மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நன்னூலில் நல்லாசிரியரின் பண்புகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

Dec 12, 2015

nannool2இயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ஆகும். சிலவகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்துச் சொல்லும் இந்நூல் இலக்கணச் சூத்திரங்களைக் கொண்டது. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நன்னூல் வழிநூல் மட்டுமல்ல, நல்ல வழிகாட்டி நூலும் ஆகும். இந்நூலின் வழி நல்லாசிரியரின் பண்புகளையும், தன்மைகளையும், நடத்தை நெறிகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

nannool3கற்றுக் கொடுக்கிற ஆசிரியர் குலமும், கற்றுக் கொள்கிற மாணவர் குலமும் சேர்ந்ததுதான் குருகுலம். இந்த இரண்டு குலங்கள் இல்லையென்றால் மனித குலத்திற்கு மகத்துவம் இல்லை. குருகுலக் கட்டமைப்புகள் உடைந்து மாணவர் மைய கல்வி ஆதிக்கம் செலுத்துகிறது. “ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் நிர்ணயிக்கின்றன.” என்ற பொன்னெழுத்துகளுக்கு மதிப்பை வழங்கியவர்கள் ஆசிரியர்களே. “ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக பெற்றோர், இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்”. என்ற வைர வரிகள் மாதா, பிதா, குரு போன்றோரின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. குருமார்களை தெய்வமாக வணங்கிய காலம் போய், குருமார்கள் நண்பர்களாக மாறிவிட்ட புது யுகத்தில் ஆசிரியர்களின் சிறப்புகளை தொல்லிலக்கண நூல்களின் மூலமாக அலசி ஆராய்தல் சாலச் சிறந்தது.

“குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகழ் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையும்
அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே”

உயர்ந்த குடிபிறப்பு, அருளுடைமை, கடவுள் பற்று, பல்கலைத் தேர்ச்சி, சொல்வன்மை, உலகியலறிவு, உயர்ந்த குணம் ஆகியவைகளை ஓர் ஆசிரியன் கொண்டிருக்க வேண்டும் என்று நன்னூல் எடுத்துரைக்கிறது. மேலும் பூமி, மலை, துலாக்கோல், மலர் ஆகியவற்றின் நற்பண்புகளையும் நல்லாசிரியன் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளது.

kalvimurai fiபல்கலைகளினால் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியரால் தான் மாணவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போட முடியும். எனவே கையளவு கற்ற கல்வியோடு நின்று போகாமல், கடலளவுக் கல்வியைப் பருகும் தாகத்தோடு வாழ்நாள் முழுவதும் கற்றலை நெடிய பயணமாக நல்லாசிரியர் கொள்ள வேண்டும். கற்றதையும் பெற்றதையும் விரித்துரைக்கும் சொல்வன்மைக்கு சொந்தக்காரராக விளங்கும் போதுதான் நல்ல போதிப்பு நிகழ்கிறது. அப்போதுதான் ஆசிரியரும் நல்ல தகவல் தொடர்பாளராகக் கற்பித்தலை நிகழ்த்த முடியும்.

உள்ளார்ந்த நூலறிவும், உலகத்துப் பொதுஅறிவும் கொண்ட ஆசிரியர், தன் படிப்பறிவாலும் பட்டறிவாலும் மாணவர்களின் வாழ்க்கைக்கான வசந்த வாசல்களைத் திறந்து வைக்கிறார். அறிவுடைமையோடு அருளுடைமையும் சேரும்போது பொறுமையின் சின்னமாய் ஆசிரியர் மாறிவிடுகிறார். இது நல்ல கற்றலுக்கான நல்ல சூழல்களை அகத்தேயும் புறத்தேயும் உருவாக்கித் தருகிறது.

அறிவால், அன்பால், அருளால், கல்வியால், கருணையால், கனிவால், பண்பால், பழக்கத்தால், பொறுமையால், பெருமையால் மேலும் பலவற்றாலும் சிறந்து விளங்குபவராக ஓர் ஆசிரியர் இருத்தல் வேண்டும். அத்தகைய ஆசிரியரே மாணவர்களின் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வர்.

 “தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவம் முயற்சி அளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே”

பிறரால் அறிய முடியாத கல்விப்பெருமையைக் கொண்டிருக்கும் ஆசிரியர் பிறரால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாத நிலத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார். தன்னிடம் நெருங்கிய மாணவர்களால் கலங்காத மனத்திண்மை கொண்ட ஆசிரியர், தன்மேலுள்ள பொருட்களால் கலங்காத வலிமையுடைய நிலத்திற்கு ஈடாக சுட்டப்பட்டிருக்கிறார்.
nannool fi

“அளக்கல் ஆகா அளவும் பொருளும்
துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வன்மையும் மலைக்கே”

அளவிட முடியாத கல்வியறிவும்; அளக்க முடியாத நூலறிவும்; கற்றவர்களால் அசைக்க முடியாத புலமையறிவும் கொண்ட ஆசிரியர் அளந்தறிய முடியாத வடிவமும், அளக்க முடியாத பொருள்களும், அசைக்க முடியாத வலிமையும் கொண்ட மலையுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றார்.

“ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்க்கடு நிலையும் மிகும்நிறை கோற்கே”

வினவப்பட்டதற்கு ஐயம் நீங்க எடுத்துரைத்தலும், மாறுபட்ட இருவிடத்தில் தான் நடுவுநிலையோடு நடந்துகொள்ளுதலும் ஆசிரியரின் அருங்குணங்களாதலால் இங்கு ஐயம் தீர தன்மேல் வைக்கப்பட்ட பொருளை நிறுத்துக் காட்டுதலும், நடுநிற்றலும் செய்யும் துலாக்கோலுடன் ஆசிரியர் ஒப்புக்கூறப்பட்டுள்ளார்.

பூமி, மலை, துலாக்கோலின் தன்மைகளோடு ஒப்பிடப்பட்ட ஆசிரியர், மலருடனும் ஒப்பு கூறப்பட்டுள்ளார்.

  “மங்கலமாகி இன்றியமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் அ[டைமது பூவே”

நற்செயலுக்கு உரியவராய், எச்செயலுக்கும் இனியவராய், யாவரும் மகிழ்ந்து போற்றும் மென்மைப் பண்பு கொண்டவராய். பாடம் சொல்லும் காலத்தில் முகம் மலர்ந்து இருப்பவராய் ஆசிரியர் திகழ்வதால் தான் இங்கு ஆசிரியர் மலருடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார்.

nannool5நல்லாசிரியர் ஆவதற்குரிய நற்பண்புகளை அறிவுறுத்திய நன்னூல், ஆசிரியர் ஆகக்கூடாதவர்களின் பண்புகளையும் பட்டியல் இட்டுள்ளது.

“மொழிகுணம் இன்மையும் இழிக்குண இயல்பும்
அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கடற்குடம் மடற்பனை பருத்தி குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர்ஆ சிரியர் ஆகுதலே”

உணர்ந்ததை உணர்த்தத் தெரியாத உரைத்திறனின்மை, பொறாமை, ஆசை, வஞ்சனை, அச்சம் ஆகிய உணர்வெழுச்சிகளோடு பேசுதல் போன்றவை ஆசிரியர் ஆகக் கூடாதவர்கள் இயல்புகள் என்று நன்னூல் முதன்மைப்படுத்துகிறது.

இவ்வாறு நல்ல ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களையும், இருக்கக் கூடாத பண்பு நலன்களையும் நன்னூல் உதாரணங்களோடு மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளது. சிகரத்தைத் தொடுவதற்கு ஏணிகளாகவும், கரைகளை முத்தமிடுவதற்குத் தோணிகளாகவும் விளங்கும் ஆசிரியர் சமூகம் நல்ல சமூகமாக மாறும் போது, அந்த நல்ல பாதையில் மாண்புமிகு மாணவர் சமூகமும் பயணம் மேற்கொள்ளும். இந்தப் பயணம் புனித பயணமாய் மானிடக் குலத்திற்கு மகத்துவம் சேர்க்கும். இதனால் ஒரு கல்விச்சாலைத் திறக்கப்படும் போது பல சிறைச்சாலைகள் மூடப்படும். அறிவில் ஊனமில்லாத ஞானத்தை நானிலம் முழுதும் தழைக்கச் செய்ய ஆசிரியர் சமூகத்தால் மட்டுமே முடியும்.


முனைவர் பூ.மு.அன்புசிவா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நன்னூலில் நல்லாசிரியரின் பண்புகள்”

அதிகம் படித்தது