மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புரட்சிக் கவிஞரின் வீரத்தாய்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 1, 2017

Siragu veeraththaai1

வீரத்தாய் எனும் குறுங்காவியம் இயற்றியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியாரின் திராவிடக் கருத்துகளை ஏற்கும் முன் பகுத்தறிவு வழியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கனக சுப்புரத்தினம் புரட்சிக்கவிஞராக பரிணமித்துக் கொண்டிருக்கும் அந்த இடைப்பட்டக் காலத்தில் எழுதப்பட்ட குறுங்காவியம் என்ற காரணத்தால் குறுங்காவியத்தின் கதை மாந்தர்கள் பெயர் வடமொழிச் சாயலில் இருந்தாலும், ‘பெண் என்பவள் வெறும் அலங்காரப் பொம்மையல்ல, அவள் கைகள் வளையல்கள் அல்ல கொடுவாள் ஏந்தும் கெடுமதிக் கொண்டோரை வீழ்த்த’ என்று மிக அருமையாக அமைத்திருப்பார் இந்தக் காவியத்தை. மொத்தம் பத்து காட்சிகளைக் கொண்டது இந்தக் குறுங்காவியம்.

சேனாபதி காங்கேயன் மந்திரியோடு சேர்ந்து சதி செய்து மணிபுரி நாட்டை அடைய, மணிபுரி மன்னனுக்கு மது ஊட்டி ஒழித்தான். மன்னனின் ராணி விஜய ராணி தன் மானம் காக்க நாட்டை விட்டு வெளியேறுகிறாள். அவர்களின் இளவரசன் சுதர்மன் சூது மதி கொண்ட சேனாபதி காளிமுத்து எனும் முரடனிடம் அவனை அனுப்பி கல்வி அறிவில்லாது வளர்க்கின்றான். இந்த நிலையில், சேனாபதி மந்திரியிடம் தான் மணிபுரியின் அரசனாக வேண்டும் என்கிறான். அதற்கு மந்திரி, விஜயராணி பற்றி மறந்து விட வேண்டாம் எனக் கூற, அவள் தான் ஓடி ஒளிந்தனளே? அவள் எங்கனம் படை திரட்டி வருவது? என வினவ, மந்திரி விஜய ராணியின் அஞ்சாத நெஞ்சம் பற்றி எடுத்துக்கூறி அவளின் போர்க்கலைகளையும் பற்றி எடுத்து இயம்ப, சேனாபதியோ

“ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்,
மானிடத்தின் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி!
ஆன,மற் றோர்பகுதி ஆண்மைஎனப் புகல்வேன்!
எவ்வாறா னாலும்கேள் சேனையெலாம் என்னிடத்தில்
செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி!”

என்று பெண்களை அழகுப் பதுமைகளாக கூறுகின்றான்.

அதே வேளையில் காட்டில் காளிமுத்துவிடம் வளரும் இளவரசன் சுதர்மனை ஒரு கிழவர் பாதுகாத்து வர, அவரிடம் காளிமுத்து இந்தச் சிறுவனுக்கு மாடு மேய்க்க மட்டும் கற்றுக்கொடு, கல்வி, கலைகள் ஏதும் புகட்டிடாதே எனக் கூற, சரி என்று கூறி அழைத்துச் செல்கின்றார் கிழவர். காட்டில் சுதர்மனுக்கு அந்தக் கிழவர் கல்வி புகட்டி, வில் வித்தை என அனைத்தும் கற்றுத்தந்து அவனை அஞ்சா மறவனாக்குகின்றார். அந்த நேரம் அரண்மனை பொக்கிசத்தை யார் திறக்கின்றார்களோ அவர்களுக்கு தக்க பரிசு உண்டு என்று தண்டோரா போடப்படுவதைக் கேட்டு கிழவனார் அரண்மனை செல்ல நேரம் வந்தது, எனக் கூறி சுதர்மனை கவனமாக இருக்கச் சொல்லி விட்டு காட்டிலிருந்து அரண்மனை நோக்கி விரைகின்றார்.

அங்கே அரசாங்க பொக்கிசத்தை நேர்த்தியாக திறக்க மந்திரியோ வியந்து, சேனாபதியிடம் இந்தக் கிழவனாரை நாம் நம்மோடு அரண்மனையில் தங்க வைத்துக்கொள்வோம். நமக்கு உதவியாக இருக்கும் எனக்கூற சேதுபதியும் தலையசைக்கின்றான். கிழவனரோ சரி, ஆனால் அரண்மனையில் எங்கும் செல்லும் உரிமை வேண்டும் எனக் கேட்க, சரி என்றே இருவரும் உறுதித்தருகின்றனர்.

இதற்கிடையில் தான் முடி சூட்டிக்கொள்ள அண்டை நாட்டு அரசர்களுக்கு ஓலை அனுப்பி அவர்களை மணிபுரி அரண்மனைக்கு வருக என்கின்றான். அவர்களும், வருகின்றனர். அவர்களிடம் அரசி எங்கோ ஓடிவிட்டாள் என்றும் இளவரசனோ கல்வி அறிவில்லாமல் அலைகின்றான் என்றும் கூற, வெள்ளி நாட்டு வேந்தன் கோபமாக,

“காங்கேய சேனாதி பதியே நீர்ஓர்
கதைசொல்லி முடித்துவிட்டீர்! நாமும் கேட்டோம்,
தாங்காத வருத்தத்தால் விஜய ராணி,
தனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ள
தீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்!
திருமுடியை நீர்கவர அரச ருக்குப்
பாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம்
பண்ணிவைத்தீர்! அதிகாரம் அபக ரித்தீர்,
மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும்
மறைவாக வசிக்கின்றார்! அறிந்து கொள்ளும்!
கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன்,
கல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றி
ஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர்,
உம்மெண்ணம் இருந்தபடி என்னே, என்னே!
ஆனாலும், அப்பிள்ளை சுதர்மன் என்போன்
ஆயகலை வல்லவனாய் விளங்கு கின்றான்”

எனக் கூற அதிர்ந்து விட்டனர் சேனாபதியும், மந்திரியும்.

கிழவனாரை கலந்து ஆலோசித்து மணிப்புரி முடி ஏற்றுவிடலாம் என சிந்திக்க, கிழவனார் அரண்மனையில் இல்லை. அவரும் தங்களை தீயோர் என விலகி விட்டார் போலும் என மந்திரி கூற, சரி விடு, நாம் இளவரசன் பற்றி அறிந்து வருவோம், அவன் எப்படி கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க முடியும்? என ஐயம் கொண்டு காடுகள் நோக்கி விரைகின்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி ஆக்குகிறது. கிழவனார் இளவரசனுக்கு வாள் வீச கற்றுக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அவனைக் கொல்ல வாள் ஏந்திச் செல்ல அங்கு கிழவனார் விரைவாக வந்து தடுத்திட்டார். அதைக் கண்டு திடுக்கிட்டு தன மெது வீச வந்த வாளினைத் தடுக்க புறமுதுகிட்டு அரண்மனை நோக்கி ஓடுகின்றனர் சேனாபதியும் மந்திரியும்.

அரண்மனைக்குள் நால்வரும் நுழைய, அங்கே அண்டை நாட்டு வேந்தர்கள் யார் நீங்கள் என வினவ? கிழவனார் தன் நரைமுடி கலைகின்றார். அந்தக் கிழவனார் தான் இளவரசனுக்கு போர்ப் பயிற்சி கொடுத்தவர். அனைவரும் வியக்கின்றனர். கொன்றை நாட்டு வேந்தன் இது கண்டு கூறுகின்றான்,

“அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
என்னும்படி அமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்
போகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்! [30]
அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த
மின்னே! விளக்கே! விரிநிலவே வாழ்த்துகின்றேன்!”

சுதர்மன் உடனே,

“எண்ணம் உரைக்கின்றேன் என்உதவி வேந்தர்களே!
இந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச்
சொந்த உடைமை! சுதந்தரர்கள் எல்லாரும்!
ஆதலினால், இந்த அழகு மணிபுரியை
ஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்!
அக்கிரமம், சூழ்ச்சி, அதிகாரப் பேராசை
கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்
மானம் வளர்ந்து, எழுச்சி யுற்றுக்
கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்!
ஆதலினால் காங்கேயன் அக்ரமும் நன்றென்பேன்,
தீதொன்றும் செய்யாதீர், சேனா பதிதனக்கே!”

மன்னர்களும் அவ்வாறே என மகிழ்ந்து செப்புகின்றனர்.

சுதர்மனும் மகிழ்ந்து,

எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உடைமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!
வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக!
வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே.

என முரசறையை இனிதே முடிகின்றது வீரத்தாய் எனும் குறுங்காவியம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புரட்சிக் கவிஞரின் வீரத்தாய்”

அதிகம் படித்தது