மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புரட்சிப் பதிகம் பாடிய நங்கை

தேமொழி

Jun 23, 2018

இந்திய வரலாற்றில் காலந்தோறும் சாதீயத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துக் குரல் கொடுத்தோர் பலர். தமிழகத்தில் பற்பல குலப் பின்னணி கொண்டவரையும் சமமாகக் கருதி தம்முடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை முன்வைத்தது  மட்டுமின்றி,  நாயன்மார்களில் ஒருவராகவும், ஆழ்வார்களில் ஒருவராகவும் ஒடுக்கப்பட்ட குலப்பிரிவினர்களையும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மறைமுக சமத்துவ முறைகள் பலனளிக்காமல் போனதும் வரலாறு காட்டும் உண்மை.

siragu nangai2

இம்முயற்சிகள் பலனளிக்காமல், இக்காலகட்டத்தையும் கடந்து,  தீண்டாமையும் சாதிச் சழக்குகளும் மக்களின் வாழ்வில் தலைவிரித்தாடியக்  கொடுமையைக் கண்டித்து நேரடியாகவே பார்ப்பன எதிர்ப்பு கலகக் குரல்கள் எழத் துவங்கிய காலம் 15 ஆம் நூற்றாண்டு. இக்காலகட்டம் சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பு இலக்கியங்களாகவே  உருவெடுக்கத் தொடங்கிய ஒரு திருப்புமுனைக் காலமாக, சமூகச்சீர்திருத்தக் கருத்துகளை  முன்வைக்கும் ஒரு காலமாக தமிழிலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறது.

மாரிதான்சிலரை வரைந்துபெய்யுமோ

காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ

மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ

கதிரோன்சிலரைக் காயேனென்னுமோ

நீணான்குசாதிக் குணவுநாட்டிலுங்

கீணான்குசாதிக் குணவுகாட்டிலுமோ

                    -  கபிலர் அகவல்

சந்தனம் அகிலும் வேம்பும் தனித் தனி வாசம் வீசும்

அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ ?

செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ ?

பந்தமும்  தீயும் வேறோ  பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

                    -  உத்தரநல்லூர் நங்கை, பாய்ச்சலூர் குறித்து பதிகம்: 9.

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

                    – சிவ வாக்கியர், பாடல்: 520.

 என்று இக்காலம் தொடங்கியே மேலே காட்டப்பட்டவாறாக  கபிலர் அகவல், பாய்ச்சலூர் பதிகம், சித்தர் இலக்கியங்கள் போன்றவை  நேரடியான பார்ப்பன எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்யத் தொடங்கின.

 உத்தரநல்லூர் நங்கை:

siragu nangai3

சமத்துவமும் உரிமையும் கோரி எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் தமிழ்ப்பெண்மணி, புரட்சி மங்கை, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவரே என்று தமிழிலக்கிய வரலாறு காட்டுகிறது. இவர் பாய்ச்சலூர்க் கிராம மக்கள் காட்டிய சாதி வேற்றுமைக்குக் கண்டனக்குரல் எழுப்பி ‘பாய்ச்சலூர் பதிகம்’ என்ற பாடல்களை இயற்றியுள்ளார். பாய்ச்சலூர் பதிகம் என்பது  ‘நங்கையார் பதிகம்’ என்றும்  அழைக்கப்படுவதாகத்  தெரிகிறது. பாய்ச்சலூர் பதிகம் தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. இதில் மொத்தம் 11 விருத்தப் பாடல்கள் (பதிகம் என்பதால் 10 பாடல்களும், அத்துடன் ஒரு காப்புச் செய்யுள் ஒன்றும்)  உள்ளன.

இப்பதிகம் சாதீய அமைப்புக்கும் நால்வர்ணக் கொள்கைக்கும் எதிரான கருத்துகளை நேரடியான பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாகவே பதிவிடுவது இதன் தனிச்சிறப்பு. ‘வேதியன்’ படைத்தவை சாதிகள் எனக் கூறி, சாதிகள் பிராமணர் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டவை என்று காட்டுகிறார் உத்தரநல்லூர் நங்கை.  அந்தச் சாதிகளை நிலைநிறுத்தப் பிராமணர்கள் உருவாக்கிய சடங்குகள் வழி செய்கின்றன என்பதை இவர் பாடல்கள் விளக்குவதுடன், அவற்றை எதிர்த்து  சடங்குகளையும் வேதத்தையும் சாடி, சமத்துவம் கோரி இவர் குரல் எழுப்புவதையும் பாடலில் காணலாம்.

தமிழின் முதல் தலித் இலக்கியம் என்று ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாகக் குறிக்கப்படும் பெருமையையும் பெற்றுள்ளது பாய்ச்சலூர் பதிகம். “மனிதர்களில் பேதம் பார்க்கிறீர்களே வேள்வி வளர்த்து நீங்கள் படிக்கும் மறையினால் என்ன பயன்?” என்றும் “தீயிலிட்டு  எரிக்கப்படும் பலவகை மரங்கள் வெவ்வேறுவகை வாசனையைத் தரலாம், அது போல வெவ்வேறு சாதி மனிதர்களின் பிணங்கள் எரிபடும் பொழுது வெவ்வேறு வாசமா வீசுகிறது?” என்ற சாடல்களுக்கு இன்றுவரையிலும் பதில் சொல்வார் இல்லை என்பதையே சாதிய  வன்முறைகள் காட்டி வருகின்றன.

வழக்கம் போல சமயக் கருத்துகளைச் சாடும் நூல்கள் எதிர்கொள்ளும் முடிவையே இந்த நூலும் எட்டியுள்ளது. யாராலும் அதிகம் பேசப்படாமல், பெரும்பாலோர் அறிந்துகொள்ள வழியில்லாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்ட இலக்கியங்களில் ஒன்று இது.

‘இவள் ஒரு பெண்கவி. பிராமணரை வசை பாடினாள்’ என்று அபிதான சிந்தாமணி தரும் குறிப்பு ஒன்றும், இதிலிருந்து மூன்று பாடல்களை மட்டும்  எடுத்து வெளியிட்டு ‘உத்தரநல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்குக் காரணம் இன்னதென்றேனும் விளங்கவில்லை’ என்று 1916ல் வெளியிடப்பட்ட தமிழ் நாவலர் சரிதை தரும் குறிப்பு ஒன்றும், மு. அருணாசலம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு’ நூலில் பதிகத்தின் உள்ள எட்டுப் பாடல்  உள்ள தொகுப்பு ஆகியன மட்டுமே பாய்ச்சலூர் குறித்து பதிகம் குறித்த இலக்கியவரலாற்றுச் செய்தியாக நாம் அறியக்கூடிய செய்திகள்.

பாதகர்களான “பாய்ச்சலூர் பங்காளிகள் பதினொரு பேர்” என்று ‘அண்ணன்மார் சுவாமி கதை’ யில் பாய்ச்சலூர் குறித்து ஒரு செய்தி வருகிறது.  சிவவாக்கியர் பாடலில் இடம்பெறும்  ‘பாய்ச்சலூர்’ என்ற சொல்லுக்கு தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது.  பாய்ச்சலூர் பதிகம் குறிப்பிடும் ‘பாய்ச்சலூர்’ என்ற கிராமம்  திருச்சிக்கு அருகே உள்ளது; இல்லை திருவண்ணாமலைக்கு அருகே, ஒட்டன்சத்திரம் பக்கமாக, பழனிக்குப் பக்கத்தில், கோடைக்கானலுக்கு அருகில், இல்லையில்லை அது கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ளது என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இன்றும் கேரள பாய்ச்சலூர் கிராமத்தில், ஒடுக்கப்பட இனத்தவரான ஈழவ மக்கள் பாய்ச்சலூர் பதிகத்தை மலையாளத்தில் எழுதி வைத்துப்பாடுவதாக மாலன் தனது, ‘பெண்களில் ஒரு பெரியார்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

புலவர் உத்திரநல்லூர் நங்கை குறித்து செய்தியொன்றை, மு. அருணாசலம் அவர்களின் ‘தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு’ நூல் குறிப்பிடுகிறது. ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் பறையர் குல பெண் உத்திரநல்லூர் நங்கையும், அங்கு மறையோதும் பார்ப்பன இளைஞன் ஒருவரும் காதலிக்கிறார்கள். அது குறித்து வெகுண்டெழும் பாய்ச்சலூர் கிராம மக்கள் அவளையும் அவளது சேரியையும் கொளுத்த வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ளும் உத்திரநல்லூர் நங்கை  சாதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதாக பாய்ச்சலூர் பதிகம் அமைகிறது.

siragu nangai4

தமிழ் நாவலர் சரிதையும், மு. அருணாசலம் அவர்களின் நூலும்  முழுமையாகப் பதிகத்தின் 11 பாடல்களையும் இணைக்கவில்லை.  இக்கட்டுரையில் சென்னை வித்யாரத்நாகர அச்சுக்கூடம், 1923 இல் வெளியிட்ட பாய்ச்சலூர் பதிகம் பாடல்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. அச்சுப்பிழைகள் நீக்கப்பட்டுப் பாடல்களும் பதம் பிரிக்கப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள ஆங்கில எழுத்துக்கள் மு. அருணாசலம் அவர்களின் நூலில் காணும் பாடல்களில் இருந்து வேறுபடும் பிரதி பேதங்களைக் குறிக்கின்றன.

“பாய்ச்சலூர் பதிகம்”

 காப்பு

அறுசீரடி ஆசிரிய விருத்தம்.

 மூலத்தின் மேலே நின்று

     கூன்று மண்டலமும் தாண்டி

சீலத்தின் வெளியாய் வந்து

     சிலம்பு ஒலி பரமானந்தக்

கோலத்தின் மேலே நின்று

     குகன்று முகனைப் பாட

வாலிப ரூபமான

     ஐங்கரன் காப்பதாமே.

ஓதிய  நூலும் பொய்யே

     உடல் உயிர் தானும் பொய்யே

சாதியும் ஒன்றே ஆகும் (a)

     சகலமும் வேறதாமோ

வேதியன் படைத்தது அல்லால்

     விதி தன்னை வெல்லல் ஆமோ(b)

பாதியே பரமே சூழும் (c)

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.  [1]

உறக்கமோ ஊன உள்ளம்

     உள்ளமோ புறம்போ சீவன்

இறப்பது முன்னோ பின்னோ

      ஈன்றது பெண்ணோ ஆணோ

கறப்பது முலையோ பாலோ

     காண்பது மனமோ கண்ணோ

பறப்பது இறகோ காலோ

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.  [2]

வெற்றிலை தாழை வாழை

     வித்து ஒன்று முளைப்பது ஒன்றோ

பற்றிய யோனி பேதம்

     பாருளோர் அறிந்திடாமல்

பெற்றவர் தம்மைத் தேடிப்

     பிறந்து இருந்து இறந்து போனார்

பற்றி நின்று  அலைவது ஏனோ

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.  [3]

தீப்படைக் கடைந்த கோலும்

     சீவனும் சீவன் வேறோ

வார்படைத் தந்தை தாயார்

     மக்களும் சுற்றத்தாரும்

மோர் படைக்கடைந்த வெண்ணெய்

     மோருடன் கூடாவண்ணம்

பாற் படத் திரளவேண்டும்

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.  [4]

கொக்கு மேல் குடுமி கண்டேன்

     கோழி மேல் சூடும் கண்டேன்

நெக்குறி வாலும் கண்டேன் (d)

     நீரின் மேல் நெருப்பும் கண்டேன்

சற்குலம் என்று சொல்லிச் (e)

     சதுர்மறை பேசவேண்டாம்

பக்குவம் அறிந்து பாரும்

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே. [5]

வித்து ஒரு மரத்தை ஈனும்

     மரம் ஒரு வித்தை ஈனும்

பெற்றதாய் பிள்ளை ஈனும்

     பிள்ளையும் மதலை ஈனும்

உற்றபால் தயிரை ஈனும்

     உதிரம் சுக்கிலத்தை ஈனும்

பற்றி நின்று  அலைவது ஏனோ

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே. [6]

மகங் கொண்ட தேகம் தன்னை (f)

     மற்றொரு சுத்தம் காணார் (g)

அகம் கண்டு புறமும் கண்டு

     அவனுனக்கே தாரமானேன்

சுகம் கண்டு துக்கம் கண்டு

     சுக்கிலவழியே சென்று

பகங் கொண்டது ஏனோ என்னில்

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே. [7]

ஊருடன் பார்ப்பார் கூடி (h)

     உயர்ந்த ஓர் சாலை கட்டி

நீரிலே மூழ்கி வந்து

     நெருப்பில் நெய்யைத் தூவிக் (i)

கார் வயல் தவளை போலக்

     கலங்கிய உங்கள் வேதம் (j)

பாரை விட்டு அகன்றது ஏனோ (k)

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே. [8]

சந்தனம் அகிலும் வேம்பும்

     தனித் தனி வாசம் வீசும் (l)

அந்தணர் தீயில் வீழ்ந்தால்

     அதன் மணம் வேறதாமோ ? (m)

செந்தலைப் புலையன் வீழ்ந்தால்

     தீ மணம் வேறதாமோ ?

பந்தமும்  தீயும் வேறோ

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே. [9]

ஒரு பனை இரண்டு பாளை

     ஒன்று நுங்கு ஒன்று கள்ளு

அறிவினில் அறிந்தவற்கு (n)

     அதுவும் கள் இதுவும் கள்ளே

ஒரு குலை உயர்ந்தது ஏனோ

     ஒரு குலை தாழ்ந்தது ஏனோ

பறையனைப் பழிப்பது ஏனோ

     பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.  [10]

<<< பாய்ச்சலூர் பதிகம் முற்றிற்று >>>

மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு நூலில் உள்ள எட்டுப் பாடல்களுடன் ஒப்பிட்டதில் காணப்படும் பிரதி பேதங்கள்:

a – சாதியும் ஒன்றை அல்லால்

b – விதியினை வெல்லல் ஆமோ

c – பாதியிற் பழியே சூழ்ந்த

d – நெக்குறு வாலும் கண்டேன்

e – சற்குணம் என்று சொல்லிச்

f – மகம்கொண்ட தேகம் தன்னில்

g – மற்றொரு சுத்தம் காணீர்

h – ஊருள பார்ப்பார் கூடி

i – நெருப்பிலே நெய்யை விட்டுக்

j – கதறிய வேதம் தானும்

l – தனித்தனிக் கந்தம் நாறும்

m – அவர்மணம் வீசக் காணோம்

n -  அறிந்த வர்க்கே

இது தவிர்த்து,  பாடல்களின் வரிசையில் மாற்றம் இருப்பதுடன்,  அதிகப்படியாகக் கீழுள்ள பாடலும் கிடைக்கிறது.

“குலம்குலம் என்ப தெல்லாம் குடுமியும் பூணும் நூலும்

சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ

நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்த துண்டோ

பலந்தரு பொருளும் உண்டோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே”

________________________________________________

சான்றாதாரங்கள்:

[1] பாய்ச்சலூர் பதிகம், உத்தரநல்லூர் நங்கை,  வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923

https://books.google.com/books?id=fvVgDwAAQBAJ

[2] மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு நூலில் உள்ள எட்டுப் பாடல்கள்

https://ta.wikisource.org/s/34e

[3] ஆவணம் : பாய்ச்சலூர் பதிகம் , உன்னதம், நவம்பர் 3,  2017

http://www.unnatham.net/aavanam-2/

[4] பெண்களில் ஒரு பெரியார்! , மாலன், மார்ச் 7, 2005

http://maalan.co.in/?p=202

[5] ‘Let blind custom be buried’, Rationalists have been with us throughout Indian history, A.R. Venkatachalapathy, AUGUST 20, 2013

http://www.thehindu.com/news/national/let-blind-custom-be-buried/article5042129.ece

________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புரட்சிப் பதிகம் பாடிய நங்கை”

அதிகம் படித்தது