மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்– பகுதி – 52

கி.ஆறுமுகம்

Mar 14, 2015

nethaji - 1பார்வர்டு பிளாக் கட்சியில் சிறிது பிளவு ஏற்பட்டது போசு மரணத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் கட்சி இரண்டாக உடைந்து பின் பார்வர்டு பிளாக் ஒரு தேசிய கட்சியாக மீண்டும் வலிமையாக உருவானது. கட்சியின் மீது இருந்த இந்த இடைக்கால தடையை 1946-ம் ஆண்டு அமைந்த இந்திய இடைக்கால அரசு நீக்கியது. நேரு பார்வர்டு பிளாக் கட்சியின் வளர்ச்சியினை கண்டு அச்சம் அடைந்தார். காங்கிரசின் செல்வாக்கு மக்களிடமும் குறைந்துவிடும் என்று எண்ணினார். எனவே பார்வர்டு பிளாக் கட்சியை காங்கிரசு கட்சியுடன் இணைத்துவிட பெரிதும் முயற்சி எடுத்தார். இதனை தேவர் கடுமையாக எதிர்த்தார் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணையாமல் தடுத்து அதன் புகழை தமிழகத்தில் மேலும் நிலைபெற செய்தார். தமிழகத்தில் தேவரின் செல்வாக்கை கண்டு காங்கிரசு அச்சம் அடைந்தது.

1946-ம் ஆண்டு அமைந்த இடைக்கால அரசில் தமிழக அரசின் தொழிலாளர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்குமாறு பிரகாசம் தேவருக்கு அழைப்பு விடுத்தார் இதனை தேவர் மறைவுக்குப் பின்னர் இரங்கல் கூட்டத்தில் நினைவு கூர்ந்துள்ளனர். தேவர் காங்கிரசு அரசியல் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்ததினால் அவர் அந்த அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. நேருவை கடுமையாக விமர்சனம் செய்தார். தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு உறுதி மொழியையும் தேவர் ஏற்கவில்லை. தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் சட்டமன்றம் செல்லாததால் 1946- 1947 மற்றும் 1948-ம் ஆண்டுகளில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நிரப்பப்படாமலேயே தேவருக்காக காத்திருந்த சரித்திர சாதனை நிகழ்ந்தது. இந்த சரித்திர நாயகனர் தேவர் திருமகனை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரசில் நேரு மிகவும் வேதனையில் இருந்தார். தேவர், போசு எப்போது வேண்டுமானாலும் இந்தியா திரும்புவார் என்று தனது கருத்தினை அழுத்தமாக பதிவு செய்யவும் நேரு, போசு இந்தியா திரும்பினால் தனது புகழ் மக்கள் மத்தியில் குறைந்துவிடும் என்றும் அச்சம் கொண்டிருந்தார். 1955-ம் ஆண்டு சென்னை ஆவடியில் நடந்த காங்கிரசு கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியை காங்கிரசுடன் இணைக்க காங்கிரசார் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தனர்.

nethaji -2 பார்வர்டு கட்சியில் இருந்த சிலர் அதற்கு அனுமதி கொடுக்கும் எண்ணத்தில் செயல்படவும் தொடங்கினர். இந்த செயல்களை கேள்விப்பட்டதும் தேவர் திருமகன் மிகவும் கோபம் கொண்டார். தன் தலைவர் உருவாக்கிய கட்சியை அழியவிடாமல் காப்பதற்கு தயரானார். இந்த சதிச் செயலில் நேருவின் பங்கு உண்டு என்ற செய்தி தேவரை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகளை அழைத்து பொதுக்கூட்டம் கூட்டி அதில் தீர்மானங்கள் நிறைவேற்றி பார்வர்டு பிளாக் கட்சி காங்கிரசுடன் இணையவிருந்த நேரத்தில் தேவர் இதனை தடுத்து நிறுத்தினார். இந்த செயல்களைக் கண்டு காங்கிரசு பின்னால் தேவர் திருமகன் புகழினை மக்களிடம் குறைப்பதற்கு பல சதி செய்தது. அந்தச் சதிச் செயலுக்கு ‘வளர்த்த கடா மார்பில் பாய்வது’ போன்று காமராசரை காங்கிரசு அந்தச் சதிச் செயலுக்கு பயன்படுத்திக் கொண்டது. ஆம் காங்கிரஸில் காமராசரைக் கொண்டு வந்தது தேவர்தான். காமராசர் தேர்தலில் போட்டியிடும் போது அவருக்கு இரண்டு ஆட்டுக்குட்டிகளை சொத்தாக தேர்தலில் காட்டிதேர்தலில் போட்டி போடுவதற்கு உதவி செய்தவர் தேவர். தமிழகத்தின் காங்கிரசு தலைவர் தேர்ந்தெடுக்க கூட்டம் கூடியதில் தலைவர் என்று கூட்டத்தில் பலர் கருத்து வேறுபாடு கொண்டு பேசும்பொழுது கூட்டத்தில் எழுந்து நின்று தேவர் இனி காமராசர்தான் தலைவர் எனக் கூறிய நிமிடத்தில் கூட்டத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நின்று அமைதி திரும்பியது. தன்னால் கண்டறியப்பட்டு உருவாக்கப்பட்ட காமராசர் அரசு பின்னால் தனக்கு தீங்கு செய்யும் என்று தெரியாமல் போனது தேவருக்கு அன்று. தேவர் தந்த காமராசர் சிறந்த தலைவர் என்றால் தேவர் மட்டும் எப்படி சாதித் தலைவராக மாறிப்போனார், இதனை நாம் ஏன் சிந்திக்கவில்லை? பதவி ஆசை இல்லாதவர் அரசகுடும்பத்தில் பிறந்து தனக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதிக் கொடுத்து மிக ஏழ்மையாக முற்றும் துறந்த ஞானியாக வாழ்ந்த தேவரை 1957-ல் முதுகுளத்தூர் கலவரம் என்ற பொய் குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது. 1959-ல் நீதிபதி அனந்தநாராயணன் அளித்த தீர்ப்பில் தேவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பிருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. எனவே தேவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்தார். பிரிட்டிஷார் இந்தியா விடுதலை கொடுக்கும் பொழுது எப்படி இந்தியா பாகிசுதான் என்று ஒரு பிரிவினையை உருவாக்கிவிட்டு இன்றுவரை அதற்கு தீர்வு காணமுடியாமல் அரசியல் செயல்படுகிறதா அது போன்றே அன்று காங்கிரசு தென்னகத்தில் தேவருக்கு எதிராக உருவாக்கிய சாதிப் பிரிவினை சூழ்ச்சி அரசியல் இன்றுவரை தொடர்கிறது. முழுமையான உண்மை வரலாற்றை மறைத்து மக்களிடம் ஒற்றுமையை வளர்த்தால் நாம் அரசியலில் நிலைபெற முடியாது என்று இன்றும் சில அரசியல் தலைவர்கள் இதனை தொடங்கினர். காங்கிரசுக்கும் நேருவுக்கும் தேவர் கொடுத்த தொடர் போசு மரணம் குறித்த தகவல்களினால் நேரு அரசு 1955-ம் ஆண்டு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. போசு இறந்தார் என்று அறிந்தது 1945-ம் ஆண்டு. பத்து ஆண்டுகள் கழித்து விசாரணைக் குழு அமைத்தது நேரு அரசு. இதற்கு தேவர் திருமகனின் அழுத்தமான பதிவுகள்தான் காரணம். விசாரணைக்குழு தலைவராக மத்திய அமைச்சரும் முன்னாள் இந்திய தேசிய இராணுவ தளபதிகளில் ஒருவருமான ஷாரவங்கான் நியமிக்கப்பட்டார்.

இதன் உறுப்பினர்களாக அந்தமான் கமிஷனராக நியமிக்கப்பட்ட மித்ராவும், போசின் இளைய சகோதரர் சுரேசு சந்திரபோசும் நியமிக்கப்பட்டார்கள். இந்த மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணையை தொடங்கியதும் தேவர் திருமகன் அவர்களை முதன்மை சாட்சியாக விசாரணை செய்வதற்கு டெல்லிக்கு அழைக்கப்பட்டார். டெல்லி சென்றதும் அதன் உறுப்பினர் அந்தமான் இருந்து வர இரண்டு நாட்கள் ஆகும். எனவே தேவரை டெல்லியில் தங்கியிருக்குமாறு விசாரணைக் குழு கேட்டுக்கொண்டது. தேவர் பார்வர்டு பிளாக் கட்சியின் அமைச்சர் விடுதியில் தங்கியிருந்தார். ஏராளமான செய்தித் தொடர்பாளர்கள் அவரின் பேட்டிக்கு காத்திருந்தனர். தேவர் நாள் குறித்து அதில் நான் பேட்டி கொடுக்கிறேன் என்று தெரிவித்தார். இதனை விசாரணைக்குழு அறிந்ததும் தேவர் அவர்களை நீங்கள் செய்தி நிருபர்களை சந்திக்க வேண்டாம் என்றனர். பின் உங்களை நேரு சந்திக்க விரும்புகிறார் என்று தெரிவித்தனர். தேவர் நான் சொன்ன தேதியில் என் பேட்டியைக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதை மாற்றமாட்டேன் என்றார். நேருவின் உதவியாளரிடம் இருந்து தேவருக்கு வேண்டுகோள் வந்தது. அதையும் தேவர் ஏற்கவில்லை. தேவர் குறித்த நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேதாஜி சுகமாக இருக்கிறார் அவருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. இதில் நேருவுக்கு ஏதேனும் ஐயப்பாடு இருக்குமானால் நேரு அல்லது அவரது சார்பாக ஒருவர் என்னுடன் வரட்டும்.

நேதாஜி இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுகிறேன் என்று பகிரங்கமாக சவால்விட்டார் தேவர். நேரு உண்மையைத் தெரிவிக்க வேண்டும். நேதாஜியின் மரணம் குறித்து நேரு வெளிப்படையாக செயல்படவில்லை. நேரு அரசு நேதாஜியைப் பற்றிய செய்திகளை மறைக்கிறது. நேரு தேவருடன் சென்று உண்மையை அறிந்து தெரிவிக்க வேண்டும் என்று வெளியானது. இது நேரு அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. உடனே மறுதினமே தேவர் அவர்கள் விசாரணைக்குழு முன்வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தேவர் விசாரணைக்குழு முன் ஆதாரங்களை கொடுக்கும் முன் குழுவினரிடம் சில வினாக்களை தேவர் எழுப்பினார். நேதாஜியின் மர்ம மறைவு குறித்து விசாரிக்க இந்த விசாரணைக்குழு ஜப்பான் நாட்டை விடுத்து மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்ய உத்தேசித்துள்ளதா? என்றார். அதற்கு சரியான பதில் வரவில்லை.

உடனே ஷாநவாஸ்கான் தலைவராக இருந்து மேற்கொள்ளும் இந்த விசாரணை ஆணையத்தின் பதிலாக உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை தலைவராக கொண்டு இந்த விசாரணை நடத்தப்படுவது சரியாக இருக்கும் என்றார். மேலும் போர்க் குற்றவாளிகளின் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த இராதாலினோத்பால் தலைவராக இருப்பது சரியாக இருக்குமென்றார். இதற்கு ஷாநவஸ்கான் இராதாலினோத்பால் நேதாஜி இறக்கவில்லை என்றும், எந்த வானூர்தி விபத்தும் நிகழவில்லை என்றும் அறிவித்துவிட்டார். எனவே அவரை தலைவராக நியமிக்க முடியாது என்றார் தேவர். அப்படியானால் அவரை நீங்கள் ஏன் விசாரணை செய்யவில்லை என்றார். நாங்கள் கல்கத்தாவிற்கு சென்று அவரை விசாரணை செய்வோம் என்றனர். தேவர் மூன்றாவது கேள்வியாக சுபாசு சந்திரபோசின் பெயர் இங்கிலாந்து வெளியிட்ட சர்வதேச போர்க் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? இல்லையென்றால் அதற்கான முறையான அறிக்கையை வெளியிட இந்திய அரசு தயாராக இருக்கிறதா? என்று கேட்டார்.

–தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்– பகுதி – 52”

அதிகம் படித்தது