மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்கள் தகவல் தொடர்பியல்

கரு. நா. மணிமாறன்

Aug 3, 2019

மனிதன் சமுதாயமாக வாழ முற்பட்டபோது முதல் தகவல் தொடர்பு முறை அமைந்திருக்க வேண்டும். மொழி தோன்றுவதற்கு முன்பே தகவல் தொடர்பு சைகைகளால் அமைந்திருக்க முடியும். இவ்வகையில் தற்காலத்தில் பெருவளர்ச்சி பெற்றுள்ள மக்கள் தகவல் தொடர்பியல் துறை செம்மொழி இலக்கிய காலத்தில் ஓரளவிற்கு அச்சமுதாய தேவைக்கு ஏற்ப அமைந்திருந்தது. அரசன், அவனுக்குக் கீழ் அமைச்சர்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம், வரி வசூல் செய்பவர்கள் என்று அரச சுற்றம் செம்மொழி காலத்தில் இருந்தது. இந்தச் சுற்றம் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் மக்களுக்கு அறிவிக்கப்பெற்றன. அவை நடைமுறைக்கு வந்தன.

siragu thagaval thodarbu

சங்க காலத்தில் முரசு அறைந்து செய்தி அறிவிக்கும் நடைமுறை இருந்துள்ளது. இது தவிர பறை முழக்குதல், முழவு கொட்டுதல், மணி அடித்தல் போன்ற செயல்பாடுகள் வழியாக மக்கள் அதிகாரக் குழுக்களுடன் இணைவு பெற்றனர். இவ்வடிப்படையில் சங்ககாலத்திலேயே தமிழர்கள் மக்கள் தகவல் தொடர்பியல் கூறுகளைச் சிந்தனைகளைப் பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.

மக்கள் தகவல் தொடர்பியல் இன்று பல்வகை நிலைகளில் விரிந்து பரவி ஆழ் நிலையில் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது. ‘‘தொடர்பியல் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உலக நாடுகளை எல்லாம் அளவில் சுருக்கி நெருக்க வைத்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும் தொடர்பியல் கருவியாகப் பயன்படுகிறது” என்று தகலியலுக்கான விளக்கம் தரப்பெறுகிறது.

‘‘தொடர்பியல் என்பது ஒரு செய்தியையோ, கருத்தையோ, நிகழ்ச்சியையோ, குறியீடுகளின் வழியாகவோ, வாய்மொழியாகவோ, படங்களின் வாயிலாகவோ, மரபுச் சாதனங்கள் வழியாகவோ நவீன சாதனங்கள் வாயிலாகவோ மக்களுக்கு அறிவித்தோ, அறிவுறுத்தியோ, மகிழ்வித்தோ அவர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு கொள்வது தொடர்பியலாகும்”

இக்கருத்துகளின் அடிப்படையில் மக்களை ஒருசெய்தியின் வாயிலாகத் தொடர்பு கொள்வது தகவல் தொடர்பியலாகின்றது.

செம்மொழிக் காலத்தில் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும் நிலை இருந்துள்ளது.

அகச் செய்திகளும் தகவல் பரிமாற்றமும்:

siragu karpu1

அகநிலையில் காதல் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் நிலைப்பாடு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. தலைவன் வருகையை அறிவித்தல், தலைவன் பிரிதலை அறிவித்தல் போன்ற செயல்பாடுகள் தோழி வழி தொடர்பு படுத்தப்பட்டு தலைவியை அடைந்துள்ளன.

அறத்தொடு நிற்றல் என்ற துறையானது மகளின் காதல் அவளின் குடும்பத்தாருக்குச் சென்று சேரும் வண்ணம் தோழி, செவிலி, நற்றாய், தந்தை, தனையர் என்று கடத்தப்படுகிறது. தலைவி ஒருத்தி தலைவனைக் காதலிக்கிறாள் என்றால் அவளின் காதலைச் சமுதாயம் அறிந்து கொண்டால் அதற்குப் பெயர் அலர், அம்பல் என்பதாகும். தலைவி தலைவனின் காதலை ஏற்காமல் மறுக்கிறாள் என்றால் தலைவியின் உருவத்தை எழுதி பனையோலைக் குதிரையில் அமர்ந்து தலைவன் மடலேறுகிறான். இது நிறைவேறாத காதலை நிறைவேற்றிக் கொள்ளச் செய்யும் தகவல் நடைமுறையாகும்.

‘‘கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூல்அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடீஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.
(குன்றியனார், குறுந்தொகை, பாடல்எண். 51)

என்ற பாடலில் தலைவியின் காதலை தாய், எந்தை ஆகியோர் அறிந்து கொள்கின்ற நடைமுறை விளக்கப் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஊரார்க்குத் தலைவியின் காதல் தெரியவந்துள்ளது என்பதை அம்பல் ஊரும் அவனொடு மொழிமே என்ற அடி காட்டுகிறது. இவ்வகையில் மிக நயமாகக் காதல் நிலையில் தகவல்கள் கடத்தப்பெற்றுள்ளன.

சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்குத் தகவல் தெரிவிக்க மடல்கள் எழுதுகிறாள். அவை உரிய முறையில் கோவலனுக்குச் சென்று சேர்கின்றன. மாதவி எழுதிய இரண்டாம் மடல், கோவலனின் சூழலில் அவனின் பெற்றோருக்கு உரியாத மறுபடி அனுப்பப் பெறுகிறது. நயத்தக்க நாகரீகமான கடிதமாக அக்கடிதம் விளங்கியிருக்க வேண்டும்.

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்.
குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சங் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, 87-92)
என்ற நிலையில் தகவல் ஆவணமாக கடிதம் விளங்கியுள்ளது.

இவ்வகையில் அக நிலையில் பல தகவல் தொடர்பு நிலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன.

புறச் செய்திகளும் தகவல் பரிமாற்றமும்:

மன்னனின் ஆணைகள், ஊர்முடிவுகள் போன்றவற்றை அறிந்து கொள்ள பொதுமக்கள் மன்றத்தில் பறை அறைதல், முரசு முழங்குதல் போன்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகச் செம்மொழி இலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.

முரசறைதல்:

முரசறைந்து செய்தி தெரிவிக்கும் நடைமுறை இருந்ததைப் பின்வரும் இலக்கியச் சான்றுகள் காட்டுகின்றன.
‘‘முரசு முழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல” (முடத்தாமக் கண்ணியார், பொருநர் ஆற்றுப்படை, 53-54) என்ற பாடலடிகளில் முரசு முழங்கி செய்தி அறிவித்த நிலை உவமையாக்கப்பெற்றுள்ளது. புறனானூற்றில் நாள்தோறும் இயக்கப்படும் முரசு நாள் முரசு எனப்படுகிறது. (புற 161)
அரசு இழந்திருந்த அல்லற் காலை
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு (நப்பசலையார், புறநானூறு, 174- 6-7
என்ற பாடலடிகளில் அரண்மனையின் முன்னால் காலையில் முரசு ஒலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதை உணரமுடிகின்றது.

மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசியோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசினீ யீங்கிது செயலே. (மோசிக்கீரனார், புறநானூறு,பாடல்எண். 50)

மேற்பாடலில் புலவர் ஒருவர் முரசு கட்டிலில் உறங்கிய நிலையில் அவரை வருத்தாது வாழவைத்த சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்ற அரசனின் பெருந்தன்மை சுட்டப் பெற்றுள்ளது. இதில் அரச முரசிற்குச் செய்யப்பட்ட அலங்காரம் குறிக்கப் பெறுகிறது. எனவே அக்காலத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு இருந்த பெருமை தெரியந்து கொள்ளத்தக்கதாக உள்ளது.
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3
அவை புகு பொருநர் பறையின் ஆனாது – அகம் 76/5

என்ற நிலையில் ஆடுகளத்தில் பறை அறையப்பெற்றமையும், பொருநர் பறை கொண்டு செய்தி சொன்னமையும் தெரியவருகிறது.
சிலப்பதிகார காலத்தில் தகவல் தொடர்பு சாதன வேகம் சிறப்புடன் இருந்துள்ளது. கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகி இருக்கும் ஆயர்பாடிக்கு வந்து சேர்கிறது.

அரசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், துன்பமாலை, 24-28)

என்ற நிலையில் கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகியை வந்தடைகிறது. இதில் குறிக்ககத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் அரச ஆணையின் படி நடந்தை என்பதைத் தெரிவிக்கும் நிலையில், இருமுறை அறிவிக்கப்படுகிறது. இது தகவலின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இதுபோன்று வடநாட்டிற்குச் சேரன் செங்குட்டுவன் படையெடுக்கிறான் என்ற செய்தி அம்மண் சார்ந்தவர்களால் அறியப்பெற்று செய்தி கடத்தப்படுகிறது.

‘நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை’ என்றே அழும்பில் வேள் உரைப்ப- (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 173-177)
என்ற அடிகள் பறை அறிவித்தால் போதுமானது. வட திசை மன்னர்களுக்கு இப்பறை செய்தி இங்கிருக்கும் ஒற்றர்கள் வழியாக அவர்களைச் சென்று சேர்ந்துவிடும் என்கிறார் அழும்பில் வேள் என்ற அரசு அதிகாரி.

இதன்வழி அரச செய்திகள் பறை அறைந்து தெரிவிக்கப்பெற்றன என்றும் பல நாட்டு ஒற்றர்கள் சேரநாட்டில் திரிதருகின்றனர் என்பதும் தெரியவருகிறது.

இவ்வாறு சிலப்பதிகார காலத்தில் தகவல் தொடர்பு சிறப்புற்று விளங்கியது எனலாம்.

தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் பல தகவல் இயல் கூறுகள் பண்டைக் காலத்திலேயே தமிழகத்தில் இருந்தன என்பதற்கு மேற்காட்டிய சான்றுகள் ஓரளவினவே. இன்னும் இத்துறையில் நுழைந்து ஆராயத் தேட வாய்ப்பாக இக்கட்டுரை செய்திகளைத் தந்து தூண்டுதல் செய்துள்ளது.


கரு. நா. மணிமாறன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மக்கள் தகவல் தொடர்பியல்”

அதிகம் படித்தது