மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி …

தேமொழி

Aug 6, 2016

Siragu senthaarp1

தனது காதல் துணையைத்தொடர்பு கொள்ள நினைத்தபொழுதே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியாகவோ, அல்லது உரையாடலாகவோ, அல்லது காணொளி மூலம் பேசும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. ஆனால் அக்காலத்துக் காதலர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை. தங்கள் காதலை மடல்கள் வழி தெரிவித்தனர். தமிழிலக்கியத்தில் தலைவன் தலைவியின் காதலை வளர்ப்பதில் தோழன் தோழியரது பங்கும் பெரும் பங்கு. தோழியும், தோழனும், விறலியும், பாணனும் காதலர்களின் காதல் கைகூட தூது சென்ற வண்ணம் இருந்தனர்.

Siragu-senthaarp12மனிதர்களைத் தவிர்த்து கிளி, மேகம், அன்னம் என்று பலவற்றையும் காதலர்கள் தூதனுப்பியதாகவும் பாடல்கள் உள்ளன. உண்மையில் அவை செய்தியைக் கொண்டு சேர்த்தன என்று சொல்ல வழியில்லை. அது ஒருவகை உளவியல் அணுகுமுறை. தனது மனத்தில் உள்ள காதலை பெற்றோரிடமோ, தோழியிடமோ தெரிவித்து, தலைவன் அல்லது தலைவி மீது தான் கொண்ட அன்பை வெளிப்படையாக சொல்லத் தயங்கும் நேரத்தில் கிளி, அன்னம், மயில் போன்று பதில் ஒலி எழுப்பக்கூடிய பறவைகளிடமோ; அல்லது மேகம், தென்றல், அலை போன்று தன்போக்கில் கடந்து செல்வனவற்றிடம் தூது சொல்லி தங்கள் மனநினைவுகளை அசைபோடும் முறையின் வெளிப்பாடு அது. அன்னம், மயில், கிளி, முகில், நாரை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக அமைத்துப் பாடுவதற்குச் சிறந்தவை என்பது தமிழறிஞர்கள் கருதியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் கூட தூது செல்வதாக இலக்கியம் உண்டு.

காளமேகப் புலவரின் பாடல் ஒன்று,

                தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

                தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த

                துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

                தித்தித்த தோதித் திதி

இவ்வாறாக தூதனுப்ப விரும்பும் பெண்ணின் மனநிலையைக் காட்டும்.

இச்செய்யுளின் வரிகள் பதம் பிரித்து…

                தாதி தூதோ தீது, தத்தை தூது ஓதாது!

                தூதி தூது ஒத்தித்த தூததே – தாதொத்த

                துத்தி தத்தாதே தேதுதித்த தொத்து தீது

                தித்தித்தது ஓதித் திதி

ஆனால், பதம் பிரித்தாலும் பொழிப்புரையின்றி எளிதில் பொருள் கொள்ளும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கவில்லை என்பதை மறுக்க இயலாது. “அடிமைப் பெண்ணின் வழி அனுப்பும் தூது நன்மை தராது; கிளியைத் தூது அனுப்பினால் அதுவும் பேசாது; தோழியை அனுப்பினால் தாமதமாகும்; பூக்களின் தாது போல என் மேனியில் படர்ந்த தேமலும் மறைய தெய்வமும் உதவப்போவதில்லை; அதனால் இனிக்கும் வகையில் அமைந்த என் காதலன் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பேன்” என்கிறாள் அந்தப் பெண்.

இப்பாடலின் கருத்து கண்ணதாசனின் எழுத்தில் எளிமையும் இனிமையும் கொண்ட வகையில் …

                அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது

                அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது

                தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது – இளம்

                தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.

என எளிதில் பொருள் புரியும்படி அமைந்திருக்கும். இது போல கிளியிடம் தங்கள் காதல் குறித்து பேசிக் கொண்டிருப்பது பெண்களுக்கு மன ஆறுதலைத் தந்திருக்கிறது என்பது தெளிவு. கிளிகள் பேசாது என்று தெரிந்துமே கிளியிடம் தங்கள் மனநிலையைப் பெண்கள் கூறி வந்துள்ளனர். இந்த முயற்சிகளின் பலனாக அழகிய நயம் மிக்க பாடல்களும்; இலக்கியம் வழி அக்கால வாழ்க்கைமுறை பற்றிய செய்திகளை நாம் அறியமுடிவதுமே நாம் அடையும் பயன்கள்.

பலவற்றை தூதனுப்பினாலும் கிளிக்கு தூதிலக்கியத்தில் தனி இடம் உண்டு. கிள்ளை, தத்தை என்றும் அழைக்கப்படும் கிளியைத் தூதுவிடுவதாக கிளிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு கண்ணதாசன் இயற்றிய தற்கால ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படப் பாடல் வரை உள்ளது.

மதுரை மருதன் இள நாகனார் இயற்றிய அகநானூற்றுப் பாடலில் …

                செம்தார்ப் பைம்கிளி முன்கை ஏந்தி

                இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்துஎன

                இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென

                மழலை இன்சொல் பயிற்றும்

                நாண்உடை அரிவை மாண்நலம் பெறவே

                                அகநானூறு – பாடல்: 34 (வரிகள் 14-18)

அரிவை ஒருத்தி (அரிவை என்பவள் பதின்ம வயது கடந்து, 20-25 அகவை கொண்டவள் என்று அகவையைக் குறிக்கும் சிதம்பரப் பாட்டியல் பாடல் ஒன்று குறிக்கிறது), சொல்லுவதை திருப்பிச் சொல்லக் கூடிய கிளிப்பிள்ளை ஒன்றை முன்கையில் ஏந்தி, அதனை தனது முகத்தருகே கொண்டுவந்து கிசுகிசுத்த குரலில், என்னைப் பிரிந்து சென்ற என் தலைவர் “இன்று வருவார் எனச் சொல்வாயாக” என்று கூறுகிறாள். தான் கூறுவது தனது இல்லத்தில் இருக்கும் யார் காதிலும் விழுந்துவிடுமோ என்று அஞ்சி நாணத்துடன் தாழ்ந்த குரலில் கிளியிடம் தனது தலைவன் பற்றிப் பேசுகிறாள் அந்த இளம்பெண் என்று கூறுகிறது இந்தச் சங்க காலப் பாடல்.

தூதுக்காகவே இயற்றப்பட்ட இலக்கியங்கள் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று “அழகர் கிள்ளை விடு தூது” என்பது. திருமாலிரும் சோலை மலையில் (அழகர் மலையில்) வதியும் அழகர் என்ற திருமாலிடம் காதல் கொண்ட பெண்ணொருத்தியால் கிளி ஒன்று தூது அனுப்பப்படுவதாக இயற்றப்பட்ட இலக்கியம் இது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை’ என்பவர் இயற்றிய இலக்கியம் அழகர் கிள்ளை விடு தூது. இவரின் நோக்கம், கிளியிடம் தூது சொல்லும் பெண்ணின் வாயிலாகத் திருமாலின் பெருமையைக் கூறுவது.

Siragu-senthaarp10

இந்த அணுகுமுறையை “சொல்ல வல்லாயோ? கிளியே!” என்ற பாடலில் பாரதியாரும் கையாண்டுள்ளார்.

சொல்ல வல்லாயோ? கிளியே!

                சொல்ல நீ வல்லாயோ?

வல்ல வேல் முருகன் தனை இங்கு

                வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று

                (சொல்ல)

தில்லை யம்பலத்தே-நடனம்

                செய்யும் அமரர்பிரான்-அவன்

செல்வத் திருமகனை- இங்கு வந்து

                சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று

                (சொல்ல)

அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்

                அந்திப் பொழுதினிலே-அங்கொர்

முல்லைச் செடியதன்பாற்-செய்த வினை

                முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று

                (சொல்ல)

பாலை வனத்திடையே-தனைக் கைப்

                பற்றி நடக்கையிலே-தன் கை

வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன

                விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று

                (சொல்ல)

(கிளி விடு தூது – பாரதியார்)

என்று பாரதியார் கிளியைத் தூதனுப்பும் பெண் ஒருத்தியைத் தனது பாடலின் வழி நமக்கு அறிமுகப்படுத்துவார். அந்தப் பெண் வடிவேல் முருகனிடம் தனது உள்ளக்கிடக்கையை அறிவிக்குமாறு, தனது காதலைக் குறித்து கிளியிடம் உரையாடுகிறாள்.

தனது காதலைக் குறித்து கிளியிடம் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணைச் சித்தரிக்கும் காட்சி ஒன்றுக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய கீழ் காணும் பாடலின் திரைக்காட்சி, சங்கப் பாடல் குறிக்கும் கிளியுடன் பேசும் பெண்ணை நம் கண் முன் கொணரும்.

                தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா

                முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

                கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா

                பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா

                தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா

                முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

                கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா

                கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா

                தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா

                முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

                கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா

                புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா

                தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா

                முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

(திரைப் படம்: சர்வர் சுந்தரம்; பாடல்: கண்ணதாசன், காணொளி: https://www.youtube.com/watch?v=Itoc9VIF1Aw)

Siragu senthaarp9

தமிழிலக்கியங்களில் பலபருவத்திலும் பெண்கள் தங்கள் விளையாட்டுத் துணையாக கிளிகளை வைத்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றைத் தங்கள் தோழியாகவே அவர்கள் கருதும் நிலையும் இருந்திருக்கிறது.

‘குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்

                கூறிஅவன் மறுகணையக் காதல் கூர்ஏழ்

எழிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று

                இயல்மங்கை பத்தொன்பான் மடந்தை ஐயைந்து

அழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பான்

                ஆம்வயது பேரிளம்பெண் முதலாய் உள்ளோர்

தொழஉலாப் போந்தது உலா.’

என்று ‘சிதம்பரப் பாட்டியல்’ உலா இலக்கியத்தின் இலக்கணம் கூறுகின்றது. உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் ஏழு பருவத்துப் பெண்களின் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இப்பாடல் கூறும் இலக்கணம்.

இந்த இலக்கணப்படி அமைந்து, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் சோழமன்னன் உலா வரும்பொழுது அவனைக் கண்டு தங்கள் மனநிலையை அல்லது காதலை வெளிப்படுத்துவதாக இயற்றப்பட்ட இலக்கியம் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா.

மூவருலாவில் ஏழு வயது, பேதை அகவைச் சிறுமி ஒருத்தி கிளி வைத்திருப்பதையும்; இருபது வயதுகளில் இருக்கும் அரிவை வயதுடைய இளம்பெண்ணும் கிளி வைத்திருப்பதையும் கீழ்காணும் வரிகள் குறிப்பிடுகின்றன.

                பிரியாப் பருவத்துப் பேதை – பரிவோடு

                பாவையு மானும் மயிலும் பசுங்கிளியும்

                பூவையும் அன்னமும்

                                மூவர் உலா – விக்கிரம சோழனுலா, “பேதை” (232-234)

                பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி

                ஆடிய தோகைக்கும் அன்பின்றிக் – கூடிய

                கிள்ளைக்குந் தம்மிற் கிளரும் இளவன்னப்

                பிள்ளைக்கு மாற்றாள் பெயர்ந்துபோய்க் – கொள்ளை

                                மூவர் உலா – விக்கிரம சோழனுலா, “அரிவை” (493 – 496)

பல பருவத்துப் பெண்களும் மான், மயில், அன்னம், கிளி ஆகியவற்றை தங்கள் செல்ல விலங்குகளாக வளர்த்து உறவாடியதைத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுடன் தங்கள் மனநிலையைப் பகிர்ந்து கொள்வதும் பெண்களின் வழக்கமாகக் காண்பிக்கப்படுகிறது.

Siragu-senthaarp11

இலக்கியங்களில் அன்றி, தமிழகத்தின் புகழ் பெற்ற தெய்வங்களாகக் கருதப்படும் மதுரை மீனாட்சியும், திருவில்லிபுத்தூர் ஆண்டாளும் தங்கள் கைகளில் கிளிகளை ஏந்தி கட்சி தருபவர்கள்.

மீனாட்சி வலக்கையிலும், ஆண்டாள் இடக்கையில் கிளியை ஏந்தியிருப்பதாகச் சிலைகளில் காட்டப்படுகின்றது.

கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ

                கண்ணுதல்பாற்செலநின்

கையில் வளர்த்த பசுங்கிளியும்வளர்

                காமர்கருங்குயிலும்

குமரகுருபரர்   இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – அம்மானைப்பருவம் (82)

என்று மீனாட்சி கையில் பசுங்கிளி ஏந்தியிருப்பதாகக் குமரகுருபரர் தனது பிள்ளைத்தமிழில் குறிப்பிடுகிறார்.

மதுரையில் குடிகொண்ட சிவனை வணங்கித் தனது பாவம் தொலைக்க வந்த இந்திரனுக்கு வழிகாட்டியதால் மீனாட்சியின் கையில் கிளி அமரும் பேறு பெற்றதென்பது ஒரு தொன்மக் கதை. தனக்காகக் கிளி வடிவில் திருவரங்கனிடம் தூது சென்ற ‘சுகப்பிரம்மர்’ வேண்டுகோளின்படி அவரை ஆண்டாள் தனது கையில் கிளியாக இருக்க ஏற்றுக் கொண்டாள் என்பதும் ஒரு தொன்மக் கதை. இப்பெண் தெய்வங்களின் கையில் இருக்கும் கிளிகள் பக்தர்களின் வேண்டுகோளைச் செவிமடுத்து மீண்டும் மீண்டும் இத்தெய்வங்களிடம் கூறி, நினைவுபடுத்தி பக்தர்களுக்கு உதவி செய்வதற்காக இப்பெண் தெய்வங்கள் தங்கள் கைகளில் கிளிகளை ஏந்தியுள்ளார்கள் என்பதும் ஒரு தொன்மம்.

இத்தொன்மக் கதைகளைத் தவிர்த்து நோக்கினால்; மீனாட்சியும் ஆண்டாளும் சங்கப் பாடல் காட்டும் பெண்ணைப் போல, ‘செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்திய’ ஒரு தமிழ்ப் பெண்ணொருத்தியை ஒத்திருப்பதாகக் கொள்ளலாம்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி …”

அதிகம் படித்தது