மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொல்லும் சினம்(சிறுகதை)

மா.பிரபாகரன்

Sep 17, 2016

siragu-kollum-sinam3

மற்றவர்களைப் போன்று கிடையாது. ராமுவின் பாகன் அதனை நன்றாகவே கவனித்துக் கொண்டான். ஒருசிலரைப் போன்று பாகன் ராமுவை இரவல்பெற அழைத்துச் செல்லமாட்டான். கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே கூட்டிச்செல்வான். அதில் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியையும் பாகன் ராமுவுக்கே செலவு செய்வான். பாகனுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உண்டு. அவனது மூதாதையர்கள் வழியாக வந்த சொத்து அது. மலையடிவாரத்தில் அமைந்த அந்தத்தோட்டத்தில், ஒரு சிறுபகுதியில் மட்டும் வீடுகட்டிக்கொண்டு பாகன் தன்மனைவி குழந்தைகளோடு வசித்து வந்தான். தோட்டத்தின் மற்றப்பகுதிகள் அனைத்தும் ராமுவுக்குத்தான் சொந்தம். ராமு தோட்டம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றிவரும்.

siragu-kollum-sinam5பாகனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. அவர்கள் இருவரும்தான் ராமுவின் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூவரும் சேர்ந்துகொண்டு தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள், ஒளிந்து விளையாடுவார்கள். ராமு தனது பெரிய உடம்பை மரங்களுக்குப் பின்னால் ஒளித்துக்கொள்ள முயல்வது, பார்க்க வேடிக்கையாக இருக்கும். பிறந்த ஓரிரு மாதக்குட்டியாக இருக்கும்போது ராமு இவர்களிடம் வந்தது. இப்போது அதற்கு வயது இருபது. கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் ராமு பாகனின் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தது. மலையடிவாரத்தை ஒட்டிய தோட்டம் என்பதால் சமயங்களில் காட்டுயானைகள் கீழே உலாவரும். அவ்வாறு வரும் யானைகள் ராமுவோடு வேலிக்கப்பால் இருந்தபடி துதிக்கை கோர்த்து உறவாடும். நல்ல இனிமையான சூழலில் வளர்ந்து வந்ததால் ராமுவிற்கு தான் ஒரு வளர்ப்பு யானை என்ற எண்ணமே இல்லாமல் இருந்தது. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சென்று கொண்டிருந்த அதன் வாழ்க்கையை ஒரு துயரச்சம்பவம் மாற்றி அமைத்தது.

siragu-kollum-sinam4அதைத் துயரச்சம்பவம் என்று சொல்வதைக்காட்டிலும் கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தக்கொடூரத்தைச் செய்ததும் ராமுதான். அது ஒரு கோடைகாலம், ராமுவை கொசு கடிக்காமல் இருக்க ஒருபெரிய மின்விசிறியைப் போட்டுவிட்டுச் செல்வது பாகனின் வழக்கம். அன்றைக்கும் அவ்வாறே செய்து விட்டுப்போனான். ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி இடையில் பழுதாகி நின்றுவிட்டது. கொசுக்கடி ஒருபுறம், புழுக்கம் மறுபுறம். ராமு புரண்டுபடுத்துப் பார்த்தது, மண்டியிட்டு அமர்ந்து பார்த்தது, எழுந்துநின்று பார்த்தது. ம்ஹீம்…முடியவில்லை. அதன் உக்கிரம் கூடிக்கொண்டே போனது. அதிகாலையில் ராமுவை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது பாகனின் வழக்கம், பாகன் வந்தான். தூக்கக்கலக்கத்தில் இருந்தவன் ராமுவின் காதுகளின்ஓரம் மதநீர் வழிந்ததை கவனிக்கவில்லை. ராமுவை அவன் தொட்டதுதான் தாமதம், சினத்தோடு அவனை வளைத்துப்பிடித்து, சுழற்றி தரையில் ஓங்கி அடித்துவிட்டது. அதோடு நிற்கவில்லை, பயங்கரமாகப் பிளிறியபடி தோட்டத்தைச் சுற்றி வந்தது. தோட்டத்திலிருந்த செடிகள், மரங்கள் இவைகளை வேரோடுப் பிடுங்கி எறிந்தது. பாகனின் மனைவியும் குழந்தைகளும் செய்வதறியாது திகைத்தபடி நடப்பது அனைத்தையும் வீட்டிலிருந்து பார்த்தபடி இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ராமு ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுத்தான் ஓய்ந்தது.

இதற்குள்ளாக ஒரு பெருங்கூட்டம் தோட்டத்தைச்சுற்றி கூடிவிட்டது. இப்போது ராமு அசைவற்றுக்கிடந்த பாகனின் அருகில்சென்று அவனை எழுப்பிப்பார்த்தது, பாகன் எழவில்லை. அதற்குப் புரிந்துவிட்டது. தான் ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டதை அது உணர்ந்து கொண்டது. அது இப்போது பாகனின் உடல்அருகே கண்ணீர்விட்டு அழுதபடி நின்றது. மதத்தால் பாகனைக் கொன்றுவிட்டு இப்போது அவன் உடலை எடுக்கவிடாமல் பக்கத்தில் நின்று அழுதபடி இருந்த ராமுவை அனைவரும் விநோதமாக வேடிக்கைப் பார்த்தார்கள். தனது ஆத்திரத்தினால்தானே தனக்கு இந்த இழிநிலை என்று ராமு மிகவும் மனம் வருந்தியது. அதன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் வந்துபோயின.

siragu-kollum-sinam1நன்றாக நினைவு இருக்கிறது, ஒருசமயம் ராமு சரியாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை. நாளுக்குநாள் அது மெலிந்து கொண்டேபோனது. மருத்துவரிடம் கூட்டிச்சென்றபோதுதான் ராமு நெகிழிக்கழிவுகளை விழுங்கிவிட்டது தெரியவந்தது. என்னமுயன்றும் அந்தக்கழிவுகள் ராமுவின் வயிற்றிலிருந்து வெளியேறவில்லை. அப்போது பாகன் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரை சந்தித்தான். அவர் லிட்டர்லிட்டராக ஏதோ கசாயம் கொடுத்து கழிவுகளை வெளியேறச்செய்தார். ராமு மீண்டும் உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது. அதன்எடை அதிகரிக்க வேண்டுமே?, அதற்கு அந்த வைத்தியர் சியவனப்பிரகாசலேகியம் தயாரிப்பது குறித்து பாகனுக்கு சொல்லித்தந்தார். அன்றுமுதல் பாகன் சியவனப்பிரகாசலேகியம் தயார்செய்து இரு பெரிய கவளங்களாக தினமும் ராமுவிற்கு ஊட்டிவந்தான். ராமுவின் எடை அதிகரித்தது. பாகனின் குழந்தைகளும் அந்தலேகியத்தை சாப்பிட்டு ஊட்டச்சத்து நிறைந்தவர்களாக வளர்ந்தார்கள். ராமு உடல்நலம் தேறியதும், ராமுவையும் தங்களது குழந்தைகளையும் சேர்த்து நிற்கவைத்து, பாகனும் அவன் மனைவியும் கண் பட்டுவிடப்போகும் என்று சுற்றிப்போட்டார்கள். அது இப்போது ராமுவின் நினைவில் வந்தது, அது மேலும் அழுதது.

இவ்வளவு ஏன்? ஒருமுறை கோவில் திருவிழாவிற்குச் சென்றிருந்தபோது ராமுவின் உடல் எப்படியோ உயர்அழுத்த மின்சாரக்கம்பியில் பட்டுவிட்டது. அதிர்வை உணர்ந்ததுதான் தாமதம். துதிக்கையால் முதுகில் உட்கார்ந்திருந்த பாகனை இழுத்துக்கொண்டு ராமு ஓடியது. பார்த்தவர்கள் அனைவரும் யானை பாகனைத் தாக்குகிறது என்றுதான் நினைத்தார்கள். சிறிது தொலைவு ஓடி ஒரு பாதுகாப்பான இடத்தில் பாகனை இறக்கிவிட்டபின்புதான் ராமு ஆசுவாசமானது. பாகன் சொல்லித்தான் ராமு மின்சாரத்தாக்குதலிலிருந்து பாகனைக் காப்பாற்ற அப்படி ஓடியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரித்து தங்கள் பாராட்டுக்களை ராமுவிற்குத் தெரிவித்தார்கள். அப்போது ராமுவின் முகத்தில் தெரிந்த பெருமிதத்தைப் பார்க்கவேண்டுமே?. அப்படிப்பட்ட ராமுதான் இன்றைக்கு அதே பாகனைத் துவம்சம் செய்துவிட்டது. சினம் அதன் அறிவைக் கொன்றுவிட்டது.

ஒருவார காலத்தில் ராமுவின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பாகனின் மனைவி ராமுவைப் பராமரிக்க விரும்பாமல் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இருந்தாலும் ராமுவை அந்த அளவிற்குத் அபாக்கியம் துரத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். புதியபாகனும் ராமுவை ஓரளவு நன்றாகவே கவனித்துக்கொண்டான். தன்னால் இயன்ற அளவில் அதற்கு உணவளித்தான். தங்குவதற்கு இதுபோன்று பெரியதோட்ட வீடு கிடையாது, சிறிய கொட்டாரம்தான். ஆனால் அதைத் தூய்மையாகப் பராமரித்தான். சினத்தால் தான் இழந்துவிட்ட அன்பை, வசதிகளைத் திரும்பப்பெற முடியாது, அது முடிந்துபோன விடயம் என்பதை ராமு நன்றாகப்புரிந்து கொண்டது. இருப்பதை வைத்து திருப்தி அடைந்து கொள்ளவேண்டும். இந்தப்பாகனுக்கு தீங்குஏதும் செய்துவிடக் கூடாது, அப்படி செய்தால் தன்நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதை ராமு நன்றாகவே உணர்ந்துகொண்டது.

siragu-kollum-sinam2ஒரு கோடைகாலப்பொழுது, புழுக்கம் மற்றும் கொசுக்கடி. ராமு தூக்கம் வராமல் தவித்தது. அதன் உடல்சூடு அதிகரிக்க ஆரம்பித்தது. உடலை அசைத்து காதுகளை ஆட்டி என்னென்னவோ செய்து உடல்வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளப் பார்த்தது, முடியவில்லை. அதன் உக்கிரம் கூடிக்கொண்டே போனது. காலையில் கொட்டாரத்தை சுத்தம்செய்ய பாகன் வந்தான். ராமுவின் காதுகளின் ஓரம் மதநீர் வழிந்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் ராமுவைத் தொட்டதுதான் தாமதம், ராமு கடுங்கோபத்தோடு எழுந்தது. ஆனால் இந்தமுறை பாகனைப் பிடிக்கவில்லை. தன்னை பிணைத்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியது. வாசல் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த எதிர்வீட்டுக்காரர், தன்னைநோக்கி யானை பிளிறியபடி வருவதைக்கண்டு வளை குழாயை கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினார். ராமு ஒரு காரியம் செய்தது. கீழேகிடந்த அந்த வளை குழாயை எடுத்து தன்னைநோக்கி வளைத்து பிடித்துக்கொண்டது, கிட்டத்தட்ட அரைமணி நேரம். ராமுவின் மேல் தண்ணீர்மழை பொழிந்தது. கொஞ்சம்கொஞ்சமாக கோபம் தணிந்து ராமு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

மறுநாள் பத்திரிக்கைகளில் இந்தச்செய்தி கொட்டை எழுத்துக்களில் வந்திருந்தது. “தன் மதத்தைத் தானே தணித்துக்கொண்ட யானை, ஆச்சரிய நிகழ்வு, பாகன் உயிர் தப்பினான்” என்பதுதான் அந்த செய்தியின் சாராம்சம். ராமு தண்ணீரை தன்மேல் பீய்ச்சிக்கொண்ட புகைப்படம் இடம்பெற்றிருந்த பத்திரிக்கைகளை எல்லாம் கொண்டுவந்து பாகன் ராமுவிடம் காட்டினான். அதற்கு பெருமிதம் தாளவில்லை. பாகன் ராமுவின் துதிக்கைமீது ஆதரவாகச் சாய்ந்துகொண்டான். ராமு அவனை மேலும்கீழுமாக அசைத்துத் தாலாட்டியது. ராமு தன் சினத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளை கண்டுபிடித்து விட்டது. அப்புறம் நீங்கள்?


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொல்லும் சினம்(சிறுகதை)”

அதிகம் படித்தது