மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவு சிந்தனை

இல. பிரகாசம்

Jun 11, 2016

Siragu-bharadhidasanin1பெண்ணுரிமைச் சிந்தனை:

“ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணிய சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார்.

பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:

puratchi kavignar14பெண்ணிற்கு பேச்சுரிமை இல்லாமையால், ஒரு சமூகம் எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துறைக்கிறார்.

                “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?

                மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?

                பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

                மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

                ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும் உள்ளடங்கும்

                ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு

                புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச் செய்தால்அந்

                நிலம் விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே

                சித்ரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற்

                புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது?”

என பெரியாரின் சிந்தனைகளான பெண்ணுரிமையையும், பெண்ணுரிமை இல்லாமையினால் பெண்ணானவள் சமூகத்தில் எத்தகையதான இழிநிலைக்குச் செல்ல நேரிடும் என்பதனை தன் படைப்புப் பாத்திரமான வஞ்சிப் பெண்ணின் வழியாக வலியுறுத்துகின்றார்.

மக்களின் அறியாமைக்குக் காரணம்:

மக்களின் அறியாமைக்கான முக்கியக் காரணமாக பாவேந்தர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

                “பேதம் வளர்க்கப் பெருமபெரும் புராணங்கள்

                சுhதிச் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்

                கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துக் தாமுண்ணக்

                கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்”

என்று இதிகாச நூல்களையும் கடுமையாக சாடுகின்றார். மேலும்

                “சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்

                தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி

                ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்

சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்

பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக்

கற்கள் கடவுள்களாயக் காணப்படும் அங்கே

இந்த நிலையிற் சுதந்திரப் போரெங்கே?”

என்று கடவுள்களை வணங்குபவர்களையும் பூசுரர்களையும் சாடுகின்றார்.

ஏமாற்றுபவர்களின் இயல்பு:

சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் ஒருவர் இராமாயணக் கதைகளைச் சொல்லி பிழைப்பவர்களையும், அக்கதைகளைக் கேட்டவர்கள் காசுகொடுப்பதனையும் நாயகன் உண்மையாகவே அனுமன் சஞ்சீவி மலையினை பெயர்த்துச் சென்று மீண்டும் திரும்பவைத்துவிட்டான் என அப்படியே அதனையும் நம்புகின்றான். அதனையும் பாவேந்தர் பின்வருமாறு கூறுகின்றார்.

“மாமலையை அவ்வநுமர் தூக்கி வழிநடந்து

லங்கையிலே வைத்தத! ருhமன் எழுந்ததும்

இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது!

கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல்

கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்

தந்திரமாய் மண்ணில் தலைகுணிந்து வைத்திட்ட

அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி”

என்று நாயகன் தான் நம்பிய கதையை நாயகி இடத்தில் கூறுகின்றான். அதற்கு மறுமொழியாக நாயகி பின் வருமாறு மொழிகிறாள்;

“மாளிகையினுள்ளே மனிதர் கூட்டத்தையும்

ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே

உட்கார்ந்திருப்பதையும் ஊர் மக்கள் செல்வதையும்

பட்டை நாமக்காரப் பாகவதன் ரூபாயைத்

தட்டிப் பார்க்கின்றதையம் சந்தோஷம் கொள்வதையும்

கண்டார்கள்”

என்று பெண்ணின் வழியாக அந்நிகழ்வையும் எள்ளி நகையாடுகின்றார்.

இவ்வாறு ஏமாறுபவர்கள் இருக்கின்ற காலம் முற்றிலும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் எனவும் எச்சரிக்கை செய்கின்றார். மேலும் நாயகியின் அறிவுத்திறத்தினாலே பின்வருமாறு கருத்துக்களை வெளிக்கொணர்கிறார்.

“வானளவும் அங்கங்கள் வானரங்கள் ராமர்கள்

ஆனது செய்யும் அநுமர்கள் சாம்பவந்தர்

வுpஸ்வரூபப் பெருமை மேலேறும் வன்மைகள்

உஸ் என்ற சத்தங்கள் அஸ் என்ற சத்தங்கள்

எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்

செவ்வைக் கிருபை செழுங் கருணை அங்சலிக்கை

முத்தி முழுச் சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்

இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?

என்று நாயகியின் மூலம் கேள்வியை எழுப்புவதன் மூலம் தான் படைத்த பெண்ணின் பகுத்தறிவுத் திறனையும் வெளிப்படுத்துகின்றார்.

மக்கள் செய்ய வேண்டிய கடமை:

தம் மக்கள் செய்ய வேண்டிய கடமையாக பெண்ணின் வழியினின்று தம் கருத்தை பாவேந்தர் பதிவுசெய்கின்றார்.

“உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை

ஏள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள்

ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்

தேக்குமோ? சித்தம் சலியாத் திறன் வேண்டும்

முக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை

ஏக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி

நுல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே

புல்லறிவை போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும்.”

puratchi kavignar1இவ்வாறு பகுதறிவுக்கு ஒத்துவராத நூல்களால் எள்ளளவும் யாவர்க்கும் நன்னை இல்லை. இத்தகைய நூல்கள் கூறுகின்ற கதைகளால் மனிதர்கள் உண்டாக்குவதனை அழிக்க முடியுமா?, அழிக்க எண்ணுவதனை நிலைப்படுத்த முடியுமா?. தத்தம் புத்திகளில் சலித்திடாத திறனை வளாத்துக் கொள்ள வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் தன் சஞ்சீவி பர்வதத்தின் நூலின் மூலமாக பெண்ணின் உரிமையானது எவ்வளவிற்கு ஒரு சமூகத்திற்கு தேவை என்பதனையும், பெண்களை பகுத்தறிவு சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றார்.

பார்வை நூல்

1.சஞ்சீவி பர்வதத்தின் சாரல் -பாவேந்தர் பாரதிதாசன்


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவு சிந்தனை”

அதிகம் படித்தது