மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

யாருக்கும் கிடைக்காத பரிசு (சிறுகதை)

ஸ்ரீதரன்

Feb 24, 2018

siragu yaarukkum1
வாசலில் இருந்து பாரிசாத பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பூசை அறைக்குள் நுழைந்து கடவுளை வணங்கினேன். அப்போது காலை 8.30. என் அலைபேசி சிணுங்கியது. நம்பரைப் பார்த்தால் புதிய நபரிடமிருந்து வந்திருக்கிறது. யாரிடமிருந்து என்று தெரியவில்லை? ஏதோ நல்ல விசயமாய் இருக்க வேண்டும் என்று மனசு சொல்லியது.

”ஹலோ, வணக்கம்., எழுத்தாளர் பாமா கிருஷ்ணன் தானே?” ஆண் குரல் கேட்டது.

”ஆமாம், நான் பாமாகிருஷ்ணன் நீங்க யார்?.”

என் பெயர் கேசவன். தி. நகரிலிருந்து பேசுகிறேன். வாசகர் வாசிப்பு என்னும் எங்கள் அமைப்பைப் ப|ற்றி சிறு அறிமுகம். சென்னையில் ஏராளமான இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எங்களுடையதும் ஒன்று. சிறிய அமைப்பு. வாசிப்பில் ஆர்வமுள்ள சிலர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பத்திரிகையில் வெளிவந்த ஒரு சிறுகதையை. விமர்சனம் செய்வோம். சமீபத்தில் ——- பத்திரிகையில் பிரசுரமான நீங்கள் எழுதிய “திருநெல்வேலி ஜங்ஷன்” சிறுகதையை விமர்சனம் செய்து சிறந்த கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். எல்லோரும் சிறந்த கதை எழுதிய உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த விரும்பியதால் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு மையிலாப்பூரிலுள்ள கோகலே ஹாலில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

அந்தச் செய்தி எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

”அவசியம் வருகிறேன்..”

என் கணவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.

”வாசகர்கள் பாராட்டுகிறார்கள் என்பது அபூர்வம். எல்லாருக்கும் கிடைக்காது. சன்மானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. நீ கண்டிப்பாக ……………”

என்னுடைய தம்பி பத்திரிகை நிறுவனத்தில் பணி செய்கிறான்.. அவனிடம் இதைப் பற்றி சொன்னேன். அதற்கு அவன், ”அக்கா முன்பெல்லாம் இலக்கியச் சிந்தனை என்று அமைப்பு மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து எழுத்தாளருக்குப் பரிசளிக்கும். இப்போது நிறைய இலக்கிய அமைப்புகள் வந்து விட்டன. அங்கெல்லாம் அவ்வளவாகக் கூட்டம் வருவதில்லை. சில சமயம் பத்து பேர் வந்தாலே அதிகம். நீ அவசியம் போய் வா. நான் என் பத்திரிகையில் விவரத்தைப் போட்டு விடுகிறேன். நான் ஞாயிற்றுக்கிழமை ஊரில் இல்லை. இருந்தால் கண்டிப்பாக நானும் கூட்டத்திற்கு வருவேன். என்னை………………………” என்றான்.

என் நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் இந்த விசயத்தைப் பகிர்ந்து சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

சீக்கிரமாக ஞாயிறு வந்து விட்டது. என் கணவர், “வேலை இருக்கிறது“ என்று சொல்லி விட்டார்.

எனக்கு அதிகம் பிடித்தச் சிவப்பு சரிகை பார்டர் வைத்த பச்சை கலர் பட்டுப்புடவையும் அதற்கு மேட்சாக சிவப்பு கலர் ரவிக்கையும் அணிந்தேன். கழுத்தில் முத்து மாலையைப் போட்டுக் கண்ணாடியில் பார்க்கும்போது என்னை முத்தழகி என்று என் தோழிகள் யாரவது கூப்பிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று எண்ணினேன். ஒரு ஆட்டோவைப் பிடித்துப் பாராட்டு விழா நடக்கும் இடத்துக்குச் சரியாய் 5.50 மணிக்குப் போய் விட்டேன். வாசலில் தயாராக காத்திருந்த வழுக்கைத் தலை மனிதர் ஒருவர், ”நான் கேசவன்.. நீங்கத்தானே பாமா கிருஷ்ணன்? உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன். சரியான நேரத்துக்கு வந்து விட்டீர்கள். வாங்க, உள்ளே போகலாம்” என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றார்,.

ஏதோ பத்து பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு, அங்கு நூறு பேரைப் பார்த்ததும் திகைத்து விட்டேன் என் கணவர் கிருஷ்ணன் புறப்படும்போது, ஐந்து பேர் வந்தால் அதுவே அதிகம் என்று கிண்டலாய் கூறியது என் நினைவுக்கு வந்தது. சிலர் நிற்பதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

கேசவன் என்னை மேடைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.

எங்கும் நிசப்தமாக இருந்தது. கேசவன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5.59. சரியாய் 6.00 மணிக்குக் கேசவன் பேச ஆரம்பித்தார்.

இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவரையும் வாசகர் வாசிப்பு அமைப்பு சார்பாக வருக வருக என்று வரவேற்கிறேன். முதலில் இறை வணக்கம். நிதி சால சுகமா —- தியாக ராஜ கீர்த்தனை, கல்யாணி ராகம் என்று அவர் அறிவித்தபோது நான் நெளிந்தேன், என் ”ராக ஆலாபனை” சிறுகதையில் வரும் பாட்டு என்பதால்.

கேசட்டில் ஒலித்த சுதா ரகுநாதனின் தேன் சிந்தும் குரல் மெய் சிலிர்க்க வைத்தது.

பிறகு கேசவன் தொடர்ந்தார்..

எங்கள் அமைப்பு நான்கு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. நால்வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரே நாளில் சேர்ந்து ஒரே நாளில் ஓய்வு பெற்றவர்கள். வாசிப்பில் ஆர்வம் உடையவர்கள். ஒவ்வொருவர் வாங்கும் புத்தகங்களை மற்ற மூவருக்கும் கொடுத்து வாசிக்கும் ஆவலை தீர்த்துக் கொள்கிறோம். ’உயிருள்ளவரை வாசிப்பு’ என்பது எங்கள் குழுவின் கொள்கை. ஒவ்வொரு வாரமும் ஒரு சிறுகதையை வாசித்து விமர்சனம் செய்வோம்.

பாமா கிருஷ்ணன் எழுத்துலகில் பிரபலமானவர். நிறையச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

அவர் எழுதிய ”திருநெல்வேலி ஜங்ஷன்” என்ற சிறுகதை எங்கள் நால்வருக்கும் பிடித்துப் போய் விட்டது, கதை தனித்துவம் வாய்ந்தது. யதார்த்தமான எழுத்து. மனதில் பதிந்து விட்டது.

ஃபேஸ் புக்கிலும் இந்தக் கதையை நண்பர்களுக்கு அனுப்பினோம். நிறைய வாசகர்கள் கதையைப் படித்துக் களித்தனர். எழுத்துக்கு மரியாதை செய்ய வேண்டி இந்தச் சிறந்த கதையை எழுதிய திருமதி பாமா கிருஷ்ணனுக்கு ஒரு விழா நடத்த ஏகோபித்தமாக முடிவு செய்து ஃபேஸ் புக்கில் அறிவிப்பு கொடுத்திருந்தோம். அதனால்தான் இவ்வளவு கூட்டம். மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கூட இந்த விழா சிறப்பாக நடப்பதற்கு வாழ்த்துக்களை ஃபேஸ் புக்கில் தெரிவித்திருக்கிறார்கள்.

கதைக்கு வருவோம். ’திருநெல்வேலி ஜங்ஷன்’ கதையைப் பற்றி குறிப்பாக மூன்றைச் சொல்ல வேண்டும்.

முதலாவது இண்டிரஸ்டிங்.

இரண்டாவது உங்கள் கிட்டே குட் சென்ஸ் ஆப் ஹூயுமர் இருக்குன்னு சொல்றேன்.

மூன்றாவது பொழுதுபோக்கு கதை.

”நான் மேலே சொன்ன முதலிரண்டும் அவர் கதையில் வரும் வரிகள். அவையே அவரைப் பாராட்டுவதற்கும் பொருத்தமாயிருக்கின்றன” என்று புகழாரம் செய்த போது கைதட்டல் ஒலி கேட்டது. நான் மீண்டும் நெளிந்தேன்.

அற்புதமாக்க கதை எழுதிய அவரை மெச்சி இருபதாயிரம் கொடுக்கிறோம் என்று பச்சைக் கலர் சால்வையைப் போர்த்தி ஒரு கவரை என் கையில் கொடுத்ததும் நான் ஸ்தம்பித்து விட்டேன்.

பாமா கிருஷணா இப்போது ஏற்புரை வழங்குவார் என்று கேசவன் அறிவித்ததும் நான் எழுந்தேன். கூட்டத்தில் பேசிப் பழக்கமில்லத்தால் சிறிது அச்சமாகவே இருந்தது. மனதில் பெருமாளை மானசீகமாய் வணங்கி விட்டு என் உரையைத் தொடங்கினேன்.

அனைவருக்கும் வணக்கம். முதற்கண் வாசகர் வாசிப்பு அமைப்புக்கும் இங்குக் கூடியிருக்கும் வாசகர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் பத்திரிகைகள் சிறந்த சிறுகதையை ”முத்திரை கதை” என்று வெளியிடும். இப்போதெல்லாம் வாசகர்களே……………………………..

கதை பத்திரிகையில் பிரசுரமானால் பெரிசா என்ன சன்மானம் கிடைக்கப் போகிறது…………………………? பத்திரிகையில் கிடைக்கும் சன்மானத்தைவிட அதிகமான வெகுமதியை எனக்குத் தந்த வாசகர் வாசிப்பு குழுவிற்கு நன்றி.

நான் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறேன். எழுதுவது என்பது ரொம்ப சுவாரஸ்யமான விசயம் நான் கதை எழுத ஆரம்பித்த காரணத்தைக் கேளுங்கள்.

வாழ்க்கையில் எழுத்தாளராக வேண்டும் என்பது என் சொந்த விருப்பம் அல்ல. அது தானாகவே நடந்தது. என் முதல் கதை ஆனந்த விகடனில் வந்த போது எனக்கு வயது முப்பது. பொழுது போக்கா ஒரு கதை எழுதி அனுபிச்சேன். பிரசுரம் ஆகி விட்டது. அப்போதிலிருந்து எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நான் பொழுது போக்கிற்காகவே கதைகள் எழுதுகிறேன். ”பொழுது போக்கு கதைகள்” என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறேன். ”ஒரு பொன்மாலைப் பொழுதினிலே நந்தலாலா” என்னும் நாவலையும் எழுதியிருக்கிறேன்.
என் கணவர்தான் என் முதல் வாசகர். என் கதை எழுதும் ஆசை வளர்ந்து மரம் ஆகத் தண்ணீர் ஊற்றியவர். அவரைக் கணவராக அடைந்தது என் நல்லூழ். அவர் கொடுத்த ஊக்கம் இன்று உங்கள் முன் பெருமையுடன் நிற்க முடிகிறது.

”திருநெல்வேலி ஜங்ஷன்” என்னும் கதை உங்களுக்குப் பிடித்திருப்பது பற்றி மிகவும் மகிழ்ச்சி. நான் திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலுக்காக இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தபோது பொழுது போவதற்காக எழுதிய கதை. எனக்கும் அந்தக் கதை மிகவும் பிடிக்கும். பலர் அந்தக் கதையைப் போனில் பாராட்டியிருக்கின்றர்.

நானும் ஒரு வாசகிதான். நல்ல நூல்களைப் படித்து வருகிறேன், படிப்பேன்.

உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது என் ந…ன்…றியை வார்த்தையால் சொல்ல எனக்குத் தெரியவில்லை. இருகரம் கூப்பி வணங்கினேன்.

கைதட்டல் வானை எட்டியது.

நாவல்பாக்கம் நரசிம்மன் நன்றி நவில விழா இனிது முடிந்தது.

நான் மேடையிலிருந்து கீழே இறங்கி வரும் போது எல்லாரும் என்னை வாழ்த்த என்னருகில் வர முயன்றதால் ஏற்பட்ட தள்ளு முளளுவைப் பார்த்து வியந்து சிலிர்த்தேன். அப்போது ”கிருஷ்ணா” என்று கூச்சல் கேட்டது. யாரோ ஒரு பெண்மணி கீழே தள்ளப் பட்டு விழுந்து விட்டார். நான் அவர் அருகில் சென்றேன். நான் என் கையை அவரிடம் நீட்டினேன். ”பார்த்து எழுந்திருங்கள்” என்றேன். நாணத்துடன் புன்முறுவல் பூத்தவர் மெல்ல எழுந்து மார்புடன் என்னை இறுக்கக் கட்டிக் கொண்டார். பயங்கரமான இறுக்கம். இராமாயணத்தின் இறுதியில் ராமர் ஆஞ்சநேயரை உடல் தழுவி ஆலிங்கனம் செய்வாரே அப்படி…………. நான் திக்குமுக்காடி போய்விட்டேன்”

”நான் உங்கள் ரசிகை. என் பெயர் உஷா. கதை படிக்கிறதென்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் உங்க கதையை விரும்பிப் படிப்பேன்.. ஒரு விசயம் சொல்லவேண்டும் என்பதற்காக ஓடி வந்தேன்.. என்னுடைய அம்மாவும் உங்கள் ரசிகை!. அம்புஜம் அதாவது எங்க அம்மா வயசு தொண்ணுற்று மூன்று. தன் வாழ்நாளில் ’திருநெல்வேலி ஜங்ஷன்‘ போன்ற சுவாரஸ்யமான கதையைப் படித்ததில்லை. நீங்க நல்லா இருக்கனும், நிறைய எழுதனும், நூறு வருசங்கள் வாழனும்.” என்று சொல்லச் சொன்னாள்.

எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்தது. எழுத்தாளருக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் விருதைவிட வாசகர் தரும் பாராட்டு உயர்ந்தது போல் தோணியது. மனசு குதூகலமாய் இருந்தது.

கையில் பணத்துடனும் இதயத்தில் பூரிப்புடன் நான் வீட்டுக்குப் போய்ச்சேரும் போது மணி 9 ஆகி விட்டிருந்தது. என் கணவர் எனக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தார்.

” விழா நல்லபடியாய் முடிந்ததா…………………………..?

”நல்ல கூட்டம். நிறைய வாசகர்கள் வாழ்த்தினர். சுமார் நூறு பேர்கள் வந்திருந்தார்கள். சால்வையையும் கவரையும் அவரிடம் கொடுத்து இருபதாயிரம்”. என்றேன்.

”நல்ல வெகுமதி உன் முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை”

”சன்மானத்தை விட தொண்ணுற்று மூன்று வயது ரசிகையின் வாழ்த்துகள் என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டது. என் வாழ்நாளில் எனக்குக் கிடைக்காத பரிசு அது. நான் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இதுவரை. பொழுது போக்கு கதைகள் மட்டும் எழுதி வந்தேன், என் விருப்பம் போல் கதைகள் எழுதினேன், இனிமேல் என் வாசகர்களுக்காக எழுதப் போகிறேன். என் கதை …………… சுய சரிதையை எழுதப் போகிறேன். இன்றைக்கே எழுத ஆரம்பிக்கிறேன்.” என்று சொன்னதும் “அவர் முகத்திலும் சந்தோசம் ததும்பி வழிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?”

”பணத்தை விடு. வாசகர்கள் கிட்டேயிருந்தே நீ விருது வாங்கிட்டே. அது யாருக்கும் கிடைக்காத பரிசு. கண்ணமா, நீ அதிர்ஷ்டக்காரி” என் கன்னத்தை செல்லமா தட்டினார்.”

நான் அதிர்ஷ்டக்காரிதான். பரிசு வாங்கினதுக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்களைப் போல் மனைவிக்குச் சுதந்திரம் கொடுத்து பெண்மையைப் போற்றும் கணவன் கிடைத்ததற்காக“ என்று கூறிப் புன்னகைத்தேன்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “யாருக்கும் கிடைக்காத பரிசு (சிறுகதை)”

அதிகம் படித்தது