மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குன்றக்குடி குறவஞ்சியில் காணலாகும் வழிபாட்டு மரபுகள்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 21, 2019

siragu kundrakudi-kuravanji
1837 ஆம் ஆண்டளவில் வீரபத்திரக் கவிராயர் என்பவரால் குன்றக்குடி குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் பாடப்பெற்றுள்ளது. இது ‘குன்றாக்குடி குறவஞ்சி’ எனவும், ‘குன்றக்குடியில் எழுந்தருளியிருக்கும் சிவசுப்பிரமணியக் கடவுள் குறவஞ்சி’ என்றும் அழைக்கப்பெறுகின்றது. குன்றா வளமுடைய இக்குறவஞ்சி குன்றாக்குறவஞ்சி என்று அழைப்பது மிகவும் பொருத்தமுடையதாகும்.

இக்குறவஞ்சி சொல்நலம், பொருள் நலம், உவமை நலம் பெற்று விளங்குவதுடன் குன்றக்குடி கோயில், மடம் ஆகியன பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் குன்றக்குடியைச் சுற்றியுள்ள வயல்களின் பெயர்கள், அங்கு திரிந்த கொக்குகளின் வகைகள், குன்றக்குடி மட வரலாறு, குன்றக்குடி சந்நிதானப் பெருமை போன்ற பலவற்றையும் அழகுபட மொழிகின்றது. குறவஞ்சிக்கான இலக்கணக் கட்டமைப்பு மாறாமலும் அதேநேரத்தில் குன்றக்குடி பற்றிச் சொல்லவேண்டிய செய்திகளை சொல்லிய நிலையிலும் இக்குறவஞ்சி குறவஞ்சிவ கை வரலாற்றில் குறிக்கத்தக்கதாக விளங்குகிறது. இக்குறவஞ்சி தரும் வழிபாட்டு மரபுகள் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் தொகுத்து உரைக்கப்பெறுகின்றன.

குறத்தி குறி சொல்லிய இடங்கள்

குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடம் ஆன்மிக மையமாகத் தொன்று தொட்டு விளங்கிவந்துள்ளது. இம்மடத்துடன் பல மடங்கள், பல மடாதிபதிகள், மக்கள், கோயில் பணியாளர்கள், ஊரார்கள் போன்றோர் ஞானத்தொடர்பும் பக்தித் தொடர்பும் கொண்டு விளங்கினர்.

குன்றக்குடி திருவண்ணாமலை மடத்தை உருவாக்கியவர் பற்றிய செய்தி குன்றக்குடி குறவஞ்சியில் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
‘‘ஆழிசூழ் உலகின்மீது ஆர்குன்றை நகரினும்
ஊழிதொறும் அழிவிலாது ஓங்குபுகழ் புண்யநிலை
நிற்கட்டும் என்றே நினைத்தல்செய்து எழில்குலவு
கற்கட்டு மடமும் கவின்தரப் பிரதிட்டை
செய்சபா பதிமுனி”

என்று இந்நூலில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருள்திரு சபாபதி தம்பிரான் காலத்தில் கல் மண்டபமாகக் கட்டப்பெற்ற செய்தி பதிவாகியுள்ளது.

மேலும் இக்குறவஞ்சியில் இடம்பெறும் குறத்தி, இம்மலை சார்ந்தவள் என்பதால் அவள் இங்கிருந்து கிளம்பி பல ஊர்களுக்குச் சென்று குறி சொல்லியுள்ளாள். இவள் குறி சொல்லச் சென்ற இடங்களில் பல இடங்கள் மடங்களாக உள்ளன. இதன் காரணமாக இம்மடம் பல மடங்களுடன் தொடர்பு கொண்ட நிலை தெரியவருகிறது. அதனை குறவஞ்சியில் இடம் பெறச் செய்துள்ளார் வீபபத்திர கவிராயர்.

கூடல் கொடுங்குன்ற ஸ்தானீகனாம் குப்பு
தேசிகர்க்குக் குறி சொன்னேன்.

என்பதன் வழி திருக்கொடுங்குன்றம் எனப்படும் பிரான்மலையில் ஒரு மடம் இருந்ததும் அம்மடத்தை அப்போது கவனித்து வந்தவர் அருள்திரு குப்பு தேசிகர் என்பதும் தெரியவருகிறது.
நீதர் திருக்கோள நாதர் தன் கோயில் ஸ்தா
னீகருக்கும் குறி சொன்னேன்
என்ற நிலையில் குன்றக்குடி ஆதீனக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோளக்குடி என்ற கோயில் சார்ந்த மடம் ஒன்று அங்கு இருந்ததும் தெரியவருகிறது.

என் குல தெய்வமாம் துங்க மலைக்கு
மரேசர்தம் கோயில் ஸ்தானீகர்
எந்தன் அருமை அறிந்து மகிழ்ந்தவர்
ஈய்ந்த முத்தாரம்

என்ற பாடலடியில் குறிப்பிடப்பெற்றுள்ள துங்கமலை என்பது குன்றக்குடி மலையாகம். அருணகிரிநாதர் குன்றக்குடி மலையை துங்க மலை என்று குறிப்பிடுகிறார். இம்மலை சார்ந்த மடத்தில் இருந்த ஆதீன ஸ்தானிகர் குறவஞ்சி எழுதிய புலவர் மீது தனித்த அன்பு கொண்டவர். அவ்வன்பு குறத்தியின் மீதும் இருப்பதாக இக்குறவஞ்சியில் பாடப்பெற்றுள்ளது.

சக்தி உமைவாழ் சிராசையில் மேவிய
ஸ்தானிகர்க்குக் குறி சொன்னேன்

என்ற பகுதியின் வழி சிராமலை எனப்படும் திருச்சிராப்பள்ளி மலை சார்ந்த இருந்த மடத்தின் பொறுப்பாளர்க்கும் குறத்தி குறி சொல்லியுள்ளாள்.

வய்யம் புகழும் பிரமானூர் மேவும்
மகாசனங்கட்கும், ஊரவர்க்கும்
வைத்ததெல்லம் சொன்னேன்

என்ற அடிகளில் திருப்பூவனம் வட்டத்தில் உள்ள பிரமனூர் என்ற ஊர் குன்றக்குடியுடன் தொடர்புடைய ஊராக விளங்கியுள்ளது என்பது தெரியவருகிறது. அங்கும் சென்று குறத்தி குறி சொல்லியுள்ளாள்.
இதுபோன்று மங்கைபதி (பட்டமங்கலமாக இருக்கலாம்) ஸ்தானீகர், சொர்ணகாளீஸ்வர தேசிகர் (காளையார் கோவில் சார் மடத்தில் இருந்தவராக இருக்கலாம்) சுப்பிரமணிய தேசிகர், பால சுப்பிரமணியன் போன்றோருக்கும் கோயில் உத்யோகர், வயிராவி, தலத்தார் போன்ற கோயில் பணியாளர்களுக்கும் குறத்தி குறி சொல்லியுள்ளாள்.

இவ்வகையில் குன்றக்குடி மடத்தின் ஆன்மிகத் தொடர்புகளை இக்குறவஞ்சி பதிவு செய்துள்ளது.

வயல்கள்

குறவன் கொக்குகளைத் தேடிச் செல்லும் நிலையில் பல வயல்களுக்குச் செல்கிறான். அவ்வகையில் கொக்குகள் சென்ற வழிகளில் இருந்த பல வயல்களின் பெயர்கள் இக்குறவஞ்சியில் சுட்டப்பெற்றுள்ளன.

‘‘கார்த்திகைக் கட்டளைச் சாத்தனேந் தல் – அழ
கானஇடைய னேந்தல் மீனை மிகவும் மேய்ந்து
சாற்றும் சிவரியேந்தல் சிங்கமங்கை வயலும்
தழைக்கும்நெற் குப்பைவயல் விளக்கும்பளச் செய்யிலும் (வந்து)
ஓங்குபுகழ் நியமம் ஒகந்தா வயலில் விளக்
கும்பளம் இருமா நிலம்புகுந்து பல
வான்குடிச் செங்கணி வயலில் திருவிளக்கு
மானியம் எனும்இரு மாநிலம் தன்னிலும்
இலகும் அரம்பைகள் செலகிரீடை செய்தற்(கு)
ஏற்ற மதுரநவ தீர்த்தமும் சிறந்த
உலகடியூரணி நலமும் கண்டு பிள்ளையார்
ஊழியேந்தல் பெருச் சாளியேந் தலிலும் (வந்து)
நீடுபுகழ் சேர்குடிக் காடன்வயலில் தேவ
னேரியுடன் மணியத் தூர்வயலிலும் கஞ்சம்
நாடுமேரி சுன்ன ஓடை குமிழாங் குண்டை
நத்தித் தத்திப் பற்றிச் சுற்றிக் கத்திக் கெற்றி (வந்து)
ஏருலாவியபி டாரியேந் தல்விப்பிர
னேரியுடன் இடும்ப னேரிகுறும்பன் வயல்
வாரிநேர் வலைய னேரிமீனைக் கண்டு
வாஞ்சை தோஞ்சு சாஞ்சு பாஞ்சு ராஞ்சு மேஞ்சு (வந்து)
மாபழனஞ் சேர்சிந் தாவடி யேந்தலும்
வைய்யாபுரிக் கண்மாய்ச் செய்ய வயலிலும்
சோபிதமாம்மது ராபுரிக் கரைத் தென்னந்
தோப்பின் தாப்பு வாய்ப்பு மூப்பு றாப்பு றாப்புள்’
என்று பல்வேறு நிலங்கள் குறிக்கப்பெறுகின்றன.

கார்த்திகைக் கட்டளைக்காக விடப்பட்ட சாத்தனேந்தல், இடையனேந்தல், சிவரியேந்தல் சிங்கமங்கை வயல், நெற்குப்பை வயல், நியமம் (நேமம்) ஒகந்தா வயல், பலவான்குடிச் செங்கணி வயல் (திருவிளக்கு ஏற்றும் மானியத்திற்காக விடப்பட்டது.) ஊழியேந்தல், பெருச்சாளியேந்தல், குடிக்காடன்வயல், தேவனேரியுடன் மணியத்தூர்வயல், நாடுமேரி, சுன்ன ஓடை, குமிழாங்குண்டை, பிடாரியேந்தல், விபிரனேரி, இடும்பனேரி, குறும்பன் வயல், வலையனேரி, சிந்தாவடியேந்தல், வைய்யாபுரிக் கண்மாய், செய்ய வயல், மதுராபுரிக் கரைத் தென்னந்தோப்பு போன்றனவற்றைச் சிங்கன் குறிப்பிடுகிறான். இவற்றில் நிலங்களும் நீர்நிலைகளும் குறிப்பிடப்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் கொக்குகள் திரியும் என்பதால் அவற்றை வேட்டையாட குறவன் செல்கிறான். இவற்றில் வையாபுரிக் கண்மாய், மதுராபுரிக் கரை தென்னந்தோப்பு போன்றன இன்றும் இருக்கின்றன என்பது முக்கியமான செய்தியாகும். இப்பட்டியல் இக்குறவஞ்சியில் இன்னும் தொடர்கிறது.

‘‘கதிக்கும் பிச்சைப் பண்ணைக் குரிமையாய் சொக்கநாதன் வயக்கலிற் பெருமையாய்
மதிக்குமீனாம் பிகைவயலிலே சுப்பிரமணிய வயக்கலின் செயலிலே
நாயகர் வயக்கல் நடவிலே செங்கால் நாரை வருமந்தக் கடலிலே
சாயாமல் கண்ணியை நாட்டடா சேவல் தட்டினிலே கண்ணிபூட்டடா
மருத நாயகர் திருத்தல மாம்அதில் வரிசையாய்க் கண்ணி பரத்தலாம்
குருகினங்களும் வரத்தடா கைகூசாமல் கண்ணியைப் பரத்தடா
தியாகராஜ வயல் வரப்பிலே பக்கிசேரவரும் மெத்தப் பரப்பிலே
வாகுடன் கண்ணிகளுண்டா பக்கி வார திரட்சியைக் காணடா
சங்கரலிங்க முனீஸ்வர வயல்தன்னில் வரும் பக்கிமீசுரம்
அங்கணே கண்ணியைத் திருத்தடா பக்கியவளவும் நமக்குருத்தடா
சாமிச பாபதி வயலிலே குன்றைச் சண்முக மூர்த்திதன் செயலிலே
சீமுதமாய்ப் பக்கி வருதடா அதைச் சென்று பிடிப்பதே விருதடா
இன்னம்பலவுள செய்யடா அதற்கேற்ற தோர்கண்ணிகள் வைய்யடா
மன்னிய கைவலை வீசடா பக்கிவரச் சன்னை கீசடா
ஆவலுடன் கண்ணி நாட்டடா சொல்லும் ஆறெழுத்தை மனம் சூட்டடா”
என்ற நிலையில் வயல்களின் பட்டியல் தரப்பெறுகிறது.

பிச்சைப் பண்ணை, சொக்கநாதன் வயக்கல், மீனாம்பிகை வயல், சுப்பிரமணிய வயக்கல், நாயகர் வயக்கல், தியாகராஜர் வயல், சங்கரலிங்க முனீஸ்வரர் வயல், சாமி சபாபதி வயல், குன்றக்குடி சண்முகநாத மூர்த்தி செம்மை வயல் போன்ற நிலப்பகுதிகள் மேற்காட்டிய அடிகளில் சுட்டப்பெற்றுள்ளன. குன்றக்குடியைச் சுற்றியுள்ள நிலங்களின் பட்டியல் இதுவாகும். இதனுள் குன்றக்குடி மடத்திற்கு, குன்றக்குடி கடவுளுக்கு உரிய நிலங்களும் இனம் காட்டப்பெற்றுள்ளன. இவ்வாறு சூழல் அறிவுடன் இச்செய்திகளை இக்குறவஞ்சி பதிவு செய்துள்ளது.

சந்நிதானப் பெருமை

குறத்தி குன்றக்குடி சந்நிதானத்தின் பெருமையைப் பாடுகிறாள். அவ்வாறு பாடும் அவளின் பாடலடிகள் வழி பல வழிபாட்டுமரபுகள் தெரியவருகின்றன.

‘‘உபதேச குருவாகித் தாதைதனைப் பணிவித்த உம்பர்பெருமான்சன்னிதி என்று சாமிநாதக் கடவுள் வீற்றிருக்கும் சந்நதி” குன்றக்குடி சந்நிதானம் என்று குறத்தி பாடுகிறாள். மேலும் அவள் “சீதரன் போலவளர் சிம்மாசனாதிபதி தென்குழந்தாபுரி செழிக்க வரு நீதன் பூதலம் புரக்கும் எங்கள் போதகுரு சாமி” எனும் பூபதிசெங் கோல்நிதமும் பொங்கமுட னோங்க – நிற்கும் சந்நதி என்று சிவகங்கை மன்னர் போதகுருசாமி என்னும் பூபதி வணங்கம் சந்நதியாக குன்றக்குடி சந்நிதானம் விளங்குகிறது.

‘‘ஆதிகொடுங்கிரிமுதல் ஆறுதலமும் கூடல் அங்கயற்கண்ணி சொக்கலிங்கருடன் வாழும் ஊதியமதாகிய விழா, பூசைக் கட்டளை” விளங்கும் சந்நதி “எந்நாளும் சைவசித்தாந்த வேதாகமம் வழாது சிவ சமய பரிபாலன்; கிருபால குண சீலன் தெய்வசிகாமணி யென்னும் திருவணாமலையாதீனதேசிகர் உரைக்கும் உபதேசவகை” சந்நிதி என்று குன்றக்கு திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி தேசிகர் வணங்கும் சந்நதியாக குன்றக்குடி முருகப்பெருமான் சந்நிதி விளங்குகின்றது.

“பரதேசி முத்திரை அகுதார் விசாரணைபெறு – சுபாஷி தசு சீலன் வேலாயுதயோகி திரமாய் இயற்றும் உயரதிகார சட்டங்கள் செயும்படி நடாத்தும் உத்தியோகர் நெறியாலும் காலகாலங்கள் அபிஷேக நைவேத்தியமொடு கட்டளை வழாதியற்றக் கதிக்கும் சன்னிதானம்” என்று குன்றக்குடி சந்நிதானம் பாராட்டப்பெறுகிறது. இவ்வடிகளில் அகுதார், விசாரணை, அபிஷேகம், நைவேத்தியம், கட்டளை போன்ற கோயில் நடைமுறை சார்ந்த சொற்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

“மாலயன் முதலினோர் வந்து நிதம் தொழுதேத்த வரம்வேண்டு வனஅருள் மகாசன்னிதானம்” என்று தேவருலகத்தவர்கள் வழிபடும் சந்நிதானமாக குன்றக்குடி சந்நிதானம் விளங்குகிறது.

“தென்கோடியாதிபதி தொண்டைமானார்செயும் – உச்சிக்காலக் கட்டளை சிறக்கும் சன்னிதானம்” என்ற நிலையில் தொண்டைமான் மரபினர் செய்யும் உச்சிக்கால பூசை அறக்கட்டளை குறிக்கப்படுகிறது. இவ்வறக்கட்டளை ஏற்று நிற்கும் சந்திதானம் என்று சந்நிதானம் போற்றப்படுகிறது.

“நன்காமதேனுவெனும் திருப்புனல்வை முதன்மையர் சேனாபதிக் குருபணி பிரதாப சன்னிதானம்” என்றும் நிலையில் காமதேனு வணங்கும் பெருமை உடைய சந்நிதானமாக குன்றக்குடி சந்திதானம் விளங்குகிறது.

“கார்த்திகைக்குக் கார்த்திகை பிரார்த்தனைசெய்வோர் நினைக்கும் கருத்தின்வழி அருள்புரியும் கருத்தன் சன்னிதானம்” என்று குன்றக்குடியில் கிருத்திகை விழா சிறப்புடன் நடப்பதைக் குறிக்கிறது இக்குறவஞ்சி.

“மூர்த்தி கரம் மேன்மேலும் முக்கியமுடனுண்டாக முத்தியடியார்க்கருள் சண்முகவர் சன்னிதானம்” என்று முத்தி தரும் சந்நிதானமாக குன்றக்குடி சந்நிதானம் விளங்குகிறது.

இத்தகைய பெருமையும் நடைமுறையும் உடையதாகக் குன்றக்குடி சந்நிதானம் விளங்குகின்றது.

இவ்வாறு குன்றக்குடி மடத்தின் அருள் பெருமை, அருள் பொங்கும் குன்றக்குடி முருகன் சந்நிதானப் பெருமை, குன்றக்குடியைச் சுற்றியுள்ள இயற்கை வளங்கள் போன்ற இக்குறவஞ்சியில் குறிக்கப்பெற்றுள்ளது. குறவஞ்சிக்கான இலக்கணத்தைத் தாண்டி குன்றக்குடி குறவஞ்சி கோயில் நடைமுறைச் செய்திகளையும், பண்பாட்டுச் செய்திகளையும் கொண்டு விளங்குகிறது என்பது இதன்வழி கிடைக்கும் முடிபாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குன்றக்குடி குறவஞ்சியில் காணலாகும் வழிபாட்டு மரபுகள்”

அதிகம் படித்தது