மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 148 ஆவது பாடல்

பேரா. ருக்மணி

Feb 6, 2016

sangappaadalgal 1காதலும், பிரிவும், அதைச் சார்ந்த மனித மன உணர்வுகளும் நூற்றாண்டுகள் கடந்தாலும் நூறு கோடி ஆண்டுகளானாலும் தொடர்ந்து கொண்டிருப்பன என்றும், மாறா தன்மையன என்றும் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன நம் சங்க இலக்கியங்கள்.

கார்காலம் வந்துவிட்டது; ஆனால், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தோழியோ, ‘இது கார்காலம் அன்று’ என்று கூறுகின்றாள். விடுவாளா தலைவி? கொன்றையும் குருந்தும் மலர்ந்திருக்கின்றன; குளிர்க்காற்று வேறு. இந்தப் பருவத்தைப் போய் ‘கார்காலம் அன்று’ என்று நீ சொன்னால் எப்படி? என்னிடமே நீ தவறாகக் கூறலாமோ? என்று அழகாகச் சாடுகின்றாள் தலைவி.

தலைவிக்கும் தோழிக்கும் இடையே நடக்கும் சொல் நாடகத்தைப் பார்ப்போமா?

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலம்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று ஆயின்
கனவோ மற்று இது? வினவுதல் யானே?

குறுந்தொகையின் 148 ஆவது பாடல். இளங்கீரந்தையார் என்ற புலவர் பாடியது. முல்லைத்திணைப் பாடல்.

பொருள்:

“செல்வர்கள் வீட்டுச் சிறுவர்கள் தம் சிறிய அடிகளிலே அணிந்திருக்கும் தவளையின் வாயை ஒத்த பொன்னால் செய்யப்பட்ட சதங்கையின் காசு போல, கொன்றை மரம் பூக்களைப் பூத்திருக்கிறது. இதனோடு குருந்தமரமும் சேர்ந்து காற்றிலே சுழலுகின்ற குளிரான காலம் இது. இப்பருவத்தைக் ‘கார்காலம் அன்று’ என்று நீ சொன்னால், நான் இப்போது காண்பது கனவா? நான் கேட்கின்றேன். பதில் சொல்” என்கின்றாள் தலைவி.

கொன்றை மலர்கள் பூத்திருப்பதை வர்ணிக்கின்றபோது, ‘அது சிறுவர்களின் காலில் அணிந்துள்ள தவளையின் வாயினை ஒத்த பொன்னாலான சதங்கையின் காசு போல’ என்கின்றார் புலவர். கொன்றை மலரைப் பார்த்தே இராதவர்க்குக்கூட கொன்றை மலரைக் காட்சிப்படுத்திக் காட்டுவது சங்கப் புலவர்களுக்கே கை வந்த கலைதான்.

“கார் காலம் வந்தும் தலைவன் வரவில்லையே” என்ற பெண்ணின் பதைபதைப்பும் “இது கார் காலம் அன்று” என்று சொல்லி, தோழியே மறைத்தாலும் மறுத்தாலும் ‘இது கார்காலமே’ என்று துணிகின்ற பெண்ணின் மனமும் இளங்கீரந்தையாரின் எழுத்தில் இன்னமுதாய் இனிக்கிறதன்றோ?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 148 ஆவது பாடல்”

அதிகம் படித்தது