மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை

தேமொழி

Jan 19, 2019

 siragu marayon1

பூம்புகாரில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் காவிரியின் கரையோரமாக நடந்து உறையூரை அடைந்து அங்கு தங்குகிறார்கள். பிறகு வைகறையில் உறையூரை விட்டு நீங்கி தென்திசை நோக்கிப் பயணமாகிறார்கள். வழியில் மதுரையில் இருந்து திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் செல்ல விரும்பிப் பயணிக்கும் மாங்காட்டு மாமுது மறையோன் என்ற வழிப்போக்கன் ஒருவனை எதிர் கொள்கிறார்கள். அவன் மாங்காட்டில் வாழும் பாண்டிய நாட்டுக் குடிமகன். அவன் மதுரையில் இருந்து வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கோவலன், ‘மாமறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறு’ (58-59) என மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி கூறுவாயாக என்று மறையவனிடம் வினவுகிறான்.

மாங்காட்டு மாமுது மறையோன்,

“….. வெங்கதிர் வேந்தன்

தானலந் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்

காலை எய்தினிர் …..” (63-67)

என வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், முல்லை நிலப்பகுதியும், குறிஞ்சி நிலப்பகுதியும் தம் இயல்பை விட்டொழித்து, பசுமை குன்றி பாலை நிலமாக மாறும் இக்காலத்தில் பயணிக்கிறீர்களே எனக் கூறுகிறான். இதிலிருந்து திருச்சிக்குத் தெற்கேயும் மதுரைக்கு வடக்கேயும் உள்ள இடைப்பட்ட பகுதியில் மருதநிலப் பகுதி குறைவு என்பதையும், மதுரைக்குச் செல்லும் வழி குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளைக் கொண்டது என்பதும் தெரிகிறது. இன்றும் இப்பகுதியில் ‘பட்டி’ என்ற பெயருடன் கூடிய ஊர்களையே அதிகம் காண முடிகிறது. முல்லைநில ஊர்கள் பட்டி என்ற பெயர் கொண்டவை. காட்டில் வாழும் மக்கள் தங்கள் கால்நடைகளை வேலிகட்டி வனவிலங்குகளிடம் இருந்து காக்கும் அமைப்பு கொண்ட ஓர் வாழிடம்தான் பட்டி என்றோ பாடி என்றோ குறிப்பிடப்படுவது வழக்கம். மேலும் அவர்கள் கோடை காலத்தில் பயணம் மேற்கொண்டிருப்பதும் தெரிகிறது. அக்காலத்தில் விளையக்கூடிய பயிர்கள், அவற்றின் வளர்ச்சி நிலை குறித்த செய்தியும் மாங்காட்டு மாமுது மறையோன் மதுரைக்கு ஆற்றுப்படுத்தும் செய்தியில் கிடைக்கிறது.

தொடர்ந்து அவன்,

“நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று

கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்

பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய

அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்” (70-73)

என்கிறான். மிக நீண்ட இந்தச் சுர நெறியைக் கடந்து சென்று (இன்றைய தேசிய நெடுஞ்சாலை 38 தடம் – NH 38), கொடும்பாளூர் (புவியிடக் குறிப்பு: 10.560768, 78.515205) மற்றும் அதையடுத்துள்ள நெடுங்குளக் கோட்டகம் பகுதிக்கு (இன்றைய பெரிய குளம் பகுதி-புவியிடக் குறிப்பு: 10.552811, 78.523570) சென்றால், அவ்விடத்தில் தலையில் பிறை சூடிய சிவன் தனது கையில் ஏந்திய சூலத்தின் மூன்று முனைகள் போல இந்த வழி மூன்று தடங்களாகப் பிரிவதைக் காணுவீர்கள் என்கிறான் மாங்காட்டு மறையோன். மேலும் தொடர்ந்து, கொடும்பாளூர்-நெடுங்குளக் கோட்டகம் அருகில், சூலத்தின் முனைகள் போன்று மூன்றாகப் பிரியும் வழிகள் எத்தகையவை எனவும் விளக்குகிறான்.

வலப் பக்கம் செல்லும் வழி:

இவ்வழியில், விரிந்த தலையினையுடைய வெண்கடம்பு, காய்ந்த தலையினையுடைய ஓமை, பொரிந்த தாளினையுடைய வாகை, தண்டு காய்ந்த புல்லாகிய மூங்கில் போன்ற மரங்கள் நீரின்றி காய்ந்து கிடக்க, நீர்வேட்கையால் நீர்நிலையைத் தேடி அலையும் மான்கள் வாழும் காடும், எயினர் வாழும் பகுதியும் உள்ளன. இவற்றைக் கடந்து தொடர்ந்து பயணித்தால், மலைச்சாரலில் விளையும் ஐவனம் என்ற நெற்பயிரும், இலையற்று கணுக்களுடன் கூடிய முதிர்ந்த கரும்பும், அறுவடை செய்யும் நிலையில் உள்ள முதிர்ந்த வரகும், வெள்ளுள்ளி, மஞ்சள், அழகிய கவலை கொடி, வாழை, கமுகு, தாழ்ந்த குலையை உடைய தெங்கு, மா, பலா ஆகியவை நிறைந்த ‘சிறுமலை’ (புவியிடக் குறிப்பு: 10.192722, 77.995249) என்ற பெயருடைய, பாண்டிய மன்னனுக்குச் சொந்தமான மலையும் இருக்கும். அம்மலையானது உங்களின் வலப்பக்கமாக இருக்க, இடப்பக்கம் வழியாகத் தொடர்ந்து சென்றால் மதுரையை அடையலாம் என்கிறான் மாங்காட்டு மறையோன்.

siragu Madurai-Trichy by Foot

இடப்பக்கத்துச் செல்லும் வழி:

வலப்பக்கத்தைத் தவிர்த்து இடப்பக்க வழியில் செல்லுவீர்கள் என்றால், பண்ணொலி எழுப்பிப் பாடும் வண்டுகள் மொய்க்கும் குளங்களும், வயல்களும், குளிர்ந்த பூஞ்சோலைகளும், பாலை நிலமும், குறுக்கிடும் காட்டு பகுதிகள் ஆகியனவற்றைக் கடந்து திருமால் உறையும் மலைக்குச் செல்லலாம். அங்கு மயக்கம் தரும் பிலத்து வழியுண்டு (பிலம்=குகை). அங்கு தேவர்கள் போற்றும் வியப்பைத் தரும் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்ற மூன்று பொய்கைகள் உள்ளன.

புண்ணிய சரவணம் பொய்கையில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் தலைவன் இந்திரன் எழுதிய நூலை அறியமுடியும்.  பவகாரணியில் மூழ்கி எழுந்தால் இப்பிறப்பு ஏற்படக் காரணமான முற்பிறப்பு குறித்து அறியமுடியும். இட்டசித்தி பொய்கையில் மூழ்கி எழுந்தால் மனதில் எண்ணியதை அடையமுடியும். அங்குள்ள பிலத்தின் நுழைய விரும்பினால், அந்த உயர்ந்த மலையில் உள்ள உயர்ந்தோனைத் தொழுது, சிந்தையில் அவன் திருவடியை நினைத்துத் துதித்து, மலையை மும்முறை வலம் வந்தால், நிலத்தைப் பிளந்தது போன்று பாயும் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரையில், ஒளிரும் பொன்னாலான கொடி போல மேகம் போன்ற கூந்தலையும் வளையல் அணிந்த தோள்களையும் உடைய பெண்ணொருத்தி தோன்றுவாள்.

அவள், நான் இந்த மலையடியில் வாழும் வரோத்தமை என அறியப்படுபவள், இப்பிறப்பில் இன்பமும், மறுபிறப்பில் இன்பமும், இந்த இருபிறப்புகளுமின்றி செம்மையானதாக என்றும் அழிவில்லா இன்பம் தரும் பொருள் யாவை என அம்மூன்று இன்பம் தரும் பொருட்களை உரைத்தால் நான் உங்களின் உடைமையாவேன். உங்களுக்கு இப்பிலவத்தின் வாயிலைத் திறப்பேன் என்பாள். சரியான விடையைச் சொன்னால், அவள் கதவைத் திறந்து காட்டுகின்ற வழியில் சென்றால், கதவுகளுடன் கூடிய பல வாயில்களைக் கொண்ட இடைகழி ஒன்று இருக்கும். அதில் இரட்டைக் கதவுகளைக் கொண்ட வாயில் அருகே ஓவியத்தில் தீட்டப்பட்டது போன்ற தோற்றத்துடன் பூங்கொடி போன்ற பெண்ணொருத்தி, முடிவில்லாத இன்பம் எதுவென்றுச் சொன்னால் மூன்றிலும் நீங்கள் விரும்பிய பொருளினைப் பெறலாம் என்று கூறுவாள். சொல்லவிட்டாலும் உங்களுக்கு நான் தீங்கு செய்ய மாட்டேன், நீங்கள் தொடர்ந்து உங்கள் வழியில் செல்லலாம் என்பாள். சரியாகச் சொன்னால் மூன்றில் நீங்கள் விரும்பியதை அடைய உதவுவாள்.

அரிய வேதநூல் கூறும் ஐந்தெழுத்து எட்டெழுத்து மந்திரங்கள் இரண்டையும் மனமுவந்து ஓதி நீங்கள் விரும்பிய பொய்கை ஒன்றில் மூழ்கி எழலாம். அதன் பயனாக தவம் செய்வோர் அடைய முடியாததை அடையலாம். உங்களுக்கு அந்தப் பொய்கைகள் தரும் பலனில் ஆர்வமில்லை என்றால் அவற்றை எண்ணாது குன்றின் மீது குடிகொண்டு நிற்பவனின் மலர்ப்பாதத்தை மனதில் நினையுங்கள். அவ்வாறு செய்வீர்கள் என்றால் திருமாலின் கொடிமரம் நிற்குமிடம் காணக்கிட்டும். அதனைக் கண்ட பயனால் அவன் திருவடிகளை அடைந்து உங்கள் பிறவித்துன்பம் நீங்கிய இன்பம் அடைவீர்கள், அதன் பின் மதுரைக்குச் செல்லுங்கள், காணவேண்டிய பிலத்தின் காட்சியாகும் இது என்கிறான் மாங்காட்டு மறையோன்.

குறிப்பு: மாங்காட்டு மறையோன் கூறும் இடப்பக்கத்துச் செல்லும் வழி தரும் குறிப்பின்படி, அந்த வழியானது திருமால் கோயில் உள்ள அழகர் மலைக்கு (புவியிடக் குறிப்பு: 10.100443, 78.223694) கிழக்குப்புறமாக இருந்திருக்கக்கூடிய ஒரு வழியென பொதுவாகக் கொள்ளலாம் (அதாவது இன்றைய திருச்சி-மதுரை நேர்வழியான தேசிய நெடுஞ்சாலை 38 க்கு இணையாக இருந்திருக்கக் கூடிய ஒரு வழி எனக் கொள்ளலாம்).

இடைபட்ட வழி:

அந்த இரு வழியிலும் செல்ல விரும்பாவிட்டால், இவ்விரண்டிற்கும் இடைபட்டவழியே மதுரைக்குச் செல்ல சிறந்த வழி எனலாம். தேன் ஒழுகும் சோலைகள் சூழ்ந்த ஊர்களையும், இடையிடையே காடுகளையும் கடந்து சென்றால், அரிய இவ்வழியில் துன்பம் தரும் தெய்வம் ஒன்று உள்ளது. அத்தெய்வம் வழிப்போக்கருக்கு அச்சம் தராது இனிய தோற்றத்துடன் தோன்றித் துன்புறுத்தாமல் தடை செய்யும். அத்தெய்வத்திடம் இருந்து தப்பிக் கடந்து சென்றால் இந்த மூன்று பெருவழிகளும் ஒருங்கிணையும். அதன் வழி சென்று நீங்கள் மதுரையை அடையலாம் என்கிறான் மாங்காட்டு மறையோன்.

மாங்காட்டு மறையோன் கூறும் இடைபட்ட வழி, சிறுமலைக்கும் அழகர்மலைக்கும் இடையே மதுரைக்குச் செல்லும் வழியாக இருக்கலாம்.  மதுரைக்கு வழி கூறிய மாங்காட்டு மறையோனை நோக்கி கவுந்தியடிகள், நல்லொழுக்கத்தினை விரும்பும் கொள்கையுடைய நான்மறை வல்லோனே என விளித்து, வாய்மையும் கொல்லாமையுமே தலையாய அறங்கள். அதுவே எங்கள் சமய நெறி என அறிக. அதன் வழி நிற்றலே போதுமானது. அதனால் குகைக்குள் நுழைதலும் பொய்கை நீராடலும் போன்ற தேவை எமக்கில்லை. நீ வணங்க விரும்பும் திருமாலை வழிபடச் செல்வாயாக என விடை கொடுத்து அனுப்புகிறார்.

இதுபோன்றே, அந்தணர் கூறும் பொய்கை நீராடல் போன்ற வழிமுறைகளைக் கண்ணகியின் அந்தணத்தோழி தேவந்தி அவளிடம் முன்பொருமுறை கூறுவதாகவும் சிலப்பதிகாரம் காட்டும். புகாரின் பொய்கையில் நீராடி வணங்கினால் கண்ணகியைப் பிரிந்து சென்ற கோவலன் மீண்டும் கண்ணகியைச் சேர வருவான் என தேவந்தி கூறும்பொழுது அவளுக்கு மறுமொழியளிக்கும் சமண சமயம் சார்ந்த கண்ணகி, பொய்கை மூழ்கித் தெய்வந் தொழுதல் ‘பீடு அன்று’ என்பாள். இவ்வாறு கண்ணகி வாயிலாகவும் இளங்கோவடிகள் பொய்கை நீராடும் நம்பிக்கையை மறுப்பார்.

மாங்காட்டு மறையோன் வைணவன் என்பதால் திருவரங்கத்திற்கும், திருவேங்கடத்திற்கும் சென்று திருமாலை வழிபட விரும்புபவன். அவன் தனது வைணவப் பார்வையில் அழகர் மலை திருமாலின் பெருமையையும் புகழ்ந்து கூற வாய்ப்பெடுத்துக் கொள்வதை இடப்பக்கத்துச் செல்லும் வழி குறித்து அவன் தரும் விளக்கம் மூலம் புலப்படுத்துகிறார் நூலாசிரியர் இளங்கோ. மாங்காட்டு மறையோன் கூறும் பிலமும் பொய்கைகளும் அவற்றுக்கு வழிப்போக்கரை ஆற்றுப்படுத்தும் வரோத்தமை போன்ற தெய்வீகப் பெண்களும் சமண சமய இயக்கியர். ஆகவே, அழகர்மலையின் அடிவாரத்தில் இருந்தவர் சமண சமயத்தார் என்பதையும் அறிகிறோம். இயக்கியர் காட்டும் பொய்கைகள் தரும் பலனில் ஆர்வமில்லை என்றால் அவற்றை எண்ணாது குன்றின் மீது குடிகொண்டு நிற்கும் திருமாலின் மலர்ப்பாதத்தை மனதில் நினையுங்கள், அவன் திருவடிகளை அடைந்து உங்கள் பிறவித்துன்பம் நீங்கிய இன்பம் அடைவீர்கள் என மாங்காட்டு மறையோன் கூறுவதில் இருந்து அவனது வைணவ சமயச் சமயச் சார்பையும் இளங்கோவடிகள் காட்டுகிறார்.

சிலப்பதிகாரம் அக்காலச் சூழ்நிலையைப் பதிவு செய்துள்ளது என்பதன் அடிப்படையில், இந்நாளில் கொடும்பாளூர் – மதுரை வழியை ஒரு மீள்பார்வை செய்யலாம். இன்றைய கூகுள் வரைபடத்தின் உதவியுடன் கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு நடைப்பயணமாகச் செல்ல விரும்பினால், சிறுமலைக்கு கிழக்கில் ஒரு வழியும், அழகர் மலைக்கு மேற்கில் ஒரு வழியும், அழகர்மலைக்கு கிழக்கில் ஒரு வழியும் என மூன்று வழிகள் கிடைக்கிறது. இந்த வழிகளுக்கு இடையில் நடைப்பயணத்தில் உள்ள வேறுபாடு சுமார் பத்து கிலோமீட்டர்கள். கொடும்பாளூரில் இருந்து இடைவிடாது நடந்தால் 24 நான்கு மணி நேரத்தில் மதுரையை அடையலாம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் எனப் பகல் முழுவதும் நடந்தால் இன்றைய சூழ்நிலையில் கொடும்பாளூரில் இருந்து மூன்று நாட்களில் மதுரைக்குச் செல்லலாம்.

இந்நாளில் கூகுளும் நடைப்பயண வழியாக மூன்று வழிகளைத் தருகிறது என்பது சற்றே வியப்பளித்தாலும், மக்கள் வாழும் பகுதிகளின் சாலைகளை இணைத்து வரையப்படும் பயணத்தடங்கள் என்பதால் வழியில் உள்ள பெரும்பாலான சிற்றூர்கள் அன்றும் இருந்திருந்து வழிப்போக்கர்களும் அவற்றையே தேர்வும் செய்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒரு வேறுபாடு, வழிகள் மூன்றாகப் பிரியுமிடம் , கொடும்பாளூருக்குத் தெற்கே துவரங்குறிச்சி பகுதியில். பார்க்க கூகுள் தந்த நடைப்பயண வரைபடம்.

மூன்று வழிகளில்,

வலப்பக்க வழி:  சிறுமலையின் கிழக்குப்பக்க வழி, பாலமேடு வழியாக (தூரம் – 99.5 கி.மீ.; நேரம் – 20 மணி 8 நிமிடம்)

இடை வழி: அழகர்மலையின் மேற்குப்பக்க வழி (தூரம் – 89.8 கி.மீ.; நேரம் – 18 மணி 11 நிமிடம்)

இடப்பக்க வழி: அழகர்மலையின் கிழக்குப்பக்க வழி (தூரம் – 94.4 கி.மீ.; நேரம் – 19 மணி 8 நிமிடம்)

இடைபட்டவழிதான் மதுரைக்குச் செல்ல சிறந்த வழி என மாங்காட்டு மறையவன் கூறுகிறான். அழகர் மலைக்கு மேற்கே உள்ள வழியையே கால்நடையாக கொடும்பாளூரில் இருந்து மதுரைக்குச் செல்வதற்கான சிறந்த வழியாக இந்நாட்களில் கூகுள் வரைபடமும் தருகிறது (89.8 கிமீ/ 18 மணி 11 நிமிட நடை தூரம்).

இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்

புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று (168-169)

என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுவதன் மூலம் கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகியோர், (மதுரைக்குச் செல்லும் வழிகளாக மாங்காட்டு மறையோனால் கூறப்பட்ட மூன்று வழிகளில்), இடைபட்ட வழியில் தங்கள் பயணத்தைத் தொடர்வதைத் தெரிவிக்கிறது.

______________________________________________________________

துணை கொண்ட நூல்கள்:

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம் – காடுகாண் காதை

மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்

http://www.tamilvu.org/ta/library-l3100-html-l3100ind-132364

திறனாய்வுச் செல்வம், நா. பார்த்தசாரதி,

முதற் பதிப்பு : டிசம்பர் 1985, நவபாரதி பிரசுரம், பக்கம் 102

https://ta.wikisource.org/s/8101

சமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)

ச. செல்வராஜ். செப்டம்பர் 08, 2017, தொல்லியல்மணி – தாய் தெய்வங்கள்

https://www.dinamani.com/tholliyalmani/tholliyalmani/thaai-deivangal/2017/sep/08/சமண-சமய-பெண்-தெய்வங்கள்-இயக்கியம்மன்-வழிபாடு-2769063–1.html

தமிழகம் ஊரும் பேரும், ரா. பி. சேதுப்பிள்ளை,

(முதற்பதிப்பு : 194), ஏழாம் பதிப்பு : 2005, பழனியப்பா பிரதர்ஸ், பக்கம் 14

https://ta.wikisource.org/s/7hpn

நன்றி: கூகுள் வரைபட சேவை – GOOGLE MAPS-SCREENSHOT: 2019-01-18 AT 12.41AM.PST


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை”

அதிகம் படித்தது