மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள்

தேமொழி

May 28, 2016

aareyil1அணி என்பது அழகு என்பதைக் குறிக்கிறது. இலக்கியங்களில் அழகுக்காகவும், பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கும் பொருட்டும், உவமை, உருவகம் போன்றவற்றைப் புலவர்கள் கையாளுவது வழக்கம். அது அழகுக்கு அணி அணிவித்து அழகை மேம்படுத்தும் ஒரு முயற்சி.

இவ்வாறு செய்யுள்களில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றின் இலக்கணத்தை உரைப்பது அணி இலக்கணம் எனப்படும். அணிகள் பலவகைப்படும். தமிழ்ச் செய்யுள்களில் காணப்படும் அணிகளைக் கூறும் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ‘தண்டியலங்காரம்’ ஆகும். இந்த நூலில் 35 அணிகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘தற்குறிப்பேற்ற அணி’. இயற்கையில் இயல்பாக நிகழும் நிகழ்வொன்று ஒரு கருத்தைக் குறிப்பதாகக் கூறி இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் கருத்தை ஏற்றிப் பாடலாகப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படுகிறது.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்

இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று

தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்

(தண்டி, நூ. 56)

(பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)

அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களின் இயல்பான இயற்கை அமைப்பின் மீது புலவர் தனது குறிப்பை ஏற்றுவதைத் தற்குறிப்பேற்ற அணி என்று வரையறுக்கிறது தண்டியலங்காரம் நூல். தற்குறிப்பேற்ற அணி ஒரு குறிப்பிடத்தக்க அணி. இந்த அணி தமிழிலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு அணி எனவும்; சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் மிகுதியாகப் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்குறிப்பேற்ற அணியைக் குறிப்பிட்டாலே தமிழர் அனைவருக்கும் பள்ளி நாட்களில் இலக்கண வகுப்பில் இந்த அணிக்கு எடுத்துக்காட்டாகப் படித்த “ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட” என்ற சிலப்பதிகாரப் பாடலின் வரிகளும் உடன் நினைவிற்கு வரும். மதுரைக்காண்டத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குச் செல்லும் பொழுது, அங்கு கோவலன் கொலையுண்டு சாகப்போகிறான் என்பதனால் ‘வரவேண்டாம்’ என்று கையசைத்து மதுரை நகரின் மதில் மேல் பறக்கும் கொடிகள் கூறுகின்றன என்று குறிப்பிடுவார் இளங்கோவடிகள். காற்றில் இயல்பாகப் படபடக்கும் கொடி அசைவில் தனது குறிப்பை ஏற்றி தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டிருப்பார். இது மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒரு கருத்து.

மதுரை மாநகர் கொடிகள் மட்டுமல்ல, சீதையின் மிதிலை மாநகரத்தின் மதிலின் மீது பறந்த கொடிகளும், கண்ணனின் துவாரகை நகரின் மதில் மீது பறந்த கொடிகளும் ‘வாராதே போ’ என்றோ, ‘வருக வருக’ என்றோ கையசைத்து உரைத்ததாகப் பாடல்கள் உள்ளன. அவ்வாறு ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள் எவையென்று இனி காண்போம்.

‘வாராதே போ’ என்று உரைத்ததும்:

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்

தையலும் கணவனும் தனித்துறு துயரம்

ஐய மின்றி அறிந்தன போலப்

பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்

கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட

[சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், 3. புறஞ்சேரியிறுத்த காதை (184-190)]

aareyil2கரிய நெடிய கருங்குவளை, அல்லி மற்றும் தாமரை மலர்கள், கண்ணகியும் அவளது கணவன் கோவலனும் பிரிந்து துன்பத்தினை அடையப்போவதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்தது போல, ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலியுடன் வருந்தி ஏக்கத்துடன் கண்ணீர் விட்டு கால்கள் நடுங்க அழவும்; பகைவரை வருத்தும் போரில் தேய்த்தெடுத்த அரிய மதிலின் மீது பறக்கும் நெடிய கொடிகள், ‘மதுரைக்கு வர வேண்டாம் திரும்பிச் செல்க’ என மறுத்துக் கையசைத்தது என்கிறார் இளங்கோவடிகள். காற்றிலே இயல்பாக அசையும் ஆரெயில் நெடுங்கொடி கோவலனையும் கண்ணகியையும் மதுரை மாநகருக்கு வரவேண்டாம் என்று கூறுவதாக தற்குறிப்பேற்றம் செய்துள்ளார் புலவர்.

கொடியின் அசைவில் தற்குறிப்பேற்ற அணியின் மூலம் ‘வரவேண்டாம்’ என்றக் குறிப்பைத் தெரிவிக்கும் பாடல் ஒன்று வில்லிபுத்தூரரின் வில்லி பாரதத்திலும் காணலாம். வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கத்தில் இப்பாடல் இடம் பெறுகிறது. போரில் கௌரவர்களின் சார்பில் போரிட வேண்டி, படைத்துணையாக உதவுமாறு அழைப்பதற்காகப் பல அரசர்களுக்கும் தூதுவர்களை அனுப்புகிறான் துரியோதனன். கண்ணனின் உதவியை நாடித் தானே துவாரகைக்கு நேரில் செல்கின்றான். அப்பொழுது துவாரகை நகரின் அழகும், அந்நகரின் அகழி சூழ்ந்த மதிலின் சிறப்பும் விவரிக்கப்படுகிறது. அப்பாடலில் மதிலின் மீது பறக்கும் கொடிகளின் அசைவின் மூலம் துரியோதனனுக்கு கண்ணனின் உதவி கிட்டப்போவதில்லை என்றக் குறிப்பைத் தருகிறார் வில்லிபுத்தூரர்.

ஈண்டு நீவரினுமெங்களெழிலுடையெழிலிவண்ணன்

பாண்டவர்தங்கட்கல்லாற் படைத்துணையாகமாட்டான்

மீண்டுபோகென்றென்றந்தவியன்மதிற்குடுமிதோறுங்

காண்டகுபதாகையாடைகைகளாற்றடுப்பபோன்ற.

[வில்லி பாரதம், இரண்டாம் பாகம், 25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம் (5)]

துரியோதனனே, இந்நகரத்திற்கு நீ வந்தாலும், எங்களது அழகிய மேகவண்ணமுடைய கண்ணபிரான், பாண்டவர்களுக்குப் போர் புரிய உதவுவானே அன்றி உன்னுடைய படைக்குத் துணையாகப் போர் புரிய உதவமாட்டான். எனவே, நீ வந்தவழியே திரும்பிச் செல், எனப் பலமுறை அறிவித்த வண்ணம், அந்நகரத்தின் அகன்ற மதில்களின் உச்சியில் பறந்த, கண்ணைக்கவரும் அழகிய கொடிகள் தமது கைகளை அசைத்து அசைத்து துரியோதனின் வருகையைத் தடுப்பது போன்று பறந்தன என்கின்றது இப்பாடல்.

கண்ணனைச் சந்திக்கச் செல்லும் துரியோதனனை, நகரத்தின் மதிலின் மேல் காற்றிலே இயல்பாக அசையும் கொடிகள், வரவேண்டாம் திரும்பிப் போ என்று கைகளை அசைத்துத் தடுத்து குறிப்பால் உணர்த்துவதாகத் தற்குறிப்பேற்ற அணி கொண்டு வில்லிபுத்தூரர் தனது வில்லி பாரதத்தில் நயம்பட உரைக்கின்றார்.

வருக வருகஎன்று அழைத்ததும்:

aareyil7காற்றிலே அசையும் கொடிகள் ‘வரவேண்டாம்’ என எச்சரிப்பதாகக் கூறுவது மட்டுமல்லாது, ‘வருக வருக’ என அழைப்பதாகவும் கூறும் பாடல்கள் இரண்டினை அடுத்து காணலாம். கம்ப இராமாயணத்தில் (பால காண்டம் – மிதிலைக் காட்சிப் படலம்) விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்து உதவி செய்த இராமனையும், இலக்குவனையும்; சீதையின் தந்தை சனக மன்னன் அரசாளும் விதேக நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர். தலைநகரான மிதிலை மாநகரில் அவர்கள் நுழையும்பொழுது காணும் காட்சிகளை விவரிக்கிறார் கம்பர். மிதிலை நகரின் கொடிகள் இராமரை வரவேற்பதாகவும், சீதையை மணம் செய்து கொள்ள அழைப்பதாகவும் தனது குறிப்பைப் பாடலில் ஏற்றுகிறார் கவிச்சக்கரவர்த்தி.

‘மை அறு மலரின் நீங்கி

   யான் செய் மா தவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள்’ என்று

   செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக்

   கடி நகர் கமலச் செங் கண்

ஐயனை ‘ஒல்லை வா’ என்று

   அழைப்பது போன்றது அம்மா!

[கம்பராமாயணம், பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம் (480)]

குற்றமற்ற தாமரை மலரை விட்டு நீங்கி, மிதிலை மாநகராகிய நான் செய்த பெருந்தவத்தின் பயனாக, மிதிலை மாநகரின்கண் திருமகள் வந்து பிறந்துள்ளாள் என்றுரைத்து, அழகிய பெரிய கொடிகள் என்னும் தனது கைகளை அசைத்துக் காட்டி, காவல் மிகுந்த மிதிலை நகரம் தாமரை போன்ற அழகிய கண்களை உடைய இராமனை, விரைவில் வருக என்று அழைப்பதைப் போன்றுள்ளது என்கிறார் கவிச் சக்கரவர்த்தி. இராமன் நகருக்குள் நுழையும் பொழுது மதிலின் மீது இயல்பாகப் பறந்த கொடிகளின் அசைவு, நான் செய்த தவத்தால் திருமகளே மிதிலை நகரில் சீதையாகப் பிறந்துள்ளாள். அவளை மணக்கத் தகுதியுடைய இராமனே விரைந்து வந்து அவளது கைத்தலம் பற்றுவாயாக என அழைப்பதாகக் கம்பர் தனது குறிப்பைப் பாடலில் ஏற்றியுள்ளது அவரது கவிநயத்தையும் கற்பனைத் திறனையும் காட்டுகிறது.

கொடியின் அசைவில் வருக என்னும் வரவேற்புக் குறிப்பு இருப்பதாகப் புலவர் தமது கருத்தைத் தற்குறிப்பேற்ற அணியின் மூலம் கூறும் இன்னுமொரு பாடலை வில்லிபுத்தூரரின் வில்லி பாரதத்தின் இந்திரப்பிரத்தச் சருக்கம் காட்டுகிறது. திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு முடி சூட்டுவித்த பின்னர், கண்ணன் இந்திரனோடு விச்சுவகன்மாவையும் வருவிக்கிறார். அப்பொழுது விச்சுவகன்மாவை ஒரு அழகிய நகர் ஒன்று அமைக்குமாறு இந்திரன் கட்டளையிடுகிறார். யாவரும் வியந்து பாராட்டும் வண்ணம் மிகச் சிறப்பான நகரொன்றை அமைக்கிறார் விச்சுவகன்மா. அந்த நகரத்துக்கு கண்ணன் இந்திரப்பிரத்தம் என்று பெயர் சூட்டுகிறார். பாண்டவர்கள் கோபுரத்தில் ஏறி அந்த நகரின் சிறப்பைக் காணுகிறார்கள். இந்திரப்பிரத்த நகரின் மாண்பினை அவர்கள் பலவாறு வியந்து பாராட்டுகிறார்கள். அவர்கள் கூற்றாக கீழ் காணும் பாடல் இடம் பெறுகிறது.

சமர்முகப்பொறிகண்மிக்க தடமதிற்குடுமிதோறும்

குமருறப்பிணித்தபைம்பொற் கொடித்துகிலசைவுநோக்கி

நமர்புரக்கிழத்தியும்பர் நாயகன்புரத்தினோடும்

அமர்பொரப்பற்பல்கையா லழைப்பதுபோலுமென்பார்.

[வில்லி பாரதம், முதற் பாகம், 6. இந்திரப்பிரத்தச் சருக்கம் (31)]

போருக்குத் தயாரான நிலையில் இருக்கும் போர்க்கருவிகள் நிறைந்துள்ள, அந்தப் பெரிய நகரத்தின் மதில்களின் சிகரங்கள் எங்கும் உறுதியாகப் பிணைக்கப்பட்டு பசும்பொன் கம்பங்களின் மீது பறக்கும் கொடிகள் அசைவதைப் பார்க்கும் பொழுது, நமது நகரத்தின் காவல் தெய்வமாகிய இறைவி, தேவர்களின் தலைவனான இந்திரனின் அமராவதி நகரத்துடன் போர் செய்ய விரும்பி தனது பல கைகளையும் அசைத்துப் போருக்கு அழைப்பது போலுள்ளது என்பர்.

இவ்வரிகளில், வலுமிக்கவர் ஒருவர் தனது வலிமை நிலை கண்டு பெருமிதம் மிகக் கொண்டு, வலுவற்றவரை இகழ்ச்சியுடன் வலுச்சண்டைக்கு அழைக்கும் மனநிலையில் இருப்பது போல, நகரத்தின் காவல் தெய்வம் போர்க்கருவிகள் நிறைந்த தனது நகரின் வலிமைகண்டு பூரிப்படைந்து, தனது கைகள்போன்ற மதில்மீது அசையும் கொடிகளை அசைத்து போருக்கு வருக என தேவேந்திரனின் அமராவதி நகருடன் போர் செய்ய அழைப்புவிடுவது போல அமைந்துள்ளது என வில்லிபுத்தூரர் குறிப்பிடுகிறார். கோட்டையின் பாதுகாவலுக்காக மதில் மேல் போர்க்கருவிகளை தயார் நிலையில் பொருத்தி வைக்கும் முறையோ, அம்மதிலின் கோபுர உச்சிகளில் கொடிகள் காற்றில் அசைதலோ இயல்பே என்றாலும், நகரின் பெருமையைக் குறிப்பிட தனது குறிப்பினை இயல்பு நிகழ்வின் மீது ஏற்றிச் சொல்கிறார் வில்லிபுத்தூரர்.

ஆகவே, கொடியசைந்ததும் செய்தி வருவதாகப் புலவர்கள் தற்குறிப்பேற்றம் செய்து, வருக வருக என்று அழைத்ததாகவும், வாராதே போ என்று உரைத்ததாகவும் இருவகைகளிலும் அமைத்துள்ளது கதையின் சூழலுக்கு ஏற்ப திறமையாகக் கையாளும் புலவர்களின் கற்பனை வளத்தினையே காட்டி நிற்கின்றது.

_____________________________________________________________________________________

துணை நின்ற இணையதள பக்கங்கள்:

தற்குறிப்பேற்ற அணி -

http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03143l3.htm

சிலப்பதிகாரம் -

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=15

கம்பராமாயணம் -

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=420

வில்லி பாரதம் -

http://www.tamilvu.org/slet/l3800/l3800wpn1.jsp?song_no=2211&book_id=57


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள்”

அதிகம் படித்தது