மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண் கவிதைகளில் ஆளுமைத் திறன்

முனைவர் மு.பழனியப்பன்

Jan 21, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150
ஆளுமை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் சார்ந்ததாகும். இவற்றின் மூலம் ஒரு மனிதன் தனது தனித்த அடையாளத்தைச் சமுதாயத்தில் நிறுவுகிறான். இதன்வழி அவனுக்கான தனித்த ஆளுமைத் தன்மையை அவன் பெறுகிறான். மேலும் தனக்கான தனிப்பட்ட சிந்தனை வழிகளில் ஒருமனிதன் தொடர்ந்து செல்லவும் ஆளுமை உதவுகின்றது.

“தனிமனிதனுடைய எண்ணங்கள், செயல்படும் முறை, நடத்தைகள், அவன் பிறரிடம் பழகும் முறை, மனப்பான்மைகள், அவன் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டுள்ள கண்ணோட்டம், அறிவாற்றல், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகிய பல கூறுகள் இணைந்த தொகுப்பிலிருந்து அவனுக்கு ஏற்படும் ஒரு தனித்தன்மையே அவனது ஆளுமை எனப்படும்” என ஆளுமை குறித்து விளக்கம் தரப்பெறுகிறது. (வாழ்வியல் களஞ்சியம் தொகுதி 11)

ஒருவருடைய நுண்ணறிவு, இயல்பு, திறமை மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றின் நிலையே ஆளுமையாகும் என்கிறார் அறிஞர் வாரன்.

ஒரு தனி மனிதனின் தனித்தன்மையான நடத்தையினையும் சிந்தனையையும் முடிவு செய்கின்ற அவனுடைய உள, உடல் அமைப்பே ஆளுமை எனப்படுகிறது என்கிறார் ஆல்பிரட்.

இவ்வறிஞர்களின் கருத்துப்படி ஒவ்வொரு தனி மனிதனும் தனித்த பண்புகள் உடையவனாக தனித்த சிந்தனைகளை உடையவனாக உள்ளான் என்பதை அறியமுடிகிறது. அவ்வாறு அவன் தனித்துவமாக சிந்திப்பது அதன்வழி செயல்படுவது போன்றன அவனின் ஆளுமைப் பண்புகளாகின்றன. ஒவ்வொரு மனிதனின் ஆளுமைக்கும் அவனின் உள்ளமும் உடலுமே பொறுப்பாகின்றது.

ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விசயங்களைத் தடுமாறாமல் கையாளும் முறைமையும் ஆகும். நெருக்கடியான நேரங்களில் அதனைத் தீர்க்க மனித மனம் எடுக்கும் முடிவுகள் ஆளுமைத் திறன் சார்ந்தனவாகும்.

தற்காலத்தில் ஆளுமை மேம்பாடு என்பது அறிவியல், உளவியல், மானுடவியல் அடிப்படையில் அணுகப் பெறுகிறது. இலக்கியங்கள் மனிதர்களின் ஆளுமையை வளர்க்க பல வழிகளில் துணைபுரிகின்றது.

ஓர் எழுத்தாளர் எழுதுகிறார் என்றால் அது அவரின் தனிப்பட்ட சிந்தனைக்களம் ஆகும். அந்தச் சிந்தனைக் களத்தில் அவரின் படைப்பாற்றல் அவரின் எண்ணப்படி வெளிப்படுகின்றது. இதன்வழி படைப்பாளரின் ஆளுமைப் பண்பினை அறிந்து கொள்ள முடிகின்றது. அவர் தரும் ஆளுமைக் கருத்துகள் சமுதாயத்திற்கு வழி நடத்தும் நிலையில் அமையும் நிலையில் அப்படைப்பின் வாயிலாக மற்றொருவரும் பயன் பெறுகிறார். இதன் காரணமாக ஒருவர் மற்ற ஒருவருக்கு அறிவிக்கும் ஆளுமைச் செய்திகளை உடையதாக இலக்கியங்கள் விளங்குகின்றன என்பதில் ஐயமில்லை. எனவே படிக்கும் வாசகரின் உள்ளமும் ஆளுமையைப் பெறுகின்றது. தொடர்ந்து படிக்கப்படும் பொருள், அல்லது பாத்திரம் அதன் பண்புகளால் அதுவும் ஆளுமை பெறுகின்றது. எனவே இலக்கியப் படைப்புகள் என்பவை சிறந்த ஆளுமைக் களன்கள் என்பதை உணரமுடிகின்றது.

தமிழ் இலக்கியங்களில் ஆளுமைத்திறன்

தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து ஆளுமைப் பண்புகள் வளர்த்தெடுக்கப்பெற்றுக் கொண்டே வரப்பெற்றுள்ளன. திருக்குறள் மிகச் சிறந்த ஆளுமைகளை எடுத்துச் சொல்லும் நூலாக விளங்குகிறது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”

என்ற குறளில் இடம்பெறும் திண்ணியர் என்ற சொல் சிறந்த ஆளுமைப் பண்புடையவரைக் குறிப்பதாகும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
என்ற திருக்குறளும் ஆளுமைப் பண்பினுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த குறளாகும். ஒருவனுடைய தன்மை, செயல்பாடு அறிந்து அவனிடத்தில் ஒரு வேலையை ஒப்படைத்தால் அது சிறப்பாக நடத்தப்படும் என்பதை இக்குறள் குறிப்பிடுகிறது.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படுஉம் நெறியுமார் அதுவே

என்கிறது சங்க இலக்கியம். நல்லாற்றுப் படுத்தும் நெறியைச் சங்கப் புலவர் நல்ல ஆளுமைப் பண்பாகக் காட்டுகிறார். முதலில் அவர் நல்வழியில் நிற்பவராக அமைந்த நிலையில் அவர் மற்றவர்களுக்கும் அந்நல்லநிலையில் நிற்றலால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கிறார்.

ஒருவரின் சிறந்த ஆளுமைப் பண்பு மற்றவருக்கும் கடத்தப்படுவதற்கு இலக்கியங்கள் நல்ல மையமாக விளங்குகின்றன. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களில் பல நல்ல ஆளுமைக் கருத்துகள் நல்ல ஆளுமை மிக்கப் புலவர்களால் காட்டப்பெற்றுக் கொண்டே வரப்பெற்றுள்ளன.

பெண் எழுத்து – வரையறை

எழுதுபவர்கள் தன்னை மறைத்துக்கொண்டு எழுதலாம். தான் யார் தன் பாலினம் என்ற என்பதைத் தவிர்த்தே எழுதலாம். சில நேரங்களில் இந்த மறைத்தல் இல்லாமல் தெளிவாக வெளிப்படையாக எழுதியவர் யார், அவரின் பாலினம் என்ன என்பது வெளிப்பட்டுவிடும்.

பெண் எழுத்துகளில் பெரும்பாலும் மறைத்தல் என்பது இருக்கும். அந்த மறைத்தலையும் தாண்டி அவர்கள் எப்போதாவது வெளிப்பட்டுவிடலாம். அவ்வாறு வெளிப்பட்ட இடம் பெண் எழுத்து அடையாளமாக விளங்கும்.

சங்கப் புலவர் பொன்முடியார் என்பவரி பாடல் பின்வருமாறு
‘‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
இந்தப் பாடலை எழுதியவர் பொன்முடியார் என்று கொள்வோம். இந்தப் பொன் முடியார் ஆணா பெண்ணா என்பது ஒரு கேள்வியாக அமையட்டும்.

ஓரளவு அறிந்தவர்கள் பெண்பாற் புலவர் என்பார்கள். இதற்கு என்ன அடையாளம். ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே என்பதே அடையாளம்.

பெண் தானே பிள்ளையைப் பிரசவிக்க முடியும். ஆகவே பிரசவிக்கும் பெண் எழுதிய இந்தப் பாடல், அதாவது ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று தானே பெண்ணாக இருந்து தான் இந்தத் தன்மைக்கு உரியவள் என்று தானே மொழியும் இந்த அடையாளம் பெண் எழுத்தின் அடையாம் ஆகின்றது.

அனைத்து பெண் எழுத்துக்களும் கவனமாக வாசிக்கப்பட வேண்டியவை. அவை ஆண்கள் காட்டும் பெண்களைப் போன்று பெண்களைப் படைப்பதில்லை. சமுதாயத்தைப் படைப்பதில்லை. நுணுக்கமாக, வேறுபட்ட பெண் உலகை பெண் எழுத்தாளர்கள் படைக்கிறார்கள்.

பெண்கள் அதிகம் எழுதுவது கவிதைத் துறை. ஓரளவிற்குச் சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் எழுதுகிறார்கள். அவற்றில் பெண்கள் படைத்த சமுதாயம் குறிப்பாக வேறுபட்டே அமையும். அவர்கள் தம் படைப்புகள் வழியாகச் சொல்லவரும் ஆளுமைக்கருத்துகளும் மிக நுண்ணிய ஆனால் ஆழமான வேறுபாடு உடையவைகளாக இருக்கும்.

பெண் எழுத்துக்களில் ஆளுமை மேம்பாடு

சங்ககாலம் முதலே பெண்கள் எழுதி வருகின்றனர். தற்காலத்தில் பெண்கள் பெரிதும் எழுதுகின்றனர். பேசுகின்றனர். படைப்புகளைப் படைக்கின்றனர். மதிப்பீடு செய்கின்றனர். பெண் படைப்புத் தளம் இன்று மிகப் பொறுப்புடையதாக, விழிப்புடையதாக விளங்கி வருகின்றது.
கவிதையின் சாயலெல்லாம்
புனிதவதி
பெண்ணாகி கவியாகி பேயாகி
பேயின் மொழி விடுதலை
(மாலதி மைத்ரி, நீலி. ப. 70)
இதுவே எழுத்து விழிப்புணர்வு. இந்தக் கவிதைக்குள் முழுவதும் நிறைந்திருப்பது பெண் அல்லது பெண் எழுத்து. பெண்ணாகி நின்றபோது சாதராணப் பெண்ணாக நின்றாள் புனிதவதி. அவள் கவியானபோது கவிதையின் சாயலானாள். அவள் பேயானபோது அதாவது கணவனால் வணங்கப்பட்ட நிலையில் தன் தசை உருவம் நீக்கிய நிலையில் எலும்பு உருவமாக பேய் ஆனாள். பெண் என்பவள் பெண்ணாகி, கவியாகி, பேயாகி விடுதலை பெற்ற நிலைப்பாட்டை இக்கவிதை உணர்த்துகிறது.

பெண் எல்லா எழுத்திலும் தன்னைப் பற்றி எழுதுகிறாள்.தன் அடக்கத்தைப் பற்றி எழுதுகிறாள். தன் விடுதலையைப் பற்றி எழுதுகிறாள். இங்கு விடுதலை பெண்ணிற்குக் கிடைக்கிறது.

பெண்கள் படைத்த படைப்புகளில் ஆளுமை என்பது பொதுவாக இருநிலைகளில் அமைகின்றன. ஒன்று பொதுவான சமுதாயம் நோக்கிய ஆளுமைப் பண்புகள் மற்றது பெண்கள் குறித்தான ஆளுமைப் பண்புகள். பெண் என்பவள் தனக்காகவும் எழுத வேண்டியுள்ளது. சமுதாயத்திற்காகவும் எழுத வேண்டியுள்ளது. எனவே பெண் படைப்புகள் கூர்ந்து ஆராயப்பட வேண்டியனவாக உள்ளன.

ஆளுமை என்பதை இன்னும் இரண்டு பிரிவுகளாகப் பகுக்க இயலும். அவை 1. உருவ ஆளுமை 2. உள்ள ஆளுமை என்பவனவாகும். உருவ ஆளுமை மூன்று முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. 1.உடை 2.உடல்நலன் 3. தோற்றப்பொலிவு என்பன அவையாகும். உள்ள ஆளுமை என்பது மனப்பான்மை (Attitude) மற்றும் தலைமைப் பண்புகளால் (Leadership Characters) தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆளுமை என்பது பல்வகைப்பட்ட பகுப்புகளுக்கு இடமளிப்பதாக உள்ளது.

இவ்வகையில் பெண்கள் படைப்பில் உருவ ஆளுமை, உள்ள ஆளுமை ஆகியவற்றும் இனம் கண்டறிய இயலும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண் கவிதைகளில் ஆளுமைத் திறன்”

அதிகம் படித்தது