மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கியம் : கலித்தொகையில் தொழில்முறைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

Sep 17, 2016

siragu-tholil-muraigal1

உழைப்பு என்பது மூளையையோ உடலையோ முழுவதுமாகவோ, பகுதியாகவோ வருத்தி ஏதோ ஒன்றைப் படைத்தற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்கியது. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி, அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி, முயற்சிகளும், கைத்தொழில் கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள், வணிகர்கள், நுண்கலைஞர்கள், இலக்கிய அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் பணி முயற்சிகளும் இலக்கணத்தினுள் அடங்குகின்றன என்று கலைக்களஞ்சியம குறிப்பிடுகின்றது.

தேனெடுத்தல்:

siragu-tholil-muraigal2

குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுந்து இருப்பதால் மரங்களில் தேன் மிகுந்து காணப்படும். குறிஞ்சி நில ஆடவர் மரங்களில் தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேனினை எடுப்பதற்கு ஏணியை பயன்படுத்தினர். மிக உயர்ந்த மரங்களில் உள்ள தேனை எடுப்பதற்கு கனுக்களில் அடி (கால்) வைத்து ஏறியிறங்கும் படி அமைந்துள்ள மூங்கிலாகிய ஏணியை பயன்படுத்தினர்.

திணைப்புனம் காத்தல்:

siragu-tholil-muraigal3

குறிஞ்சி நிலத்தின் முக்கிய விளைபொருள் திணையாகும். திணைக்கதிர்கள் முற்றி அறுவடைக்குரிய பருவத்தில் கதிர்களைப் பறவைகள் உண்ண வரும். பறவைகளால் தீங்கு ஏற்படாதவாறு, மகளிர் திணைப்புனத்தில் அமைக்கப்பட்ட பரண் மீது அமர்ந்து காவல் காத்தனர். மகளிர் பகலிலும் ஆண்கள் இரவிலும் காவல் காத்தனர்.
“இனங்கிளி யாறுகடிந் தோம்பும் புனந்தயல்” (கலி-34)
என்பது மகளிர் காவல் தொழிலில் ஈடுபட்டதை குறிக்கிறது.

யானை, புலி முதலிய விலங்குகளிடமிருந்து திணைப்புனத்தினை ஆண்கள் இரவில் காத்தனர். விலங்குகளை விரட்ட கையில் கொள்ளிக்கட்டையும், கல்லெறியும் கவண் மற்றும் வில் பயன்படுத்தியது,
“ஒளிதிகழ் நெகிழியர் கவண்மர் வில்லர்
குளிறென ஆர்பவர் ஏனல்கள் வலரே” (கலி-52)
என்ற பாடலில் புலப்படுகிறது.

முல்லை:

siragu-tholil-muraigal-mullai4

முல்லை நில மக்கள் ஆயர் ஆய்ச்சி, இடையர், இடைச்சி என்று அழைக்கப்பட்டனர். ஆடு, மாடு மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டனர். மகளிர் ஆட்டு நிரை, ஆநிரை மூலம் கிடைக்கும் பால், மோர், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை விற்றல், பண்டமாற்று செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனர். ஆடவர் ஆநிரை மேய்த்தல் தொழிலில் ஈடுபட்டனர்.

“கோட்டினத்தாயர், புல்லினத்தாயர், கோவினத்தாயர் என்று பல ஆயர் இனங்களைக் குறிப்பிடுகிறது. எருமைத்திரளையுடைய ஆயர் கோட்டீனத்து ஆயர் என்றும், பசுத்திரணை உடைய ஆயர் கோவினத்து ஆயர் நல்லினத்து ஆயர் என்றும், ஆட்டினத்தையுடைய ஆயர் புல்லினத்து ஆயர் என்றும் சுட்டுகிறது.” (கலி – 103-113)

ஆநிரை மேய்த்தல்:

siragu-tholil-muraigal5

ஆயர் தன்னிடம் உள்ள ஆநிரைகளை ஊருக்கு அடுத்துள்ள மேய்ச்சல் நிலங்களில் மேயவிடுவர். காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் பசுக்கள் மேயும் இடத்திற்கே பால் கறக்கும் கலங்களை எடுத்துச் சென்றனர் என்பதை,
“கலந்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும்” (கலி – 116)
என்ற அடியால் அறியமுடிகிறது

ஆநிரை மேய்க்கும் போது பால் கலங்கள் வைத்த உரியும், தோற்பையில் கழுவோடு சூட்டுக் கோல்களும் இட்டு சுருங்கிய பையை கையிடத்துக் கொண்டவராகவும், இனிய குழலோசை உடையவராகவும் காணப்படுவர். (கலி – 106) ஆநிரை மேயும் போது அவற்றைப் பாதுகாக்க “கோலூன்றி நின்றாயோர்” (கலி – 108) என்ற வரி புலப்படுத்துகிறது.

ஆயர்கள் தம் மனைக்கு அருகிலே பிறர் செல்வதற்கு அரிய இடத்தில் பயிர் தொழில் செய்தனர். பயிர் தொழில் செய்த இடத்திற்கு ஆநிரையை கன்றுடன் ஓட்டிச் சென்றனர் என்பதை,
“ பாங்கரும் பாட்டங்கால் கன்றோடு செல் வேமெம்” (கலி – 116)
என இவ்வரியால் அறிய முடிகிறது.

மருதம்:

siragu-tholil-muraigal6

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதமாகும். மருத நில மக்கள் ஊரன், மகிழ்றன், உழவர், உழத்தியர், கடையர். கடைச்சியர் எனப்படுவர். வேளாண்மை இந்நில மக்களின் தலையாய தொழிலாகும். இவ்வுழவர்கள் தம் தொழிலில் சோம்பி இராதவர் என்பதனை பெரும்பாணாற்றுப்படை “மடியா வினைஞர்”என்ற தொடரால் சிறப்பித்துக் கூறுகின்றது. மருத நில மக்களின் வேளாண்மையை அறிவினையுடைய நாவாகிய ஏராலே உழுது உண்ணும் புலவரின் புதிய கவி என்ற புலவனைக் குறிக்கும் உவமை மூலம் சுட்டுகிறது. (கலி – 68)

மருத நிலம் நீர் வளம் மிகுந்து காணப்படும். உழவர் வயலில் செந்நெல் விளைத்துள்ளனர். செந்நெல் செழிப்பாக வளர்ந்து உள்ளது. அச்செழிப்பினால் பறவைகள் வயலிடத்து ஒலிக்கின்றது. வயலிடத்து தாமரை மலர்ந்து காணப்படுகிறது. நீர் வளம் மிகுந்து உழவு தொழில் சிறந்ததினை,

“புள்ளிதழ் அகல்வயல் ஒலிசெந்நெ லிடைழத்த
முள்ளரைத் தாமரை முழுமுதல்” (கலி – 79)

என்ற பாடலின் மூலம் காணலாம்.

மலர் விற்றல்:

siragu-tholil-muraigal7

மகளிர் தம் ஒப்பனைப் பொருட்களுள் மலர்கள் என்றும் சிறப்பிடம் பெற்றுத்திகழ்கின்றன. மகளிர் மட்டுமல்லாது ஆண்களும் தலை, கழுத்து, கை ஆகிய உறுப்புகளுக்கு மலராகவும், மாலையாகவும், கண்ணியாகவும் ஒப்பனை செய்தனர். மலர் ஒப்பனையில் ஆடவரைக் காட்டிலும் மகளிரே உயர்ந்து நின்றனர். மகளிரின் மலர் மீதுள்ள விருப்பத்தை அறிந்த பெண்கள் மலர்களை விற்கும் பணியில் ஈடுபட்டனர். தாம் இருக்கும் இடச் சூழலுக்கும் மலரும் காலத்திற்கும் ஏற்ப மலர்கள் விற்கப்பட்டன. மருத நில மங்கை ஒருத்தி வயலில் உள்ள கருங்குவளை மலரினை மக்கள் உள்ள ஊரினுள் கொண்டு விற்றதினை,

“வீங்குநீர் அவிழ்நீலம் பகர் பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்ந்து ஊர்புகுந்த வரிவன” (கலி – 66)
என்ற அடிகளால் அறிய முடிகிறது.

நெய்தல்:

siragu-tholil-muraigal8

கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும். நெய்தல் நில மக்கள் சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரதவன், திமிலர், நுளையன், நுளைத்தியர் எனப்படும். கடற்கரை மணல் மேட்டில் குடிலமைத்து வாழ்வர். பரதவர் படகிற் சென்று மீன் பிடிப்பர். அப்படகிற்குத் ‘திமில்’ என்று பெயர். மீன் பிடித்தலையே தலையாய தொழிலாகக் கொண்டனர். மீன் பிடித்தல் மட்டுமின்றி மீன் விற்றல், உப்பு விளைத்தல், உப்புவிற்றல் தொழிலையும் மேற்கொண்டனர். பரதவர் பிடித்து வந்த மீனை பரதவ மகளிர் காய வைப்பர்.
பரதவர் கடலில் சென்று மீன் பிடித்து வந்து கடற்கரையில் கொட்டுவர் என்பதை,
“எறிதிறை தந்திட இழந்தமீன் இன்துறை
மந்திரை வருந்தாமற் கொண்டாட்டு தெறிதாழ்ந்து” (கலி – 121)
என்னும் வரிகள் விளக்குகின்றன.

பாலை:

siragu-tholil-muraigal9

குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் தம் இயல்பு திரிந்து பாலை உண்டாகும். வெயிலின் கொடுமையால் நீர் நிலைகள் வற்றி உலர்ந்தும் மரம் முதலியன காய்ந்தும் காணப்படும். பாலை நிலத்தில் வாழ்ந்தவர் எயினர் எனப்பட்டனர். அவர்களது தொழில் ஆறலைந்து உண்பதாகும். இதனால் ஆறலைக் களவர் ஆவார்.

நெல் வகைகள்

ஐவன நெல், மூங்கில் நெல் குறிஞ்சி முல்லை நிலங்களிலும், செந்நெல் மருத நிலங்களிலும் விளைவித்தனர்.
“ஆடுகழை நெல்லை அரையுரலுட் பெய்திருவாம்”
(கலி – 41)
என்னும் வரி குறிஞ்சி நிலத்தில் மூங்கில் நெல் விளைந்ததைக் குறிக்கிறது.
மருதநில வயலிடத்து செந்நெல் விளைந்ததினை
“புள்ளிமிழ் அகல்வயல் ஒலி செந்நெல் இடை பூத்த” (கலி – 79)
என்னும் வரி விளக்குகிறது.

எருவிடுதல்:

siragu-tholil-muraigal10

விளை நிலங்களில் நல்ல உரமிட்டால் நல்ல விளைவைப் பெறலாம் என்று உழவர்கள் அறிந்திருந்தனர். கால்நடைகளின் சாணத்தினையும், இலைதழைகளையும் எருவாக பயன்படுத்தினர். கால்நடைகளின் சாணத்தினை “தாதெரு”எனக் குறித்தனர். எருக்களைக் கொட்டி வைப்பதற்கு தனி இடம் உண்டு, அவ்விடத்தினில் எருக்களைக் கொட்டி சேமித்து வைத்தனர். அவ்விடத்திற்கு “தாதொரு மன்றம்” (கலி – 108) எனக் குறிப்பிட்டனர்.

நெசவுத் தொழில்:

siragu-tholil-muraigal11

உணவினை அடுத்து இன்றியமையாத் தேவையாக வேண்டப்படுவது ஆடை ஆகும். விலங்குகளைப் போலல்லாமல் உடலை மறைத்தற்குரிய உடையினை அணிந்து மானத்துடன் வாழும் முறையினை மக்கள் அறிந்திருந்தனர். நாகரிகம் வளராத பழங்காலத்திலே மக்கள் தழை, இலை ஆடைகளையும், மரப்பட்டை, விலங்குகளின் தோலினையும் உடுத்தி வாழ்ந்தனர். அந்நிலை மாறி தம் அறிவுத் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று ஆடையாக நெய்து அணிந்தனர்.

ஆடையை நெய்யும் தொழிலை நெசவுத் தொழில் என்கிறோம். நெசவுத் தொழிலில் வளர்ந்த நிலையை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. நெசவுத் தொழிலுக்கு இன்றியமையாக் காரணமாக அமைவது பருத்தி. பருத்தி தொன்றுதொட்டு தமிழகத்தில் விளைந்து வருகின்றது. பருத்தி விளைச்சல் மிகுதியாக உள்ள ஊரை “பருத்தி வேலிச் சீறூர்” என்று புறநானூறு குறிப்பிடுகிறது. மகளிர் பருத்திப் பஞ்சினை செப்பம் செய்து நூலாக நூற்கும் திறன் பெற்று விளங்கினர். மூதாட்டியரும் கைம்பெண்டிரும் நூல் நூற்றனர். அதனால் அவர் “பருத்திப் பெண்டிர்” எனப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறார் தேவநேயப்பாவணர் (தேவநேயப் பாவணர் பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் ப.41) இக்கருத்தினை,
“பருத்திப் பெண்டிர் பனுவ லன்ன” (புறம் – 125)
“ஆளில பெண்டிர் தானிற் செய்த
நுணங்கு நுண் பனுவல்” (நற்றி – 353)
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.

ஆடையை உடை, துகில், கலிங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆடை நெய்வதில் நம் நாட்டவர் சிறந்து விளங்கினர். ஆடைகள் சாயம் தோய்த்தும் கலை நயத்துடனும் நெய்யப்பட்டன. ஆடைகளில் பூ வேலைப்பாடு காணப்பட்டதினை,
“பல்கலைச் சில்ழங் கலிங்கத்துள்” (கலி – 56)
என்னும் வரியும்,
“தைஇய பூந்துகில் ஐதுகழல் ஒடுதிரை” (கலி – 85)
என்னும் வரியும் குறிப்பிடுகிறது.

ஆடைகளுக்கு கருநிற வண்ணமும் நீலநிற வண்ணமும் தோய்க்கப்பட்டது. கருநிற வண்ணம் தோய்த்த ஆடை “கருந்துவராடை” எனப்பட்டது. ஆடைகளில் ஓரப்பகுதியில் கரை வைத்தும் நெய்யப்பட்டது. கரை பூ வேலைப்பாட்டுடன் காணப்பட்டதை,
“ பூங்கரை நிலம் படைத்தாழ மெய்யசை” (கலி – 116)
என்னும் வரி புலப்படுகிறது.
பூ வேலைப்பாட்டுடன் நீல நிற வண்ணம் தோய்ந்த ஆடையை முல்லை நில மங்கை நிலம் தோய உடுத்தி இருந்ததினை,
…….. நிலந் தாழ்ந்த
பூங்கரை நிலம் தமிஇத் தளர் பொல்கி” (கலி – 115)
என்னும் வரியால் அறிய முடிகிறது. ஆடைகள் வண்ணம் தோய்க்கப்பட்டு பூ வேலைப்பாடு அமைந்து கலை நயத்துடன் நெய்தனர்.

கொல்லர்:

siragu-tholil-muraigal12-2

சங்க காலத்தில் இரும்புத் தொழில் செய்யும் கொல்லர் இருந்தனர். அவர் தொழில் செய்யும் இடம் ‘உலைக்களம்’ எனப்பட்டது. பயிர்தொழிலுக்கு வேண்டிய கருவிகளையும் படை வீரர்களுக்குத் தேவையான படைக் கருவிகளையும் செய்ததால் கொல்லர் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தனர்.

கொல்லர்கள் ஊர்தோறும் உழவர் முதலியோர்க்கு வேண்டிய கருவிகளை அவ்வப்போது செய்து கொடுத்து, ஆண்டு முடிவில் ஊதியம் பெறும் வழக்கமும், அவர்கள் ஊரவர்க்குப் பொதுத் தொழில் செய்வோர் ஆகிய வழக்கமும் இன்றும் காணப்படுகின்றன. ஏமூர்க்குத் தொழில் பொதுவிற் வேண்டிய கொல்லுலையில் துருத்தி இடையுறாது இரவு பகல் இயங்கியது. (குறுந்தொகை பொ.வே.சோமசுந்தரர் உரை ப.248) எனக் குறிப்பிடுகிறார் சோமசுந்தரனார். போர்க்காலங்களில் கொல்லர் வீரர்க்குரிய கருவிகளை செய்து கொடுத்ததினை,
“படைபண்ணிப் பனையவும் பாமாண்ட்” (கலி – 19)
என்னும் வரி குறிப்பிடுகிறது.

பொற்கொல்லர்:

siragu-tholil-muraigal13

பொன்னால் அணிகலன் செய்பவர் பொற்கொல்லர் எனப்படுவர். சிலம்பு, கிண்ணி, வளை, மேகலை, மோதிரம், குழை, ஆரம் போன்ற அணிகலன்கள் கலை நயத்துடன் செய்யப்பட்டன. அணிகலனின் பகுதிகள் தனித்தனியாக செய்யப்பட்டு பின் பொடியூதிப் பற்ற வைப்பர். பற்ற வைத்த இடம் நிறத்தில் மாறுபடும். நிறமாறுபாட்டைப் போக்க அணிகலனை ஒரே நிறமுடையதாக்க பொற்கொல்லர் ஊது உலையில் வைத்து எடுத்து நீர் ஊற்றி ஒரே நிறமுடையதாய் பிரகாசிக்கச் செய்வர். இவ்வாறு பொடி ஊதி வேலை செய்த திறத்தினை,

“காலவைக் கடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு
பொடியடிற் புறந்தந்த செய்வுறு கண்கிணி” (கலி – 85)
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
பொன்னை நெருப்பினில் உருக்கி அதனுள் மண்வைத்து கலை நயத்துடன் அணிகலன்கள் செய்தனர் என்பது,
“மாண உருக்கிய நன்பொன் மணியுறீ” (கலி – 117)
இவ்வரியால் தெரிகிறது.

தூதுவர்:

தூது என்னும் தொழில் மிகவும் நல்லியல்புடையது. ஒருவர் கூறிய கருத்தினை குறிப்பிட்டவரிடம் சென்று கூறுவது தூதாகும். தூது அகத்தூது, புறத்தூது என்று இரண்டு வகையினில் குறிப்பிடலாம். இல்லறத்தினில் ஈடுபட்ட தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்றவிடத்து தலைவி பாகன், பாணன் முதலியவர்களைத் தூதாக அனுப்புவாள், இது அகத்தூது ஆகும். இருநாடுகளும் போர் தொடுத்து உயிர்கட்கும் பொருட்களுக்கும் அழிவு உண்டாகும் தன்மை அறிந்து போரை நீக்க வேண்டி தூதாகச் செல்வர், இரு அரசர்களை சமாதானம் செய்து வைப்பர், இது புறத்தூதாகும். முதலில் சான்றோர்கள் தூது சென்றனர். நாளடைவில் தூது செல்வதற்கென்று தனியாக ஒருவரும் நியமித்தனர். மக்கள் வாழ்விற்கு வேண்டிய பொருள்களைப் பெற தொழில் முயற்சியில் ஈடுபட்டனர். வசதியாகவும் இன்பமாகவும் வாழ்ந்தனர். ஆடவர் பெண்டிர் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் உழைத்தனர். உழைப்பு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாடு காணப்படினும் உழைப்பினில் வேறுபாடு இல்லை.

முடிவுரை:

தொழில் என்பது ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மூளையையோ உடலையோ வருத்திச் செய்யும் செயலைக் குறிக்கும். ஒரு நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தம் இட நிலைக்கு ஏற்ப உழைப்பினில் ஈடுபடுகின்றனர். குறிஞ்சி நில மக்கள் திணை விளைவித்தல் மற்றும் தேனெடுத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். முல்லை நிலத்தவர் ஆநிரை மேய்த்தல், நெய் விளைவித்தல் தொழில் செய்கின்றனர். மருத நிலத்தில் மகளிர் மலர் விற்பனையில் ஈடுபட்டனர். நெய்தல் நிலத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளுகின்றனர். பாலை மறவர் வழியில் போவோரின் பொருட்களைப் பறித்து வாழ்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு திணை நிலை மக்களும் பல்வேறு தொழிலை மேற்கொண்டு வாழ்கின்றனர்.


முனைவர் பூ.மு.அன்புசிவா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியம் : கலித்தொகையில் தொழில்முறைகள்”

அதிகம் படித்தது