மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அழிந்து வரும் ‘சொந்த ஊர்’

பிரத்யுக்ஷா பிரஜோத்

Jun 4, 2016

sondha-oor5சொந்த ஊர் என்பது மறைந்து போன வரலாறாக மாறி வரும் காலமிது. ஒரு ஊரையே தன் சொந்தமாக பாவிக்க முடியாது எனினும் சுற்றங்கள் சூழ, நண்பர்கள் துணை நிற்க, எந்நேரமும் எக்காரணத்தாலும் எதுவும் நேராதென்ற பாதுகாப்புணர்வோடு வாழ்வது ஒரு வரம்.

ஓரிடத்தில் பிறந்து, அவ்வூர் கோடியின் தெருக்களையும் அறிந்து, இரவு பகல் பாராது சுற்றித் திரிந்து, அவ்விடத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து தானும் வளர்ந்த விதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

பணி சார்ந்த இட மாற்றல்களும், தொழில் சார்ந்த இட மாற்றல்களும் பெருகி வருகின்றன. அவற்றுள் சில தவிர்க்க முடியாதவை, சில விரும்பியேற்றவை. அலசி ஆராய்ந்த பின்னர் மனிதன் போடும் சில கணக்குகள் தப்பிப் போவதுண்டு. அந்நியனாய் அசலூரில் ஆதரவின்றி நிற்கும்போது தெரியவரும் சொந்த ஊரின் அருமை.

இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல் அயல் நாடுகளுக்கு குடிபெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. பணம் சம்பாதிப்பது இப்புலம் பெயர்தலின் முக்கிய நோக்கம். தற்காலிகமாக சில மாதங்களுக்கோ ஆண்டுகளுக்கோ பிற நாடுகளுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்.

சிலர் பல ஆண்டுகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நீண்ட நாட்கள் வசித்தல், வேறு நாட்டவரை திருமணம் செய்துக்கொள்ளுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் குடியுரிமையும் வழங்கப்படுகிறது.

sondha-oor6உலகமயமாக்கலின் எதிரொலியாக இதைக் கருதினாலும் ‘நாட்டுப்பற்று’, ‘சொந்த மண்’ என்னும் சொற்கள் அழியவும், கலவரங்கள் உருவாகக் காரணியாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது.

வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை மறக்கவோ, இருப்பிடம் ஏற்படுத்திய சலிப்பை அகற்றவோ இடமாற்றல் அத்தியாவசியமாகிறது. இப்படிப்பட்ட மாற்றம் நம்பிக்கையைக் கூட்டவும், புதிதாய் வாழ்க்கையைத் தொடங்கவும் உதவுகின்றன. காலங்கள் கடந்து செல்ல அதுவே அவர்கள் சொந்த ஊராகவும் மாறிப் போகின்றது.

வாழும் இடத்தின் மீது இத்தனை பற்றுதலோ, அதற்கு இத்தனை முக்கியத்துவமோ தரத் தேவையில்லை என்று நினைக்கும் நாம், வெளியூரிலும் வெளிநாட்டிலும் ஒரே ஊர்க்காரர்களைத் தேடி கண்டுப்பிடித்து நட்பு பாராட்டத் தயங்குவதில்லை. ஒரே ஊரைச் சேர்ந்தவன் எத்துன்பத்திலும் துணை நிற்பான் என்பது நம் நெஞ்சில் ஆழப் பதியவைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரே பழக்கவழக்கம் உடையவர்களாய் இருப்பதும், ஒரே வட்டார மொழி பேசுபவர்களாக இருப்பதும் அம்மனிதர்களுக்கிடையில் பிணைப்பை உண்டாக்குகிறது. அப்பிணைப்பே துன்பத்தில் தோள் கொடுப்பதற்கான தூண்டுகோல்.

அருகில் வசிப்பவர்களின் முகமறியா இயந்திர வாழ்க்கைக்கும், வழக்கமாய் காய் வாங்கும் கடையில் கேட்கப்படும் “எப்போ வந்தீங்க?, என்ன ரொம்ப நாளா ஊர் பக்கம் ஆளையே காணும்?, வேலை அதிகமோ?” என்ற பரிவான விசாரணைக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உள்ளன.

உறவில்லை என்றாலும், சொல்லிக் கொள்ளுமளவிற்கு நட்பில்லை என்றாலும் கண்ணுக்குத் தெரியாத பாசப்பிணைப்பு கண்டிப்பாக இருக்கும். பல வருடப்பழக்கம் ஏற்படுத்தும் பிணைப்பு அது.

உழைத்து ஓய்வு பெற்றப் பின்னர் கடந்த காலத்தை அசைபோட்டுப் பார்க்கும்பொழுது, வாழ்வதற்காக ஓடிய ஓட்டத்தின் நடுவில் இடைச்செருகலாய் வந்துபோகும் இத்தகைய நினைவுகள், களைத்துப் போன மனதிற்கு இதம் தந்து தெம்பை கூட்டும்.

sondha-oor4பெருநகரங்களை சொந்த ஊராகக் கொண்டுள்ளவர்களுக்குத் தெரியும், அவ்வூர் அடைந்த மாற்றங்களும், நித்தமும் பெருகும் மக்கள்தொகையால் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளும்.

பெருநகரங்களில் மட்டுமே மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதென்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்நிலை இருந்திருந்தாலும், வசதிகளும் வாய்ப்புகளும் எல்லா இடங்களிலும் பெருகவே செய்திருக்கின்றன. உண்மை நிலை உணர்ந்து மனமாற்றம் ஏற்பட கால அவகாசம் தேவைப்படலாம்.

என் தந்தை பிறந்து வளர்ந்த ஊர் இல்லையெனினும், நான் பிறந்த ஊர் இல்லையெனினும், இருபது ஆண்டுகள் நான் வளர்ந்த ஊர் என்பதால் சொந்த ஊர் என்று சொல்லிக்கொள்ள எனக்கோர் ஊர் இருக்கிறது. அடுத்து வரும் சந்ததியினருக்கு இது வாய்க்கப்பெருமா என்பது கேள்விக்குறியே.

விடுமுறை நாட்களைக் கழிக்க, சொந்தங்களுடன் கூடி களிக்க, நண்பர்களுடன் இணைய, வாழ்க்கையில் நலிவு ஏற்படும்போது தஞ்சம் புக ஓர் சொந்த ஊர் அவசியம் தேவை.


பிரத்யுக்ஷா பிரஜோத்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அழிந்து வரும் ‘சொந்த ஊர்’”

அதிகம் படித்தது