மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முந்தைய காலப் பெண்களும் அவர்களின் ஆளுமைகளும்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 4, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150
சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்கள் தங்களின் ஆளுமைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். பொன்முடியார் ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று பிறப்பிப்பது பெண்ணின் தலையாய கடமை என்று காட்டி அதனை ஆளுமையாகக் காட்டுகிறார்.

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே. (புறநானூறு 187)

என்ற பாடலின் வழி ஆளுமை மிக்கோரின் வழி உலகம் தலைசிறந்து நிற்கும் என்கிறார். இங்கு ஆடவர் என்பதை ஆண்பாலர் எனக் கொள்ளாமல் ஆளுமை மிக்கவர் என்று கொள்ளுதல் வேண்டும்.

காரைக்கால் அம்மையார் ‘‘பிறவாமை வேண்டும். பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்” என்கிறார். பிறப்பித்தலைத் தன் ஆளுமைகயாகக் கருதிய நிலையில் பிறவாமையைக் காரைக்கால் அம்மையார் வேண்டுவது தனித்த வேறுபாடு உடையதாக உள்ளது. பெண்கள் பாலினத்தால் ஒன்று என்றாலும் அவர்களின் சிந்தனை அவரவர்களுக்கு அமைந்த சூழல் நிலையில் வேறுபடும் என்பதை இதன்வழி உணரமுடிகின்றது.

“…கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே
நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்’

என்று ஆண்டாளின் இணையை ஏழேழ் பிறவிக்கும் ஆக்கும் நிலையை இப்பாடலடிகள் வழி அறியமுடிகிறது. இது ஆண்டாளின உள்ளத்தில் இருக்கும் அவளின் காதல் பண்பாகும்.

இவ்வாறு பெண் பால் புலவர்களைச் சொன்னவுடன் அவர்களின தனித்த ஆளுமை விளங்கிவிடுகின்றது. இற்றைக் காலத்தில் பலபெண்பாற் புலவர்கள் கவிதைகள் படைக்கின்றனர். அவை சமுதாயத்திற்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்ற ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

சமுதாய ஆளுமைப் பண்புகள்

kuzhandhaith tholilaalargal

ஒரு சமுதாயம் உயர்ந்த சமுதாயமாக விளங்க அங்குச் சிறந்த ஆளுமைகள் வாழ்ந்திட வேண்டும். சமுதாயத்தில் அவரவர் கடமையை அவரவர் சரிவரச் செய்ய மதிப்புகள் கூடுகின்றன. ஆனால் சமுதாயம் கீழ்நிலைக்குச் செல்லும்போது அதனைத் தடுத்த நிறுத்தவும் படைப்பாளிகள் முன்வருகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என்பது அரசுவிதி. ஆனால் குழந்தைகளை அவர்களின் குழந்தைத் தன்மையை மறுத்து, அவர்களைத் தொழிலாளியாக்கும் நிலையைத் தவிர்க்க பலரும் பல வழிகளைச் சொல்கின்றனர். இக்கவிதை குழந்தைத்தொழிலாளர்கள் இல்லாமல் செய்ய ஒருவழி சொல்லுகிறது.

தேங்காய் நாரில்
தோய்த் தெடுத்த சாம்பலை
அழுத்தித் தேய்க்க
பாத்திரத்திற்கு வலிக்கவில்லை

கல்லும் மண்ணும் கணக்கில்லாமல்
கட்டித் தூக்க
கணக்கவில்லை சட்டிக்கு

காய்ச்சிய இரும்புத் துண்டை
ஓங்கி அடிக்க சம்மட்டிக்கு வலிக்கவில்லை

போவோரும் வருவோரும்
ஏராளமான இதயங்கள்
பார்வையாளர்களாய்

யாருக்கு இங்கே வலியெடுக்கும்
யார் பெத்த பிள்ளையோ
வலிகள் இங்கே
வயிற்றுக்குத்தான்” (ஜி. விஜய பத்மா, அகத்தனிமை.ப 29)

என்ற நிலையில் குழந்தைகளின் அவர்களின் குடும்பத்து வயிற்றுப் பசி தீர்த்துவிட்டால் குழந்தைத்தொழிலாளர்கள் இருக்கமாட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது.

தற்போது உலக மயமாக்கலில் வங்கிப் பரிமாற்றம் என்பது நிமிடத்திற்கு நிமிடம் வளர்வதாக உள்ளது. பல அட்டைகள் வந்துவிடடன. கடன் அட்டைகளைத் தவிர்க்க வேண்டுகிறது ஒரு கவிதை.

கடன் அட்டை
அட்டைதான்
பணத்தை உறிஞ்சுவதில்
(நிர்மலா சுரேஷ், கடிகாரக்குயிலும், கடல் குதிரைகளும், ப.76)

என்ற கவிதை தற்காலத்தில் கடன் அட்டைகளால் ஏற்படும் தொல்லைகளைச் சுட்டுகிறது இக்கவிதை. கடன் அட்டைகளைப் பெரிதும் பிரபலப்படுத்த அதிக அளவில் பெண் விளம்பரதாரர்களே தொலைபேசியில் பேசுவதைக் கேட்கையில் இந்த சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது என்ற கவலை எழுகிறது.

நிர்மலா சுரேஷின் மற்றொரு கவிதை செல்போன் பற்றியது. இக்கவிதை 2004 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இந்தக் காலச்சூழலில் பின்வரும் கவிதையைப் படித்தால் நவீன உலகில் தாய்மை பற்றிய கேள்விக்குறி தொனிக்கும்.

திடுக்கிட்டார் மருத்துவர்
தொப்புள் கொடிக்குப் பதிலாய்
செல்போன் ஒயரோடு குழந்தை
( நிர்மலா சுரேஷ், அந்தரத்தில் பூத்த மஞ்சள் பூசணி,ப. 57)

என்ற கவிதையில் நவீனம் வெற்றி பெறுகிறதா,தாய்மை வெற்றி பெறுகிறதா என்ற கேள்விக்குறி தொனிக்கிறது.
நவீனத்தில் குலைந்து போகும் பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்படுகிறது. அதுவும் பெண்கள் பழமையை மீட்டெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுவும் ஒரு ஆளுமைதான். பழமையைக் காக்கும் ஆளுமை.

இரா. மீனாட்சியின் கவிதை பழமையை மீட்டெடுக்கிறது.

வெளியே
நாட்டின் சந்தை அந்நியர் வசம்
தெரு அவர்கள் கலை
வீடோ இரண்டின் கலவை
இழக்க ஆரம்பித்தோம்
உள்ளேயும்
வழிவழியாய் வந்த பண்பு நலன்களை
வாழும் நம்பிக்கைகளை
ஆயாவின் கை அணைக்க பானை இதை
செய்த குயவர் குலம் எங்கே
இச்செம்மண்தாழி எம் திருக்குல சாட்சி
உடைய விடமாட்டேன் இருக்கும் வரை
(இரா.மீனாட்சி, ஓவியா,ப. 118)
என்ற கவிதையில் பழம் பானையைக் காக்கும் கலையைக் காட்டுகிறார் இரா.மீனாட்சி.

பழமை என்பது வரம். அதனைப் பாதுகாப்பது நம் பண்பாட்டு ஆளுமை.

சமுதாயத்தில் சமயச் சண்டைகள் அமைதியைக் கெடுக்கின்றன. அமைதியான உலகமாக என்றும் உலகம் இருக்க மதச் சண்டைகள் மாற வேண்டு்ம்.

இதனை ஒரு சிறுகவிதை காட்டுகின்றது.

‘‘மதம் தெரியாத
வேப்பம் விதை
மசூதியில் முளைத்தது”
(மித்ரா மௌனம் சுமக்கும் வானம் ப. 107)
என்ற கவிதையில் வேப்பமரம் இந்து சமயக்குறியீடு, மசூதி இசுலாம் சமயக் குறியீடு. இவை இரண்டையும் முடித்துப் போட்டு மத நல்லிணக்கத்தைக் காட்டுகிறது மித்ராவின் சிறுகவிதை.

மித்ராவின் மற்றொரு கவிதை ஆறுகள் காணமல் போவதைப் பற்றியதாக உள்ளது.

‘‘இப்போதே பார்ப்போம்
நாளை காணாமல் போகலாம்
வரைபடத்தில் ஆறுகள்” ( மித்ரா மௌனம் சுமந்த வானம், ப. 47)
என்ற இக்கவிதைக்குள் ஆறுகள் காணாமல் போகும் அவலம் காட்டப்படுகிறது.
மனது நனைய
மழை வேண்டும்
மழை வர மரம் நடு (மித்ரா 139)

என்ற இச்சிறு கவிதைக்குள் இயற்கையைக் காப்பாற்றி வளமாக வாழ வழி சொல்லப்படுகிறது.

இருபத்தோராம் நூற்றாண்டை வரவேற்கிறது ஒரு பெண் எழுத்து.
பிறக்கப் போகிற
இந்த இருப்பத்தோராம் நூற்றாண்டில்
எனக்கு என்ன வேண்டும்?
கடந்த வருடங்களில்
நீட்டப்படாத தட்டுகளில் இருந்து
எடுக்கப்படாத இனிப்புகளை
அடைய முயல்வேன்

இதுவரை
மனதைக் கிறங்கடித்த
புகழ்மாலைகளின் சுமையில்
ஒடிந்து ஒடுங்குதல் நடவாது.

இதம் தரும் ஸ்பரிசங்களுக்கும்
வாசகங்களுக்கும் மயங்கி காலம் இனி இல்லை.

என் உடலசைவுகளைக் கோடுகளென முறுக்கிப் போட்ட ஓவியன்
போதையாய் இசைத்த கவிஞன்
ஆதாயம் தேடும் கலைஞர்கள் யாவரும் தன் ஆதாரத்தை இழப்பர்.

இந்த நூற்றாண்டு இப்படி அமைய வேண்டும்.
பல கண்களிற்கு களவுகளிற்கு கதவுகளிற் கெல்லாம்
திறப்புகள் கொணர்வதாக
(மைதிலி, இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள், ப. 37)
என்ற இக்கவிதை புத்தாயிரம் ஆண்டு புதிய கதவுகளைத் திறக்க வேண்டுகிறது. பெண்களை வைத்து ஆதாயம் தேடியவர்களை ஒதுக்கிவிட்டு புதிய வாசல்களைப் பெண்கள்திறக்கவேண்டும் என்று இக்கவிதை ஆளுமையை வளர்க்கிறது. மைதிலி என்பவர் எழுதிய இனி என்ற தலைப்பிலான கவிதை இதுவாகும்.

இனி இனிமையாய் இப்படியே அமையட்டும். ஆளுமை பிறக்கட்டும்.
இன்று இல்லையெனில் நாளை விடியும் என்பது நன்னம்பிக்கை.
இன்றைக்கில்லையெனில் நாளை
நாளையில்லையெனில் இன்னுமொருநாள்
இப்படித்தான் தெரியும் வாழ்வை
நினைவு தெரிந்த நாளில் இருந்து.
(சல்மா, ஒருமாலையும் இன்னொருமாலையம் ப. 49)
என்றவாறு வாழ்வில் வெற்றிகள் நாளை வரலாம் மற்றொருநாள் வரலாம் என்ற நம்பிக்கையுடன் தொடரும்நிலைப்பாட்டைக் காட்டுகிறது இக்கவிதை.

வாழ்க்கையின் விநோதத்தைக் காட்டுகிறது இரா. ஆனந்தியின் ஒரு கவிதை
‘‘ இன்னும் இன்னும் அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது வாழ்க்கை
ஒன்று கிடைத்தால் ஒன்று விலகுகிறது.
ஒரு நேரம் சிரித்தால் ஒரு நேரம் கலங்குகிறது
அடி மேல் அடி எடுத்து வைக்க அதிக கவனம் வேண்டியதாக இருக்கிறது
நட்புக்குக் கைகொடுப்பது பார்த்தே கொடுக்கவேண்டி இருக்கிறது
கைகளே காணாமல் போகும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது”
(இரா. ஆனந்தி, தானாய்க்கழிந்த பொழுது,ப.65)

என்ற கவிதை வாழ்க்கையின் புதிர்த்தன்மையை விளக்குவதாக உள்ளது. இந்தப் புதிர்த்தன்மையில் இருந்து விலகுவது வெற்றி பெறுவது என்பது குறித்த விவாதம் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முந்தைய காலப் பெண்களும் அவர்களின் ஆளுமைகளும்”

அதிகம் படித்தது