மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசில் மாமா (சிறுகதை)

குமரகுரு அன்பு

Aug 29, 2020

siragu-vicil2
கோவிந்தராஜனுக்கு 56 வயசு. அவருக்கு வீடு சேலையூர்ல, அலுவலகம் பள்ளிக்கரணைல. தினமும் தன்னோட சேட்டக்லதான் அலுவலகம் போயிட்டு வருவாரு.

அவரு சேலையூர்ல கொஞ்சம் பிரபலம், அதுக்குக் காரணமிருக்கு.

சின்ன வயசுல இருந்தே அவருக்கு விதிமுறைகளை மீறி பழக்கமில்ல. தன்னோட கனவு ஸ்கூட்டர் பஜாஜ் சேட்டக்க அப்படிப் பாத்துப்பாரு. சரியா பதினெட்டு வயசுலலாம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலமா வண்டி ஓட்ட பழகி உரிமம் பெற்றுக்கொண்டார். வண்டியை ஓட்டும் போது மீட்டர் நாற்பதை தாண்டுதான்னு பார்த்துக்கிட்டே ஓட்டுவாரு. முள்ளு நாற்பதை லேசா தாண்டுனா போதும் ஆக்ஸிலரேட்டரை குறைச்சு நாற்பதுக்குக் கொண்டு வந்துருவாரு.

மைதிலி அக்கா அவரைக் கல்யாணம் பண்ண நாளுல இருந்து “ஏங்க நடந்து போறவன் கூட நம்மள விட வேகமா போவான். கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்னு” கரிச்சுக் கொட்டிக்கிட்டேதான் இருக்காங்க. ஆனா அவருக்கு அந்த வேகம் பழகிருச்சு. அவரு சொல்வாரு “ரோட்டுல நம்ம மட்டும் போலம்மா, இங்க பாரு எத்தனை பேரு நடந்து போறாங்க, எத்தனை பேரு வேகமா போறாங்க. யாரு தப்பு பண்ணாலும் தப்பு பண்ணவன் மட்டுமில்லை தப்பு பண்ணாதவனும் பாதிக்கப்படுவான். நம்ம ஜாக்கிரதையா போறதால எத்தனை உயிரை காப்பத்தறோமுன்னு நமக்கே தெரியாது” ன்னு சொல்வாரு. அவரோட அந்த சிந்தனையை மைதிலி அக்கா புரிஞ்சுக்கிட்டதாலதான் முப்பத்தியோரு வருஷமா அவங்களால அவரைக் காதலிக்க முடிஞ்சிது.

இப்படி இருக்கும்போதுதான் ஒரு நாள் அரசாங்கம், இரு சக்கர நான்கு சக்கர வாகனம் வச்சிருக்கவங்க எப்பவுமே வண்டியோடு எல்லாத் தஸ்தாவேஜுக்களையும் கையில வச்சிருக்கனும்னு உத்தரவு போட்டது. உத்தரவு போட்ட அன்றைக்கு சாயங்காலம் மேடவாக்கம் கூட் ரோடு போலீஸ் சோதனையில கோவிந்தராஜன் அவர்கள் மாட்டிக்கிட்டு செலான் வாங்கிட்டாரு.

அன்று இரவு முழுக்க அவருக்கு அவமானமா போச்சு. அவரு மாட்டுனது யாருக்கும் தெரியாது. தெரிஞ்சாலும், அது ஒன்றும் பெரும் குற்றமில்ல. ஆனால் பாருங்க அவமானம் அப்படிங்கிறது, மத்தவங்க நமக்கு ஏற்படுத்துறது இல்ல, நம்ம மனசாட்சிபடி நம்மால செய்ய முடிந்த ஒரு செயலை நம்ம செய்யலைன்னா உறுத்தியெடுக்கும் மனசாட்சியின் கேள்விகள்தான் அவமானம்.

மறுநாள் எழுந்து எப்பவும் போல வண்டியைத் துடைத்துவிட்டு, வண்டியோட ஆர்.சி, காப்பீடு, உரிமம் எல்லாவற்றையும் எடுத்து வச்சிக்கிட்டாரு.

தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சும்மா விடக் கூடாதுன்னு தீர்க்கமா முடிவெடுத்துட்டு அன்றைக்கு அலுவலகம் சென்று வரும் வழியில் இருந்த வண்டிக்கான சான்றிதழ்கள் அனைத்தையும் நகல் லேமினேட் பண்ணி வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாரு. மைதிலி அக்கா, “என்னாங்க இது” ன்னு கேட்டதுக்கு, “ஒரு நிமிசம் இரு” ன்னு பதில் சொல்லிட்டு, நைலான் கயிரு ஒன்றை எடுத்து லேமினேசன்ல ஓட்டைப் போட்டு வண்டியோட ஹேண்ட்பாரை சுற்றி முன்னாடி நம்பர் பிளேட் மறைக்காத மாதிரி கட்டி பார்த்தாரு.

எப்படி மாட்டுனாலும் நம்பர் பிளேட் மறையவும், வண்டிக்கு முன்னாடி தனித்தனியா கட் பண்ணி ஒட்டி விட்டுட்டு அதையே ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டு இருந்தாரு. அவமானமெல்லாம் கரைந்து ஓடுற சத்தம் அவரு காதுக்கு மட்டும் கேட்டுச்சு. மைதிலி அக்காவுக்கோ சிரிப்பு தாங்க முடியலை. எம்புருசனுகக்கு எம்புட்டு அறிவுன்னு நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டே இருந்துச்சு.

கல்லூரி முடிந்து ராத்திரி வீட்டுக்கு வந்த கோவிந்தராஜன் அவர்கள் பையன் சதீசு வண்டியைப் பார்த்து மலச்சு போயிட்டான். “எம்மோவ்! இந்த அப்பாவோட அலப்பறை தாங்க முடியலம்மோவ்” ன்னு அம்மா கூட சேர்ந்து அவனும் சிரிச்சுக்கிட்டே, வண்டியை புகைப்படம் எடுத்து அவன் நண்பர்கள் இருக்கிற வாட்ஸாப் குரூப்ல அனுப்பிட்டான். அந்த புகைப்படம் ஒரு மணி நேரத்துல ஊரெல்லாம் பரவி கோவிந்தராஜன் அவர்கள் வண்டி சேலையூர்லயே பிரபலம் ஆகிருச்சு.
அதுல கோவிந்தராஜன் சாருக்கு கொஞ்சம் வருத்தமாயிருந்தாலும், இயல்பாவே, அதிர்ந்து பேசாத அந்த மனுசனின் பையன் விளையாட்டுக்குத் தானே செய்தான்னு விட்டுட்டாரு.

அப்படியே கொஞ்ச நாள் ஓடி போயிருச்சு. ஒரு நாள் காலையிலே வண்டியை துடைத்து கழுவி முடிச்சுட்டு பார்த்தா ஹாரன் வேலை செய்யலை. என்னடா இது இந்த ஊரு போக்குவரத்து நெரிசலில் ஹாரன் இல்லாம ஓட்ட முடியாதுன்னு, ஹாரனை கழட்டி பாத்தாரு. எந்த பிரச்சனையும் இல்லை ஆனா ஹாரன் வேலை செய்யலை.

காலை, சாப்பாடும் இறங்கலை. அதுவே அவருக்கு ஒரு வருத்தமா ஆகிருச்சு. சரி ஆனதைப் பார்ப்போம், போற வழியில மெக்கானிக் கிட்ட காமிச்சு சரி பண்ணிட்டு போவோம்னு முடிவு பண்ணாரு.

கடை வரைக்கும் வண்டியை தள்ளிக்கிட்டே வந்த கோவிந்தராஜனைப் பார்த்த மெக்கானிக் அந்தோனி அண்ணன். “என்ன சார் ஆச்சு? வண்டி ஸ்டார்ட் ஆகலையா” ன்னு கேட்க “இல்லை தம்பி ஹாரன் அடிக்கல அதான்” ன்னு இவரு சொன்னதும், மெக்கானிக் மேலையும் கீழையும் பாத்துட்டு கிட்ட வந்து ஹாரனை செக் பண்ணாரு. “சார்! ஹாரன் போயிருச்சு புதுசுதான் மாத்தனும் இப்ப கடையில ஆளில்லை நான் வாங்கி வைக்கிறேன் சாயந்திரம் மாத்திக்கிறீங்களா” ன்னு கேட்க, கோவிந்தராஜனுக்கு தூக்கி வாரி போட்டுருச்சு. “இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாதா தம்பி?”
“இல்லை சார்! இது ரொம்ப பழைய மாடல் ஹாரன் வேற, இப்ப இருக்குற ஹாரனை மாற்றுவதற்கு சாயந்தரம் ஆகும். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கங்க” என்றான்.

“இல்லப்பா வண்டி ஓட்ட ஆரம்பித்த காலத்துல இருந்து நான் ஹெல்மெட்டும், ஹாரனும் இல்லாம வண்டி ஓட்டுனதேயில்லை. அதான் யோசனையா இருக்கு”

அவர் யோசித்தபடி பேசி கொண்டிருக்கும் போதே தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பவரைப் பார்த்துவிட்டார்.

“ஒரு நிமிசம் இருங்க தம்பி” என்று வண்டியை விட்டுவிட்டு தள்ளு வண்டியை நோக்கி வேகமாக சென்றவரையேப் பார்த்து கொண்டிருந்தார் அந்தோனி.

மீண்டும் கடைக்குத் திரும்பியவரின் முகத்தில் யோசனையும் குழப்பமும் தீர்ந்திருந்ததை அந்தோனியால் உணர முடிந்தது. அவர் அருகில் வந்ததும்.

“எங்க சார் போனீங்க?”

“இல்லை தம்பி பிரச்சனைக்கு தற்காலிகமா தீர்வு ஒன்ன புடிச்சிட்டேன்” என்றவாறு சிகப்பு கயிறின் முனையில் தொங்கிய மஞ்சள் விசிலை எடுத்து கழுத்தில் மாட்டியபடி “அப்ப தம்பி நான் கிளம்புறேன், சாயந்திரம் பார்ப்போம்” என்று கூறி விட்டு ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு விசிலை எடுத்து வாயில் வைத்து ஊதியபடி கிளம்பிய அவரைக் கண்டு மிரட்சியாக பார்த்தபடியிருந்தார் அந்தோனி.


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசில் மாமா (சிறுகதை)”

அதிகம் படித்தது