மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முன்னும் பின்னும் ஓர் ஒப்பீடும் மதிப்பீடும்

தேமொழி

Mar 27, 2021

siragu Munnum Pinnum-by Kavignar Suradha

உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். கவிஞர் சுரதா அவர்களின் எண்பத்து நான்காம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (23.11.2004) வெளியிடப்பட்ட இந்த நூல், கருத்துக்களின் களஞ்சியம்! கற்றோர் சிறப்பும் கல்விச் சிறப்பும், காலக்குறிப்பும் கலையுலகச் சிறப்பும் கூடிக் குவிந்துள்ள நூல் என்கிறது நூலின் அறிமுகப்பகுதி. சரியான விவரிப்புதான் அது.

முத்துவளபுரம் மதுரபாலகவி வீ.பி.எம்.ராமசிங்கம் என்.ஆர். அவர்களின் மனமோகன வள்ளியம்மை பரதம் (1922) என்ற நூலில்,

“தழைவிரிபொற் பூங்கமலத்
தண்முகமும் திங்களென்றால்
வளர்வதுவும் தேய்வதுவும்
மாசு துலங்கிடுமே!”
என்று சுப்பிரமணியர் வள்ளியம்மையின் அவயவத் தருமைகளை வர்ணிக்கும் பகுதியின் கருத்து.

“சந்திரன் இவள் முகம் என்றால்
வரவர அதன் கலை தேயுமே
களங்கம் தோயுமே”
இராமாயணம் (1932), திரைப்படத்தில் பாடலாசிரியர் டி.வி.நடராஜ ஆச்சாரி அவர்களால் எடுத்தாளப்பட்டதை ஒப்பு நோக்கி நூல் துவங்குகிறது.

திருக்குறள் முதற்கொண்டு, தொன்மையான இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரையிலும், நாட்டுப் பாடல்கள், பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் ஆகியவற்றில் இடம் பெரும் கருத்துகள் ஆகியவற்றை நுண்ணிய முறையில் சான்றுகளுடன் மேற்கோள் கொடுத்து அவற்றை எடுத்தாளும் பாடல்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுச் சிறந்த ஆய்வு நூலொன்றை வழங்கியுள்ளார் சுரதா. காலப்போக்கில் எளிதில் பொருள் கொள்ளும் முறையில், விளங்கும் வகையில் மொழியின் நடை எவ்வாறு மாறுகிறது என்பதையும், அவ்வாறு மாறினாலும் கருத்துகள் தொடர்வதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கு இது ஓர் இலக்கிய விருந்து. தற்காலத் திரையிசைப் பாடல் ஆர்வலர்களுக்கு இது ஓர் ஆர்வமூட்டும் தொகுப்பு.

நாம் கேள்விப் பட்டிராத பற்பல பாடல்கள், அவற்றில் சிலவற்றுக்கான பண்களும் தாளங்களும், பாடலாசிரியர்கள், பாடியவர்கள், இசையமைப்பாளர்கள், இசைக்குழுவினர், அவர்களில் இசைக்கருவிகளை இசைத்தவர்கள் பெயர்கள் உட்பட, நாடகங்கள், திரைப்படங்கள் என தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் ஒரு முத்தமிழ் வரலாற்றுப் பேழை என இந்த நூலைக் கூறலாம். எவ்வளவு தகவல்களை எத்தனைக்காலம் தொடர்ந்து தொகுத்து சேமித்து ஒரு நூல் வடிவில் வழங்கியுள்ளார் சுரதா என்ற வியப்பு ஏற்படாமல் இல்லை. இந்த நூலின் சிறப்பைக் கூற ஓரிரு பாடல்களை இங்கு முன்வைத்துச் செல்லலாமே ஒழிய, நூலைப் படிப்பவர் மட்டுமே உண்மைச் சுவையைப் படித்து மகிழ முடியும். மற்றவர் கரும்பு இனிக்கும் என்று சொல்வதைக் கேட்டால் அதன் சுவை கேட்பவருக்கு என்ன பயன் தரும்? அவர்களே சுவைத்துப் பார்த்தாலே அருமை அறியலாம். நூலின் நோக்கம் தெளிவானதால், நூலில் படித்துத் தெரிந்து கொண்ட ஒரு சில சுவையான கருத்துகளை இங்கு காணுவோம்.

நூல் வழியே திரையிசைப் பாடல்களில், ஒரு சில பாடல்களில் முன்னர் இடம் பெற்றிருந்த கருத்துகள் அப்படியே கையாளப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. சிலவற்றில் காலத்திற்கேற்ற ஓர் உருமாற்றமாக வரிகள் மட்டும் சற்றே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைக் கருத்துத் தாக்கம் தொன்மக் கதைகளான, இராமாயணம், மகாபாரதம், வள்ளித்திருமணம், சகுந்தலை போன்ற கதைகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உருவாக்கம் பெருகையில் மிகுதியாக இடம் பெறுகின்றன. ஒரு சில பாடல்களின் கருத்துகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் மீண்டும் பாடலாசிரியர்களால் எடுத்தாளப் பட்டிருப்பதையும் காண முடிகிறது.

எடுத்துக்காட்டாக, பாபநாசம் சிவன் எழுதிய “கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம்நாதன்” (அசோக்குமார் -1941) என்ற கருத்து அதற்கு முன்னர் வழங்கி வந்தமைக்கு 19 ஆம் நூற்றாண்டு இலக்கியங்களிலிருந்து மூன்று சான்றுகள் கொடுக்கிறார் சுரதா. இடது கண் துடிப்பது இன்பம் வருவதென்பதன் அறிகுறி (சகுந்தலை-1940) என்ற கருத்தும் பலகாலம் மக்களிடையே இருப்பதை நாம் அறிவோம்.

அது போன்றே …

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர்தள்ள – எந்நேரம்
வேதம்போம் வாயாள் விகடராமன் குதிரை
மாதம்போங் காத வழி.

[நூல் : தனிப்பாடல் திரட்டு (1923), பாடல் : 69, பக்கம் : 49, ஆசிரியர் : காளமேகப் புலவர்]
என்ற காளமேகப் புலவர் எழுதிய பாடலின் கருத்தை,
வானுலக வீதியெலாம் தூள்பறக்கவே
வருகுது பொய்க் குதிரையொன்று களிசிறக்கவே
மாதமெலாம் ஓடுமொரு காதவழியே
மற்றுமதை தொட்டவர்மேல் போடும் பழியே.
[படம் : மாயா மச்சீந்திரா (1939), பாடலாசிரியர் : சி.ஏ.லட்சுமணதாஸ்]
என்ற பாடலில் சி.ஏ.லட்சுமணதாஸ் கையாள்வதைச் சுட்டிக் காட்டுகிறார்.

1. டி.வி.நடராஜ ஆச்சாரி, 2. பாஸ்கர தாஸ், 3. சி.ஏ. லட்சுமணதாஸ், 4. கவிராஜ் ச.சு.சங்கரலிங்கக் கவிராயர், 5. கே.எம். வேதமாணிக்கம், 6. திண்டுக்கல் சுப்பையா பிள்ளை, 7. பாபநாசம் சிவன், 8. பாவேந்தர் பாரதிதாசன், 9. மாயவரம் கே. தியாகராஜ தேசிகர், 10. டி.வி..சாமி, 11. டி.கே.சுந்தர வாத்தியார், 12. எஸ்.வேல்சாமி கவி, 13. பாபநாசம் இராஜகோபாலய்யர், 14. கோவை அ. அய்யாமுத்து, 15. கு.மா. பாலசுப்பிரமணியன், 16. கு. சா. கிருஷ்ணமூர்த்தி, 17. கே.பி. காமாட்சி சுந்தரம், 18. அ. மருதகாசி, 19, சுரதா, 20. கே.டி. சந்தானம், 21. கொத்தமங்கலம் சுப்பு, 22. டி. ராஜேந்தர், 23. நா. காமராசன், 24. மகாராஜ வாத்தியார், 25. கவிஞர் கா.மு.ஷெரிஃப், 26. கிளவுன் சுந்தரம், 27. கம்பதாசன், 28. மாயவநாதன், 29. கவிஞர் வாலி, 30. வி.ஆர். கந்தசாமிப் பிள்ளை, 31. வைரமுத்து, 32. ஆலங்குடி சோமு, 33. கவிஞர் பூவை. செங்குட்டுவன், 34. முத்துலிங்கம்,

என நூலில் இங்கு கொடுக்கப்பட்ட பாடலாசிரியர்களின் பாடல் வரிகள், பிற பாடலாசிரியர் பாடல் வரிகளுடன் தனித்தனித் தொகுதியாக, ஒவ்வொரு பாடலாசிரியரின் பெயர் பக்கத் தலைப்பாகக் கொடுக்கப்பட்டு, பாடல்களின் கருத்துகள் ஒப்பீடு செய்து காட்டப்பட்டுள்ளது. ஒப்பிடப்பட்டவரின் எழுத்தும் பின்வரும் மற்றொருவரின் எழுத்திலும் தாக்கம் கொடுத்துள்ளதைக் காண முடிகிறது. இந்நூலில் சுரதா தனது பாடல் வரிகளையும் 14 முறை பிறர் எழுதிய பாடல் வரிகளுடன் ஒப்பிட்டுள்ளார். அதில், ‘கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே – இன்பக்காவியக் கலையே ஓவியமே’ (நாடோடி மன்னன்-1958) என்ற பாடலின் பல வரிகளைத் தனித்தனியாகப் பிரித்துப் பல பாடல்களுடன் ஒப்பிட்டுள்ளார்.

சில இக்காலப் பாடலாசிரியர்கள், டி. ராஜேந்தர் போன்றோர் பெயர்களும் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைக் கண்டது யார்? (பூவை செங்குட்டுவன், படம் : வடிவங்கள்-1980).
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்? (டி. ராஜேந்தர்; படம் : மைதிலி என்னைக் காதலி-1986)

பாரதியார், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம், குறிப்பாக, கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் பிறர் கருத்துக்களின் தாக்கம் உள்ளதா எனக் காட்டப்படவில்லை. அவர்களின் வரிகளைப் பிறர் எடுத்தாண்டது காட்டப்படுகிறது. சுரதாவின் பார்வையில் இவர்கள் ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவர்களோ? என்ற எண்ணம் தோன்றுகிறது. கண்ணதாசன் பாடல்வரிகளில் சங்ககாலப்பாடல்கள், கம்பராமாயணம், பட்டினத்தார், காளமேகப் புலவர், நாட்டுப்புறப் பாடல்களின் கருத்துகள் என பல பாடல்களில் கருத்துகள் இருப்பதை எத்தனையோ தமிழார்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பாடலாசிரியர் பலருக்கு, ஒருவருக்குச் சராசரி ஓர் ஐந்தாறு பக்கம் என்று ஒதுக்கியுள்ள நூலில் கவிஞர் வாலிக்கு மட்டும் 20 பக்கங்களுக்கும் மேலாக பாடல்களை ஒப்பிட்டுக் காட்டியிருப்பது கவிஞர் வாலி அடுத்தவர் கருத்தை அதிகம் எடுத்தாள்பவர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

நூலில் ஒப்பிடப்பட்ட ஒரு சில பாடல்களின் ஒப்பீடு அந்த அளவு பொருத்தமாக இல்லை என்பதும் உண்மை. அத்துடன், ஒரு சில பாடல்களுக்கு நாம் பலர் நன்கு அறிந்திருக்கக் கூடிய பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது, ஆனால் நூலில் இடம்பெறவில்லை என்பதும் வியப்பைத் தருகிறது.

எடுத்துக்காட்டாக:
கொண்டல் நிகர் கூந்தலின் கட்டு
குலைந்து மலர் உலர்ந்த தேனோ
கூறவேணும் நேரில் வாய்விட்டு – அருள்
கொஞ்சுமஞ்சுக வஞ்சியேவிழி
பஞ்சடைந்து சிவந்து புன்னகைக்
கோவையிதழ் கோரமேற்பட்டு
வெண்மையதான உண்மையைக் காண
கோரினேன்சந் தேகமேலிட்டு

வண்டுமொய்க்குங் கொண்டையைத்தானே
வரும்வழியில் பெருஞ்செடியில்
வாழ்கொடிகள் பற்றி என்மானே – பலம்
வாய்ந்திழுத்ததி னாலேமாமலர்க்
கூந்தலிவ்வித மாய்க்குலைந்தது
வாயிதழ்ச்சங் கானதுந் தேனே
வாரிப்புசித்த காரியமன்றி
மர்மமில்லை உண்மை சொன்னேனே.
[நூல் : வள்ளியம்மை சரிதம், பக்கம் : 38, நூலாசிரியர் : மதுர பாஸ்கர தாஸ்]
என்ற இந்தப் பாடலை,

சீவி சினுக்கெடுத்து
சிங்காரிச்சுப் பூவு வச்சு
கோயிலுக்குத் தானே போனே – ஏங்குருவிக்காரி
கூந்தல் கலைஞ்ச தேனடி?

கோயிலுக்குப் போயி நானும்
கும்பிட்டதும் எம்மேலே
சாமி வந்து ஆடினதாலே – எம்மேலே
ஏங்குருவிக்காரா
தலையும் கலைஞ்சு போச்சுடா.
[படம் : முல்லைவனம் (1955), பாடலாசிரியர் : அ. மருதகாசி]
இந்தப் பாடலுடன் ஒப்பிடுகிறார் சுரதா.

இக்காலத்தில் பலருக்கும் உடன் நினைவு வரும் பாடல் வரிகளாக,
நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
[படம் : இரு வல்லவர்கள் (1966), பாடலாசிரியர் : கண்ணதாசன்]
என்ற இந்தப் பாடலே இருக்கும். பிற்காலத்துப் பாடல்களையும், 1970 கள் பாடல்களை எல்லாம் நூலில் குறிப்பிட்டுள்ள சுரதா, இந்த ஒப்புமையைக் காட்டவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே. எனக்கு மேலும் சில இடங்களில் வேறு பல பாடல்களும் நினைவிற்கு வந்தன. நூலைப் படிக்கும் மற்றவருக்கும் இந்த எண்ணம் தோன்றலாம்.

சமூக நீதிக் கொள்கைகள், சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், தீண்டாமை ஒழிப்பு, பெண்கல்வியின் சிறப்பு, பெண்விடுதலை, நாட்டு மக்களிடம் நிலவிய விடுதலை வேட்கை, இராட்டையின் மேன்மை, கதர் அணிவது, நாட்டுப்பற்று, பகுத்தறிவுக் கொள்கைகள், கள்ளுண்ணாமை, குடும்பக் கட்டுப்பாடு, தேசபக்தர்களின் வாழ்வின் நிகழ்வுகள் என சென்ற நூற்றாண்டின் மாந்தவியல் வாழ்வை இந்த நூலின் திரையிசைப் பாடல்கள் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். சென்ற 20 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிறந்தவர்களுக்கு நூலில் உள்ள பல பாடல்களை அடையாளம் காணும் வாய்ப்பும், பாடகர்கள், இசையமைப்பாளர்களை நினைவு கூரும் வாய்ப்பும் பாடலாசிரியர் அ. மருதகாசி பாடல்கள் இடம் பெறத் துவங்கும் நூலின் 80 ஆம் பக்கத்திற்குப் பிறகுதான் என்பதை உறுதியாகக் கூறலாம். காலப்போக்கில் ஒரு வரவேற்கத் மாற்றமாக வடமொழிச் சொற்களின் பயன்பாடு குறைவதையும் காணமுடிகிறது.

நூலில் படித்த சில சுவையான துணுக்குகள்:

[1]
“இந்நூலின் சகல உரிமைகளும் சென்னை மெஸர்ஸ் ஆ. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ் அவர்களுக்கே உரியதாதலின் மற்றவர்கள் இப்புத்தகத்தையேனும், இதிலுள்ள பாடல்களையேனும் அச்சிட்டு வெளியிடில் புஸ்தக ரிஜிஸ்டர் சட்டப்படி சகல நஷ்டத்திற்காளாவார்கள்… ”
“ஸ்திரி சாகஸ வெற்றி அல்லது லலிதாங்கி சரித்திரம்” (1932), என்ற நூலில், உடுமலை – சரபகவி மாணவரும் சென்னை ஸ்ரீ பால வினோத நாடக சபாவின் உபாத்தியாய பரத சாஸ்திர சங்கீத சாஹித்திய சந்தவண்ணச் சரபம் நாடகாசிரியர் கவிராஜ் ச.சு.சங்கரலிங்கக் கவிராயர் தனது முன்மொழியில் (பக்கம் : 4) காப்புரிமை குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை இது.

[2]
புளியமாநகர் P.K.S. ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரால் பழனி பழைய தாராபுரம் ரஸ்தா அபீபு ரஹிமான் சாயபு எலெக்ட்ரிக் தியேட்டரில் – 18.9.44 திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு “சரஸ்வதி சபதம்” என்னும் புதிய புராண நாடகம் நடைபெறும். டிக்கட் வரியுள்பட : சேர் 1-20, பெஞ்சு 0-9-0, தரை 0-4-6. பூரண உரிமை பெற்றது; என்று ஆசிரியர் – டி.வி.நடராஜ ஆச்சாரியார் கொடுத்துள்ள விளம்பரம் கூறுகிறது.

[3]
“பெண் கல்வி முன்னேற்ற முறையீடு”

“நாகரீகக் கலியுகமே – இந்த
நாளில் எமக்குக் கல்வி வேணுமம்மா.
கற்றறியாப் பெண்கள்பாடு – படித்த
கணவன் கை தொட்டவுடன் வரும்கேடு!
சொல்லமுடியாது தாயே – இங்லீஷ்
துரைத்தன இந்தியாவில் பழுத்தவராம்
வைதீகக் கிழவர்களாம் – அவர்கள்
வாய்ப் பேச்சிலே மயங்கும் தாய்தந்தைக்கு
பெண்கள் கட்டாயப்படிப்பு – வேண்டுமென்று
பிரிட்டிஷன் கொடுத்து சட்டங் கட்டவாயம்மா
பிரம்மபுரி மகாராணி.”
என்று ச.சு.சங்கரலிங்கக்கவிராயர் எழுதிய பாடலில் தங்களுக்குக் கல்வி அருள் புரிய வேண்டும் என்று பெண்கள் பிரம்மபுரி மகாராணியிடம் வேண்டுகிறார்கள். இவர் பெண் கல்வி ஆதரவாளராக இருந்துள்ளார் என்பதை மேலும் சில பாடல்களின் மூலமும் அறிய முடிகிறது.

[4]
ஒரு பாடலில் ‘சங்கரலிங்கன் தமிழ்ச் சங்கீதக்குயில் கூவுதே’ என்று தனது பெயரையும் (குலேபகாவலி சரித்திரம்-1932) இவர் இணைத்துள்ளார். மற்றொரு பாடலிலும் “உம்மை எங்குமே காண்கிலேனே, எங்கள் தாத்தா சங்கரலிங்கம் பாட்டைப்பாடிதானே உன்னைத் தேடுகிறேனே” என்றும் மீண்டும் தனது பெயரைக் கூறியுள்ளார் (அதிரூப அமராவதி-1935) ச.சு.சங்கரலிங்கக் கவிராயர். இவர் போல பாடலில் தன் பெயரைக் கூறிச் செல்லும் மற்றொருவர் கே.எம். வேதமாணிக்கம். இவர்,”மாண்புறு வேதமாணிக்க வாக்கியம் மண்டலம் தன்னிலே கொண்டிருஞ் சிலாக்கியம்” என்று ஒரு பாட்டில் (விஸ்வாமித்திரா-1936) குறிப்பிடுகிறார்.

[5]
அக்காலத்திலேயே புதுக்கவிதையின் சாயலில் ஒரு பாடல் காணப்படுகிறது:
“வியப்புக் குறியின் கோடாக நான்….
கீழே போடும் புள்ளியாக நீ…!
இருவரும் தொட்டுக் கொள்ளவில்லை…
ஆனாலும் உன்னில்நான் எழுந்து நிற்கிறேன்…”
– ச.சு.சங்கரலிங்கக் கவிராயர் (முன்னும் பின்னும்-பக்கம் 27)

[6]
இராகங்களின் பெயர்களைப் பாடல்வரிகளில் அமைத்துப் பாடும் பாடல் வரிகளை ‘ஒருநாள் போதுமா’ (திருவிளையாடல்-1965), ‘வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்’ (அகத்தியர்-1972) போன்ற பாடல்களில் கேட்டு வியந்திருக்கிறோம். அது போன்ற பாடல்கள் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலும் சில படங்களில் இருந்திருப்பதும் தெரிய வருகிறது.

[7]
ஜூலை 9, 1948 அன்று பெரியார் தன்னை விட பல வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சில நாட்களில் ஜூலை 31, 1948 இல் வெளியான ‘போஜன் என்ற படத்தில் ‘தள்ளாத காலத்திலே கல்யாணமா? தான்கெட்ட கேட்டுக்கொரு பெண் வேணுமா?’ என்ற பாபநாசம் இராஜகோபாலய்யர் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பின்றி இயல்பாய் அமைந்துவிட்ட வரிகளாக இருக்க வழியில்லை. ஆனாலும் நூலில் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

பக்கம் 45 முதல் – 54 ஆம் பாகம் வரையில் ஒரு 10 பக்கங்களுக்கு பாபநாசம் சிவன் எழுதிய பாடல்கள் சில எந்தவித ஒப்பீடு இன்றியும், அவற்றைத் தொடர்ந்து பாபநாசம் சிவன் குறித்து ஒரு சில துணுக்குச் செய்திகளும் உள்ளன. இது போன்று கம்பதாசன், வில்லிபுத்தன், எம்.எஸ். பாலசுந்தரம் பிள்ளை (மதுரை பாலசுந்தரக் கவி/மதுரை ரஞ்சித மோகனகவி), கலைஞர் கருணாநிதி, பாவலர் டி.பி. வேலாயுதசாமி, புலவர் வேதா, புலமைப்பித்தன், கு.மு. அண்ணல் தங்கோ, சிதம்பரம் வரதராசன், எஸ்.வேல்சாமி கவி என்று மேலும் பல பாடலாசிரியர்களுக்கும் அவர்களின் பாடல்கள் சில ஒப்பீடுகள் இன்றி தொகுக்கப் பெற்று, ‘பாடல்களில் இவர் சிந்தனை வீச்சு!’ என்ற குறிப்பும் ஒரு சிலரின் தொகுப்பிற்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு அவர்களைப் பற்றிய துணுக்குச் செய்திகள் சிலவும் இடம் பெறுகின்றன. இவை தவிர்த்து நூலில் ஆங்காங்கேயும், நூலின் இறுதிப் பகுதியில் பல பக்கங்களில் உதிரியாகப் பல பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை இணைக்கப்பட்டது நூலின் நோக்கமான ‘முன்னும் பின்னும்’ என்ற ஒப்பிடல் என்பதில் இருந்து தனித்து விலகி நிற்கின்றது என்பது ஒரு குறை. இவற்றை நீக்கியிருக்கலாம். சுரதாவிற்குப் பிடித்த கருத்துக்கள் கொண்ட வரிகளின் சேமிப்பு, மெய்ப்புப் பார்க்கப்படாமல் நூலில் இடம் பெற்றுவிட்டது போன்ற தோற்றம் தருகிறது இத்தகைய செயல்பாடு.
அத்துடன்,

- தூத்துக்குடி ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற ‘பொருந்தாத பக்கத்தலைப்பில்’ கவிஞர் கா.மு.ஷெரிஃப் அவர்கள் வ.உ.சி. பற்றி எழுதிய பாடல் இடம் பெறுகிறது.

- சங்கரலிங்கக் கவிராயர் பாடல்கள் சிலவும், கவிஞர் வாலியின் பாடல்கள் சிலவும் தொடர்ச்சியற்ற வகையில் வெவ்வேறு பகுதிகளில் இருமுறை ஒப்பிடுதல்.

- பாடலாசிரியர் மகாராஜ வாத்தியார் பிற்காலப் பாடகர் வரிசையில் இடம் பெறுதல் போன்ற காலக்கோட்டில் அமைந்திடாதக் குழப்பங்களும் உள்ளன.

- சில பாடல்கள் ஒப்பீட்டு இணைப்பாடல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கூறப்படுதல் (இது கவிஞர் வாலியின் பாடல் பகுதிகளில் பலமுறை காணப்படுகிறது)

இவை போன்ற பிறழ்வுகள் பலவும் நூல் சரியாக மெய்ப்புப் பார்க்கப்படவில்லை என்பதற்குச் சான்றுகள். சுரதா குறிப்புச் சுவடி போலத் தொகுத்து வைத்தவற்றை, அவரிடம் இருந்து பெற்று நேரே நூலாக்கம் செய்ய அச்சுக்கு அனுப்பிவிட்டார்களோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இதுபோன்று பல பாடல்களை ஒப்பீடு செய்து காட்டுவதற்கு இலக்கியங்களில் பரந்துபட்ட அறிவும் ஆர்வமும் ஆய்வு மனப்பான்மையும் ஒருவர் பெற்றிருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அதைத் தொகுத்து அளித்திருப்பது சிறந்த தமிழ்ப்பணி என்பதில் சிறிதளவும் ஐயமும் இல்லை. இருப்பினும் கண்ணில் படும் இந்தக் குறைகளையும் தட்டுப் பிழைகளையும் களைந்திருக்கலாமே என்ற நெருடல் இல்லாமலும் இல்லை.

நூலில் வரும் ஓர் ஒப்பீட்டை எடுத்துக் காட்டி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.
“செய்வன திருந்தச் செய் ஆத்திசூடி” – ஔவையார்.

“செய்யும் வேலையைத் திருந்தச் செய்மனமே
மெய்யாக தினமே – சேரும் நற்சுக வாழ்வின் சீதனமே”
[நூல் : மாணவர் கீதமஞ்சரி (1926), நூலாசிரியர் : சங்கரலிங்கக் கவிராயர், பாடல் : 13, பக்கம் : 14]

நூல்: முன்னும் பின்னும்
தொகுப்பாசிரியர்: உவமைக்கவிஞர் சுரதா
208 பக்கங்கள்
சேகர் பதிப்பகம்-முதற்பதிப்பு: 2004

பதிவிறக்க: https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c3/முன்னும்_பின்னும்.pdf
அல்லது – https://archive.org/details/MunnumPinnum

https://ta.wikisource.org/s/1k3r

—-


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முன்னும் பின்னும் ஓர் ஒப்பீடும் மதிப்பீடும்”

அதிகம் படித்தது