மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-2

கி.ஆறுமுகம்

Aug 15, 2015

திருநெல்வேலிச் சீமை கிழக்கு பாளையம், மேற்கு பாளையம் என்று இரு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பாளையத்தினை கட்டபொம்மனின் பாட்டனார் ஆட்சி செய்து வந்தார், மேற்கு பாளையத்தினை மறவர் இனத்தினைச் சேர்ந்த புலித்தேவரின் முன்னோர்கள் ஆட்சி செய்து வந்தனர். வாரிசு உரிமைப் போட்டியில் ஆற்காடு நவாப்க்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாகவும், அவர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி அடைப்பதற்காகவும், திருநெல்வேலி மற்றும் தென்னகத்தில் வரி வசூல் செய்யும் உரிமையும், அதனைச் சார்ந்த ஓர் ஒப்பந்தமும் ஆங்கிலேயர்களிடம் ஆற்காடு நவாப் கொடுத்தார். தென்னகத்தில் புலித்தேவரிடம் முன்பே வரி வசூல் செய்ய முடியாமல் திணறிய நவாப், அவரின் மீது போர் தொடுத்தும் அதில் தோல்வி அடைந்தும் இருந்தார். எனவே இந்த சிக்கலான பகுதியில் நம்மால் வரி வசூல் செய்ய முடியாது, இதனை எப்படி சமாளிப்பது என்று இருந்தவர், இந்தப் பகுதிகளின் வரியை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார் ஆற்காடு நவாப்.

puli thevar2இந்த ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு, வியாபாரத் தொழிலுக்காக இங்கு வந்த அன்னியர்கள் நமது நாட்டில் வரி வசூல் செய்ய முதல் அடித்தளமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. நவாப்பிடம் உரிமை பெற்ற வெள்ளையர்கள், தென்னகத்தில் வரிவசூல் செய்யும் எண்ணத்துடன், மறத்தமிழர் புலித்தேவரின் வீரத்தினை அறியாமல் அவரிடமும் வரிவசூல் செய்ய அலெக்ஸாண்டர் கெரான் என்பவன் தலைமை ஏற்று புறப்பட்டான். இவன் வரி வசூல் செய்ய படையுடன் தென்னகம் வருகிறான் என்ற செய்தி கிடைத்ததும் தென்னகத்தில் இருந்த சில பாளையத்துக்காரர்கள், அவனை வரவேற்று வரி செலுத்தினர். வீரபாண்டி கட்டபொம்மனின் முன்னோர்களும் இவனுக்கு வரி கொடுத்தனர். மேற்கு பாளையத்துக்குச் சென்றான் புலித்தேவரிடம் வரி கேட்டான். “பிழைப்புக்கு வந்த அன்னியர்கள் நீங்கள், உங்களுக்கு நான் எப்படி வரி செலுத்துவேன், வரி என்ற பெயரில் ஒரு நெல்மணியைக்கூட நீங்கள் கொண்டு செல்ல முடியாது என்றார் புலித்தேவர். உடனே ஆங்கிலேயரின் படையை தலைமை ஏற்று வந்த கெரான் “வரி என்ற பெயருக்காகவாவது ஒரு சிறு தொகையை கப்பமாக உங்கள் பாளையம் கொடுத்தால் போதும்” என்று கூறினான். புலித்தேவரின் காலில் விழவில்லை, மற்றபடி அனைத்து வழிகளிலும் புலித்தேவரிடம் எவ்வளவு மன்றாடிக் கேட்டும், புலித்தேவர் வரி கொடுக்க மறுத்துவிட்டார்.

ஆங்கிலேயர்கள் படை இவர் கோட்டையை முற்றுகையிட்டது. தொடர்ந்து குண்டு மழை பொழிந்தும் கோட்டையில் சிறு துளையும் இல்லை, விரிசலும் ஏற்படவில்லை, புலித்தேவர் சிறிதும் அசரவே இல்லை. இந்தத் தோல்வியை எதிர்பாராத ஆங்கிலப் படை புலித்தேவரிடம் தோற்றதை எண்ணி அவமானத்துடன் திரும்பினர். இவர்களுக்கு முன்பே நவாப்பின் படை ஒரு முறை புலித்தேவரிடம் தோற்று ஓடியது. நம் படை வெல்லுவது கடினம் என்று தெரிந்து நவாப் வெள்ளையனிடம் இந்தப் பகுதியைக் கொடுத்தான். நவாப்பைப் போலவே ஆங்கிலப் படையும் தோற்றது. இந்த அலெக்ஸாண்டர் கெரான் என்பவன்தான் முதன் முதலில் தென்னகத்தில் வரி வசூல் செய்ய வந்த வெள்ளையன். நவாப்பின் இந்த ஒப்பந்தம் தான் வெள்ளையன் நம்மை ஆட்சி செய்வதற்கு அடித்தளமாக அமைந்தது.

puli thevar8இந்தத் தோல்வியை சரி செய்ய, வெள்ளையன் படை மீண்டும் நெற்கட்டான் செவ்வல் பகுதி மீது படையெடுத்தனர். இந்த முறை கர்னல் கெரான் என்பவன் படைகளுக்கு தலைமை ஏற்று வந்தான். இவன் தங்களுக்கு கப்பம் கட்டும் அனைத்து பாளையக்காரர்களையும் சந்தித்துவிட்டு, ஒரு இடத்தில் தனது படையுடன் தங்கிக் கொண்டு, மாபூசுக்கான் என்பவனின் தலைமையில் ஒரு படையை நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மீது போர் தொடுக்க அனுப்பி வைத்தான். புலித்தேவரின் வீரத்தினை முற்றும் அறியாமல் ஆங்கிலேயனின் கட்டளைக்கு அடிபணிந்து மாபூசுக்கான், நெற்கட்டான் செவ்வல் பாளையத்தினை எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற பகல் கனவுடன் படை எடுத்தான். இவர் படையுடன் வரும் செய்தி கேட்டதும் புலித்தேவர் இவனை நெற்கட்டான் செவ்வல் எல்லை பகுதிக்குக் கூட விடாமல் வழியிலேயே எதிர்த்து விரட்டி அடித்தார். உயிர் பிழைத்தால் போதும் என்று மாபூசுக்கானும், அவனது ஆட்களும் தாங்கள் எடுத்து வந்த போர் ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு புறமுதுகு காட்டி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

மாபூசுக்கான் தோற்றதும், கர்னல் கெரான் பெரும் படையுடன் மீண்டும் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மீது போர் தொடுத்தான். 1755ம் ஆண்டு நடந்த இந்தப் போர் தமிழ் இனத்தையும், மறவர் குலத்தின் வீரத்தினையும் நிலை நிறுத்தியது. இதுதான் உலகில் முதல் சுதந்திர உணர்வுடன் எழுந்த ஒரு போர் எனக்கூறலாம். ஆம் அமெரிக்க புரட்சி 1775ம் ஆண்டு நடைபெற்றது. பிரெஞ்சு புரட்சி 1789ம் ஆண்டு நடைபெற்றது. இது போன்று சுதந்திரத்திற்காக ஏற்பட்ட புரட்சிகள் அனைத்துக்கும் முன்னோடியாக விளங்கியது நம் தமிழ் மறவர் புலித்தேவரின் சுதந்திரப் போர், அன்னியனை எதிர்த்த போர். நமது இந்திய வரலாற்றில் Battle of Plassey June 1757-ல் கல்கத்தா மற்றும் The Battle of Buxar 23 October1764-ம் ஆண்டு இந்த போர்கள் முக்கியமான போர் என்று பதிவு செய்தவர்கள் வெள்ளையனை முதன் முதலில் உயிர் தப்பினால் போதும் என்று விரட்டி அடித்த, நம் தமிழ் மறவர் குலத்தின் வரலாறு பதிவாக வேண்டியது நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் பெரும் நன்மை அல்லவா?. கர்னல் கெரான் புலித்தேவரின் கோட்டையை நேரில் பார்த்த பிறகுதான் உணர்ந்தான். தாங்கள் பயன்படுத்தும் பீரங்கிக் குண்டுகள் எதுவும், புலித்தேவரின் கோட்டை சுவற்றில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது, கோட்டை சுவர் மிக வலிமையாக கட்டப்பட்டுள்ளது என்று கர்னல் கெரான் உணர்ந்தான்.

உடனே மதுரையிலிருந்து 18 பவுண்ட் கொண்ட பீரங்கிக் குண்டுகளை பயன்படுத்தினான். அந்த பீரங்கிக் குண்டுகள் கோட்டையில் சிறு விரிசலும் ஏற்படுத்த முடியவில்லை, புலித்தேவரின் மன உறுதி குறையவும் இல்லை. இனி நாம் தோல்வி பெறுவது உறுதி என்று தெரிந்த உடனே, கெரான் வெள்ளையனுக்கே உரிய தனித்தன்மையான தூது அனுப்பி சமரசம் பேச துபாசை புலித்தேவரை சந்திக்க அனுப்பினான். துபாசு என்பது அந்த காலகட்டத்தில் ஒரு பதவி, அதில் இருப்பவர்கள் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட மொழி தெரிந்தவர், மொழிபெயர்ப்பாளர் என்பது அதன் அர்த்தம்.

puli thevar6துபாசு, புலித்தேவரை நேரில் சந்தித்து “ஒரு சிறு தொகை பணத்தினை வரி என்ற பெயரில் செலுத்தினால் போதும், கெரான் துரை சென்று விடுவார்” என தெரிவித்தான். புலித்தேவர் “வரியா எதற்கு பிழைப்புக்கு வந்தேறிய அன்னியனுக்கு, இந்நாட்டு மக்கள் வரி செலுத்த வேண்டுமா?, வரி என்று கூறிக்கொண்டு எவன் என் எல்லையை மிதித்தாலும் அவர் உயிர் விண்ணுலகம் சென்று விடும்” என்றார். உடனே துபாசு “வரி வேண்டாம், துரையின் படை வீரர்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர், அவர்களின் உணவுக்காக சிறிதளவு நெல்லைக் கொடுத்து உதவ வேண்டும்” என்று வஞ்சகம் செய்யப் பார்த்தார். புலித்தேவர் “வரியும் கிடையாது, நெல்மணியும் கிடையாது, அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் வந்த வழியே திரும்பி ஓடவேண்டும். இல்லையெனில் அவர்கள் உயிர் பிரிவது உறுதி” என்ற உறுமினார். புலித்தேவரின் எச்சரிக்கையைப் பார்த்த துபாசு கெரானிடம் ஓடினார், செய்தியைத் தெரிவித்தார். தோல்வியைக் கண்ட கெரான் திருச்சி திரும்பினான். அவன் பிரிட்டனுக்கு கடிதம் ஒன்றை எழுதினான். அதில் தம்மிடம் இருக்கும் ஆட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு புலித்தேவரை வெற்றிக் கொள்ள முடியாது, இன்னும் பெரும் படை ஆயுதங்கள் வேண்டும் என்று எழுதினான்.

-வேட்டை தொடரும்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-2”

அதிகம் படித்தது