மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்

கி.ஆறுமுகம்

Aug 8, 2015

puli thevar4

இது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்.

மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி, அவர்களுக்குப் பின் வந்த அவர்களது வாரிசுகளில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, இறுதியில் பாண்டிய வம்சத்தின் ஆட்சி முடிவுற்று, நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. தமிழ்நாடு, சங்க காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று புலியூர் கோட்டம். பூலியூர்க் கோட்டமே புலியூர்க் கோட்டமாக வழங்கியிருக்க வேண்டும். பாண்டிய அரசர்களால், பாண்டிய நாடு 32 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பாளையம்தான் நெற்கட்டான் செவ்வல் பாளையமாகும். பாண்டிய மன்னர்களினால் பாளையங்களின் அரசராக புலித்தேவரின் முன்னோர்கள் நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.

பாண்டியரின் மறைவுக்குப் பிறகு, நாயக்கரின் ஆட்சி தொடங்கியதும் நாயக்க அரசர்களுக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. பாண்டிய வாரிசுகள் மீண்டும் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றிவிடுவார்களே என்று எண்ணி, தனது ஆட்சிக்குட்பட்ட நிலங்களை 72 பாளையங்களாகப் பிரித்தனர். அதில் ஒரு பாளையமாக நெற்கட்டான் செவ்வல் பகுதி இருந்தது. இது போன்று பாளையங்களைப் பிரிக்க நாயக்க அரசுக்கு அவர்களின் அமைச்சர் அரியநாத முதலியார் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

puli thevar7நெற்கட்டான் செவ்வல் பாளையத்தினை சீரும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார் சித்திரபுத்திரத் தேவன் என்பவர். இவர் 63 ஆண்டுகள் இப்பகுதியை ஆண்டு வந்தார். இவரின் மனைவி சிவஞான நாச்சியார். இவர் 01.09.1715 அன்று வீரத் திருமகனை குழந்தையாகப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு தாய் தந்தையர் காத்தப்ப பூலித்தேவன் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அக்குழந்தை ஆறு வயதானதும், கல்வி கற்றியிட வேண்டி அவருடைய தந்தையார் சிறந்த ஆசிரியரிடம் பாடம் படிப்பதற்கு அனுப்பினார். காத்தப்ப பூலித்தேவன் கல்வியில் சிறந்து விளங்கி இலக்கணம், இலக்கியங்களை நன்கு படித்து, தமிழில் கவிதை, இலக்கணம் போன்றவற்றை எழுதும் விதத்தில் சிறந்த மாணவராக உருவானார். கல்வி கற்ற பின்னர் போர் பயிற்சி கற்கச் சென்றார். இவர் குதிரை ஏற்றம், யானை அடக்குதல், சுருள் வாள் வீச்சு, சிலம்பம், வேல் கம்பு, ஈட்டி எறிதல் போன்ற அனைத்து போர் பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றார்.

பின் இவருக்கு 11 வயதில் அரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தார் இவரது தந்தை. 12 வயதில் அரசரான காத்தப்ப புலித்தேவன், மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளுக்குச் சென்று வேட்டையாடுதலை தனது பொழுது போக்காகவும், புலியை வேட்டையாடுவதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். புலியை வேட்டையாடி, அதன் தோலில் உடை செய்து அணிந்து கொள்வார். இவரின் வீரத்தினையும், இவரது குலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று முரசு அடித்து பறைசாற்றினார். இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியை வேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.

puli thevar1புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார். அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், மாளிகை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார். புலி இடதுபக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்பதை, நமது சங்ககால புலவர்கள் தனது பல பாடல்களிலும், பல அரசரின் வீரத்தினை புலியுடன் ஒப்பிடுகையிலும் குறிப்பிட்டுள்ளனர். புலி தனது இரையை வேட்டையாடும் போது இரையை, தான் இடது பக்கம் வீழ்த்தினால் தனது வீரத்திற்கு பேரிழுக்கு என்றும், தனது வீரத்தில் இழுக்கு ஏற்பட்டு விட்டது என்று எண்ணி எண்ணி உண்ணாது இறந்துவிடும்.

வெற்றி பெற்று திரும்பிய புலித்தேவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. தனது மாமன் மகளை மணந்து சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார். இவர் ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த அரசுரிமைப் போரை கவனித்து வந்தார்.

puli thevar3ஹைதராபாத்தை ஆட்சி செய்து வந்த நிஜாம் 1748-ம் ஆண்டு இறந்துவிட்டார். பின் இவரின் மகன் நாசர்ஜங் பதவி ஏற்றார். இதனை நிஜாமின் பேரன் முசபர்ஜங் எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்போன்றே ஆற்காட்டில் அன்வாருதீன் தன்னுடைய மாமாவாகிய சந்தா சாகிப்பை எதிர்த்தார். முசபர் ஜங் மற்றும் சந்தா சாகிப் இருவரும் ஒன்றாக இணைந்து பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர், இதனால் போர் ஏற்பட்டது. 1749-ம் ஆண்டு பிரெஞ்சுப்படைகள், சந்தா சாகிப், முசபர்ஜங் ஆகிய மூன்று படைகளும் கூட்டாக ஆற்காடு என்னும் இடத்தில், அன்வாருதீன் படைகள் தோற்கடிக்கப்பட்டு அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் கர்நாடக நவாபாக ஆட்சி ஏற்றார். பிரெஞ்சுப்படையின் தளபதி டியூப்ளேயின் உதவிக்கு வழுதாவூர், வில்லியனூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய இடங்களை சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்தார்.

போரில் கொல்லப்பட்ட அன்வாருதீனின் மகன் முகமது அலி கர்நாடகத்தில் இருந்து தப்பி ஓடிச்சென்று திருச்சிராப்பள்ளி கோட்டையில் தஞ்சம் புகுந்தார். அக்கோட்டை சந்தாசாகிப்பால் முற்றுகையிடப்பட்டது. முகமது அலி ஆங்கிலேயரிடம் தம்மைக் காப்பாற்றும் படியும், ஆற்காட்டைத் தாக்கும்படியும் கேட்டுக் கொண்டார். ஆங்கில இராணுவ அதிகாரி இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கினார். சந்தாசாகிப் ஆற்காட்டைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஒரு படையை அனுப்பினார். ஆனால் இராபர்ட் கிளைவ் திருச்சி மீது படை எடுத்தான், மேலும் ஒரு படை ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் சென்று பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்து இதன் மூலம் முகமது அலி ஆற்காட்டின் நவாபாக பதவி ஏற்றார். இது இரண்டாம் கர்நாடக போர் என்று அழைக்கப்படுகிறது.

puli thevar5தனக்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாக ஆற்காட்டின் நவாப்பான முகமது அலி, தனக்கு கப்பம் கட்டிய அரசர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் முதல் முறையாக கொடுத்தான். தமிழ்நாட்டில் தென்னகத்தில் வரிவசூல் செய்ய அனுமதி பெற்ற ஆங்கிலேயர்கள் புலித்தேவரிடம் வரிவசூல் செய்ய ஆரம்பித்தனர். ஆற்காடு நவாப்புக்கு வரி கொடுக்காமல் சுதந்திர அரசராக இருந்த மறத்தமிழர் புலித்தேவர் வந்தேரிய பரங்கியனுக்கா வரி கொடுப்பார். வெள்ளையன் வரி கேட்டதும் அன்னியன் எவனும் வரி என்ற பெயரில் ஒரு நெல் மணியைக் கூட என் மண்ணில் இருந்து கொண்டு செல்ல முடியாது என்று உறுமினார் புலித்தேவர்.

-வேட்டை தொடரும்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்”

அதிகம் படித்தது