மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமயங்களில் பெண்களுக்கான இடம்

முனைவர் மு.பழனியப்பன்

Mar 20, 2021

siragu manimegalai2
தமிழக மெய்ப்பொருள் வரலாற்றில் குறிக்கத்தக்க இடம் பெண்களுக்கு உண்டு. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு ஆளுமைகளைக் குறிப்பிடும் அளவிற்குப் பெண் பாத்திரங்கள் தமிழ் இலக்கிய உலகில் படைக்கப்பெற்றுள்ளன. சிலப்பதிகாரக் காப்பியத்தில் சமண வல்லுநராகக் கவுந்தியடிகள், மணிமேகலைக் காப்பியத்தில் பௌத்த வல்லுநராக மணிமேகலை, குண்டலகேசிக் காப்பியத்தில் பௌத்த வல்லுநராகக் குண்டலகேசி, நீலகேசிக் காப்பியத்தில் சமண வல்லுநராக நீலகேசி, பெருங்கதையில் சாங்கிய வல்லுநராக சாங்கியத்தாய், வைணத்திற்கு ஆண்டாள், சைவத்திற்குக் காரைக்கால் அம்மையார் என்று பெண்களை முன்னிறுத்தும் சமயச் சூழல் தமிழ் இலக்கியப் பரப்பில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக பெண்களுக்கு உரிய இடம் சமய அளவில் வழங்கப் பெற்றிருக்கிறது என்பதை உணரமுடிகின்றது. பௌத்தம், சமணம், சாங்கியம் போன்ற சமயங்களில் ஒரு காலத்தில் பெண்கள் இடம்பெறக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்த நிலையிலும் அவ்வவ் சமயக் காப்பியங்களில் பெண்களுக்கு இடம் தந்திருப்பது சிறப்பிற்குரியதாகும்.

பௌத்த சமயமும் பெண்கள் நிலைப்பாடும்

பௌத்த சமயத்தில் முதலில் பெண்களைப் பிக்குணிகளாகச் சேர்க்கக் கூடாது என்று புத்தபிக்குகள் மறுத்துள்ளனர். பின்பு பல கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பெண்களைச் சேர்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றிய இணையப் பதிவொன்று இதனை வலுப்படுத்துவதாக உள்ளது, ‘‘“பிக்குணி பதி மோக்க” (பிக்குணியின் மோக்ஷப் பாதை) என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பெற்றன.
அத்தகைய கட்டுப்பாடுகள் (சுல்ல வக்க, வினய பீடிக) பின்வருமாறு.

1. பிக்குணி எவ்வளவு வயதானாலும், பிக்குவிற்கு மரியாதைச் செலுத்த வேண்டும், ஆனால், பிக்கு அவ்வாறு பதிலிற்கு செய்யவேண்டியதில்லை.

2. “வஸ”காலத்தை, பிக்குணிகள், பிக்கு இல்லாமல் கழிக்கக்கூடாது. [பிக்குணி, எந்தக் காரணத்திற்கும் மடாலயத்தில் பிக்குகள், அவர்கள் இருந்தாலும், இல்லையென்றாலும், வசிக்கும் இடத்திற்கு / இடத்தைக் கடந்து
செல்லக் கூடாது.]

3. “உபோசதா” சடங்கு எப்பொழுது நடக்கும் என, பிக்குவிடமிருந்துக் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும், மற்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் நாளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

4. “பாவர்னா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குணி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.

5. “மானத்தா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்படது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குணி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.

6. “பிக்குணி பதி மோக்க” விதிமுறையின்படி, ஆறு பசித்தியா விதிகளில்
பயிற்சி பெற்ற பிறகு, “உபசம்பதா” முறையிலும் இரண்டு சங்கங்களிலும்
தனித்தனியாக பயிற்சி பெறவேண்டும்.

7. பிக்குணி, ஒரு பிக்குவை திட்டவோ, நிந்திக்கவோ, தூஷிக்கவோ கூடாது.

8. பிக்குணி, ஒரு பிக்குவைக் கடிந்து கொள்ளவோ, குறைகூறவோ கூடாது. மேற்குறிப்பிட்ட “உபோசதா” மற்றும் “பாவர்னா” தேதிகளை குறிக்க பிக்குகளிடன் வாதிடக்கூடாது. ஆனால், பிக்குகள், பிக்குணிகளைக் கடிந்து கொள்ளலாம். இவ்வகையில் பற்பல கட்டுப்பாடுகளை அமைத்துப் பெண் பிக்குணிகளாக பௌத்தத்தில் சேர்க்கப்பெற்றனர்.

மணிமேகலை பௌத்த மதத்திற்குள் சேர்க்கப்படும் நிலையில் மணிமேகலை சில செய்திகளைக் குறிக்கிறது.

‘‘ஞான தீபம் நன்கனம் காட்ட
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றனள் என”
என்ற குறிப்பு மணிமேகலைக்கும் பௌத்தத் துறவு மேற்கொள்ளும் நிலையில் அவ்வகையில் சில வரையறைகள் சுட்டப்பட்டள்ளன என்ற கருத்தினைப் பெறமுடிகின்றது.

மணிமேகலைப் பாத்திரத்தைத் தவிர மணிமேகலா தெய்வம், தீவதிலகை போன்றோர் பௌத்த சமயம் சார்ந்த பெண்மணிகளாக மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறச் செய்யப்பெற்றுள்ளனர்.

மணிமேகலா தெய்வம் தெய்வ சக்தி வாய்ந்த தேவதையாக விளங்குகின்றது. இத்தெய்வம் மணிமேகலையைப் பௌத்த நெறிப் படுத்துகிறது. இத்தெய்வமும் பௌத்த நெறிப்படி புத்தரை வணங்குகிறது.

‘உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்
இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக” என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள்”
என்று புத்த பெருமானைப் போற்றி வணங்குகிறாள். அறியாமை இருள் போக்க சூரியனாய்த் தோன்றிய புத்த பெருமானை நாவால் போற்றினேன். தலையால் வணங்கினேன். மனத்தாமரையில் இருந்தினேன். எங்கும் துன்பம் தொலையட்டும் என்று வேண்டுகிறேன் என்று இத்தெய்வம் வணங்குகிறது.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு என்றும் துணையாக இருந்து, காத்துவரும் நிலையில் செயல்படுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தில் பௌத்தம் சார்ந்த மற்றொரு பெண்ணாக படைக்கப்பெற்றிருப்பவள் தீவதிலகை ஆவாள். இவள் மணிபல்லவத் தீவில் உள்ள புத்த பீடிகையை இந்திரனின் ஏவலால் காத்துவருபவள் ஆவாள். இந்தப் புத்தபீடிகையைக் காண்போர் முற்பிறப்பின் நிலையை அறிந்து கொள்வர். அதுமட்டுமில்லாமல் புத்த அறம் கேட்கத் தகுதியுடையவர் ஆவர் என்று தீவதிலகை குறிக்கிறாள். இவளும் தர்மத்தித்தின் தலைவராகப் புத்த பிரானைக் காண்கிறாள்.

இவ்வாறு பௌத்த மதம் சார்ந்து தம் வாழ்வை நிகழ்த்தும் பெண்களை மணிமேகலைக் காப்பியம் படைத்துள்ளது. குண்டலகேசியில் பௌத்த சமயப் பெண்கள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை.

ஆனால் நீலகேசியில் பெண் பிக்குணிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவை நீலகேசியின் விமர்சனத்துக்கு உரியனவாக உள்ளன. ‘சிங்க தத்த ஸ்தவிரன்” என்ற பௌத்தத் துறவி ஒரு பிக்குணியிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அவளை அடைய பௌத்த கோயிலே சிறந்த இடம் என்று குறிப்பதாகவும் குறிப்பு உள்ளது.

மேலும் மற்றொரு நிகழ்வில் பௌத்தத் துறவி பிக்குணி ஒருவருடன் உடல் இச்சை கொள்ள முயன்றபோது அப்பிக்குணி மறுப்பதாகவும் அதற்கு அப்பௌத்தத்துறவி கற்பு என்பது பொது மக்கள் சார்ந்தது, ஆன்மீகத் தத்துவத்தை மீறியது ஆகாது என்று குறிப்பதாக ஒரு குறிப்பு காட்டப்பெறுகிறது.

இவற்றின் வழியாக பெண் பிக்குணிகள் இருந்தமைக்கான சான்றும் அப்பெண் பிக்குணிகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்பது மிகப் பெரும் சவாலாக இருந்தது என்பதையும் உணரமுடிகின்றது.

இதே நிலை மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலைக்கும் அரசமாதேவியால் நிகழ்ந்தது என்பதும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது. இவ்வளவில் பெண்கள் ஞானவழிக்குச் செல்லும்போதும் அவர்கள் உடல் சார்ந்த துயரங்களால் துன்பப்படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

சமண சமயமும் பெண்கள் நிலைப்பாடும்

சமண சமயத்தில் பெண்களுக்கு இடமே இல்லை. ‘‘பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயக் கொள்கை” என்று சமண சமயத்தில் பெண்களுக்கான இடமின்மை குறிக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் நீலகேசி சமண சமயம் சார்ந்த பெண்ணாகப் படைக்கப்பெற்றுள்ளாள். தமிழ் இலக்கியப் போக்கில் சமணத்தில் பெண்களுக்கு இடம் இருந்தது என்பதை நிறுவும் குறிக்கத்தக்க பகுதி இதுவாகும்.

நீலகேசியின் பேய்த்தன்மை நீங்க முனிச்சந்திரர் உபாயம் கூறுகிறார். அவள் ஏற்கும் நிலையில் சமண சமயக் கருத்துகளை அறிவிக்கிறார். முதற்பகுதியான தரும உரைப் பகுதி முழுக்க முழுக்க சமண சமயக் கருத்துகளை உள்ளடக்கியது.

‘‘உய்தல் வாயுரைத் தாயதன் மேலு
முயிருள்ளிட் டபல வுள்பொருள் சொன்னாய்
நைதலில் லாத்தெளி வோடுநன் ஞான
நானுங் கொண் டேனுன் னற்குண மெல்லாம்
பெய்துதந் தாய் பிழைத் தேற்கினி தாவோர்
பிராயச்சித் தம்பெரி யோயரு ளென்னச்
செய்த தீமை கெடக்கட னாட்டிற்
சினவ ரன்னெறி யேதெருட் டென்றான்’’

என்ற நிலையில் நீலகேசி இதுவரை புரிந்த துன்பங்களுக்குக் கழுவாய் கூறுகிறார் முனிசந்திரர். சமண சமயத்தில் பெண்களுக்கு இடமில்லா நிலையில் சமய வாதம் புரிய நீலகேசி என்ற பெண்ணைப் படைத்துக்காட்டியிருப்பது குறிக்கத்தக்க மாற்றம் ஆகும்.

தொகுப்புரை

இவ்வகையில் மணிமேகலை காலத்திலும், மணிமேகலைக்குப்பின்னான காலத்திலும் பெண்கள் சமயத் துறையில் கலந்து கொண்டனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இருப்பினும் அவை சிறு அளவே என்பதும் அறியத்தக்கதாகும். மற்ற சமயங்களின் பெண்களின் நிலைப்பாடு என்பது இன்னும் ஆராயத்தக்கதாகும்.

முடிவுகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் என்ற தலைப்பில் செய்யப்பெற்ற இவ்வாய்வுத்திட்டத்தின் வழியாகப் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன.

1. சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பெற்ற மணிமேகலைக் காப்பியம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையதான தமிழக மெய்ப்பொருளியல் சூழலை அறிந்து கொள்வதற்கு மணிமேகலைக் காப்பியம் மிகச் சிறந்த இலக்கியச் சான்றாக அமைகின்றது.

2. சீத்தலைச் சாத்தனார் காப்பிய ஆசிரியராக மட்டும் அமையாமல் சமய விற்பன்னராகவும் அமைந்திருக்கிறார். பல்சமய நூற்புலமை, சான்றோர் பழக்கம் போன்றன அவரிடம் இருந்துள்ளன.

3. தமிழக மெய்ப்பொருள் மரபில் தன் சமயக் கருத்துகளை வலியுறுத்தும் சுபக்க முறை, பிற சமயக் கருத்துகளைக் கூறி அவற்றை விலக்கும் பரபக்கமுறை ஆகயிவற்றிற்கு இவரே தொடக்கமாகின்றார்.

4. விளிம்பநிலை மக்களின் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும் காப்பியமாகவும் மணிமேகலை அமைகின்றது. சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்த ஆன்மிகக் கருத்துகளை எளியோர்க்கும் உரியது என்று கொணர்ந்தவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலை பரத்தையர் குலத்தவள் என்றாலும் அவள் வீடுபேறு அடையத் தகுதி உடையவள் என்று மணிமேகலைக் காப்பியம் நிறைகிறது.

5. மணிமேகலையில் சுட்டப்படும் சமயங்கள் இருவகைப்பட்டனவாக உள்ளன. அவை வைதிக நெறி சார்ந்தன, அவைதிக நெறி சார்ந்தன என்று இருவகைப்படும். சைவவாதம், பிரம்ம வாதம், வைணவவாதம், வேதவாதம், சாங்கிய வாதம், வைசேடிகவாதம் ஆகியன வைதிக நெறிப்பட்டன. அதாவது வேத அடிப்படை வாய்ந்தன. ஆசீவகவாதம், நிகண்டவாதம் (சமணம்), பூதவாதம், பௌத்தம் ஆகியன அவைதிக நெறி சார்ந்தன. தமிழக மெய்யியல் சூழலில் வேதத்தை ஏற்பது, வேதத்தை மறுப்பது என்ற இருநிலைப்பாடுடைய சமய நெறி இருந்துள்ளது என்பது மணிமேகலைக் காப்பிய வழி உறுதியாகின்றது.

6. எகிப்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் உலக அளவில் மெய்ப்பொருள் தேடல் என்பது மிகப் பழங்காலத்திலேயே தோற்றுவிக்கப்பெற்றுள்ளது. கிரேக்க மெய்ப்பொருள் இயலுக்கு இணையானது இந்திய மெய்ப்பொருளியல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இருந்தே மெய்ப்பொருள் ஆராய்ச்சியின் பொது வரலாற்றைத் தொடங்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்திய மெய்ப்பொருளியல் தேடல் என்பது மிகப் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகும்.

7. மணிமேகலைக் காப்பியத்திற்கு முன்பாக அமைந்த சமய நிலையை ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்துவெளி மக்களின் சமயநெறி, வேதநெறி, வேதங்களைப் புறக்கணித்த நெறி என்று மூவகைகளில் பகுத்துணர முடிகின்றது.

8. சிந்துவெளி மக்கள் காடுகளில் ஆசிரமங்கள் அமைத்து மெய்ப்பொருள் தேடலை நிகழ்த்தியுள்ளனர். மரம். பறவை, விலங்குகள் போன்றவற்றைப் போற்றி வணங்கும் முறைமை சிந்துவெளி மக்களிடம் இருந்துள்ளது. இறந்தவர்களைப் புதைத்தல் என்ற முறைமை சிந்து வெளி நாகரீகத்தின் அடையாளமாக இருந்துள்ளது.

9. வேத கால மெய்ப்பொருள் தேடல் என்பது விரிந்த கால எல்லையைக் கொண்டதாகும். மேலும் விரிவான வேதப் பிரதிகளையும் அது கொண்டுள்ளது. வேதங்கள், பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை போன்ற பல வேதப் பிரதிகள் வேதமரபினைத் தழைக்கச் செய்தன.

10. தமிழகச் சூழலில் வேத மரபு தழைத்தோங்கியுள்ளது. தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் வரை வேத மரபின் சார்பு இருந்துள்ளது. மேலும் வேதங்கள் வைதிக மதங்களுக்குச் சார்பாகவும் இருந்துள்ளன. இதனை மணிமேகலைக்கு முன்னாகத் தோன்றிய இலக்கியங்களின் வழி உணர முடிகின்றது.

11. வேத மரபினைப் புறக்கணிக்கும் நெறியும் தமிழகச் சூழலில் பரவலாகக் காணப்படுகிறது. தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்கள் வரை பற்பல வேத மறுப்புச் செய்திகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. அவைதிக சமயங்களின் வளர்ச்சியின் காரணமாக இவ்வேத மறுப்புமுறை பரலவாக்கம் பெற்றது.

12. மணிமேகலை காலத்தில் வைதீக நெறி, அவைதீக நெறி ஆகிய இரு சமய நெறிகளும் வலுப்பெற்றிருந்தன. இதனை மணிமேகலை காட்டும் சான்றுகளால் உணரமுடிகின்றது. அளவைவாதம், சைவவாதம், பிரமவாதம், வைணவவாதம், வேதவாதம், சாங்கிய வாதம், வைசேடிகவாதம் ஆகிய வைதிக நெறிப்பட்ட சமய நெறிகள் மணிமேகலை காலத்தில் இருந்துள்ளன. அசீவகம், நிகண்டவாதம் (சமணப்பிரிவு), பூதவாதம், பௌத்தம் ஆகிய அவைதிக சமய நெறிகளும் மணிமேகலை காலத்தில் இருந்துள்ளன.

13. பெரும்பாண்மையான வைதிக, அவைதிக நெறி சமயங்கள் இந்தியாவின் வடபகுதியிலும் பரவியிருந்தன. பௌத்தம், சமணம் போன்றன இந்தியாவின் வட பகுதியில் இருந்துத் தென்பகுதிக்குக் கருத்து, நெறி, அரசியல் பின்புலம் போன்றவற்றின் காரணமாக பரவின

14. வட நாட்டுச் சமயங்கள் தென் நாட்டிற்குப் பரவ ஆரம்பித்த நிலையில் மணிமேகலைக் காப்பியம் படைக்கப்பெற்றிருக்கப் பட வேண்டும். மணிமேகலைக் காப்பியம் சமய நெறிகளை அதன் வரலாறு போன்றன கொண்டு அறிவிக்கின்றது. இவ்வரலாறுகள் பெரும்பாலும் வடநாட்டுச் சார்புடையனவாக உள்ளன.

15. அவைதிக நெறி பிற்காலத்தில் உலக அளவில் நிலவிய பொருள் முதல் வாதம் என்ற நெறியுடன் பெரிதும் பொருந்துவதாக உள்ளது. இதனை உலகாயுதம் என்றும் இந்திய மரபு சுட்டியது. இதன் அடிப்படை, வரலாறு, வளர்ச்சி ஆகியன தமிழ் சமய வரலாற்றுப் பரப்பில் இடைவிடாத நிலையில் தொடர்ந்து் இடம் பெற்று வந்துள்ளன.

16. மணிமேகலையில் அளவைவாதம் முதலாக பல்வேறு சமயக் கருத்துகள் பதிவு செய்யப்பெற்றுள்ளன. இப்பதிவுகள் வழி இந்திய மெய்ப் பொருளியலுக்கு, தமிழகம் வழங்கிய கொடைகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

17. சீவகசிந்தாமணி, குண்டலகேசி, நீலகேசி, சிவஞானசித்தியார் பரபக்கம் போன்ற படைப்புகள் வழி மணிமேகலைக்குப் பின்னான சமயநிலையை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

18. மணிமேகலை சமயச் சார்புடன் மனித வாழ்க்கை நிகழவேண்டும் என்று கருதுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு சமய வழிப்பட்டவனாக வாழ்கிறான் என்று மணிமேகலை கருதுகின்றது. அந்த மனிதன் ஏற்றுக் கொண்ட சமய நெறி அவனை உயர் நெறிக்குக் கொண்டு செல்லும் என்றும் அது கருதுகிறது. இதன் காரணமாக மணிமேகலையில் சமய ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பது குறிக்கத்தக்கது.
19. மணிமேகலைக் காப்பிய காலத்திலும் அதற்கு முன்பும், பின்பும் சமய வாழ்வில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். பெண்களை முற்றிலும் மறுக்கும் சமய நிலை தமிழகச் சூழலில் இல்லை என்பது தெளிவு. இருப்பினும் சமயத் துறையில் பெண்களின் இடம் என்பது கருத்து, அளவு ஆகிய அடிப்படைகளின்படி குறைவானதே ஆகும்.

பரிந்துரைகள்

இவ்வாய்வுத் திட்டம் வழியாகப் பெறப்பட்ட அனுபவத்தின்வழி, சில பரிந்துரைகளை முன்வைக்கமுடிகிறது.
மணிமேகலையை இலக்கியத் தரத்தில் முன்வைப்பதை விட ஆராய்ச்சியாளர்கள் அதனை சமயத் தரத்தில் முன் நிறுத்துவது என்பது தேவையானதாகும்.

மணிமேகலை கால சமயங்களின் வளர்ச்சி நிலை என்பதை இவ்வாய்வுத் திட்டம் செம்மொழிக் கால எல்லையுடன் நிறுத்திக்கொண்டுள்ளது. இதற்குப் பின்னான வளர்நிலைகளை எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் மேற்கொள்ளலாம்.

மணிமேகலை சுட்டும் ஒவ்வொரு சமயம் பற்றியும் அதன் வளர்ச்சி, கருத்துநிலை பற்றியும் தனித்தனி ஆய்வுகள் செய்யப் பெறலாம்.
தமிழ்ப் படைப்புகளை சமய, தத்துவ நிலையில் வகைமை செய்து ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

பெண்களின் நிலைப்பாடு சமய அளவில் இருக்கும் நிலையை ஆய்வாளர்கள் ஆய்வு செய்யலாம்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமயங்களில் பெண்களுக்கான இடம்”

அதிகம் படித்தது