மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும்

தேமொழி

May 12, 2018

siragu puranaanooru1

சங்க இலக்கியங்களாக அறியப்படும் பாட்டும் தொகையும் ஆன பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களுள், எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய இலக்கியம் புறநானூறு. இந்த நூலில் முடியுடைக் காவலரும் முத்தமிழ்ப் பாவலராக தமிழை வளர்த்த காலத்திலும்; கற்றறிந்த புலவரும் புவியாண்ட புரவலரும் தமிழைப் போற்றிய காலத்தில் நிகழ்ந்தவையாக 400 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆண்பாற் புலவர்களும், அரசர்களும் யாத்த பாடல்கள் மட்டுமன்றி, அரசமகளிரான பெருங்கோப்பெண்டும், பாரியின் மகளிரும் பாடிய  பாடல்களுண்டு. அவ்வாறே, குறமகள் பாடியதாகவும் பாடலுண்டு.  குயவர்மகள் பாடியதாகவும் பாடலுண்டு. பாடல்கள் யாவும் சங்ககாலத் தலைவர்களின் படைத்திறத்தையும் கொடைத்திறத்தையும் நமக்கு இன்று அறியத் தருகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழ்க்காணும் இரு சிறு பாடல்களைக் காணலாம்.

கொடைத்திறமும் …

“பாரி பாரி யென்றுபல வேத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி யொருவனு மல்லன்

மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறநானூறு: 107)

Siragu Purananuru1

(பொருள்: “பாரி, பாரி” என்று பாரி ஒருவனே கொடையிற் சிறந்தவனாகவும்  உலகைக் காப்பவனாகவும் புலவர் பலரும் புகழ்ந்து பாடுகிறார்கள். பாரி மட்டுமல்ல மழையும் தன் கொடையால் உலகைக் காக்கிறது.)

படைத்திறமும்…

“நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யான்உயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.” (புறநானூறு: 186)

(பொருள்: நெல்லும் நீரும் மட்டுமே தமது மக்கள் உயிர்வாழத் தேவை என மன்னன் கருதாமல், அவர்களை இடரில் இருந்து காக்கும் வேந்தனாகியத் தான் அவர்களுக்கு உயிர் போன்றவன் என்று உணர்ந்து மக்களைக் காக்கும்  சிறந்த படையைக் கொண்டிருப்பது அவனது கடமையாகும்.)

தமிழிலக்கணம் வகுத்த வரையறையின்படி, ஒத்த அன்புடையாரால் மட்டுமேயன்று அனைவராலும் துய்த்து உணரப்பட்டு இது இவ்வாறிருந்ததெனப் பிறருக்குக் கூறப்படுபவை “புறம்” என்ற பகுப்பின் கீழ்  அடங்கும்.  இத்தகைய புறப்பொருள் செய்திகள் அறம், பொருள் ஆகிய இரண்டுமாகும். அறனும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புறமென்பது ஆகுபெயர். முப்பாலில் ஒன்றான அகப்பொருளான இன்பம் குறித்தவை “அகம்” என்ற பகுப்பின் கீழ் அடங்கும்.

புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும் :

திணை — திணை என்ற சொல்லிற்கு பலபொருள் இருப்பினும் தமிழிலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன் கொள்ளப்படுவது மரபு.

1. வெட்சி, 2. கரந்தை, 3. வஞ்சி, 4. காஞ்சி, 5. நொச்சி, 6. உழிஞை, 7. தும்பை, 8. வாகை, 9. பாடாண், 10. பொதுவியல், 11. கைக்கிளை, 12. பெருந்திணை என்பனவற்றைத் புறத்திணைகளாக அறிகின்றோம். கைக்கிளையையும், பெருந்திணையையும் தொல்காப்பியம் அகத்திணையில் காட்டுகிறது.  ஆனால் அவை புறநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்

வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது

எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி

அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்

பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்

செரு வென்றது வாகையாம்.

என்கிறது  திணை விளக்கம் தரும் பாடல்.

1. வெட்சித்திணை:  பகைவருடைய ஆநிரைகளைக் கவர்தல்

2. கரந்தைத்திணை:  அவ்வாறு  பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை அவற்றின் உடைமையாளர் மீட்பது

3. வஞ்சித்திணை: பகைவரது நாட்டைக் கவரும் நோக்குடன் போர் தொடுப்பது

4. காஞ்சித்திணை: அவ்வாறு படையெடுத்து வந்த பகைவரை எதிர்கொண்டு மோதுவது

5. உழிஞைத்திணை: பகைவரது கோட்டை மதிலைச் சுற்றி வளைப்பது

6. நொச்சித்திணை: பகைவருக்கு எதிராகத் தம்முடைய மதிலைக் காத்து நிற்பது

7. தும்பைத்திணை: பகைவரோடு எதிர்த்துப் போரிடுவது

8. வாகைத் திணை: போரில் வெற்றி பெறுவது

9. பாடாண்திணை:  ஒருவனுடைய புகழ், கொடை, வலிமை, சிறப்பு ஆகியன குறித்துப் பாடுவது

10. பொதுவியல்: மேற்கூறிய எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவதுடன், பொதுவாக உள்ளவனவாக, அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது

11. கைக்கிளை: ஆணோ பெண்ணோ கொள்ளும் ஒரு பக்கநட்பு, அதன் சிறப்பு

12. பெருந்திணை: ஆணோ பெண்ணோ கொள்ளும் பொருந்தாக் காமம், நட்பு  ஒழுக்கம்

புறத்திணையைத் தொல்காப்பியம் 7 திணைகளாகவும், புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளாகவும் பகுத்துக் காட்டுகின்றன.  புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள திணை, துறை பாகுபாடுகள் தொல்காப்பியத்துக்கும், புறப்பொருள் வெண்பாமாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி வழக்கில் இருந்த பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூலைப் பின்பற்றியிருப்பதாகக் கருதப்படுகின்றது.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி,  தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய 11 திணைகள் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் திணை மறைந்துபோன பாடல்கள் சிலவும் புறநானூற்றில் இடம் பெறக் காணலாம்.  உ. வே. சா. அவர்களும் புறத்திணைகளுள் ஒன்றான “உழிஞைத் திணைப் பாடல்கள்”  எவையும் திணையறியப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெறவில்லை என்ற கருத்தில், “திணைகள்:- கரந்தை, காஞ்சி, கைக்கிளை, தும்பை, நொச்சி, பாடாண்டிணை, பெருந்திணை, பொதுவியல், வஞ்சி, வாகை, வெட்சி”  என 11  திணைகளை மட்டுமே  தமது நூலின்  669 ஆம் பக்கத்தில்  “திணைகளும் துறைகளும்” பகுதியின் கீழ் குறிப்பிடுகிறார்.   இவ்வரிசையில்  உழிஞைத் திணை தவிர்க்கப்பட்டுள்ளதைக் காண்க.

siragu Purananuru2

பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று கோட்டை அரணை, மதிலை வளைத்துச் செய்யும் முற்றுகைப் போர்ச் செய்யல் உழிஞைத் திணையாகும். அங்ஙனம் மதிலை வளைத்துப் போர் செய்யும் பகை வீரர்களைத் தடுத்து  மதிலுள் புகாமல் போரிடுவது நொச்சித்திணையாகும்.  மாறோக்கத்து நப்பசலையார் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், நல்ல அரண்களுள்ள ஊரில் பகைமன்னன் இருப்பதை அறிந்தும் அந்நகரை அஞ்சாது அழிக்கும் ஆற்றல் உடையவன் என்று அவனுடைய வலிமையையும், வீரத்தையும் பாராட்டிப்பாடும் புறப்பாடல் 37 ஆம் பாடலின்   (37. புறவும் போரும்) திணை: வாகை என்றும், துறை அரச வாகைமுதல் வஞ்சியும் ஆகும் என்று பல உரையாசிரியர்களால்  குறிப்பிடப்படுகிறது.

ஆனால், 37 ஆம் பாடலையும் அதன் விளக்கத்தையும் கொடுக்கும் பகுதியில் அப்பாடலின் திணை உழிஞை என்றொரு பாடபேதம் இருப்பதைக் கீழ் வருமாறு உ. வே. சா.  தமது நூலில் காட்டுகிறார்.

“திணை – வாகை (பி – ம். உழிஞை), துறை – அரசவாகை, (பி – ம். குற்றுழிஞை), முதல்வஞ்சியுமாம்”

இந்தப் பாடபேதம் தவிர்த்து உழிஞைத் திணைப் பாடல் எதுவும் புறநானூற்றில்  இடம் பெறவில்லை.

திணை கிடைக்கப்பெறாத பாடல்கள் என உ. வே. சா. அவர்களால் மொத்தம் 21 பாடல்கள் பக்கம் 669 இல் திணையிறந்துபோன பாடல்களாகக் குறிக்கப்படுகின்றன.  அவை : 244, 245, 246, 247, 248, 249, 250, 267, 268, 282, 289, 323, 324, 325, 355, 356, 357, 358, 359, 360, 361. இருப்பினும் அவர் நூலில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களில் சில திணை எதுவென்றக் குறிப்பையும் காட்டி நிற்கின்றன.

துறை இலக்கணம்:

siragu Purananuru chart

துறை  —  துறை என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழப் பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்.

வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசன் மாற்று, சுரத்துய்த்தல், தலைத்தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை, கொற்றவைநிலை, வெறியாட்டு – என ‘வெட்சித் திணையின் துறைகள் பத்தொன்பது’  எனவும்,

கரந்தை அரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல், ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறு நிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியன் மலிவு, குடி நிலை என-  ‘கரந்தைத் திணையின்  துறைகள் பதின்மூன்று’  எனவும்,

வஞ்சியரவம், குடைநிலை, வாள்நிலை, கொற்றவை நிலை, கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழிவஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறை வஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசைவஞ்சி – என ‘வஞ்சித் திணையின் துறைகள் இருபது’ எனவும்,

காஞ்சியதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு, பெருங்காஞ்சி, வாள் செலவு, குடைச் செலவு, வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலை, தலைக்காஞ்சி, தலைமாராயம், தலையொடுமுடிதல், மறக் காஞ்சி, பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்டகாஞ்சி, தொடாக்காஞ்சி, மன்னைக் காஞ்சி, கட்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, முனைகடி முன்னிருப்பு – என ‘காஞ்சித் திணையின் துறைகள் இருபத்தொன்று’ எனவும்,

குடைநாட்கோள், வாள்நாட்கோள், முரசவுழிஞை, கொற்றவுழிஞை, அரசவுழிஞை, கந்தழி, முற்றுழிஞை, காந்தள், புறத்திறை, ஆரெயிலுழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசிநிலை, ஏணிநிலை, எயிற்பாசி, முதுவுழிஞை, அகத்துழிஞை, முற்றுமுதிர்வு, யானைகைக்கோள், வேற்றுப்படை வரவு, உழுது வித்திடுதல், வாள் மண்ணு நிலை, மண்ணுமங்கலம், மகட்பால் இகலல், திறை கொண்டு பெயர்தல், அடிப்பட விருத்தல், தொகைநிலை – என  ‘உழிஞைத் திணையின் துறைகள் இருபத்தெட்டு’ எனவும்,

மறனுடைப் பாசி, ஊர்ச்செரு, செருவிடை வீழ்தல், குதிரை மறன், எயிற்போர், எயில்தனை அழித்தல், அழிபடை தாங்கல், மகண் மறுத்து மொழிதல் – என ‘நொச்சித் திணையின் துறைகள் எட்டு’ எனவும்,

தும்பை அரவம், தானை மறம், யானைமறம், குதிரை மறம், தார் நிலை, தேர் மறம், பாண்பாட்டு, இருவரும் தபு நிலை, எருமை மறம், ஏம எருமை, நூழில், நூழிலாட்டு, முன் தேர்க் குரவை, பின் தேர்க்குரவை, பேய்க்குரவை, களிற்றுடனிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை, வெருவரு நிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல், தொகை நிலை -  என  ‘தும்பைத் திணையின் துறைகள் இருபத்து மூன்று’ எனவும்,

வாகையரவம், அரச வாகை, முரச வாகை, மறக்கள வழி, களவேள்வி, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை,  அரசமுல்லை, பார்ப்பனமுல்லை, அவையமுல்லை, கணிவன்முல்லை, மூதின் முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண் முல்லை, காவன் முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடை முல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல்  - என  ‘வாகைத் திணையின் துறைகள் முப்பத்திரண்டு’  எனவும்,

வாயில் நிலை, கடவுள் வாழ்த்து, பூவை நிலை, பரிசில்துறை, இயன்மொழி, வாழ்த்து, கண்படை நிலை, துயிலெடை நிலை, மங்கல நிலை, விளக்கு நிலை, கபிலை கண்ணிய புண்ணிய நிலை, வேள்வி நிலை, வெள்ளி நிலை,  நாடு வாழ்த்து,  கிணை நிலை,  களவழி வாழ்த்து,  வீற்றினி திருந்த பெருமங்கலம்,  குடுமி களைந்த புகழ்சாற்று நிலை,  மணமங்கலம், பொலிவு மங்கலம், நாள் மங்கலம், பரிசில் நிலை,  பரிசில் விடை, ஆள்வினை வேள்ளி, பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ, குடை மங்கலம், வாள் மங்கலம், மண்ணுமங்கலம், ஒம்படை புறநிலை வாழ்த்து, கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவர் ஆற்றுப்படை, புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல், கைக்கிளை, பெருந்திணை, புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு, கடவுள்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம், கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம், குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி, ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி -  என  ‘பாடாண் திணை துறைகள் நாற்பத்தேழு’  எனவும் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய மூன்று திணைகள் தவிர்த்து;  மேற்காணும் புறத்திணைகளின் கீழ் பகுக்கப்பட்டுள்ள துறைகளின் எண்ணிக்கையாக  (வெட்சி-19, கரந்தை-13, வஞ்சி-20, காஞ்சி-21, உழிஞை-28, நொச்சி-8, தும்பை-23, வாகை-32, பாடாண்-47) 211 துறைகளை அடையாளம் காட்டுகிறது புறப்பொருள் வெண்பாமாலை.

புறநானூற்றில்  இடம்பெறும் பதினோரு திணைகளின் கீழ், கீழ்க்காணும் 65 துறைகளில் வகைப்படுத்தப்பட்ட பாடல்கள் இடம்பெறுகின்றன என உ.வே. சா. குறிப்பிடுகிறார்: அரசவாகை, ஆனந்தப்பையுள், இயன்மொழி, உடனிலை, உண்டாட்டு, உவகைக்கலுழ்ச்சி, எருமைமறம், ஏர்க்கள வுருவகம், ஏறாண்முல்லை, கடவுள்வாழ்த்து, கடைநிலை, கடைநிலைவிடை, களிற்றுடனிலை, குடிநிலையுரைத்தல், குடைமங்கலம், குதிரைமறம், குறுங்கலி, கையறுநிலை, கொற்றவள்ளை, செருமலைதல், செருவிடை வீழ்தல், செவியறிவுறூஉ, தலைத்தோற்றம், தாபதநிலை, தாபதவாகை, தானைநிலை, தானைமறம், துணைவஞ்சி, தொகைநிலை, நல்லிசைவஞ்சி, நீண்மொழி, நூழிலாட்டு, நெடுமொழி, பரிசில்கடாநிலை, பரிசில்விடை, பரிசிற்றுறை, பழிச்சுதல், பாண்பாட்டு, பாணாற்றுப்படை, பார்ப்பன வாகை, பிள்ளைப்பெயர்ச்சி, புலவராற்றுப்படை, பூக்கோட்காஞ்சி, பூவைநிலை, பெருங்காஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, பேய்க்காஞ்சி, பொருண்மொழிக்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, மகண்மறுத்தல், மழபுலவஞ்சி, மறக்களவழி, மறக்களவேள்வி, மனையறந்துறவறம், முதல்வஞ்சி, முதுபாலை, முதுமொழிக்காஞ்சி, மூதின்முல்லை, வஞ்சினக்காஞ்சி, வல்லாண்முல்லை, வாண்மங்கலம், வாழ்த்தியல், வாழ்த்து, விறலியாற்றுப்படை, வேத்தியல்.

துறை எதுவெனக் கிடைக்கப்பெறாத பாடல்கள் என உ. வே. சா. அவர்களால் மொத்தம் 13 பாடல்கள் பக்கம் 669 இல்  துறையிறந்துபோன பாடல்களாகக் குறிக்கப்படுகின்றன; அவை :  244, 245, 267, 268, 282, 285, 323, 324, 325, 355, 356, 357, 361.  இருப்பினும் அவர் நூலில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களில் சில துறை எதுவென்றக் குறிப்பையும் காட்டி நிற்கின்றன.

இதே பக்கத்தில், பாடல் 289 திணை துறையில்லாத பாட்டு எனக் குறிப்பிடப்படுகிறது.

புறநானூற்றுப் பாடல் தொகுப்பில்  266, 267 ஆகிய இருபாடல்களும் கிடைக்கப்பெறவில்லை.

புறநானூற்றுப் பாடல்களின் திணை-துறை குறித்த புள்ளிவிவரங்கள்:

ஒரு பாடலின் பொருளின், கருத்தின் அடிப்படையில், ஒரு பாடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திணையும், ஒன்றுக்கு மேற்பட்ட துறையும், ஒன்றுக்குமேற்பட்ட திணையும் துறையும் கூட வருவதுண்டு. அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடிய புறநானூற்றின் 98 ஆம் பாடலை, ஒன்றுக்கு மேற்பட்ட திணையும் துறையும் ஒரே பாடலில் பயின்றுவருவதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் காணலாம். அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு, உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிப் பாடுவார் ஔவையார். இப்பாடல் திணை: வாகை. துறை: அரசவாகை எனவும்; மற்றும், திணை: வஞ்சியும், துறை:  கொற்றவள்ளையுமாம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பாடபேதங்கள் என்று கொடுக்கப்பட்ட குறிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு; பாடல்களின் திணை, துறை ஆகிய செய்திகளைத் திரட்டி ஆராய்ந்ததில், மொத்தம் 400 பாடல்களில், பாடல் கிடைக்கப் பெறாமையாலோ அல்லது பாடலின் சிதைந்த நிலையினாலோ அல்லது கொடுக்கப் பெறாமையாலோ,  திணை மற்றும் துறை யாதென அறியப்பெறாதவை அல்லது கிடைக்கப்பெறாதவை 6 பாடல்கள்.  திணையும் துறையும் அறியப்படும் பாடல்கள் 394.

ஒரே திணையின் கீழ் பகுக்கப்படும் பாடல்களின் எண்ணிக்கை 388, ஒன்றுக்கு மேற்பட்ட திணைகள் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை  6.

ஒரே துறையின் கீழ் பகுக்கப்படும் பாடல்களின் எண்ணிக்கை 359 ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் கொண்ட பாடல்களின் எண்ணிக்கை 35.

பாடாண் திணை (140 பாடல்களில் அல்லது 35%), வாகைத் திணை (81 பாடல்களில் அல்லது 20%), பொதுவியல் திணை (74 பாடல்களில் அல்லது 19%) என அதிக அளவில் பாடல்களில் இடம்பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ள திணைகளாகும்.

இயன்மொழி (58 பாடல்களில் அல்லது 13%),  கையறுநிலை (45 பாடல்களில் அல்லது 10%), அரசவாகை (36 பாடல்களில் அல்லது 8%),  மகட்பாற் காஞ்சி (20 பாடல்களில் அல்லது 5%) என அதிக அளவில் பாடல்களில் இடம்பெற்று முதல் நான்கு  இடங்களில் உள்ள துறைகளாகும்.

புறநானூறு -புறப்பொருள் வெண்பாமாலை ஒப்பீடு:

இலக்கியங்கள் தோன்றி பின்னர் அவற்றின் அடிப்படையில் இலக்கணங்கள் வகுக்கப்படுகின்றன என்பது மொழியறிஞர்கள் கூறும் கருத்து. புறத்திணைகளும் அவற்றின் துறைகளும் என இலக்கணம் வகுக்கும்  புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலின்படி  12 திணைகளும், 200 க்கும் மேற்பட்ட துறைகளைக் கொண்டதாகவும் புறப்பொருள்  பகுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

ஆனால், புறநானூற்றின் 400 பாடல்களில் 11 திணைகளும் 65 துறைகளும் (உ. வே. சா.  பதிப்பித்த நூலில் காணும்  குறிப்புகள் வழி) தெரிகிறது.  உழிஞைத் திணையின் துறைகள் 28 என்று இலக்கண நூல்  காட்டும்பொழுது, புறநானூற்றில் உழிஞைத்திணையின் பாடல்களே இல்லை என (பாடபேதம் எனக் காட்டப்பட்டு தவிர்க்கப்பட்ட பாடல் நீங்கலாக) அறிய வரும்பொழுது வியப்பு ஏற்படுகிறது.  இதனால் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக  400 பாடல்களைக் கொண்ட புறநானூறு தொகுக்கப்படுவதற்கும்   முன்னர் எத்தனை பழந்தமிழ்ப் பாடல்கள் மறைந்து போயிருக்கக்கூடும் என்ற எண்ணமும்  மலைக்க வைக்கிறது.

சான்றாதாரங்கள்:

புறநானூறு, மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி, டாக்டர் உ. வே. சாமிநாதையர், தமிழ் இணையக் கல்விக்கழகம்.

http://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280bod-127606

புறநானூறு, ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், தமிழ் இணையக் கல்விக்கழகம்.

http://www.tamilvu.org/library//l1281/html/l1281fir.htm

புறநானூறு-மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், டிசம்பர் 2010, சாரதா பதிப்பகம் சென்னை.

https://ta.wikisource.org/s/1k89

புறப்பொருள் வெண்பாமாலை – மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், ஆகஸ்டு 2009, சாரதா பதிப்பகம் சென்னை.

https://ta.wikisource.org/s/1vdp


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும்”

அதிகம் படித்தது