மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை

தேமொழி

Mar 5, 2016

kabeer dasar1கபீர்தாசர் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், இவர் ‘சந்த் கபீர்’ எனவும் அழைக்கப்படுவார். பொதுவாக, கபீர்தாசர் ஓர் இசுலாமிய நெசவாளர் குடும்பத்தில் வளர்ந்தவரென்றும், பக்தி இயக்கக் காலத்தில் இராமனந்தர் என்ற குருவினால் ஈர்க்கப்பட்டு இராமரையும் வழிபட்டார், இந்து-முஸ்லீம் ஒற்றுமை இவரது அறிவுரைகளால் மேம்பட்டது என்பதும் வரலாறு. ஆனால் இவரது பிறப்பு மீதும், வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற தொன்மங்களும் புனையப்பட்டுள்ளன. இந்தியவியல் ஆய்வாளர், வெண்டி டோனிகர் (Indologist, Wendy Doniger), இந்த முயற்சிகள் கபீர்தாசரை ஒரு இந்துவாக உலகின் முன்னிறுத்த உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் அவை என்றும் கூறுவார். எவ்வித ஆதாரமுமற்ற அப்புனைவுகளில், கபீர்தாசர் ஒரு பிராமணத் தாயாரால் கைவிடப்பட்ட குழந்தை என்றும், இசுலாமிய நெசவாளி ஒருவர் அவரை வளர்த்ததாகவும், இசுலாமியராக வளர்க்கப்பட்ட கபீர்தாசர் பிற்காலத்தில் இராமபக்தராக மாறினார் என்றும், அவரது குடும்பம், மனைவி, மக்கள் பற்றியும் புழங்கிவரும் கதைகள் பற்பல.

கபீர்தாசர் இந்து, இசுலாமியம் ஆகிய இருமதங்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வெறுத்து அவற்றின் மீது கேள்விகளை எழுப்பியவர். கபீர்தாசர் ராம்-ரஹீம் என்ற அடிப்படையில் ஒருவரையும் வேறுபடுத்திப் பார்த்தவர் அல்லர். இவரது சிந்தனைகளின் வெளிப்பாடுகள் இறைவனைப் பற்றிய கருத்துகள், இறைவழிபாட்டைப் பற்றிய கருத்துகள் என யாவும் இந்து-முஸ்லீம் மதக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தே வெளிப்பட்டன. அவை இந்துமுஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் இயக்கமாகவும் விளங்கியது. இவரது பாடல்களில் சில சீக்கிய மதத்தின் ஆதிகிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. நெசவாளராக வாழ்ந்து, சமயநல்லுறவிற்கு பெரும்பங்காற்றிய சிறந்த கவிஞரான கபீர்தாசரின் பெயரில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ‘சந்த் கபீர்’ என்ற சிறந்த நெசவாளருக்கான விருதை மத்திய அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளாக (1965இல் இருந்து) வழங்கி வருகிறது.

இக்கட்டுரையில் வழங்கப்படும் கபீர்தாசரின் மதநல்லிணக்கச் சிந்தனைகள் பற்றியக்கருத்துகள், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழில்முதல்வன் அவர்களின் “கபீரின் நூறு பாடல்கள்” மொழிபெயர்ப்பு நூலில் காணப்படும் கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது. எழில்முதல்வன் என அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் மா. இராமலிங்கம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், தமிழ்த்துறைத் தலைவரும் ஆவார். இவரது “புதிய உரைநடை” என்னும் திறனாய்வு நூலுக்காக, 1982 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு தேசிய அளவில் பாராட்டப்பட்டவர். வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபயர்த்து 1914 ஆம் ஆண்டு வெளியிட்ட, கபீர்தாசரின் நூறு பாடல்கள் என்ற நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார் எழில்முதல்வன். இந்நூல் தாகூரின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டான 2011 இல் ‘தமிழ் அலை’ பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. இனி கபீர்தாசரின் சமயச் சிந்தனைகள் பற்றி “கபீரின் நூறு பாடல்கள்” என்ற நூல் தரும் மொழியாக்கப் பாடல்களின் வழி தெரிந்து கொள்வோம்.

kabeer dasar4கபீர்தாசர் பிறந்து வளர்ந்த சூழலின் பின்னணியின் தாக்கம், அவரது சிந்தனைகளை சமயச்சார்பற்ற நோக்கில் இறைவழிபாட்டை அணுகச் செய்துள்ளது. அவரது பாடல்கள் பல இந்துசமய, இசுலாமிய கருத்தாக்கங்களையும் அரவணைத்தே அறிவுரைகளை முன்வைக்கின்றன. தனது சிந்தனைகளை இருசமயத்தாரையும் நோக்கியே எடுத்துக் கூறுகிறார் கபீர்தாசர். அவர் பார்வையில் மதவேறுபாடுகள் மறைந்து போகின்றன. இறைவன் ஒருவனே, உருவமற்ற அவனை உணரச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவையில்லை, இறைவனை வெளியில் தேடுவது அறியாமையின் விளைவு. இறைவன் நம்முள்ளேதான் இருக்கிறான், அங்குத் தேடினாலே அடைய முடியும் என்ற கருத்துக்கள் பல பாடல்களிலும் வெளிப்படுகின்றன.

ஓ! பணியாளனே, என்னை நீ எங்கே தேடுகிறாய்?

இதோ, நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.

நான் திருக்கோயிலிலும் இல்லை; மசூதியிலும் இல்லை;

காஃபாவிலும் இல்லை; கைலாயத்திலும் இல்லை.

நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை.

யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.

நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின்

உடனடியாகக் காணமுடியும்.

கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ

என்னைச் சந்திக்க முடியும்…… (பாடல் – 1)

என்ற பாடலில் இறைவனே அறிவுரை கூறுவது போலப் பாடல் புனைந்துள்ளார்.

மதகுருவும், போர் வீரனும், வியாபாரியும்,

மற்றுள்ள முப்பத்தாறு சாதியினரும் -

ஒன்று போலவே இறைவனை நாடுகிறார்கள்.

அந்த ஞானி என்ன சாதியாக இருப்பான்

என்று கேட்பது மூடத்தனம்.

முடி திருத்தும் நாவிதனும்

இறைவனைத் தேடியிருக்கிறான்.

துணி துவைக்கும் வண்ணாத்தியும்,

மரங்கொல் தச்சரும் இறைவனைத் தேடியிருக்கிறார்கள். ….. (பாடல் – 2)

என்ற பாடலில், ‘மதகுருவும்’, ‘போர் வீரனும்’, ‘வியாபாரியும்’, மற்றுள்ள ‘முப்பத்தாறு சாதியினரும்’ என ‘வருணாசிரம தர்மம்’ பிரித்துரைக்கும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு பிரிவுகளையும் சுட்டுகிறார். இவர்களில் ஒரு பிரிவினர் மட்டும் இறைவனைத் தேட விரும்புவதில்லை. அனைத்துப் பிரிவு மக்களின் ஆர்வமும் இறைவனை அடைய விரும்புவதே என்றும் குறிப்பிடுகிறார். இதன் மூலம் சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது இறைவழிபாடு என்ற கபீர்தாசரின் பரந்துபட்ட எண்ணம் வெளிப்படுகிறது.

kabeer dasar2

சமயம் கடந்த இறைபோற்றும் பார்வை:

கபீர்தாசரின் பல பாடல்களில் சமயசார்பற்ற இறைவணக்கமுறைக் கருத்துகளும் விரவியுள்ளன.

If God be within the mosque, then to whom does this world belong?

If Ram be within the image which you find upon your pilgrimage,

then who is there to know what happens without?

Hari is in the East, Allah is in the West.

Look within your heart, for there you will find both Karim and Ram;

All the men and women of the world are His living forms.

Kabir is the child of Allah and of Ram: He is my Guru, He is my Pir.

— Kabir, III.2, Translated by Rabindranath Tagore

ஆண்டவன் மசூதியின் உள்ளேதான் இருக்கிறானெனில்

இந்த உலகம் யாருக்குச் சொந்தமானது?

நீ மேற்கொண்ட புனித யாத்திரையில்

காண நேர்ந்த கற்சிலைதான் இராமனெனில்,

உலகத்தில் நிகழ்வனவற்றை அவனல்லாமல் அறிவான் யார்?

ஹரி கீழ்த்திசையில் இருக்கிறான்,

அல்லா மேற்றிசையில் இருக்கிறான் என்கிறாயே,

நீ உன் இதயத்தை உள்நோக்கிப்பார்.

அங்கே கறீம் ராம் இருவரையும் காண்பாய். ….. (பாடல் – 69)

காஜியார் திருக்-குர்-ஆனில் சொற்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இது இப்படி, அது அப்படி என்று

மற்றவர்களுக்கு வாய்கிழிய உபதேசிக்கிறார்.

அவரது இதயம் அன்பில் நனையவில்லையெனில்,

அவர் மற்றையோர்க்கு ஆசானாக இருந்து என்ன பயன்?

யோகி தன் ஆடையைக் காவியில் தோய்த்து நிறமேற்றுகிறார்.

ஆனால், அன்பின் நிறம் இன்னது என அவர் அறியார்.

அவ்வாறாயின், இவர் ஆடை

வெள்ளாடை ஆயின் என்? கல்லாடை ஆயின் என்?  ….. (பாடல் – 54)

இறைவனின் அருட்செயல்கள்

இத்தன்மையது என நான் எங்ஙனம் அறிவேன்?

முல்லா அவனை உரத்த குரலில் கூவியழைக்கிறார்.

ஏன்? உன் தேவன் செவிடனா?

சின்னஞ்சிறு பூச்சியின் காலில் மணி கட்டியிருந்தாலும்,

அது இயங்கும்போது ஒலிக்கும் ஓசையைக்

கூட அவன் கேட்க வல்லவன் ஆயிற்றே!

ஜெபமாலையை உருட்டு;

நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்.

தலைநிறைய கற்றைச் சடாமுடியை

நீள வளர்த்து அலங்காரமாகத் தூக்கிக் கட்டிக்கொள்.

என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை.

அன்பு இல்லை. நீ எப்படி இறைவனை அடைவாய்? ….. (பாடல் – 67)

ஆகியப்பாடல்கள், இந்துக்களையும், இஸ்லாமியரையும் பாகுபாடின்றி அழைத்து அவர்களது இறைவணக்க முறைகளின் மீது கேள்விகளை எழுப்புகிறது.

kabeer dasar3சடங்குகளும் சம்பிரதாயங்களும்:

இறைவழிபாட்டிற்கான சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் உடன்பாடில்லாதவர் கபீர்தாசர். இறைவன் நம் உள்ளேதான் உள்ளார். அவரை வெளியில் தேடுவது அறிவீனம் என்பதைப் பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். அன்பின் வழியே இறைவனை அடையும் வழி என்பது கபீர்தாசரின் இறைக்கொள்கை. அன்பின் பேரொளியை கண்டவரே உய்வு பெற இயலும் என்றும் குறிப்பிடுகிறார்.

பூந்தோட்டத்திற்கு நீ போக வேண்டாம்.

என் நண்பனே, அங்கே போகாதே.

உன் உடம்பிலேயே மலர்வனம் உள்ளது.

ஆயிரம் இதழ்த் தாமரை மீது நீ அமர்ந்து கொள்.

அங்கிருந்தபடியே எல்லையற்ற பேரழகை

அகக்கண்ணால் கண்டு நீண்ட நேரம் உற்று நோக்கு       ….. (பாடல் – 4)

ஒவ்வொரு பக்தனும் தனக்கென

ஒரு கடவுளை உருவாக்கிக் கொண்டு வழிபாடு செய்கிறான்.

முழுமுதற் கடவுளான பிரமத்தை யாரும் தேடுவாரில்லை.

அவர்கள் அவதாரங்களை நம்புகிறார்கள்.

எந்த அவதாரமும் பரம்பொருள் ஆகா.

ஏனெனில் அவர்கள் தத்தம் வினைப்பயனைத் துய்த்தே கழிக்கவேண்டியுள்ளது.

எனவே, இவையல்லாத வேறொன்றே பரம்பொருள் ஆதல் வேண்டும்.     ….. (பாடல் – 13)

உன் தேவன் உன்னருகே இருக்கிறான்.

நீயோ அவனைப் பார்ப்பதற்காகப் பனைமரத்தில் ஏறுகிறாய்.

பிராமண குரு வீடு வீடாகப் போய் இறை நம்பிக்கையை விதைக்கிறான்.

மக்களைத் தன்பால் ஈர்க்கிறான்.

வாழ்வின் நிஜமான நீரூற்று உன்னருகே உள்ளது.

நீயோ வழிபாடு செய்வதற்காக ஒரு கல்லை நட்டு வைத்து, எதிரே முணுமுணுக்கிறாய்.

‘என் தேவன் எவ்வளவு இனியன் என்று நான் ஒருபோதும் கூறேன்.

மூச்சை அடக்கி யோகம் செய்வதும், ஜெபமாலை உருட்டுவதும்,

புண்ணியம் பாவம் என்பதும் எல்லாமே வீண்.

பயன்படாது. வெறும் அபத்தம்.      ….. (பாடல் – 21)

குறிப்பாக இப்பாடல்,

“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

என்று ‘சிவவாக்கியர்’ குறிப்பிட்டதையே குறிப்பிடுகிறது.

நான் திருக்கோயில் மணியை அடிக்கவில்லை.

எந்தப் பீடத்திலும் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யவில்லை.

எந்தப் பதுமைகளையும் பூக்களால் அலங்கரிக்க வில்லை.

ஊனினை வருத்தும் எந்தக் கடுந்துறவும் இறைவனுக்கு உவப்பாகா.

ஆடைகளைக் களைந்து உணர்ச்சிகளை

ஒடுக்குவது மட்டுமே இறைவனை மகிழ்விக்காது.

அன்பின் வழியது உயிர்நிலை என்பதை அறிந்தவன்,

நேரிய வழியினின்றும் பிறழாது நடப்பவன்,

உலக நடவடிக்கைகளின் ஊடேயும்

தெளிந்த சிந்தையனாய்த் திகழ்பவன்,

மன்னுயிர்களையும் தன்னுயிர்போல் நேசிப்பவன் எவனோ,

அவனே அழிவில் பொருளாம் ஆண்டவனை அடைகிறான்.

அவனோடு மெய்ப்பொருளாம் இறையும் என்றென்றும் உறைகிறது.      ….. (பாடல் – 65)

வாய்மையைப் போற்றுபவர், செருக்கும் வஞ்சனையும் அற்றவரே இறைநிலையை அடையமுடியும் என்பது கபீர்தாசர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும் இறைவழிபாட்டு முறை.

-தொடரும்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை”

அதிகம் படித்தது