மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல்

சிறகு நிருபர்

Aug 23, 2014

nerkaanalசிறகு வாசகர்களுக்கு வணக்கம். இன்று நமது சிறகு வாசகர்களுக்கு சிறப்பு நேர்காணலை வழங்குகிறோம். தமிழுக்கு தொண்டு செய்து வரும் இரு முன்னோடிகளை நேர்காணல் செய்ய இருக்கிறோம். முதலில் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள். அவர் கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் கணினியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார், தமிழ்விக்கிபீடியா நிர்வாகிகளுள் ஒருவர். இணையத்தில் தமிழுக்கு அரும்பணியாற்றிவருபவர்களுள் ஒருவர்.

அடுத்து திரு.மணி மு.மணிவண்ணன் அவர்கள். இவர் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் முன்னாள் தலைவர். அதன் யூனிகோடு சார்ந்த பணிக்குழுவின் இந்நாள் தலைவரும் கூட. திரு. மணிவண்ணன் அவர்கள் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியின் முன்னாள் தலைவர். தமிழ்க் கணிமை வளர்ச்சியில் இவர் ஒரு முன்னோடி. இவரது கணித்தமிழ்த் தொண்டைப் பாராட்டிக் கனடாவின் இலக்கியத் தோட்டம் அமைப்பு 2013க்கான சுந்தர ராமசாமி நினைவு ‘கணிமை’ விருதை வழங்கியது. 2002-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் இணையத் தமிழ் மாநாடு இவர் தலைமையில் வெற்றிகரமாக நடந்தது. கடந்த 7 ஆண்டுகளாகச் சென்னையில் வசித்துவருகிறார்.

கேள்வி: வணக்கம் செல்வா, தங்களைப் பற்றிக் கூறுங்கள்?

Selva_2012பதில் (பேரா. செல்வகுமார்) : நான் படித்து வளர்ந்தது சென்னை மாநகரம். முதலாம் வகுப்பிலிருந்து முனைவர் பட்டம் வரை சென்னையில் படித்தேன். இரண்டாண்டுகள் மும்பை ஐ.ஐ.டி-யில் மதொழில்நுட்ப முதுகலை படிக்கும்பொழுதுதான் தமிழ்நாட்டைவிட்டு வெளியே சென்று படித்தேன். முனைவர் பட்டம் பெற்ற பிறகு கனடாவிலுள்ள வாட்டர்லூ நகரத்தில் முதுமுனைவர்ப் பேராளராக சென்றேன். பின் அங்கேயே பேராசிரியராகப் பதவியேற்றுப் பணியாற்றி வருகிறேன்.

சிறு வயதிலிருந்தே தமிழில் மிகவும் ஆர்வம். பள்ளிக்கூடத்தில் ஆறாவது வகுப்பிலிருந்தே தமிழில் தனிப்பட்ட ஆர்வம். எனக்கு 12,13 அகவை இருக்கும் பொழுதே வெண்பாக்கள் இயற்றும் திறமை இருப்பதாக எனது தமிழாசிரியர்கள் சொல்லி என்னை ஊக்குவித்தார்கள். அதன்படி 160 குறள் வெண்பாக்களை இலக்கணத்தோடும், பொருளோடும் ஆக்கினேன். பள்ளி நாட்களைக் கடந்து கல்லூரி சென்றபொழுது கல்லூரியிலும் பொறியியல் சார்ந்த துறையிலும் தமிழ் இருக்கவேண்டும் என்று, அதற்காக மிகவும் ஆர்வம் கொண்டு ஒவ்வொரு கிழமையும் நாங்கள் பொறியியல் கல்லூரியில் கூடி பொறியியலுக்கான தமிழ்சொற்களை ஆய்வு செய்து முதன்முதலாக 5000 கலைச்சொற்களை நூலாக வெளியிட்டோம். அதில் பங்காற்றிய தமிழ் ஆர்வலர்களோடு இன்றும் தொடர்பில் இருக்கின்றோம். பேராசிரியர் வா.செ. குழந்தசாமியின் அவர்கள் தலைமையில் இந்த மொழி ஆராய்ச்சியை நாங்கள் செய்கிறோம். அப்பொழுதிருந்த மொழியாக்க மாணவர் குழுமத்தினரில் சிலர் திரு. மு. பொன்னவைக்கோ, திரு ப.அர. நக்கீரன், உலோ செந்தமிழ்க்கோதை முதலானோர்.

அதன்பின்னர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாவாணர் அவர்களைப் பற்றி நான் அறிய நேர்ந்தது. தனித்தன்மை வாய்ந்த மிக அருமையான தென்மொழி திங்களிதழை தொடர்ந்து படித்து வந்தேன். 1970-1972 காலப்பகுதியில் பொறியியல் கல்லூரியில் “அறிவியல் நோக்கி” என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடத்தினோம். அந்த கருத்தரங்கில் தலைமை தாங்க பாவாணர் அவர்களை அழைத்திருந்தோம். தேவநேயப் பாவாணர் அதற்கு இசைந்து எங்களது கல்லூரிக்கு வந்து ஊக்கம் தந்தார்கள். அந்த அறிவியல் கருத்தரங்கானது மருத்துவம், பொறியியல் ஆகியவற்றை தமிழில் விளக்குவதும், ஆராய்ச்சி செய்வதுமான ஒரு கருத்தரங்கு. அந்த கருத்தரங்கு ஏறத்தாழ 12 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தது. மாணவர்களால் நடத்தப்பெற்ற முதல் அனைத்துக் கல்லூரி தமிழ் இதழாகிய தேன்மழை என்னும் இதழில் பங்காற்றினேன். கனடா சென்றபொழுது அங்கு நண்பர்களுடன் சேர்ந்து soc.culture.tamil என்ற ஒரு இணையக்குழுமம் முதன்முதலாக உருவாக்கினோம். அதற்கும் முன்பாக தற்காலிகக் குழுமமாக soc.culture.tamil என்னும் குழுமம் உருவாக்கி நடத்தினோம். அந்தக் காலத்தில் மொழியை அடிப்படையாக வைத்து ஒரு பண்பாட்டு குழுமம் (soc.culture குழு) உருவாகவில்லை. தமிழில்தான் முதன்முதலில் உருவானது. அதற்கு உறுதுணையாக இருந்த ஒருசிலருள் நானும் ஒருவன். முதலாண்டு நிறைவின்போது கனடாவில் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் நாங்கள் ஒரு விழா கொண்டாடினோம். அதற்கு அமெரிக்காவிலிருந்தும் தொலைவிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். அது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும். அதன்பின் பாலா பிள்ளை அவர்களும் முத்துநெடுமாறன் அவர்களும் உருவாக்கிய tamil.net -இலும் எழுதிவந்தோம். பின் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நான் கண்டவற்றில் தமிழ் விக்கிப்பீடியா என்பதே தலைசிறந்த ஆக்கத்திட்டமாக நான் கருகின்றேன்.

கேள்வி: தமிழ்விக்கிப்பீடியா ஆரம்பித்து பத்தாண்டுகள் முடிந்ததாக நாம் செய்திகள் படித்திருக்கிறோம். ஒரு அருமையான பணி. இணையத்திலேயே நாம் தமிழிலேயே அச்சிட்டு தேடுவது போன்ற வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. தமிழ்விக்கிபீடியாவும் இணையமும் எந்தெந்த அளவிற்கு தமிழுக்கு பயன்படுகிறது என்பதைக் கூறுங்கள்?

nerkaanal5பதில் (செல்வகுமார்): தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகளாவிய தமிழர்கள் சேர்ந்து அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து தமிழில் எல்லா வகையான செய்திகளையும் கருத்துகளையும் மிகவும் சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுதி வளர்க்கக்கூடிய ஓர் அருமையான தொழில்நுட்பத்திட்டம், அறிவுத்தொகுப்பாக்கம். விக்கி என்பது முதலில் ஒரு தொழில்நுட்பம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டாகப் பலரும் ஒருங்கிணைந்து கூட்டாக்கம் செய்யச் சிறந்த ஒரு நுட்பம். நானறிய ஆத்திரேலியா, கனடா, அமெரிக்கா, இன்னும் பல நாடுகளிலிருந்து ஒரு சிலரே ஒன்றிணைந்து உருவாக்கிய மிகச்சிறந்த ஓர் அறிவுக்களஞ்சியம் தமிழ்விக்கிபீடியா. அதில் இன்று அறுபதாயிரம் கட்டுரைகளுக்கு மேல் இருக்கின்றன. இதில் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கட்டுரைகள் எழுதிய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏறத்தாழ 820 கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். இருபதாயிரம் தொகுப்புகள் செய்திருக்கின்றேன். இந்த தமிழ்விக்கிபீடியாவினுடைய அருமை என்னவென்றால் யாரும் எழுதியதை எளிதில் அழித்துவிடமுடியாது. எளிதில் அழிக்கவியலாத நூலகம் எனலாம். எல்லா விதமான கருத்துக்களையும் விரிவாக எழுதலாம். கணிதம், மருத்துவம், பொறியியல், அறிவியல், சமூகவியல், இலக்கியம் அனைத்தையும் எழுதலாம். தமிழ் என்றாலே வெறும் கதை, கவிதை இல்லாவிட்டால் பாடல் என்பது மாறி இன்று கணிதம், அறிவியல் பற்றிய ஆழமான கட்டுரைகள் பல தமிழ்விக்கிபீடியாவில் இடம் பெற்றுள்ளன. இதை தனியொருவர் யாரும் ஆக்கவில்லை. இதில் ஏறத்தாழ 100 நபர்களிலிருந்து 200 நபர்கள் வரை பங்களிக்கிறார்கள். எந்தவொரு காலத்திலும் 20லிருந்து 30 பேராவது தொடர்ந்து பங்களிக்கிறார்கள். இன்னும் பல நபர்கள் பங்களித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒரே ஒரு கருத்தை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். ராஜராஜசோழன் கட்டிய பெருங்கோவில் மிகவும் பாராட்டுக்குறியது, அது ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்த மிகவும் நுணுக்கமான கலை பொக்கிசம், கலைப்படைப்பு. அதே போலவே விக்கிபீடியாவை அறிவுக்கோவிலாக தமிழர்கள் எழுப்ப வேண்டும். அனைவரும் இணைந்து எழுதினால், எந்தத் துறையாக இருந்தாலும், எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கான விளக்கம், விடை கிடைக்கும் இடமாக இருக்கச் செய்யமுடியும். ஆகவே அதை ஆக்குவதும், வளர்ப்பதும் நம் கையில் உள்ளது. அதற்கு என்னென்ன செய்யமுடியுமோ அவற்றைச்செய்ய ஆர்வங்கொண்டிருக்கின்றேன்.

தமிழ்விக்கிபீடியாவானது பத்தாண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. இ. மயூரநாதன் என்பவரால் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டது. அதை அவர் தனியொருவராக பல மாதங்களாகச் செய்துக்கி வளர்த்தெடுத்தார் அதன் பின்னர் சுந்தர், ரவி, நகீரன், சிறீதரன் போன்றோர்களும் வந்துசேர்ந்தார்கள். நான் 2006 இல் சேரும் பொழுது விக்கிபீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகள் இருந்தன, இப்பொழுது அறுபதாயிரத்திற்கும் கூடுதலான கட்டுரைகள் இருக்கின்றன.

கேள்வி: பலதுறைகளில் தாங்கள் சாதனை புரிந்திருக்கிறீர்கள்? தங்களது இந்த ஆற்றல் எவ்வாறு வந்தது, தமிழில் இவ்வளவு ஆர்வம் வந்தது என்பது பற்றிக் கூறுங்கள்?

Mani_Manivannan_siraguபதில் (திரு. மணிவண்ணன்): சிறகு இணைய வாசகர்களுக்கு எனது வணக்கம். பொதுவாக என்னைப் பார்ப்பவர்கள் நீங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். எதற்காகக் கேட்கிறார்கள் என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை, எந்த ஊர் என்று சொல்வதற்கு எனக்குத் தயக்கம் வரும்; ஏனென்றால் நான் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்திருக்கின்றேன். கிண்டலுக்காக அல்ல உண்மையிலேயே, மூன்றாண்டுக்கு ஒருமுறை நான் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். அதனால் தமிழகம் முழுவதுமே என் சொந்த ஊர். இப்படி வாழ்ந்ததனால் பல்வேறுபட்ட தமிழ்மக்களோடு உறவாடும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. தமிழுக்கான உந்துதல் என்னிடம் எப்படி வந்தது என்றால் 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபொழுது அதை சிறு குழந்தையாக நேரடியாகப் பார்த்திருக்கிறேன். குமாரபாளையம் என்ற ஒரு சின்ன ஊர். இப்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. என் கண் எதிரில் இந்திய அரசின் துணைப்படைகள் சாதாரண மாணவர்களை, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய மாணவர்களை சுட்டுக்கொன்றதை பார்த்திருக்கிறேன். சிறுவயதில் பார்க்கும்பொழுது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை மறக்கமுடியாது. தமிழ் மேல் இருக்கும் பாசம், பற்று, ஆர்வம் பலருக்கு பலவிதமாக வரலாம். ஆனால் அப்போது எனக்கு வந்தது என்னவென்றால் என்னுடைய மொழி, என்னுடைய தாய்மொழி, இதன் உரிமைக்காக நாங்கள் போராடுவதற்கு எதிராக இவ்வளவு அடக்குமுறை இருந்தால் அதனை நாம் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆழமான எண்ணம் அப்பொழுதுதான் என் நெஞ்சில் விதைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன், மிக மிக நல்ல ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள்.

சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுதே சிலப்பதிகாரத்தை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்து நாடகமாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்போது அதன் தாக்கம் புரியவில்லை, பின்புதான் தேரா மன்னா” என்று கண்ணகி” நாடு விட்டு நாடு வந்து பாண்டிய மன்னனிடமே அறச்சீற்றத்துடன் வழக்காடிப் போராடுவது, அதன் தாக்கம், அந்த உணர்வு இன்னும் நினைவில் இருக்கிறது. “இது பொறுக்குதில்லை தம்பி, எரிதழல் கொண்டுவா” என்று பீமன் கொதிக்கும் பொழுது பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நெஞ்சிலே ஓடுகிறது. அதைப் பாஞ்சாலியின் சபதமாக மட்டும் பார்க்காமல் அதை வேறு எங்கெல்லாம் பொருத்திப்பார்க்கமுடியும் என்ற எண்ணம் இயல்பாகவே தோன்றியது. வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலம் அறிந்தபின் நான் இயல்பாகவே தமிழ்ப்பற்று கொண்டேன். கவியரங்கம், பட்டிமன்றம் இவைகளில் கலந்துகொண்டிருக்கிருந்தேன். பொறியியல் கல்லூரியில் பெரும்பாலும் எதுவும் செய்ததில்லை. பின்பு தமிழே இல்லாமல் வறண்டுபோய் வடஅமெரிக்காவில் வாழ்ந்தபோதுதான் தமிழின் தேவையை மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன். அப்போது முதன்முதல் உலகளாவிய தமிழர்களோடு உறவாடும் வாய்ப்பு பேரா. செல்வகுமார் குறிப்பிட்ட soc.culture.tamil, alt.culture.tamil என்ற இரு குழுமங்கள் மூலமாகக் கிடைத்தது. இன்று நாம் வெகு இயல்பாக எடுத்துக்கொள்ளும் பல செயல்கள், அன்று எங்கள் கனவில்தான் நடக்கும். என்றாவது ஒருநாள் உலகத்தில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் தமிழைப்பற்றி, தமிழர்களுடைய வருங்காலத்தைப் பற்றி தமிழிலேயே உரையாட வேண்டும் என்பதை அப்பொழுது ஒரு கனவாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தோம். அது என்றாவது நம் வாழ்நாளில் நடக்கவேண்டும் என்பதற்காக உரையாடிக்கொண்டிருந்தோம். அதற்கான அடித்தளங்கள் அப்பொழுது பதிக்கப்பட்டன. அப்பொழுது கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்த பலரும் இன்றும் கணினித்தமிழில் ஏதாவது ஒரு தொண்டுசெய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதுதான் இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விதை என்று சொல்லுவேன்.

கேள்வி: கணினித்தமிழ் துறையில் நிறைய பணியாற்றி இருக்கிறீர்கள், அந்தத் துறையில் என்னென்ன அமைப்புகள் இருக்கிறது, என்னென்ன நடக்கிறது, என்னென்ன செய்யவேண்டும், அதன் வளர்ச்சி என்ன? ஏனென்றால் நிறைய நபர்களுக்கு கணினித்துறையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அமைப்பு ரீதியாக தமிழ்க்கணிணி வளர்ச்சி பற்றி கூறுங்கள்?

nerkaanal1பதில்(மணிவண்ணன்): இந்தக் கணினித்தமிழில் நான் நுழைந்தது தற்செயல். அந்தத் தற்செயலுக்குக் காரணம் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள்தான். நாங்கள் பாலா பிள்ளை, முத்து நெடுமாறன் அவர்கள் அமைத்திருந்த tamil.net என்ற மடலாடற்குழுவில் தமிழ் பற்றித் தமிழில் மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொண்டிருப்போம், தமிழ்க்கணிணிக்கான கலைச்சொற்கள் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். இப்பொழுது நாம் வெகு இயல்பாக எடுத்துக்கொள்ளும் இணையம் போன்ற சொற்கள் எல்லாம் அந்தச் சிறுகுழுவில்தான் படைக்கப்பட்டது. இன்டர்நெட் என்பதை வலைப்பின்னல், பின்னல் வலை என்றெல்லாம் மொழிபெயர்க்காமல் “பல இதயங்களை இணைக்கும் மையம்” என்ற கவித்துவமான ஒரு சொல்லை மலேசியாவின் ‘நயனம்’ இதழின் ஆசிரியர் கோமகன் முன்மொழிய அதைப் பாராட்டி ஏற்றுக் கொண்ட ஒரு குழுமம். ஆனால் ஆழ்ந்த கணித்தமிழ்த் தொழில்நுட்பம் பற்றி உரையாடுவதற்காக பாலா பிள்ளை இன்னொரு குழுமத்தை அமைத்திருந்தார் web-masters@tamil.net. அதன் உரையாடல்களை http://infitt.org/tscii/archives/maillist.html என்ற தளத்தில் இன்றும் படிக்கலாம். அந்தக் குழுவிலே தமிழ் எழுத்துக்களை கணினியில் இடுவது, அதற்கான வரைமுறையைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழுவை எனக்கு அறிமுகப்படுத்தி இதில் கலந்துகொள்ளவேண்டும் என்று என்னை அழைத்தது பேராசிரியர் செல்வக்குமார். அதனால்தான் தற்செயலானது என்றேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு தமிழ் எழுத்துருவும் (fonts) தனித்தனிக் குறியீடுகள் கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அந்த எழுத்துரு இருந்தால் மட்டுமே அதனை பார்க்கமுடியும், வேறொரு எழுத்துரு இருந்தால் பார்க்கமுடியாது. இதனால் தமிழ் எழுத்துக் குறியீட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். இவற்றை ஒருங்கிணைப்பதற்காக அனைவரையும் கூட்டிப் பேசும்பொழுது, அடிப்படைக் கணித்தமிழ் தொழில்நுட்பங்கள் பற்றி ஆழமாகப் பேசக்கூடிய அமைப்பு தேவை என்ற உணர்வே அப்பொழுதுதான் வந்தது.

முதல் இணையத்தமிழ் மாநாடு 1997ல் சிங்கப்பூரில் நடந்தது. அது நாம் தமிழ் இணைய மாநாடு என்று இப்பொழுது நாம் கூட்டும் பெரிய நிகழ்ச்சியாக அப்போது இல்லை. நாம் வரலாற்றுப்பூர்வமாக பார்க்கும்பொழுது அதுதான் முதல் மாநாடு. தமிழுக்காக, தமிழ்க்கணிணிக்காக, தமிழ் இணையத்திற்காக சிங்கப்பூரில், ஏன் உலகிலேயே, நடந்த முதல் கருத்தரங்கம். பிறகு அதன்மூலம் உந்தப்பட்டு, நாங்கள் இணையத்தில் கலந்துரையாடியதையும் தொடர்ந்து, கணினித் தமிழுக்கென்றே ஒரு பெரிய மாநாட்டை தமிழக அரசு கூட்டவேண்டும், இதற்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற எண்ணங்கள் அவற்றின் மூலமாகத்தான் விதைக்கப்பட்டன. அப்பொழுது பேராசிரியர்கள் மு. ஆனந்தகிருஷ்ணன், வா. செ. குழந்தைசாமி, போன்றோர் தமிழக அரசை மிகவும் வற்புறுத்தி 1999ல் சென்னையில் இரண்டாவது உலகத்தமிழ் இணையமாநாட்டை நடத்தினார்கள். அதில் உலகமெங்கும் இருக்கும் கணினித் தமிழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அப்பொழுதுதான் TAM,TAB என்கிற குறியீடுகளை தரப்படுத்தினார்கள். இன்று நாம் கணினியில் தட்டச்சு இடவும் அதற்கான tamil99 என்கிற தட்டச்சின் முறையை தரப்படுத்தினார்கள். தமிழுக்கான கணினி நெறிகளைத் தரப்படுத்தும் உரிமை தமிழக அரசிற்கு இருக்கிறது, தமிழர்களுக்கு இருக்கிறது, இந்திய அரசுக்கு மட்டுமல்ல என்பதை இயல்பாகவே எடுத்துக்கொண்டு இதைத் தரப்படுத்துவதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்., இதற்கு அரசு பின்புலம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துகள் எல்லாம் அப்பொழுதுதான் எழுந்தன. அதுவரை இந்திய மொழிகளிலேயே வேறு எந்த மொழியிலும் நடந்ததில்லை, இந்திக்காகக் கூட அவ்வாறு பொது மாநாடு கூட்டி, வல்லுநர்களைக் கலந்து பேசி, தரப்பாடுகளுக்குத் தீர்வு காணும் முயற்சி நடந்ததில்லை. இந்தியைத் தரப்படுத்துவதற்கு இந்திய அரசின் ஒரு துறை மட்டும்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தது. எல்லோரையும் அழைத்துக்கொண்டுவரவேண்டும், அவர்களோடு கலந்து பேசவேண்டும், இதற்கு என்னென்ன சிக்கல் இருக்கிறது என்று ஆராய வேண்டும், அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும், அதற்கான நிரந்தரமான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைகள் எல்லாம் முதன்முதலில் இந்தியமண்ணில் தமிழகத்தில்தான் தோன்றியது. இதில் தமிழ்நாடு ஒரு பாராட்டத்தக்க முன்னோடி. அப்பொழுதுதான் இப்போது பலரும் பயன்படுத்தும் தமிழ் இணையக் கல்விக்கழகம் (tamilvu.org) உருவானது.

தமிழை உலக நாடுகளில் இருக்கும் எல்லாத் தமிழர்களும் குழந்தைப் பருவத்திலிருந்து பட்டப்படிப்பு வரை இணையம் வழியாகவே பயிலக்கூடிய ஒரு அமைப்பை அப்பொழுதுதான் உருவாக்கினார்கள். அதுமட்டுமல்ல அந்த அமைப்பிற்கு கணினித்தமிழ் தொடர்பாக தரங்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இது ஒரு மாபெரும் சாதனை, மற்ற எந்த இந்திய மொழிகளுக்கும் இது கிடையாது. இன்றுவரை அதுதான் நிலைமை. இப்பொழுதுதான் பல இந்திய மொழிகள், ஓ நமக்கும் இதுபோன்ற தரப்பாடுகள் வேண்டும் என்று விழித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இந்த 1999ல் நடந்த மாநாட்டின் தொடர்பாக கணித்தமிழ் மென்பொருள்களை உருவாக்கினால் மட்டும் போதாது இவற்றைச் சந்தைக்கும் எடுத்துச்செல்லவேண்டும், மக்கள் மத்தியிலே பரப்பவேண்டும் என்பதற்காக கணினித்தமிழ் மென்பொருள் உருவாக்குவோர் அனைவரையும் திரட்டி அவர்களுக்கென்று ஒரு சங்கம் உருவாக்கினார்கள் அதுதான் கணித்தமிழ்ச்சங்கம். இந்த கணித்தமிழ்ச்சங்கம் 1999ல் தொடங்கியதை அடுத்து இது இந்தியாவில் மட்டும் இருந்தால்போதாது, தமிழகத்தில் மட்டும் இருந்தால் போதாது, தமிழ் பேசும் கூறும் எல்லா நாடுகளிலும் இருக்கும் அரசுகள், வல்லுநர்களோடு நாம் தொடர்ந்து கலந்தாயவேண்டும் என்பதற்காக உலகத்தமிழர்களை இணைத்து உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்-infitt.org) என்ற ஒரு அமைப்பைச் சிங்கப்பூரில் தமிழ் இணையம் 2000 மாநாட்டின்போது உருவாக்கினோம். அப்பொழுது உருவாக்கிய நிறுவனர்கள் பலநாடுகளிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, வடஅமெரிக்கா எல்லோரும் கலந்துகொண்டு இந்த அமைப்பை உருவாக்கினோம். இதனை வடஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு லாபநோக்கற்ற, வரிவிலக்கு பெற்ற அமைப்பாகப் பதிவுசெய்தோம். உத்தமத்தின் முழுப்பொறுப்பு அந்தக் காலத்தில் இதுபோன்ற கருத்துகளை பரப்ப வேண்டும், யார் யாரெல்லாம் மற்றமொழிகளில் கணினி சம்பந்தமாக நுட்பங்களை உருவாக்குகிறார்களோ அவர்களோடு இணைந்து கற்றுக்கொள்ளவேண்டும், அவர்களோடு உரையாட வேண்டும்.

எந்தெந்த தரக்குழுக்கள் இருக்கின்றனவோ அவர்களோடு உரையாட வேண்டும், அவர்களுக்கு நம்முடைய கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும். அந்தந்த அரசுகளுக்கு தமிழைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோன்ற அடிப்படை நோக்குகளுக்காக உருவானது. இந்த அடிப்படை நோக்குகளை நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் இணைய மாநாட்டை நடத்துவது என்ற ஒரு முடிவும் அந்த மாநாட்டில் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேயா ,இந்தியா பின் அமெரிக்காவில் இரண்டு முறை மாநாடு நடந்திருக்கிறது. ஐரோப்பாவில் ஒருமுறை நடந்திருக்கிறது. இதுவரை ஈழத்தில் நடக்கவில்லை. என்றாவது ஒரு நாள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கினோம். இன்று நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளும் யூனிகோடு(Unicode) தமிழ்க் குறியீட்டைப் பண்படுத்தியதில் உத்தமத்துக்குப் பெரும்பங்கு உண்டு. பின்னர் கணித்தமிழ் ஆர்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியா, திறந்த மூல மென்பொருள் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கிய போது அவற்றைப் பரப்புவதற்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளன. தமிழ் ஆசிரியர்கள் கணினித்தமிழ் மூலம் கற்றல் , கற்றல் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் Unicode, பல சிக்கல்கள், பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தது. அதில் தமிழுக்கான இடம் வேண்டும், இத்தனை இடம் வேண்டும், இந்த மாதிரியான பல பிரச்சனைகள் வந்தது. அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய Unicode, அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதிலும் சிலர் குறைகள் இருப்பதாக உணர்கிறார்கள். Unicode, ல் அடைந்த வெற்றி, நிறை மற்றும் குறை, அந்தக்குறைகளுக்கு என்ன தீர்வு?

nerkaanal2பதில்(மணிவண்ணன்): தமிழ் யூனிகோடு, என்பது என்னைப்பொறுத்தவரையில் போற்றத்தக்க ஒரு குறியீடு. ஏனென்றால் பல்வேறு தனித்தனி குறியீடுகள் தமிழில் இருந்தபொழுது ஒருவர் எழுதியதை இன்னொருவர் படிக்கமுடியாத சிக்கல்கள் எல்லாம் இருந்தன. தமிழக அரசு TAM/TAB தரத்தை உருவாக்கியபொழுதும் அதையும் பலர் ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தது. இப்படிச் சிதறுண்டு கிடந்த தமிழ்ப்புலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது யூனிகோடு. அது அதனுடைய மாபெரும் நிறை என்று சொல்லவேண்டும். யூனிகோடு ஒரு பன்னாட்டுத் தரம் என்பதால் பன்னாட்டு அமைப்புகள் எல்லாமே இதை ஆதரிக்கின்றன. ஆதலால் முகநூல் என்று நாம் அன்போடு அழைக்கும் facebook இருக்கிறதே அதில் தமிழ் இயல்பாகவே வருகிறது. இதற்காகவென்று தனியாக facebook செய்யவேண்டிய தேவையில்லை. கூகுள் (google) வழியாகத் தமிழில் மின்னஞ்சல் அனுப்பமுடிகிறது. அதைப் பார்க்கவோ, தட்டச்சு செய்யவோ இயல்பாக முடிகிறது. இதுபோன்ற பன்னாட்டு அமைப்புகள் எல்லாமே ஒரே தரத்தை பின்பற்றுவதால் இது, என்ன கணினியாக இருந்தாலும் சரி மேசைக்கணினியாக இருந்தாலும் சரி, பலகைக் கணினியாக இருந்தாலும் சரி அல்லது smartphone என்னும் திறன்பேசிகளாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் தமிழ் இருக்கிறது. இதற்கென்று தனியாக யாரும் எதுவும் செய்யவேண்டியத் தேவையில்லை. இதுதான் உலகத்தரம் என்ற ஒரு ஆணிவேர் தரும் மிகப்பெரிய நிறைவு. ஆனால் இந்த மிகப்பெரிய நிறை ஒரு வலுவான தளத்தில் அமைக்கப்பட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். யூனிகோடு ஒரு நல்ல நோக்குடன் அமைக்கப்பட்டது. உலகத்திலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் உள்ள குறியீடுகள் அதில் இருக்கவேண்டும் என்ற அடிப்படை நோக்கோடு கொண்டுவரப்பட்டது. அவர்கள் இந்திய மொழிகளுக்கு என்று குறியீடுகள் அமைக்க வந்தபொழுது அவர்கள் இந்திய அரசை வந்து கேட்டார்கள். அப்பொழுது இந்திய அரசு தமிழுக்கு என்று ஒரு தரத்தைக் கொண்டுவரும்பொழுது தமிழ்நாட்டைக் கலந்து ஆலோசித்திருந்தால் அப்போது தமிழக அரசு கணினித்தமிழர்களை, வல்லுனர்களைக் கேட்டு பேசியிருந்தால் ஒரு நல்ல தீர்வைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் என்ன காரணத்தாலோ யூனிகோடு க்கும் இந்தியாவிற்கும் நடந்த அந்த உரையாடலில் தமிழகத்தின் கணினி வல்லுநர்கள் யாருமே பங்கேற்கவில்லை. அதனால் யூனிகோடு இந்தியமொழி அனைத்தையும் ஒரே கட்டமைப்பில் பார்த்தது.

இந்திய மொழிகள் அனைத்தையும் தேவநாகரி என்ற ஒரு கட்டமைப்பு. அந்தச்சட்டத்திற்குள்ளேயே கட்டுப்பட்டவை. இது பல இந்திய மொழிகளுக்கு பெரிய குறைபாடாக இல்லை. ஏனென்றால் இந்தியமொழிகளில் கூட்டெழுத்துக்கள் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. கூட்டெழுத்துக்கள் இருக்கும் ஒரே காரணத்தால் ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு (one to one mapping) என்றவாறு பல இந்திய மொழிகளை அமைக்க முடியாது. இந்தி, சமஸ்கிருதம் இதற்கு ஒன்றுக்கு ஒன்று அமைக்க வேண்டும் என்றால் கோடிக்கான குறியீடுகள் தேவை என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் அப்படியல்ல. தமிழில் இரண்டே இரண்டு கூட்டெழுத்துக்கள்தான் இருக்கின்றன. அந்த இரண்டும் தமிழுக்குரிய இயல்பான எழுத்துக்கள் கிடையாது. ஸ்ரீ என்பது ஒரு கூட்டெழுத்து என்பது பல தமிழர்களுக்குத் தெரியாது. ஸ்ரீ என்பதில் இருக்கும் இரண்டு எழுத்துகள்:- ரீ அது தமிழ் எழுத்து, அந்த ஷ், வ வைத்திருப்பிப் போட்டால் வரும் கிரந்த எழுத்து. அது நிறையபேருக்கு அப்படி ஒரு எழுத்து இருக்கிறது என்பதே தெரியாது. இன்னொன்று க்ஷ; இது லக்ஷ்மி என்பதில் வரும். தமிழில் பெரும்பாலும் அவ்வாறு எழுதுவதில்லை. ரிக்.ஷா என்று உடைத்துத்தான் எழுதுவோம். சென்னையெங்கும் சுற்றிப் பார்த்தால் ரிக்.ஷா என்று எழுத்து வரக்கூடிய இடங்களிலெல்லாம் தமிழர்கள் உடைத்துத்தான் எழுதுகிறோம் இது தமிழின் இயல்பு. இந்த கூட்டெழுத்து வடமொழிக்கு தேவைப்பட்டது. வடமொழிக்கு மெய்யெழுத்து கிடையாது. புள்ளி கிடையாது. அதனால் ஒரு மெய்யெழுத்து இன்னொரு உயிர்மெய் எழுத்தோடு இணையும் பொழுது அதை எப்படிக் காட்டுவது என்பது அவர்களுக்கு ஒரு சிக்கலாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கூட்டெழுத்தை பயன்படுத்தினார்கள். தமிழுக்கு அது தேவையில்லை.

உங்களுக்கு ஒரு மெய்யெழுத்து வேண்டுமென்றால் அதற்கு மேலே ஒரு புள்ளி வைத்தால் போதும். ரிக்.ஷா என்பதை எப்படி உடைக்க முடிகிறது. க மேல் புள்ளி வைத்தால் க் ஆக மாறிவிடுகிறது. இடது பாகம் க் வலது பாகம் ஷா என்று சொல்லவேண்டிய தேவையேஇல்லை. அதேபோல் ஸ்ரீ என்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது தமிழ் மொழியே கிடையாது. இந்த இரண்டுமே வடமொழியிலிருந்து இரவலாக வாங்கியது. தமிழுக்கென்று உள்ள எழுத்துக்கள் இயல்பான தனி எழுத்துக்கள். கூட்டெழுத்துக்கள் தேவையே இல்லை. இந்த கூட்டெழுத்துக்கள் தேவையே இல்லை எனும்பொழுது தமிழின் மொத்த எழுத்துக்களே மொத்தம் 247 தான். இவையில்லாமல் நாம் இரவலாக வாங்கியிருக்கும் ஸ், ஷ், ஜ், ஹ் என்ற கிரந்த எழுத்துக்களும் அவற்றின் உயிர்மெய் வடிவங்களும், ஸ்ரீயும் வழக்கில் இருப்பதால் இந்த 247 எழுத்துக்களைத் தாண்டி மேலும் 53 எழுத்துகளைக் கூட்டி 300 எழுத்துகளோடு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இவைதான் தமிழுக்கு இருக்க வேண்டிய மொத்தக் குறியீடுகள். இப்படி தமிழுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு குறியீடு என்று இருந்தால் ஆங்கிலத்தில் என்னென்ன செய்கிறோமோ அனைத்தையும் தமிழில் செய்ய முடியும். அப்படி இல்லாததால் என்னாகிறது என்றால், யூனிகோடில் அகரமேறிய மெய்யெழுத்துக்களைத் தனியாக எழுதுகிறார்கள் (க,ங,ச,..). பிறகு துணைக்குறியீடுகளைத் (கால், கொம்பு, புள்ளி,..) தனியாக எழுதுகிறார்கள். இப்போது மெய்யெழுத்துகளையும், ஏனைய உயிர்மெய்யெழுத்துகளையும் காட்டவேண்டும் என்றால் இவ்விரண்டு குறியீடுகளையும் திரையில் நமக்குத் தெரியாமல் ஒட்டவைக்கிறார்கள். இவற்றை ஒட்டவேண்டி இருப்பதால் இதற்கு என்று தனியாக செயலிகள் தேவைப்படுகிறது. எளிமையான தமிழ் எழுத்துகளைத் தேவநாகரி எழுத்துகளைப் போலச் சிக்கலான எழுத்துகளாகப் பார்க்கிறார்கள். திரையில் காட்டுவதற்கு இடியாப்பச் சிக்கலான வடிவமைப்புச் செயலி (complex rendering engine) தேவைப்படுகிறது. இந்தச் செயலி இருக்கும் இடங்களிலெல்லாம் தமிழைத் திரையில நன்றாக காட்டமுடியும். இந்தச் செயலிகள் சரியாக இல்லாத இடங்களில் தமிழ் எழுத்துகள் சரியாக வராது. மேலும் தேடுவது கடினமாகிறது. அதனால்தான் அடோபியில் (Adobe) பல நேரங்களில் தமிழ்ச் சொற்களைத் தேடுவது வேலை செய்வதில்லை. பல திறன்பேசிகளில் தமிழ் உடைந்து உடைந்து தெரியும். பிடிஎப் (PDF) கோப்பில் தமிழை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் தேடமுடியாமல் போவதற்கும் இதுதான் காரணம். தமிழ் ஒரு சிக்கலான எழுத்தே அல்ல.

இதை இன்றைக்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்ற நம்பிக்கையில் யூனிகோடிடம் நாங்கள் பேசியிருந்தோம். தமிழ் அனைத்து எழுத்துக் குறியீடு என்பதை நாங்கள் பரிந்துரைத்தோம். முதலில் அவர்கள் குழம்பினார்கள், ஏன் நாங்கள் இந்தியஅரசோடு பேசும்பொழுது தமிழில் எந்தச் சிக்கலும் இருப்பதாகச் சொல்லவில்லையே என்றார்கள். 2007ல் யூனிகோடு தொழில்நுட்பக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாங்கள் பேசியபொழுது இந்தக் கேள்வி இந்திய அரசின் பிரதிநிதியிடம் கேட்கப்பட்டது. இங்கே தமிழக அரசு ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக்குறியீடு வேண்டுமென்று கேட்கிறார்கள். ஏற்கனவே நாங்கள் பதினேழு ஆண்டுக்கு முன்னரே இந்திய அரசிடம் கேட்டபொழுது நீங்கள் எதுவும் சிக்கல் இருப்பதாக சொல்லவில்லையே, இப்போது இருப்பதாக சொல்கிறார்களே என்ன செய்வது என்றார்கள். அப்பொழுது இந்திய அரசின் பிரதிநிதி ஆணித்தரமாக கூறினார். பதினேழு ஆண்டுகளுக்கு முந்திய கதையை விடுங்கள். இந்தியா ஒரு கூட்டாட்சி, இந்திய மொழிகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கான தரப்பாடுகளை நிர்ணயிக்கும் முழுஉரிமையும் அந்தந்த மாநில அரசிற்கே உரியது. தமிழக அரசு தமிழுக்கென்று என்ன தரத்தை உருவாக்குகிறதோ அந்தத் தரத்தை இந்திய அரசு ஆதரிக்கும். இந்திய அரசு எந்த தரத்தை ஆதரிக்கிறதோ அந்தத் தரத்தை பன்னாட்டுத் தர அமைப்பிடம்
(ISO)
பரிந்துரைப்போம். அதனால் அரசுத்தரத்துக்கும் யூனிகோடுக்கும் வேறுபாடு இல்லாமல் என்ன செய்யலாம் என்று கேட்டார். இது யூனிகோடுக்கு அதிர்ச்சியளித்தது. ஏனென்றால் யூனிகோடு தரத்துக்கும், பன்னாட்டுத் தரம் அமைப்பின் தரமும் வேறுபட்டால் உலகில் இரண்டு தரங்களாகப் பிளவு வரும். யூனிகோடு, இதைச் சற்றிலும் விரும்பவில்லை. ஆனால், இந்திய அரசு அப்படி வலியுறுத்தியதால் முதலில் தமிழக அரசு ஒரு தரத்தை அறிவிக்கட்டும். பிறகு இந்தத் தரத்தில் தமிழகஅரசு பல ஆவணங்களை உருவாக்கட்டும். அதன்பிறகு இந்தியஅரசு அதை தரமாக ஏற்றுக்கொள்ளட்டும். பிறகு எங்களது கொள்கைகளை நாங்கள் மீண்டும் பரிசீலனை செய்கிறோம். நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ள ஒரு குறியீட்டை மாற்றுவது என்பது இயலாத காரியம்” என்று சொன்னார்கள். தமிழக அரசு 2010ல் தமிழ் அனைத்து எழுத்து குறியீட்டை தரமாக ஏற்றுக்கொண்டுவிட்டது.

தமிழக அரசின் ஆவணங்களில் தமிழ் யூனிகோடு குறியீட்டை ஒரு தரமாகவும் எங்கெல்லாம் தமிழ் யூனிகோடு -வேலை செய்யவில்லையோ அங்கெல்லாம் தமிழ் அனைத்தெழுத்து குறியீட்டை (TACE – Tamil All Character Encoding) மாற்றுத் தரமாகவும் ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கிறது. அதன் பிறகும் 2010ல் இந்த அறிவிப்பு வந்த பிறகும் கூட இன்றுவரை தமிழக அரசின் வலைத்தளங்களில் யூனிகோடு -குறியீட்டிலும் சரி, அனைத்தெழுத்து குறியீட்டிலும் சரி அதிகமாக ஆவணங்கள் பதிப்பிக்கப்படவில்லை. அதனால் யூனிகோடைப் பொறுத்தவரை இது வெறும் வெற்றுப்பேச்சு. இந்த வெற்றுப்பேச்சிற்குப் பிறகு வேறு எந்த நோக்கும் இல்லையென்று அவர்கள் கருதுவதால் அனைத்து எழுத்துக் குறியீட்டிற்கான ஆதரவை அவர்கள் எந்தக்காலத்திலும் தெரிவிக்கப்போவதில்லை. இது மாறவேண்டுமென்றால் முதலில் தமிழ்நாட்டின் தமிழர்கள் தமிழில் இருக்கும் கணினி மென்பொருள்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். சந்தைக்கு ஏற்ப எந்த நிறுவனமும் இயங்கும். வாடிக்கையாளர்கள் எதை வாங்குகிறார்களோ அதை விற்பது எந்தவகையிலும் சாதாரண எண்ணமாக இருக்கும். தமிழர்கள் முதலில் காசுகொடுத்து வாங்கிப் பழகிக்கொள்ளவேண்டும். பிறகு தமிழக அரசு வெறும் தரத்தை அறிவிப்பதோடு மட்டும் நிற்காமல் இந்தத் தரத்தை அவர்கள் செயலுக்குக் கொண்டுவரவேண்டும். தமிழக அரசின் ஆண்டறிக்கைத் திட்டத்தையே இன்னும் யூனிகோடிலோ அல்லது அனைத்து எழுத்துக் குறியீட்டிலோ கொண்டுவரவில்லை. இன்னும் அவர்கள் பத்தாண்டுக்கும் பழமையான வானவில் – என்ற குறியீட்டில் தான் புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் முதலமைச்சர் செயலகத்தில் இருப்பவர்களுக்கு வானவில் -மட்டும்தான் தெரியும். சென்ற ஆண்டில் அவர்கள் எதைப் பயன்படுத்தினார்களோ அதை வெட்டி ஒட்ட வேண்டும் என்றால் வானவில் -இருந்தால்போதும்.

வானவில்லிலிருக்கும் ஆவணங்களிலிருந்து சில பகுதிகளை வெட்டி எடுத்து யூனிகோடு ஆவணங்களில் ஒட்டினால் கட்டம் கட்டமாகத்தான் தெரியும். இவற்றிற்கெல்லாம் எளிமையான தீர்வுகள் இருக்கின்றன. யூனிகோடு -வந்தால் குழப்பமிருக்காது. வெட்டி ஒட்டுவதெல்லாம் மிக எளிமையான வேலை. இதை எத்தனை முறை வலியுறுத்தினாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. அண்மையில் 2014ல் தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது. அந்த ஆணையின் படி தமிழக அரசின் துறைகள் அனைத்தும் தமிழகத்தின் மாவட்டம், வட்ட அரசுகள் யாராக இருந்தாலும் 2010ல் அறிவிக்கப்பட்ட அந்த யூனிகோடு/ அனைத்தெழுத்துக்குறியீட்டை மட்டும்தான் புழங்கவேண்டும் என்பது அரசின் ஆணை. அந்த அரசின் ஆணை இதுவரை முதலமைச்சரின் செயலகத்தில் கூடச் செயல்படவில்லை. எப்பொழுது அது முதலமைச்சர் அலுவலகத்தில் செயல்படுகிறதோ, அதன் பின்னால்தான் தமிழகமெங்கும் பரவும். அப்படிப் பரவினால்தான் உலகத்தில் இருக்கும் தரப்பாட்டுக்குழுக்கள் தமிழகம் சொல்வதை மதிப்பார்கள். நம்பேச்சு வெறும் வெற்றுப்பேச்சாக இருக்காமல் இருக்கவேண்டும் என்றால் செயல்பாட்டில் காட்டவேண்டும். தமிழர்கள் வாய்சொல் வீரர்கள், வேறு என்ன சொல்ல முடியும்?

கேள்வி: தமிழ் வளர்க்க வேண்டிய தமிழகத்தில் தமிழ் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையை மாற்றமுடியுமா?

பதில்(பேரா.செல்வகுமார்): கட்டாயம் மாற்றமுடியும். உடனே நடக்காது. இந்த ஆங்கில மோகத்தை ஒரே நாளில் அடையவில்லை. அது ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் தாண்டி இந்நிலைக்கு வந்திருக்கிறோம். ஆங்கில மோகத்திற்கு ஊடகங்களும், பொதுமக்களுடைய அறியாமையும் காரணம். அதேபோல் தமிழின் செல்வாக்கு வேண்டுமென்று முறையிட்டால் பத்தாண்டுகளில் மாற்றமுடியும். எப்படி ஆங்கிலத்தில் படித்தால் மிடுக்கு என்று நினைக்கிறார்களோ, அதே போல் தமிழ்வழியில் படித்து, முதலாவது தமிழ் வாழவேண்டுமென்றால் மழலைப்பள்ளியிலிருந்து பத்தாவது வகுப்பு வரையாவது கட்டாயம் தமிழ் மட்டும்தான் படிக்க வேண்டும். ஆனால் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படிக்கலாம், இந்திமொழி, சமசுகிருத மற்றும் எந்த மொழியாக இருந்தாலும் பாடமாக எடுத்து படிக்கலாம். நாம் கல்வி கற்கும் மொழி, தாய்மொழியாக, தமிழ்மொழியாக இருக்கவேண்டும். அந்தக்கதை மாறாவிட்டால் தமிழுக்கு எதிர்காலம் இல்லை. அது அடிப்படை இன்னும் சொல்லப்போனால் அடுத்து பட்டப்படிப்பும், மேற்படிப்பும், ஆய்வுப்படிப்பும் கூட தமிழில்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளிப்படிப்பே தமிழில் இல்லை என்றால் பிறகு தமிழின் எதிர்காலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் மாறுமா? மாறாதா? மாற்றமுடியுமா? என்றால் கட்டாயம் மாற்றமுடியும். ஆனால் அது எளிது என்று சொல்லவில்லை. சிறுகச்சிறுக செயல்வடிவில் நாம் நல்ல பள்ளிகளை உருவாக்கி அதாவது தமிழ்வழியாக பயிலும் பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும். தமிழ் வழியாகப் பயிலும் பள்ளிக்கூடங்களில் சிறப்பாக ஆங்கிலம் பேசும் மாணவர்களை காட்டமுடியும், தமிழில் பயில்வார்கள் ஆனால் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும், படிக்கவும், புரிந்துகொள்ளவும் திறமை பெற்றிருப்பார்கள். ஆங்கிலம் மட்டுமல்லாமல் சிறிதளவாவது சீன மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழ் எப்படி வெல்லவேண்டும் என்றால் ஒரு சந்தையில் என்ன செய்தால் வெற்றிபெற முடியும், அவர்கள் மிடுக்காக ஆங்கிலம் பேசுகின்றார்கள், உடையெல்லாம் அணிந்துகொண்டு போகின்றார்கள் என்ற வெற்றுத்தனமான மோகம் இருக்கின்றதல்லவா அதை அவர்கள் பாணியிலேயே அவர்களை விட சிறப்பாக செய்யவேண்டும். அவர்கள் ஒரு லட்சம் கேட்கிறார்கள் என்றால் நாம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு முடித்துவிடவேண்டும். எனவே குறைந்த விலையில் அதிக மதிப்புள்ளதையும் நாம் செய்தோம் என்றால் நிச்சயமாக தமிழ் வெல்லும்.

மணிவண்ணன்: எனக்கு இதில் மாற்றுக்கருத்து உண்டு. கடந்த ஏழாண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். ஒரு சில வாரங்கள் மட்டும் தமிழகத்தில் இருந்து பார்க்கும் ஒரு கண்ணோட்டம் எனக்கு இல்லை. ஏழாண்டுகள் தொடர்ந்து இருப்பதால் என்னுடைய கண்ணோட்டம், என்னுடைய எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி இருக்கின்றன. ஒன்று தமிழ் இன்று நன்றாகவே வளர்ந்திருக்கிறது. நம் கண்ணுக்குத் தெரியவில்லை. எந்தெந்த இடங்களில் வளர்ந்திருக்கிறது என்பது ஏதாவது ஒன்றைச் செய்யும்பொழுதுதான் தெரியும். தமிழக அரசில் நீங்கள் ஏதாவது ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்யவேண்டும் என்றால் அவர்கள் முதலில் தமிழில் நிரப்பிக் கொடுங்கள் என்று தமிழில் அச்சடித்த விண்ணப்பத்தை நீட்டுவார்கள். உங்களது வண்டியை யாரேனும் உடைத்துவிட்டார்கள் என்றால், அதற்குக் காவல் நிலையம் சென்று பதிவு செய்யவேண்டும். அவர்கள் முதலில் கொடுப்பது தமிழில் அச்சிட்ட விண்ணப்பம்தான். அல்லது நீங்கள் சொல்லச்சொல்ல ஆய்வாளர் தமிழில் எழுதுவார்கள். இப்படி ஒன்று இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. ஆவணங்களைப் பதிவு செய்யும் பொழுது, நிலங்களை வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், திருமணப்பதிவிலிருந்து அந்தப் பதிவுகள் எல்லாமே தமிழில் இருக்கும். இது நமக்கு அவ்வளவாக தெரியாது. அரசு இதை கொண்டுவந்ததற்கு ஒரே காரணம் மக்களுக்கு எதுவும் புரியவேண்டும் என்பதற்காக தமிழில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை எழுதுவதற்காக எழுத்தர்களை ஏற்பாடு செய்கிறார்கள். மக்கள் பேசுவது போல அரசுக்கு எழுத முடியாது. அரசினுடைய தமிழ்நடை சற்று வேறுபட்டிருக்கும். ஆய்வாளரிடம் சென்று ஆங்கிலம் கலந்தும் சொல்வார்கள். ஆய்வாளர்கள் அதை முழுக்க முழுக்கச் செந்தமிழிலே எழுதுகிறார்கள். இது நமக்குத் தெரியவே தெரியாது. இது பாராட்டப்படவேண்டியது தமிழக அரசின் வலைத்தளத்தில் சென்று பார்த்தால் பல ஆவணங்கள், ஆங்கிலத்தில் இருக்கும் ஆவணம் போல தமிழிலும் இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அரசாணைகளை ஆணைகளை முதன் முதலில் தொழில்நுட்ப வல்லுனர்களிடம் காட்டிவிட்டுச் சரிபார்க்கிறார்கள். பிறகு அதே ஆணையைத் தமிழில் எழுதுகிறார்கள். தொழில்நுட்ப அரசாணைகளை மொழிபெயர்ப்பு செய்வதற்கும் துறை வல்லுநர்களின் உதவியை நாடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு தொழில்நுட்ப ஆணையைக் கூட தமிழில் கண்டிப்பாக எழுதவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கிறது. இதுவும் பலருக்குத் தெரியாது. இதுவும் பாராட்டப்படவேண்டிய செய்தி. இதனால் தமிழ் ஓகோ வென்று உச்சாணிக்கொம்பில் இருக்கிறது என்று சொல்லவரவில்லை. நாம் நினைப்பது போல் நாம் இன்னும் அந்தக் கனியை எட்டவில்லை. பதினான்காம் நூற்றாண்டில் பாண்டியன் அரசு வீழ்ந்த பிறகு மீண்டும் இந்திய சுதந்திரம் பெறும்வரை பல நூற்றாண்டுகள் தமிழர்கள் தன்னாட்சி பெறவில்லை. அந்நியர்கள் ஆட்சியில்தான் வாழ்ந்திருந்தோம். தமிழுக்கென்று எந்த அரசும் ஆதரவுதரவில்லை. தமிழுக்காக யாரும் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக்கவில்லை. தமிழ் கற்றால்தான் வேலைகொடுப்பேன் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் குறைந்தது அறுநூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் தம்மொழியைக் காக்கத் தாங்களே வேலைசெய்தார்கள். அந்த அடித்தளமே உடைந்துகொண்டிருக்கிறது என்பதுதான் பேராசிரியர் செல்வகுமாரின் வேதனை. இவற்றின் ஆணிவேர் தொடக்கப்பள்ளி.

தொடக்கப்பள்ளியிலிருந்து தமிழ் அகற்றப்பட்டுவிட்டால் ஒரு மொழியாகக்கூட தமிழ் சொல்லிக்கொடுக்கப்பட்டாலும் இது ஒரு அடுக்களை மொழியாகவே இருக்கும் அடுக்களை மொழியாக இருந்தால் ஆட்சி மொழியாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. எப்படி டாஸ்மாக் ஒவ்வொரு வாரமும் இத்தனை பேரை குடிகாரராக்கவேண்டும் என்று ஒரு குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றதோ அதே போல ஆங்கில வழிப் பள்ளிகளில் இத்தனை பேரை நீங்கள் சேர்த்துத்தான் ஆகவேண்டும் அதுமட்டுமல்லாமல் அவர்கள் தனியார் பள்ளியின் தரத்திற்கு ஆங்கிலத்தைப் பேசவேண்டும் என்பது அரசின் உயர்மட்டத்திலிருந்து நேரடியாக வந்திருக்கும் கட்டளை என்று பல ஆசிரியர்கள் சொல்கிறார்கள். பல தமிழ்ப் பள்ளிகளை வலுக்கட்டாயமாக ஆங்கிலப்பள்ளியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல வியப்பு, இத்தனைப் பள்ளிகளிலும் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் என் பிள்ளைக்கு ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று முண்டியடித்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க முயன்றால் போராட்டங்கள் வெடிக்கலாம்.

பேரா. செல்வகுமார்: சட்டம் போட்டு தடுக்கமுடியாது. ஏன் பொதுமக்கள் ஆங்கிலவழி கல்வியைக் கற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று பார்த்தீர்களேயானால் ஆங்கிலவழி கல்வி கற்றால்தான் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கமுடியும், மென்மேலும் போகமுடியும் என்று நினைப்பு. கல்வி எதற்காக கற்கிறோம் என்ற அடிப்படை உணர்வே அற்றுவிட்டது. நீங்கள் B.A. Economics படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் கருத்துகளை உங்கள் வாழ்க்கையில் எங்காவது பயன்படுத்தி இருக்கிறீர்களா? நீங்கள் ஆங்கிலத்தில் படித்தாலும் சரி, தமிழில் படித்தாலும் சரி, கல்வியானது நாம் அறிவு பெறுவதற்காக படிக்கிறோம். நாம் படித்த அனைத்தையும் நேரடியாக வேலையில் பயன்படுத்தப்போவதில்லை. எந்த வேலை செய்தாலும் அந்த வேலைக்கு உண்டான சிறப்பு மொழி அதாவது எந்த நாட்டில் வேலை செய்கின்றோமோ அந்த நாட்டின மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். நாம் தமிழ்நாட்டில் வேலை செய்யும் பொழுது தமிழுக்கு உரிமை தந்தால் கட்டாயம் தமிழ் பேசுவதால் நன்மை.

nerkaanal3திரு. மணிவண்ணன்: தமிழைப்பற்றி யாரும் கவலைப்படவேண்டாம், தமிழை வளர்க்க வேண்டும் என்று யாரும் கொடிபிடிக்க வேண்டாம், போராடவும் வேண்டாம், எந்த விதச் செயலும் தேவையில்லை. ஒன்றே ஒன்றைமட்டும் நினைத்துக்கொள்ள வேண்டும். கடந்த அறுபத்தேழு ஆண்டுகளாக இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தியா எந்த நிலையில் இருக்கிறது?. ஆங்கிலவழிப்பள்ளிகளில் படித்த மிகப்பெரிய அறிஞர்கள் இருக்கிறார்கள்?. இதனால் எத்தனை நோபல் பட்டத்தை பெற்றிருக்கிறார்கள்?. இவற்றையெல்லாம் ஒருபுறம் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் பெரிய அளவில் பொருளாதாரத்திலும் செல்வம் கொழிக்கிறது. செல்வம் கொழிக்கும் இவ்வேலையில் இவர்கள் யாருக்காக வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள், இவர்கள் வேலைசெய்துகொண்டிருக்கும் இந்த வேலையும், தொழில்நுட்பமும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு யாருக்காவது பயனிருக்கிறதா? இதனால் எல்லோரும் உயர்ந்துகொண்டிருக்கிறார்களா? ஐ.டி படித்துவிட்டால் தான் மட்டும் உயரமுடியும். அமெரிக்காவில் அப்படியல்ல.

ஐ.டி படித்தவர்களுக்கும் மற்ற பணி செய்பவர்களுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை. எல்லோரும் உயர்ந்தால்தான் சமுதாயத்தை, பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். அப்போது நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தியாவை விடுங்கள் தென்கிழக்கு ஆசியாவைப் பாருங்கள் அங்கே யாரும் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக்கூட படிப்பதில்லை. யாருக்குத் தேவையோ அவர்கள் மட்டும் தேவையான அளவிற்கு தெரிந்துகொள்கிறார்கள். அவர்களுடைய சாதனையைப் பார்க்கும் பொழுது, சீனாவினுடைய சாதனையைப் பார்க்கும் பொழுது இந்தியா வெட்கப்பட வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணமே இதுதான். எப்பொழுது உன்னால் உன்னுடைய தாய்மொழியில் சிந்தித்துச் செயலாற்ற முடியவில்லையோ, எப்பொழுது ஒரு இரவல் மொழியில் நீ சிந்திக்கிறாயோ உன்னால் ஒரு வட்டத்தை மீறவே முடியாது. அந்த வட்டத்திற்குள் அந்தக்கிணற்றுக்குள்தான் இருக்கமுடியும். அந்தக் கிணற்றுக்குள் இருக்கும் வரை தவளைக்கு உலகம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. இதற்காக இந்தத் தவளைகள் ஒரு மாநாட்டு கூட்டும், இந்தக் கிணற்றை விட்டுப் போகக்கூடாது என்று போராடும் ஆனால் கிணற்றிற்கு வெளியே ஒரு மாபெரும் உலகம் இருக்கிறது.

பேரா. செல்வகுமார்: ஆங்கிலம் கற்பிக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அதற்காக நாம் நம்மொழியை அழித்துக்கொண்டு அம்மா, அப்பாவை mummy, daddy என்று கூறவேண்டிய தேவையில்லை. நம் ஊரில் பூனை, புலிகளை cat, tiger என்று சொல்லிக்கொடுக்கத் தேவையேயில்லை. சிறு குழந்தைகள் elephant பாத்தியா என்ன கலரில் இருக்கும் black கலரில்தான இருக்கும் என்று பேசுகின்றனர். அந்த மொழி சொல்கிற சொற்றொடர்கள் எல்லாமே தமிழாகிறது. அப்படி சொல்வதுதான் உயர்வு என்று கருதுவதால் அப்படி உள்ளது. அவ்வாறு இருப்பதால் யானை என்றால் என்னவென்றே தெரியாது, கருப்பென்றால் செயற்கையாக இருப்பதாக நினைக்கத் தோன்றும். சென்னையிலே மணி என்ன? என்று கேட்டால் விழிக்கின்றார்கள். பிறகு time என்ன என்று கேட்டால் இதை முன்னாலே தமிழில் சொல்லவேண்டியதுதானே? என்கிறார்கள். படிக்காதவர்கள் கூட உப்பு என்று சொல்வதற்கு salt என்று கூறுகிறார்கள். ஆகவே இதன் அடிப்படை என்னவென்று கேட்டால் மோகம். இந்த மோகத்தை ஒருநாளும் மாற்றமுடியாது. எப்படி இந்த மோகம் மெல்ல மெல்ல பற்றி வலுவாக வருவதற்கு பத்தாண்டுகள் ஆகியிருக்கிறதோ அதுபோல இந்த மோகம் மாறுவதற்கோ அல்லது அதையும் மீறி வேறொரு தன்மொழி ஆர்வம், போக்குதலும் வர முப்பதாண்டுகள் ஆகும். இன்று அதற்கான செயல்திட்டங்களை வகுத்து முன்னெடுக்காவிட்டால் நம் நிலை நிச்சயமாக கவலைக்கிடமாக இருக்கிறது.

திரு. மணிவண்ணன்: பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பின்வருமாறு கூறுவார் “இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழர்களால் தமிழிலும் சரளமாகப் பேசமுடியவில்லை, ஆங்கிலத்திலேயும் ஒழுங்காகப் பேசமுடியவில்லை. இரண்டிலுமே குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால் அவர்கள் தாய்மொழியில் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள். அதற்கான வேர்ச்சொற்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆங்கிலம் அவர்களது தாய்மொழி இல்லை. நம் தாய்மொழி இல்லாத இன்னொரு மொழியில் ஆழமாக சிந்திப்பது அவ்வளவு இயல்பானது அல்ல எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் தமிழ்ப்பேராசிரியர். ஆனால் நான் ஆங்கிலத்தில்தான், என் தாய்மொழியில்தான் ஆழமாக சிந்திக்க முடியும். தமிழைக் கற்றுக்கொடுப்பதாக இருந்தாலும், தமிழை ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் நான் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கிறேன். அதேபோல்தான் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அவர்களது தாய்மொழியில்தான் சிந்திக்கமுடியும். அந்தத் திறனை அவர்கள் இழந்துவிட்டால் அவர்களால் வேறு எந்த மொழியிலும் செய்யமுடியாது.

பெரா. செல்வகுமார்: ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் பயின்று கொண்டால் ஆங்கிலத்தினுடைய அத்தனை அறிவுச்செல்வங்களையும் நாம் பெற முடியும். அதற்காக நாம் படிக்கவில்லையே என்ற எந்தவித கட்டாயமும் கிடையாது. சிறந்த எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால் உலகம் போற்றும் ராமானுசன் அவர்கள் ஆங்கிலமொழியிலே மதிப்பெண் பெறாமல் தோல்வி பெற்றார். ஆனால் அவர் செய்த ஆய்வுகளைப் பற்றி இன்றும் அலசிக்கொண்டிருக்கிறார்கள். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தமிழ்தான் படித்தார். இன்று உலகலாவிய அளவிலே அவருடைய புகழ் பரவியிருக்கின்றது. வான்வெளியிலே அவர் செய்த திட்டங்கள் வெற்றிபெற்ற செய்திகள் எல்லாம் உலகில் எல்லோரும் போற்றுகின்றார்கள். எந்தத் துறையில் செல்லவேண்டுமோ அதற்கான மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. ருசிய மொழி தெரியாமல் சில துறைகளில் போகமுடியாது. சில துறைகளில் ஜெர்மன் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சிலவற்றிற்கு பிரான்சிய மொழி தேவை. எந்தெந்த துறைகளில் போகவேண்டுமோ அந்தந்தத் துறைகளில் அதன் சிறப்பு, அறிவைத் தெரிந்துகொள்ள அதற்கான மொழியை சிறிதளவு அறிந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கலாம். நாம் இந்தி படிக்கிறோம், இன்னும் பத்தாண்டுகள், பத்தாண்டுகள் கழித்துப் பார்த்தால் எந்தமொழி யார் பேசினாலும் எந்தமொழிக்கும் மாற்றிக்கொள்ளலாம் என்ற திறன் இருக்கும். ஆகவே நாம் மொழி தெரியாவிட்டால் இழப்போம், முடியாது என்பது அறியாமை. அது தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே பரவலாக இருக்கும் ஒரு அறியாமை.

சிறகு: நல்ல அருமையான கருத்துக்கள். சிறகு வாசகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல்”

அதிகம் படித்தது