுகிறார்,

“அவர் (பாவேந்தர்) நூல்களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறு பட்ட நாடக வடிவில் உள்ளதுமான “பிசிராந்தையார்” என்னும் நூலுக்கு – அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே “சாகித்திய அகாடமி பரிசு” கொடுக்கப்பெற்றுள்ளது. இது தமிழர்களையும் இவர்தம் ஆற்றலையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும்,” என்று குமுறுகிறார்.  இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நூல் தேர்வு சரியன்று என்று இது போன்ற ஒரு கருத்து இருந்ததுண்டு.

பெருஞ்சித்திரனார் பாரதிதாசன் புகழ்பாடும் பலவிழாக்களில் தலைவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்க நேர்ந்த பொழுதெல்லாம் பாரதிதாசன் பாடல்களை நன்கு திறனாய்வு செய்து உரையாற்றியும், அவற்றைப் பாக்களாகவே படித்தும் உள்ளார். விழாக்களைக் காட்டிலும் பாரதிதாசனைச் சிறப்பிக்க “தமிழியக்கம் தொடங்குக!” என்பதே அவரது அறிவுரை. “பாவேந்தர் நினைவிதழ்கள் வெளியிடுவதும், நினைவு விழாக்கள் கொண்டாடுவதும் வெற்று ஆரவார நிகழ்ச்சிகளே! தமிழியக்கத்தை உருவாக்கு வதற்கென்று அவர் செய்து தந்த சங்கையும், போர்ப்பறையையும் தமிழர் தம் கைகளில் எடுத்துப் போரொலி ஊதுதலும் அறைந்து முழங்குதலும் வேண்டும்” என்பதே அந்த அறிவுரை.

     “தனித்தமிழை வலியுறுத்தித் தமிழியக்கம் செய்தான்!

          தான்தொடக்கத் தெழுதிவிட்ட கலவைநடை போல

     இனித்தாளில் எழுதிடுவ தில்லையெனச் சொன்னான்!

          தனித்தமிழை வற்புறுத்திப் பாவேந்தன் சொன்ன

     தங்கவரிப் பாடல்களை நம்மிளைஞர் பாடி

          பனித்தமிழை உலகமெலாம் பரப்பிடுதல் வேண்டும்!”

என்று இளைஞர்களுக்கு பாரதிதாசன் கூறியது போலத் தமிழியக்கம் துவங்க அழைப்பு விடுக்கிறார் பெருஞ்சித்திரனார்.

இளைஞர்களுக்கு மட்டுமன்று சிறார்களுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் பாரதிதாசனை அறிமுகப் படுத்தும் முகமாக பெருஞ்சித்திரனார் எழுதிய பாடல் படித்து இன்புறத்தக்கது. படிப்போருக்கு இப்பாடல் வரிகள் மிகச் சுருக்கமாகக் காட்டும் பாரதிதாசன் யார் எத்தகைய பாவலர் என்பதை…..

     பாட்டுக்கு வேந்தர் பாவேந்தர்-அவர்

          பாரதிதாசன் எனும் வேந்தர்!-தம்பி

     ஏட்டுக்கு ஏடு எழில்கொழிக்கும்-அவர்

          எழுத்துக்கு எழுத்து தமிழ் மணக்கும்! (பாட்டுக்கு)

     கூட்டுக்குள் ஆவி தமிழ் என்றார்-அவர்

          குரலுக்குக் குரலால் நமை வென்றார்-நம்

     வீட்டுக்கு வீடு அவர் பாடல்-பெரும்

          வீதிக்கு வீதி அவர் புகழாம்! (பாட்டுக்கு)

     நரம்புக்கு நரம்பு உணர்வேறும்-உயிர்

          நாடிக்கு நாடி தமிழ் ஊறும் !

     கரம்புக்கு உழவாய் மனம் உழுதார்-நல்ல

          கழனிக்கு மழையாய்த் தமிழ் பொழிந்தார்! (பாட்டுக்கு)

     இருளுக்கு ஒளியாய் அவர் திகழ்ந்தார்-நல்ல

          இயற்கைக்கு உயிராய் எழில் கொடுத்தார்!

     மருளுக்கு மருந்தாய்த் தமிழ் விளைத்தார்-தம்பி!

          மடமைக்கு எதிராய்ப் போர் தொடுத்தார்! (பாட்டுக்கு)

                    (குரல் 4. இசை. 5-6)

“பாரதிதாசன் பத்து! (தும்பி, தாமரை, குயில், மயில், தென்றல், கிளி, நிலவு, ஞாயிறு ஆகியவற்றை நோக்கிப்பாடிய” அரிய பத்துப்பாடல் மலர்களின் தொகுப்பு மாலை என்று பாவேந்தர் தமிழ்ப் புலமையை அறியத் தருகிறார். அதில் தமிழன்னையும் புதுவைக் குயில் பாரதிதாசன் மேல் அன்பை விவரிக்கிறார்.

     அலங்கலை ஆழ்கடல் சூழ்ந்த வியன்பொழில் ஆர் புதுவை

          இலங்குயர் சீர்மிகு பாரதி தாசன் எழில் மனத்தே

     குலுங்கினள் செந்தமிழ்க் கன்னி; குயிலெனக் கூவியுயிர்

          துலங்கினள்; எந்தமிழ் எங்கணும் பூக்கத் துணைசெயவே! (சுவடி 4. ஓலை 4.)

பாரதிதாசனின் பண்பு நலன்களைத் தொகுக்கும் முகமாக …..

     தம்மனை நினையான்; தமிழ் நினைத் திருந்தான்!

          தம்மக்கள் பேணான்: தமிழைப் பேணினான்!

     தம்பொருள் காவான்; தமிழ்காத் திருந்தான்!

          தம்நலம் விழையான்; தமிழ்நலம் விழைந்தான்!

     தம்துயர் போக்கான்: தமிழ்த்துயர்க் கெழுந்தான்!

          மும்மைப் பொழுதும் முத்தமிழ் மொழிக்கெனத்

     தம்மைத் தந்தான்; தம்வாழ் விழந்தான்!

          தன்னேர் ஆவி தமிழுக் களித்த

     மன்னன்! பாவலன்! மாத்தமிழ் மறவன்!

          — பொய்யிலாப் புலவன் புகழ் வாழியவே! (சுவடி 5. ஓலை 4.)

கூறி “நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும், நான் நான் நான்” என்று தமிழுக்காக வாழ்ந்த பாரதிதாசனின் வாழ்வைப் படம் பிடிக்கிறார் பெருஞ்சித்திரனார்.

புரட்சிக்கவியாய் கருத்துப் புரட்சிக்கு வித்திட்ட பாவேந்தரின் புரட்சிகள் எந்தெந்த துறைகளில் என்று வகைப் படுத்தி …..

     முன்அவர் செய்த செந்தமிழ்ப் புரட்சியும்

          பின்அவர் செய்த அரசியல் புரட்சியும்

     இடையிற் செய்த குமுகாயப் புரட்சியும்

          கடைசியிற் செய்த இலக்கியப் புரட்சியும்

     தமிழுள் ளளவும் தமிழர்க்குத் துணையாம்.

என்று பெருஞ்சித்திரனார் கூறுகையில் மடமைக்கு எதிராய்ப் போர் தொடுத்த புரட்சிக் கனல் பாரதிதாசனின் சிந்தனை முத்துக்களால் தமிழினம் பெற்ற நன்மைகள் தெளிவாகவே விளங்குகிறது.

தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்திய பாட்டின் வேந்தனே! என்று பாராட்டும் பெருஞ்சித்திரனார், பெரியாரின் கருத்துகளுக்குப் பாடல் வடிவம் கொடுத்தவராக பாவேந்தரைக் காண்கிறார்.

     “தீண்டாமை பற்றியெல்லாம் மிகத் தெளிவாய்ச் சொன்னான்!

          திராவிடர்தம் இனத்தலைவர் நம்பெரியார் சொன்ன

     வேண்டாமைப் பட்டியல்கள் அனைத்தையுமே பாட்டாய்

          ஆரியர்கள் வெலவெலக்க ஆக்கியவன் தந்தான்!”

என்று கூறி; பின்வரும் பாவேந்தரின் வரிகளை மேற்கோளாகச் சுட்டுகிறார்;

     “சாதி ஒழித்திடல் ஒன்று-நல்ல

          தமிழ் வளர்த் தல்மற் றொன்று!

     பாதியை நாடு மறந்தால்-மற்றப்

          பாதி துலங்குவ தில்லை.”

சாதியொழிப்பது தமிழை வளர்ப்பதுமே நம்மோர் செய்யவேண்டிய சீர்திருத்தம் எனத்தெளிவாய்ச் சொன்னான் பாரதிதாசன் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். பாவேந்தரின் பாடல்களில் இடம்பெறும் சீர்திருத்தக் கருத்துகளாக பெருஞ்சித்திரனார் கவனத்திற்குக் கொண்டு வரும் கருத்துகள் சிலவற்றைக் காண்போம்,

     “கைம்பெண்கள் எழுகென்றான் கடிமணங்கள்

          செய்கென்றான் கன்னிப் பெண்கள்

      மொய்ம்புதரும் காதலினால் தாம்விரும்பும்

          ஒருவனையே முடிக்க என்றான்!”

“சீர்திருத்தம் முழங்கச் செய்தான்! பைம்புதரில் பூத்த தமிழ்ப் பூவானான்! பைந்தமிழ்ப்பூந் தும்பியானான்!” என்று பாவேந்தரைப் பாராட்டுகிறார்.

     ” எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

          தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

     தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்

          செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்!”

என்று பாவேந்தர் கூறியது …..

     தமிழ்மேல் அவர்க்குள்ள காதலைக் காட்டும்!

          தமிழ்க்காக வாழ்ந்தார்; தமிழைப் பாடினர்;

     தமிழைத் தொழுதார்; தமிழைப் புதுக்கினர்

என்று, தமிழும் தாமுமாய் ஒன்றிக் கிடந்தார் பாரதி தாசன் என்பதைக் காட்டுகிறது என்கிறார் பெருஞ்சித்திரனார்.

      செந்தமிழ்க்கே அவர்பிறந்தார்; செந்தமிழ்க்கே வாழ்ந்தார்!

           செந்தமிழ்க்கே மூச்சுயிர்த்தார்; செந்தமிழ்க்கே பேசிச்

      செந்தமிழ்க்கே அவருழைத்தார்; செந்தமிழாய் நின்றார்!

           செந்தமிழ்க்கே ஒளியேற்றிச் செந்தமிழ்க்கே மாய்ந்தார்!

      வீரம் அவன் பாக்களிலே செறிந்தோடி நிற்கும்!

           விளையாட்டுத் தமிழ்ப்பேச்சும் வெந்தணலாய்க் காய்ச்சும்!

      ஈரம்அவன் தமிழ்ப்பாட்டில் இருந்தாலும் எதிரி

           எலும்பினையும் நீறாக்கும் சொற்கள்விளை யாடும்!

     தமிழையவன் காதலித்தான் அடடா, ஓ அடடா!

          தமிழினத்தைக் காதலித்தான் அடடா, ஓ அடடா!

     தமிழையவன் தாயென்றான் அடடா, ஓ அடடா!

          தமிழினத்தை உயிரென்றான் அடடா, ஓ அடடா!

     தமிழையவன் இறையென்றான் அடடா, ஓ அடடா!

          தமிழினத்தை உடலென்றான் அடடா, ஓ அடடா!

     தமிழையவன் காதலித்தும் தமிழினத்தைப் பார்த்தும்

          தமிழாகிப் போனானே, அடடா, ஓ அடடா!

என்ற வரிகள் பெருஞ்சித்திரனாரின் நயமிக்க வரிகள்.

“வீரமும் தமிழும் வியத்தகு புலமையும் ஈரமும் ஏழைமேல் இரக்கமும் சேர்ந்தால் பாரதிதாசனென் பாவலர் தெரிவார்!” என்று பாரதிதாசன் குறித்து மிகச் சுருக்கமாக பெருஞ்சித்திரனார் கூறுகையில்; இதற்கும் மேலாக தமிழர் வாழ்வைத் தன் வாழ்வாகக் கருதி எழுத்து மூலம் தமிழர்க்கு எழுச்சியூட்டிய பாரதிதாசன் என்ற பாவலர் குறித்து மேற்கொண்டு சொல்ல என்ன இருக்கிறது என்ற வியப்புதான் மிச்சமிருக்கிறது.

_____________________________________________

பார்வை நூல்:

பாவேந்தர் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், முதற்பதிப்பு, தென்மொழி நூல் வெளியீட்டு-விற்பனையகம், தென்மொழி அச்சகம், மே 1, 1984,

https://ta.wikisource.org/s/1kzs


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாவேந்தரும் பாவலரேறும்”

அதிகம் படித்தது